தேசிய நீர்க் கொள்கையின் விபரீதம் - பகுதி 4

தமிழ் வணிகத் திரைப்படங்களில் கதாநாயகன் நூற்றுக்கணக்கான எதிரிகளை ஆறு குண்டுகள் உள்ள ஒரு சிறிய கைத்துப்பபாக்கியை கொண்டு சுட்டுத்தள்ளுவார். எதிரிகள் எந்திரத் துப்பாக்கியை வைத்து சுட்டாலும் அவருக்கு ஒன்றும் ஆகாது. வில்லன்கள் அடியாட்கள் எத்தனைபேர் இருந்தாலும் அவர்கள் ஒவ்வொன்றாக வரிசையாக வந்து கதாநாயகனிடம் மோதுவார்கள். படம் முழுவதும் உச்சகட்ட ஆபாச காட்சிகள், வன்முறைகள் இருக்கும். காமம் பொழிந்து நீதியை உபதேசிப்பார்கள். இடையே அவ்வப்போது மசாலா தேசபக்தியை சுடச்சுட அளிப்பார்கள். இது தமிழ்த் திரைப்படங்களின் கனவுலகம். இக்கனவுலகத்தில் போதிக்கப்படும் தேசபக்திக்கு இணையாக நாட்டின் நதிகளை இணைப்பதும் தேசபக்தி என்று தொடர்ந்து ஒரு கருத்தியல் பரப்பப்பட்டு வருகிறது.

indian_river_600

நாட்டின் வறட்சிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு, வெள்ளம் ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வாக நதிகளை இணைக்கும் திட்டம் முன் வைக்கப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே இத்திட்டம் முன்வைக்கப்பட்டாலும் 8 ஆண்டுகளுக்கு முன்னதாக உச்சநீதிமன்றம் 10 ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து ஊடகம் முழுவதும் 'இத்திட்டத்தை முடித்தால் நாடு முன்னேறும்; வல்லரசாகும்' என்று பிரச்சாரம் செய்தனர். அப்துல் கலாமும் இந்தத் திட்டத்தை போகிற இடங்களிளெல்லாம் பிரச்சாரம் செய்தார். இந்தத் திட்டத்தை ஆதரித்தவர்கள் மட்டுமே நாட்டுப்பற்றாளர்களாக ஒரு மாயையான பிம்பம் கட்டி எழுப்பப்பட்டது. எனவே தண்ணீர்ப் பிரச்சினைக்கு இத்திட்டம் தீர்வாகுமா? என்பதைப் புரிந்து கொள்ள திட்டம் குறித்து விரிவாகக் காண்போம்.

இது தான் தீர்வா?

முதலாவதாக தண்ணீர் தட்டுப்பாடு/வறட்சிக்குத் தீர்வாக நதிகள் இணைப்பு முன் வைக்கப்படுவதன் கருத்தியலைக் காண்போம். தண்ணீர் தட்டுப்பாடு ஒரு இயற்கையான நிகழ்வு என்று அடிக்கடி கூறப்படுகிறது. இக்கருத்தானது கேள்விக்குள்ளாக்கப்படாமல் இதற்குத் தீர்வாக விவாதம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதாவது தண்ணீர் விநியோகத்தை எப்படி அதிகரிப்பது? என்று அடுத்த கட்ட விவாதம் நடைபெறுகிறது. தண்ணீர் ஏன் குறைகிறது? வறட்சி ஏன் ஏற்படுகிறது? என்பதை ஆராயாமல் அது குறைவாக உள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்வதுடன் விசயத்தை முடித்து விடுகின்றனர். மோசமான நீர்த்தேக்க திட்டங்கள், நீர் வள மேம்பாட்டிற்கு போதிய கவனம் செலுத்துவதில்லை. தொழிற்சாலைகளும் நட்சத்திர விடுதிகளும் ஓட்டல்களும் தங்கள் தேவைகளுக்காக நீர்வளங்களை அபரிமிதமாகச் சுரண்டுவது போன்ற எண்ணற்ற காரணங்களினால்தான் வறட்சியோ தண்ணீர் தட்டுப்பாடோ ஏற்படுகிறது. இதைத்தவிர பசுமைப்புரட்சி, கரும்புரட்சி (உலக வங்கியின் நிர்ப்பந்தத்தால் கரும்பு உள்ளிட்ட தண்ணீர் அதிகம் தேவைப்படும் பணப்பயிர்களை அறிமுகப்படுத்திய திட்டம்), நீலப்புரட்சி (இறால் தொழிற்சாலைகளை அறிமுகப்படுத்திய திட்டம்) போன்ற திட்டங்களினாலும், நீர் வளங்களை மாசாக்குதல் போன்றவற்றினாலும்தான் நீர்வளம் குறைகிறது. எனவே இயற்கையினால் அல்ல, மனிதர்கள் மேற்கொண்ட தவறுகளினால்தான் என்பது தெளிவு.

எந்த நதிகள் இணைக்கப்படும்?

