அம்பேத்கர் - தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு குரல் கொடுத்தவர்; இந்து - சாதியப் பண்பாட்டு அடையாளங்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளும்போதுதான், உண்மையான சமூக விடுதலை கிடைக்கும். இதைத் தான் பெரியாரும் அம்பேத்கரும் வலியுறுத்தி னார்கள் என்று, புனித பாண்டியன் குறிப்பிட்டார்.
7.10.2006 அன்று சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒடுக்கப்பட்டோர் விடுதலை மாநாட்டில் ‘தலித் முரசு’ ஆசிரியர் ஆற்றிய உரை:
தந்தை பெரியார் பிறந்த நாளை ஒரு எழுச்சி விழாவாக ஒடுக்கப்பட்டோருடைய உரிமை மாநாடாக பெரியார் திராவிடர் கழகம் இங்கே நடத்திக் கொண்டிருக்கிறது. எங்களைப் போன்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தந்தை பெரியாருடைய தொண்டின் பயனை அனுபவிக்காத மக்கள் சமூகமோ, இனக் குழுவோ எந்த ஒரு சாதியோ இங்கு இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு தந்தை பெரியார் அவர்களுடைய தொண்டினால் இங்கு எல்லோரும் பயனடைந்துள்ளனர். ஆனால் அதற்கு நன்றிக் கடனாக தந்தை பெரியாருடைய விழாக்கள் தமிழ் நாடெங்கும் வீதிதோறும் நடை பெற்று இருக்க வேண்டும்.
ஆனால் தமிழ்ச் சமூகம் ஒரு நன்றி கெட்ட ஒரு சமூகமாக இருப்பதால் தான் இந்த மாதிரியான அறைக் கூட்டங்களில் தந்தை பெரியாரின் விழாக்களை நடத்திக் கொண்டு இருக்கிறோம். இருந்தாலும் இந்த மாதிரியான அறைக் கூட்டங்கள், மாநாடுகள் போன்றவை இந்த தமிழ்ச் சமூகத்திற்கு இனியாவது சொரணை ஊட்ட வேண்டும். அந்த அளவில் இதைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களிடையே அந்த ஆதங்கத்தையும் நான் பகிர்ந்து கொள்கிறேன். பெரியார் திராவிடர் கழகம் நடத்துகிற மாநாட்டிலே தந்தை பெரியாரைப் பற்றி விரிவாக பேசுவதற்கு என்னிடம் செய்திகள் இல்லை. இருந்தாலும் ஒரு சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பேகூட தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு.
ஏன் என்று சொன்னால் ஒரு பத்தாண்டு காலமாக நான் நடத்தி வரும் ‘தலித் முரசு’ தொடர்ச்சியாக அது தொடங்கிய முதலே அம்பேத்கர் பேசுகிறார் என்று ஒரு பக்கமும், பெரியார் பேசுகிறார் என்று ஒரு பக்கத்திலும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். தந்தை பெரியாரின் கருத்துகளையும், அண்ணல் அம்பேத்கருடைய கருத்துகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருவதற்காகவே பல்வேறு விமர்சனங்களை அந்தப் பத்திரிகை சந்தித்திருக்கின்றது.
இருந்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் நாம் எடுத்துக் கொண்ட பாதை மிகச் சரியான பாதை சமூகநீதிக் கருத்தியல்; பகுத்தறிவுக் கருத்தியல்; சாதி ஒழிப்புக் கருத்தியல் என்று வந்து விட்டால் அங்கே பெரியார் அம்பேத்கரைத் தவிர அதற்கு தீர்வு சொல்லுகின்றவர்கள், அதைவிட பெரிய அறிஞர்களோ, புரட்சியாளர்களோ இங்கு இல்லை என்று நாங்கள் முடிந்த முடிவாக ஏற்றுக் கொண்ட காரணத்தால் அந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லியும்கூட நாங்கள் அந்த விமர்சனங்களையெல்லாம் எதிர்கொண்டு அந்த விமர்சனங்களையே எருவாக்கி நாங்கள் தொடர்ச்சியாக அண்ணல் அம்பேத்கர் கருத்துகளையும், தந்தை பெரியாரின் கருத்துகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த காரணத்திற்காகவே தான் எனக்கும் தலைப்பை கொடுத்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.
