கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தொல்குடித் தமிழ்ச் சமூகம் சாதி மதமற்ற மானுட சமத்துவத்தோடு பொதுமை சமூகமாக வாழ்ந்தது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன் மானுட சமத்துவத்தை மறுக்கும் நால்வருண மனுதர்மம் இந்து மதத்தின் பெயரில் தமிழர்களின் பண்பாட்டின் மீது திணிக்கப் பட்டது. வெளிப்பாடுதான் வள்ளுவம். சத்திரியர்களும் வைசியர்களும் தமிழ்நாட்டில் இல்லை. 97 சதவிகிதம் மக்கள் தமிழ்நாட்டில் சூத்திரர்களே! பார்ப்பனர்கள் 3 சதவிகிதம் மட்டுமே.

மனித சமத்துவமின்மையையும் சாதி கட்டமைப் பையும் பாதுகாக்கும் நால் வருண இந்து மதத்தைப் பட்டி தொட்டியெங்கும் இராமாயணம் மகாபாரதம் போன்ற கதைகளின் வழியாக ஆண்டுக்கணக்கில் பார்ப்பனர்கள் பரப்பினார்கள். இதை உழைக்கும் சூத்திர மக்களின் மனதில் அட்டையாய்ப் பதியவைத்தார்கள்.

பட்டியலின மக்கள் இந்த நான்கு வருணப் பிரிவிலும் சேராதவர்களாக தொட்டால் பார்த்தால் தீட்டு என்கிற கீழான நிலையில் வைக்கப்பட்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகில் வேறெந்த மதமும் கற்பிக்காத ஒன்றை இந்து மதத்தின் பெயரால் தன் மதத்தைச் சார்ந்த மக்களையே சாதிகளால் பிரித்து ஒவ்வொரு சாதிக்கும் ஒரு நீதி என்று வகுத்து பெரும் பான்மை மக்களாக வாழும் சூத்திரர்களுக்குள்ளேயே மோதல் ஏற்படவும் செய்தனர்.

சூத்திரப் பிற்படுத்தப்பட்ட் மக்களால் ஆதிதிராவிடர் மக்கள் ஒடுக்கப்படுவதும் மோதிக்கொள்வதும் இன்றும் நடக்கிறது. இதன் தொடர்ச்சி தான் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாரா யணபுரம் கிராமத்தில் நடந்த சம்பவமும் வேதாரண் யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவங்களும் ஆகும். 23.08.2019 அன்று மா.பெ.பொக. வாணியம்பாடி நகரச் செயலர் சீன.பழனி நா.மதனகவி இந்தியப் பொதுவுடை மைக்கட்சி இரா.முல்லை விடுதலைச் சிறுத்தைகள்  நா.வேலு சிவக்குமார் ஆகியோர் நாராயணபுரம் சென்று கேட்டறிந்தோம். நாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் குடும்பங்களுக்கு இதுவரை அரசால் சுடுகாடு ஒதுக்கித்தரப்படவில்லை இதனால் இறந்தவர்களின் உடலைப் பாலாற்றின் கரை யோரம் அடக்கம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 16.08.2019ஆம் தேதி நாராயணபுரத்தைச் சேர்ந்த குப்பன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந் தார். அவரது உடலைப் பாலாற்றின் கரையோரம் புதைக்க உறவினர்கள் எடுத்துச் சென்றனர். அப்பொழுது அந்த பாலாற்றுக்கு செல்லும் வழியில் உள்ள நில உரிமையாளர்கள் வழிவிட மறுத்தனர் இதனால் மாற்று வழியில்லாததால் குப்பனின் உடலை பாடையில் கயிறு கட்டி 20 அடி உயரமுள்ள மேம்பாலத்திலிருந்து ஆற்றில் இறக்கி பாலாற்றின் கரையோரம் உடலை எரியூட்டினார்கள் இந்நிகழ்வை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காட்சிப் படுத்தி சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்நிகழ்வு தமிழக அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. உடனடியாக வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வாணியம்பாடி வட்டாட்சியர் நாராயணபுரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள அரசுக்கு உரிமை யான 3.5 ஏக்கர் பனந்தோப்பு நிலத்தில் 50 சென்ட் இடத்தை ஆதி திராவிடர் மக்களுக்காக ஒதுக்கி கொடுத் துள்ளார்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் சுப்பிரமணியம் பிரசாத் ஆகி யோரின் முன் நேர் நின்று நடுவன் அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் இறந்தவரின் உடல் சாதிப் பாகுபாட்டின் காரணமாகப் பாலத்தில் இருந்து கயிறு கட்டி கீழே இறக்கப்பட்டு பின்னர் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது ஆகவே உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதனால் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