இத்திட்டமானது பல விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நதிகளின் தற்கொலைக்குச் சமமானது என்றும் கூறி தண்ணீர் துறை சார்ந்த நிபுணர்களினாலும் மத்திய நீர் ஆணையத்தினாலும் (cental water commission) நிராகரிக்கப்பட்டது. முதலாவது இத்திட்டத்தில் நதிகள் இணைப்பு என்பது கங்கை – காவிரி இணைப்பு என்ற இரு நதிகளை இணைப்பதற்கான பழைய திட்டம் அல்ல. நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் 37 சிறிய பெரிய நதிகளை இணைக்கும் திட்டமாகும். இமாலய நதிகள் மற்றும் தீபகற்ப நதிகள் என இரு பெரிய இணைப்புகள் ஆகும். இத்துடன் மிகப்பெரிய அளவிலான நீர் மின் திட்டத்தையும் நிறுவுவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இமாலய நதிகள் இணைப்பில் கங்கை நதிகளை ஒன்றொடன்று இணைப்பது, பிரம்மபுத்திரா நதிகளை ஒன்றொடன்று இணைப்பது, இந்த பெரிய இணைப்புகளையும் நீண்ட கால்வாய்கள் மூலம் மகாநதியுடன் இணைப்பது ஆகியவை திட்டத்தில் உள்ளடக்கியவை.

தீபகற்ப நதிகள் இணைப்பில் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி- ஆகியவை முக்கிய நதிகளாகும். மேற்கே அரபிக் கடலில் கலக்கும் நதிகளுடன் இணைப்பது. இதில் நமது வைப்பாறும் அடங்கும்.

பல இலட்சம் கோடி ரூபாய் செலவாகும்

மொத்த திட்டத்தின் மதிப்பு 5,60,000 கோடிகளாகும் என்றும் இதில் இமாலய நதிகள் இணைப்பிற்கு 1,85,000 கோடிகள் என்றும், தீபகற்ப நதிகள் இணைப்பிற்கு 1,60,000 கோடிகள் என்றும், இணைந்து மேற்கொள்ளப்படும் நீர் மின் திட்டத்திற்கு 2,69,000 கோடிகள் ஆகும் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்னதாக மதிப்பிடப்பட்டது. இந்த மதிப்பீடு இப்போதுள்ள பணவீக்கத்தின் அடிப்படையில் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போது திட்டம் ஆரம்பிக்கப்படுகிறதோ அப்போதிருந்து 20 ஆண்டுகளில் இத்திட்டமானது முடிக்கப்படும். அதனால் அன்றைய நிலவரப்படி செலவுத்தொகை எவ்வளவு கூடும் என்பது தெரியவில்லை. இவ்வளவு பெரிய தொகை அந்நிய கடனாக பெறப்படும் என்பதில் சந்தேகமில்லை. இத்திட்டம் தொடங்குவதற்காக சாத்தியக்கூறு ஆய்வுகள் 2005ல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அந்த ஆய்வுகள் தொடங்கப்படவில்லை. இதில் நாம் வாங்கும் கடனுக்கான வட்டி, ஆண்டுக்கு ஆண்டு கூடிவரும் பணவீக்கம் ஆகியவற்றை வைத்து கணக்கிடும்போது திட்டம் முடிவுறும்போது 20,17,468 கோடிகள் ஆகும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் (Linking rivers – some elementary arithmatics, Economic and Political Weekly 19,july 2003)

சாத்தியப்பாடு

நாம் இங்கே சாத்தியப்பாடு என்று கூறுவது வெறும் பொருளாதார சாத்தியப்பாட்டையோ அல்லது தொழில் நுட்ப ரீதியான சாத்தியப்பாட்டையோ அல்ல. இத்திட்டத்தினால் ஏற்படப்போகும் அரசியல், சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகளையே ஆகும். இத்திட்டம் உலகிலேயே மிகப் பிரம்மாண்டமானதாக பேசப்படுகிறது. அப்படி என்னதான் செய்யப் போகிறார்கள்? எளிமையாகக் கூற வேண்டுமானால் வீணாக கடலில் கலக்கும் பெரிய நதிகளை நாட்டின் வறண்ட பகுதிகளுக்கு திருப்புவதுதான் இத்திட்டமாகும். இந்த நோக்கங்களுக்காக நாட்டில் ஒடும் மேற்படி அனைத்து நதிகளையும் குறுக்கிலும் நெடுக்கிலுமாக இணைப்பது.

sutlej_river_600

முதலாவது, இங்கே ஒரு முக்கிய செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். நதிகள் ஒடி கடலில் கலப்பது என்பது இயற்கையான ஒன்றாகும். அதுவே கடல் நீரின் உவர்தன்மையையும் மற்றும் இராசயனப் பொருட்களின் சரியான விகித இருப்பை நிலைநிறுத்தவும் அவசியமாகும். அதாவது கடலின் உவர் தன்மை இருக்கும் அளவை விட கூடிவிடாமல் பாதுகாப்பது இந்த இயற்கையான நிகழ்வே.