தோழர்களே! இன்றைக்கு பெரியார் பற்றிய பல்வேறு கருத்துகள் அடைமழைப் பிரச்சாரமாக தமிழகம் முழுதும் நடந்து கொண்டிருந்தாலும்கூட இந்த சாதி அமைப்பை எப்படி புரிந்து கொள்வது, இந்த சாதி அமைப்பு என்னவாக இருக்கின்றது என்பதைப் பற்றி எண்ணற்ற கருத்தகள் வெளிவந்திருந்தாலும்கூட பார்ப்பனியம் புதுப்புதுக் கருத்துக்களை விதைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நாட்டின் நான்கு தூண்களாக இருக்கக்கூடிய சட்டமன்றம் நாடாளுமன்றம் நிர்வாகம் பத்திரிகைத் துறை நீதித்துறை இவை அனைத்துமே பார்ப்பனர்களால்தான் நிர்வகிக்கப் படுகிறது. அவைகள் சனநாயகத் தூண்களாக இல்லை பார்ப்பனத் தூண்களாகத்தான் இருந்து கொண்டிருக் கின்றன. உண்மை நிலை இதுவென்றாலும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களே பார்ப்பன ஆதிக்கம் எங்கே இருக்கிறது, இந்த 2006லே என்று கேட்கக்கூடிய சூழல்தான் நிலவிக் கொண்டிருக்கிறது.
பத்திரிகைத் துறையை எடுத்துக் கொண்டால், என்ன நிலை? இன்று இடஒதுக்கீடு தனியார் துறையிலே வேண்டும் என்று நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
பத்திரிகை துறையும் ஒரு தனியார் துறைதான். ஆனால் அதில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட இன்றும் நாம் வைக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுடைய பிரதிநிதித்தவம் பத்திரிகைத் துறையிலே நான்கு சதவீதம் மட்டுமே இருக்கிறது. ஏறக்குறைய 20 சதவீதமாக இருக்கக்கூடிய, 25 சதவீதமாக இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்கள் பழங்குடி இன மக்கள் அவர்களுடைய பிரதிநிதித்துவம் பத்திரிகைத்துறையிலே ஒரு சதவீதம்கூட இல்லை என்ற அளவிலேதான் இன்றைக்கு ஜனநாயகத்தின் மிக முக்கிய தூணாக இருக்கக்கூடிய பத்திரிகைகள் இருக்கின்றன.
ஆனால் இன்றைக்கு அதேபோல் சிறுபான்மை யோருடைய பங்கும் பெண்களுடைய பங்கும் மிகவும் குறைந்தளவிலேயே இருக்கின்றது. ஆனால், இன்றைக்கு பார்ப்பனர் ஆதிக்கம் எங்கு இருக்கின்றது என்று ஒரு புறமும், தலித் மக்கள் மத்தியிலே பார்ப்பனர்களா எங்களை அடிக்கிறார்கள். பார்ப்பனர்களா எங்களுடைய எதிரிகள் எங்களுக்கு மேலே இருக்கக்கூடிய சாதிகள் தானே எங்களை எதிர்க்கின்றது? எங்களை கொடுமை களுக்கு ஆளாக்கி கொண்டிருக்கிறது என்ற கருத்துக்கள் எல்லாம் தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது.
பிரமிட் அமைப்பு
தோழர்களே! சாதி அமைப்பு முறை ஒரு பிரமிட் போன்றது. பிரமிடு போன்ற அமைப்பு முறை மேல் அடுக்கிலே அந்த மூன்று வர்ணங்களும் அடித்தளத்திலே தாழ்த்தப்பட்ட மக்களும் பிற் படுத்தப்பட்ட மக்களும் இருக்கின் றார்கள். என்றைக்கு சாதி அமைப்பு முறை தோன்றியதோ அன்றி லிருந்து இன்று வரையிலும் அந்த அமைப்பில் எந்தவித தலைகீழ் மாற்றமும் ஏற்படவில்லை.