தந்தை பெரியார் 1926ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியது முதலே சாதி ஒழிப்பிற்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாறினாலும் தந்தை பெரியார் சாதி ஒழிப்புக்கொள்கையில் உறுதியாக நின்று தொடர்ந்து போராடினார். இதன் உச்சமாகத்தான் சாதி யைப் பாதுகாக்கும் வருணாசிரமத்தை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என அரசமைப்பு சட்டப் பிரிவுகள் 13, 28, 26, 372 ஆகியவற்றை 1957ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஆயிரக்கணக்கான தி.க.தொண்டர்கள் பெரியாரின் ஆணைக்கு இணங்க மேற்கூறிய சாதிகளைக் காக்கும் சட்டப்பிரிவுகளின் நகல்களை எரித்தார்கள். ஒரு நாட்டின் அரசமைப்புச் சட்டத் தை எரித்ததாக அன்றுவரையில் உலக வரலாற்றில் இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 3 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றனர். சிறை சென்றவர்களில் பலர் இன்றும் உயிருடன் உள்ளனர். அவர்களில் ஒருவர் தோழர் வே.ஆனைமுத்து.

அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பழக்க வழக்கச் சட்டம் செல்லபடியாகாது என்ற கோரிக்கை மசோதாவையும் தாக்கல் செய்தார் அப்போது பிரதமராக இருந்த நேரு உள்பட அனைத்துப் பார்பனர்களும் மசோதாவைக் கடுமையாக எதிர்த்தனர் ஏற்க மறுத்துவிட்டனர்.

1955ம் ஆண்டு தாழத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற் காகவும் அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள் வன்முறைகள் துன்புறுத்தல்களை மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத்தருவதற் காகவும் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் வன்கொடுமை தடுப்புச்சட்டம். இச்சட்டத்தின் மூலம் வன்கொடுமை செய்யும் ஆதிக்க சாதியினர் மீது இந்த அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக ஆதிக்க சாதி யினருக்குச் சாதகமாகவே அனைத்து அரசுத் துறை களும் செயல்படுகின்றன என்பது வெட்கமானது.

நாராயணபுரத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராடவிடர் மக்களிடம் பாதிப்பைக் கேட்டறியாமல் ஊரிலிருந்து 3 கி.மீ தள்ளித் தனியாக சுடுகாட்டை ஒதுக்கிக் கொடுப்பதன் முலம் அரசே தீண்டாமையைக் கடைபிடிக் கிறது. ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அரசின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தனிச் சுடுகாட்டை ஒதுக்கிக் கொடுப்பதை அரசு கைவிட்டு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஒரே சுடுகாடாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் சாதி ஒழிந்த பிறப்பால் ஏற்றத்தாழ்வு ஒழிந்த சமுகத்தை உருவாக்குவதற்கான முதற்படியாக அது அமையும், ஊர் சேரி என்கின்ற வேறுபாட்டை மாற்றும்.

பெரியார் அம்பேத்கர் ஆகியோர் மேற்கொண்ட சாதி ஒழப்பிற்கான போராட்டம் அவர்களின் காலத்திற்குப் பிறகு அவர்களின் வழியில் வந்த நாம் எந்த அளவிற்குச் சாதித் திருக்கின்றோம் என்று மனதார எண்ண வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதின் மூலமாகத்தான் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற முடியும் என்பதை உணர்ந்து மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரியவாதிகள் ஒன்றிணைந்து சமூகநீதி சமத்துவ மான மானுட சமூகத்தைப் போராடி வென்றெடுப்போம்! வாரீர்!! வாரீர்!!!