இரண்டாவது நதிகள் ஓடி கலக்கும் நிகழ்வில் அவை ஓடும் வழி நெடுக ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்காக உயிரினங்கள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் தாவர உயிரினங்களுக்கு அடிப்படை ஆதராமாக உள்ளது. உள்ளுர் மீன் பிடிப்பு தொடங்கி ஏராளமான தொழில்கள் இதை நம்பியே உள்ளன.

இப்போது கடலில் கலக்கும் நதி நீரை குறுக்கே அணைகளைக் கட்டி கால்வாய்களின் மூலம் திருப்பி விடப் போகின்றனர். இதில் அழிந்து போவது மேற்படி உயிரினங்கள் மட்டுமின்றி நாட்டின் நதிகளை ஆதாரமாகக் கொண்டுள்ள ஒட்டு மொத்த சுற்றுச்சூழல் அமைப்பே ஆகும். ஒரு சொட்டு நீரைக் கூட கடலில் கலக்க விடாதே என்று இலாப வெறியுடன் தண்ணீர் அல்லது முதலாளிகள் மட்டுமே சிந்திக்க முடியும். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அணைகள், பாலங்கள், கால்வாய்கள் கட்டப்படுவதால் இலட்சக்கணக்கான கிராமங்கள் அழிந்து விடும். இலட்சக்கணக்கான மக்கள் அவர்களின் சொந்த மண்ணிலிருந்தும் விவசாயத்திலிருந்தும் அப்புறப்படுத்தப்படுவார்கள். ஏற்கனவே அணைகள் கட்டியதினால் விரட்டி அடிக்கப்பட்டட மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை. உள்நாட்டிலேயே அகதிகளாக திரியும் இவர்களுக்கு எந்த புனர்வாழ்வுக் கொள்கையும் இல்லாத நிலையில், இப்படிப்பட்ட திட்டங்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தும்.

நதிகள் வறண்டு விடும்

அது மட்டுமின்றி இணைக்கப்படும் நதிகள்/ஆறுகள் தாங்கள் இதுவரை இருந்து வந்த சூழலில் இருந்தும் ஒடிய பாதைகளிலிருந்தும் வேறுவிதமான தட்ப வெப்ப சூழ்நிலைக்கு திருப்பி விடப்படுவதால் அவை முற்றிலுமாக வறண்டு போகவும் வாய்ப்புண்டு. இதற்கு உலக நாடுகளின் உதாரணங்கள் ஏராளமாக உள்ளன. ரசியாவின் ஏரல் கடலை செயற்கையாக திருப்பி விட்டதால் கடலே வறண்டு போனது, உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. அதே ரசியாவில் இர்டிஸ்-காரகண்டா கால்வாய்க்கும், துருக்கியில் ஜி.ஏ.பி நதிக்கும் இதே நிலைதான் ஏற்ப்பட்டது. சீனத்தில் தென்பகுதியிலிருந்த உபரி நீர்வளத்தை நீர்ப் பற்றாக்குறை இருந்த வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்கு மாற்றும் திட்டத்தினால் ஏராளமான செலவு ஏற்படும் என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு இத்திட்டம் விவாத அளவு மட்டத்தில் மட்டுமே இருந்து வருகிறது. அதே போன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஓடிய மிகப்பெரிய நதியான கொலோரடாவில் 19 மிகப்பெரிய அணைகளைக் கட்டி பல பகுதிகளுக்கு திருப்பி விட்டனர். விளைவு கடுமையான மாசு ஏற்பட்டதோடு யாருக்கு பயனளிக்காமல் முகத்துவாரங்களில் உப்பை நிரப்பிக்கொண்டு கொண்டிருக்கிறது.

இந்த உலக அனுபவங்கள் நதிகள் இணைப்பு இயற்கைக்கு மாறான பேரழிவுத் திட்டங்கள் என்பதை உணர்த்துகின்றன. நீர் ஆதாரங்களையும் நீர் நிலைகளையும் வலுப்படுத்துவதும், நிலைத்த நீடித்த வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் நீரினைப் பயன்படுத்துவதும், முறையான நிலத்தடி நீர் சேகரிப்புத் திட்டங்களை அமல்படுத்துவதும், நீரை வீணாக்காமல் சுழற்சி முறையில் பயன்படுத்துவதும், ஆடம்பரத் தேவைகளுக்கு நீரைப் பயன்படுத்துவதை தடை செய்வதும், தண்ணீரை தனியார் மயமாக்குவதையும் வியாபாரமயமாக்குவதையும் தடுத்து நிறுத்தவும் வேண்டும். இதற்கு தண்ணீர் பாராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான முறையான அனைத்து அறிவியல் அம்சங்களுடன் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மற்றும் துறையினரின் பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்று நீர் மேலாண்மைத் திட்டத்தை வகுத்திட வேண்டும் . இப்போதைய நடுவண் அரசின் நீர்க் கொள்கை கைவிடப்பட்டு மேற்படி ஆலோசனைகளுடன் நீர் மேலாண்மைக் கொள்கை இயற்றப்பட வேண்டும்.

- சேது ராமலிங்கம்

Pin It