புத்தரில் தொடங்கி, பெரியார் அம்பேத்கர் வரை பல்வேறு சமூக நீதிப் போராளிகள், சாதி ஒழிப்புப் போராளிகள் அமைப்பைத் தகர்ப் பதற்கு மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்த காரணத்தினால் ஒரு சில அசைவுகள் ஏற்பட்டிருக் கிறதே ஒழிய அந்த அமைப்பு அப்படியே தான் கட்டி காக்கப்படு கின்றது. அந்த அமைப்பின் ஆதிக்கத்திலே இருக்கக்கூடிய பார்ப்பனர்தான் இன்னும் உச்சாணியிலே இருந்து கொண்டிருக்கிறார்கள். அந்த அமைப்பிலே இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தான் இன்னும் அதைத் தாங்கிப் பிடிக்கின்றவர்களாக, கீழே காவல் காக்கின்றவர்களாக அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.
ஆனாலும்கூட ஏதோ மூன்றாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 50 ஆண்டுகளிலே ஏதோ மாற்றம் வந்துவிட்டதைப் போலவும், அதிலே பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் மேலே எழுந்து வந்துவிட்டார்கள் என்பது போலவும் இங்கே கதை திட்டமிட்டு பரப்பப்படுகின்றது. அதிலே எந்த உண்மையும் இல்லை. இதை தந்தை பெரியார் வாயிலாக சொல்வதை விட டாக்டர் அம்பேத்கர் வாயிலாக சொல்லுவது மிகவும் சாலப் பொருத்தமாக இருக்கும் என்பதால் அண்ணல் அம்பேத்கர் சொன்ன ஒரு சில கருத்துக்களை மட்டும் இதுவரை வெளிவராத செய்திகளை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
பலருக்கும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்கு மட்டுமான தலைவராக பொது வான சமூகத்தால் கருதப்படுகிறது. பத்திரிகையிலேகூட ஏப்ரல் 14 வந்துவிட்டாலோ, டிசம்பர் 6 என்று வந்து விட்டாலோ தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் அண்ணல் அம்பேத்கர் என்று கட்டுரை வெளியிடுவார்கள்.
ஆனால், ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த நாட்டின் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள் என அனை வருக்குமான ஒரு தேசிய தலைவராகத்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் விளங்குகிறார்கள். அவர் அந்த சமூகத்தில் பிறந்த காரணத்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக முன்னுரிமை கொடுத்துப் போராடினார். அதற்காக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டும் போராடினார் என்பது தவறு.
ஆனால் இன்றைக்கு தலித் இயக்கங்களே கூட அண்ணல் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டுமே போராடினார் என்பது போன்ற ஒரு மாயை ஏற்படுத்திக் கொண்டு பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுடைய எதிரி யாக சித்தரித்துக் கொண்டு பார்ப்பனர்களை தப்பவிட்டுக் கொண்டிருக் கிறார்கள் என்ற செய்திகளைத்தான் உங்களுக்கு சொல்ல விழைகின்றேன்.
ஆனால் இதற்கு மாறாக எப்படி தந்தை பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஒரே தளத்திலே வைத்து இந்த ஒட்டு மொத்த சமூகப் புரட்சிக்கு அடிமைகளாக இருக்கக்கூடிய இந்த சாதிகள்தான் இந்த சமூகங்கள்தான் கிளர்ந்தெழ வேண்டும் என்று சொன்னார்களே, அதே போன்ற கருத்தைத்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னார்கள். அண்மையிலே கூட பத்திரிகையிலே இந்த இரண்டு தலைவர்களையும் ஒப்பிடலாமா அல்லது ஒப்பிடுவது முட்டாள்தனம் என்பது போன்ற கட்டுரைகள் எல்லாம் வந்தன.
அது அவர்களுடைய முட்டாள்தனத்தைத் தான் காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன். ஏனென்று சொன்னால் ஒரே தன்மையிலே சிந்திக்கக் கூடிய ஒரே தன்மையிலே சாதி ஒழிப்பு என்று வந்து விட்டால், பகுத்தறிவு என்று வந்துவிட்டால் ஒரே மாதிரியான அணுகு முறையை கொண்டிருக்கக்கூடிய தலைவர்களாக அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் விளங்கினார்கள். அதனால் தான் 1936லே அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சாதி ஒழிப்பு என்ற தலைப்பில் பேசுவதற்கு வீர உரையை தயாரித்தார்.
அந்த உரையிலே திருத்தம் செய்ய வேண்டும் என்று ஒரு நிர்ப்பந்தம் அவருக்கு வைக்கப்பட்டபோது, கால் புள்ளியைக்கூட நான் மாற்ற மாட்டேன். அப்படி மாற்றுவதாக இருந்தால் அந்த உரையை நான் உரையாற்றப் போவதில்லை என்று 36-லே அண்ணல் அம்பேத்கர் அறிவித்தார். அந்த மாநாடும் நடைபெறவில்லை. ஆனால் உடனே இங்கே இருந்த தலித் தலைவர்கள் அல்ல. அல்லது இங்கு இருக்கக்கூடிய வேறு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் அல்ல. இங்கே இருக்கக்கூடிய தந்தை பெரியார் அவர்கள் தான் அந்த உரையை கேட்டு, தமிழில் மொழி பெயர்த்து முதன் முதலாக சாதி ஒழிப்பு என்ற நூலை தமிழிலே வெளி யிட்டார். இதுவரைக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் சாதி ஒழிப்பு பற்றி வெளி வந்திருப்பதாக ஒரு கணக்கு இருக்கின்றது. அந்த எல்லா நூல்களையும் விட மிகச் சிறந்த நூலாக இன்றளவும் சாதி ஒழிப்பு என்ற நூல் பல்வேறு மொழிகளிலே மொழியாக்கம் செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், அதை முதன் முதலாகச் செய்தவர் தந்தை பெரியாராகத்தான் இருக்கின்றார். என்ன காரணம்? எங்கோ இருக்கின்ற அம்பேத் கர் நூலை வெளியிட மறுக்கப்பட்டதால் தானே மொழி பெயர்த்து வெளியிட்டு இருக்கிறார் என்று சொன்னால் அதனால் தான் நாம் அவர்களை பொருத்திப் பார்க்கின்றோம். அவர்களின் தொண்டின் பயனை, அந்த பயனை இந்த சமூகங்கள் பெற வேண்டும் என்கிற காரணத்தால் தான் நாம் அவர்களை ஒரு ஒப்பற்ற ஆயுதங்களாக நாம் மக்களிடையே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் எழுதும்போது சமூகரீதியாக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் ‘சோசியலி எஜூகேசனலி பேக் வேர்ட் கிளாஸ்’ (Socially Economically Backward Class) என்ற ஒரு சொற்றொடரை அமைத்து, அதிலே தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் இரண்டு பேருமே இரண்டு சமூகங்களுமே கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின் தங்கியிருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப் படவேண்டும் என்ற கருத்தை அண்ணல் அம்பேத்கர் முன்னிறுத்தினார்.
இதை தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வாங்கித் தந்ததாகவும், பேக்வேர்டு என்று வருவதால் இல்லை நமக்கு மட்டுமே வாங்கித் தந்ததாகவும் நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் அந்த இரண்டு சமூக மக்களை யும் அவர் ஒன்றாகவே கருதினார். அதே போல் அம்பேத்கர் துவக்கிய அமைப்பான ‘செட்யுல்டு காஸ்ட் பெடரேசனுடைய (பட்டியல் விதியினர் கூட்டமைப்பு) தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது 56வது பிரிவிலே மிகத் தெளிவாக ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
அம்பேத்கர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை
“பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோருடன் இணைந்து செயல்பட விரும்புகின்றது. ஏனெனில் ஏறத்தாழ அவர்களும் பட்டியல் சாதியினர் நிலையிலேயே இருக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக பட்டியல் சாதி யினரின் கூட்டமைப்பினரின் அரசியல் மற்றும் சமூக நடவடிக்கை களால் பட்டியல் சாதியினர் பெற்று இருக்கக்கூடிய விழிப் புணர்வை இந்த வகுப்பினர் போதுமான அளவு பெறவில்லை என்பது வருந்தத் தக்கதாகும்.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், பட்டியல் சாதியினர் ஆகியோரை நாட்டில் பெரும் அதிகாரம் படைத்தவர்களாக ஆக்கி யிருக்கின்றது. இதுவரையில் சிறு பான்மையினத்தவராக இருந்த சாதி இந்துக்கள் தங்கள் நாட்டை ஆள்பவர்களாக ஆக்கி இருந்தனர்.
போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் பழங்குடியினரும் மீண்டும் அவர்களின் அடிமைகளாக தொடர்ந்து விடுவார்களோ என்பதுதான் பட்டியல் சாதியினரின் கூட்டமைப்பின் கவலையாகும். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் முதல் கவலை இந்த மக்களை அவர்களின் சொந்தக் காலில் நிற்க வைப்பதே ஆகும். அவர்கள் விருமபினால் பிற்படுத்தப்பட்ட மக்கள் விரும்பினால் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு என்கிற தனது பெயரை பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் கூட்டமைப்பு என்று மாற்றி அதன் மூலம் இரு வகுப் பினரும் ஒரே அமைப்பில் இணைந்து செயலாற்ற வழி வகுக்க தயாராக உள்ளது. இதற்கு வாய்ப்பில்லையெனில் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு அத்தகு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற தயாராக உள்ளது” எனறு அம்பேத்கர் அவர்கள் தனது தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளார்.
என்ன காரணம்? இந்த ஒட்டு மொத்த மக்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற அடிப்படையில்தான் இந்த கோரிக்கையை தன்னுடைய தேர்தல் அறிக்கையிலே மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கின்றார்.
துரும்பர்கள் நிலை
ஆனால், இன்றைக்கு தலித் இயக்கங்கள் தலித் அறிவு ஜீவிகள் வைக்கக்கூடிய கருத்து பரப்பல் என்பது அம்பேத்கர் கருத்துகளுக்கு நேர் எதிராக இருந்து கொண்டிருக்கிறது. தங்களுக்கு மேலே இருக்கின்றவர்களை மட்டுமே எதிரிகளாக பாவிக்கின்ற போக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது? என்று சொன்னால் அண்மையிலே ‘இந்து’ நாளேட்டிலே ஒரு செய்தி வந்தது இவ்வளவு நாளும் அருந்ததியினர் தான் இந்த சாதி அமைப்பினுடைய அடி மட்டத் திலே இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், தற்போது துரும்பர் என்று சொல்லக்கூடிய தாழ்த்தப்பட்ட சாதி யிலேயே அருந்ததியினருக்கும் கீழாக இருக்கக்கூடிய சாதியினர் தங்களுக்கான உரிமைக் குரலை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
‘புதிரை வண்ணார்’கள் என்று சொல்லக்கூடிய சாதியினா தங்களை இன்றைக்கு துரும்பர் என்று அழைத்துக் கொள்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுடைய அந்த முப்பிரிவுகளாலும் தாங்கள் ஒடுக்கப்படுவதாக குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். படிநிலைப்படுத்தப்பட்ட சமூகத்திலே இந்த மாதிரியான எல்லையற்ற படி நிலைகள் இனியும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அதுதான் இந்து மதத் தினுடைய விதி. அதுதான் இந்து மதத் தினுடைய தர்மம். எல்லாரையும் பிரித் தாள்வது பிரித்துக் கொண்டே இருப்பது என்பதுதான் பார்ப்பனியம்.
இன்றைக்கு புதிரை வண்ணார்கள் என்று சொல்லக் கூடிய துரும்பர்கள், அருந்ததியர்கள் தான் எங்களை ஒதுக்குகிறார்கள் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். அருந்ததி யர் அண்மைக்காலம் வரையிலும் தங் களுக்கு மேலாக உள்ள பள்ளர் பறையர் தான் தங்களை ஒடுக்குகின்றார்கள் என்று அவர்களை மட்டுமே எதிர்த்து போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அது தான் இந்து பார்ப்பனியத்தின் வெற்றி யாகவும், சாதி அமைப்பின் வெற்றியாகவும் இருக்கின்றது. ஆகவே நாம் மிகத் தெளிவாக இந்த அமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும் -இவ்வாறு உரையாற்றினார்.