கடல் கடந்த நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களுக்கும், தாய்த் தமிழகத்துக்கும் இடையேயான தொடர்புகளைப் புதுப்பிக்கும் முயற்சிகள் அவ்வப்போது நடைபெற்று வந்தன. தமிழகம், இலங்கை, மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகள், அதற்கான வாய்ப்பாக, களமாக அமைந்தன. ஆனால் அந்த முயற்சிகள், கூடிக் கலைவது போல அமைந்தனவே தவிர, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற புத்தகங்களை, மலேசியத் தமிழ் வாசகர்கள் ஆர்வத்துடன் வாங்கி ஆதரிக்கின்றார்கள்; படித்து மகிழ்கின்றார்கள். தமிழகத்தில் இருந்து வருகின்ற அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களை அன்போடு வரவேற்றுச் சிறப்பித்துப் போற்றுகின்றனர்.

ஆனால், அத்தகைய வரவேற்பும், வாசிப்பும், மலேசிய எழுத்தாளர்களுக்கு மட்டும் அல்ல, ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் உள்ளிட்ட, வேறு பல நாடுகளில் வசிக்கின்ற அயலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கு, தாய் மண்ணாம் தமிழகத்தில் கிட்டாதது, ஒரு பெருங்குறையாகவே இருந்து வருகின்றது.

அந்தக் குறையைக் களைகின்ற முயற்சிகள், 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெடுத்து இருப்பது, மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்

இச்சங்கம், 1963 ஆம் ஆண்டு, மார்ச் 26 ஆம் நாள் பதிவு பெற்றது. இன்று, மலேசியத் தமிழர்கள் இடையே நன்கு அறிமுகமான, வளர்ச்சி பெற்ற அமைப்பாகத் திகழ்கின்றது. சங்கத்தின் முதல் தலைவர், முருகு.சுப்பிரமணியம். இவர், ‘தமிழ் நேசன்’ நாள் இதழின் ஆசிரியர் ஆவார். இரண்டாவது தலைவர் எம்.துரைராஜ் அவர்களின் காலத்தில், இலக்கிய அறக்கட்டளை நிறுவப்பட்டது; சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்குத் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது. அடுத்து வந்த தலைவர் ஆதி.குமணன் காலத்தில், சங்கத்துக்காக, சொந்தக் கட்டடம் கட்டப்பட்டது. தமிழகத்தில் இருந்து இலக்கியவாதிகளை அழைத்து வந்து, சொற்பொழிவுகள் நிகழ்த்தச் செய்தார்.

2004 ஆம் ஆண்டு முதல், பெ. இராஜேந்திரன் தலைவராகப் பொறுப்பு ஏற்றுச் செயல்பட்டு வருகின்றார். தமிழகத்துக்கும், மலேசியாவுக்கும் இடையே, இலக்கிய உறவுப் பாலத்தைக் கட்டும் முயற்சிகளைத் தொடங்கினார். அதன் முதல்படியாக, இருதரப்பு எழுத்தாளர்களுக்கும் இடையே அறிமுக சந்திப்புகள் நிகழ்வதற்காக, மலேசிய எழுத்தாளர்கள் குழுவாகச் சேர்த்து, மூன்று முறை தமிழகத்துக்கு வந்து, பல்வேறு கருத்து அரங்குகள், பயிற்சி அரங்குகளில் பங்கு ஏற்று உள்ளனர். தில்லி, கொல்கத்தாவுக்கும் சென்று, தமிழ்ச்சங்க வரவேற்பில் கலந்து கொண்டு உள்ளனர்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 35 எழுத்தாளர்களைக் கொண்ட முதல் குழுவினர் வந்தனர். அவர்கள், சென்னை வானூர்தி நிலையத்தில் கால் பதித்தபோது, மேள தாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களது வாசகர்களின் ‘வெற்றித் தமிழர் பேரவை’ என்ற அமைப்பினர், வரவேற்பு ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து இருந்தனர். மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் இலக்கிய அணித் தோழர்களுடன் சென்று, அனைவருக்கும் மலர்மாலைகள் அணிவித்து வரவேற்றோம்.

மறுநாள், தியாகராய நகர், திருமலை சாலையில் அமைந்து உள்ள பென்ஸ் பார்க் விடுதியின் கூட்ட அரங்கில் ஒரு கருத்து அரங்கம் நடைபெற்றது. சென்னையில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் பலர் பங்கு ஏற்றனர். மலேசிய எழுத்தாளர்களைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக, இந்தக் கருத்து அரங்கம் அமைந்து இருந்தது.

பயணக்குழுவில் இடம் பெற்று இருந்த எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய, மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் என்ற நூலையும், ‘மலேசியத்தமிழ் இலக்கியம்-ஓர் அறிமுகம்’ என்ற நூலையும், மலையகத்திலேயே அச்சிட்டுக் கொண்டு வந்து, தமிழகத்தில் தாம் சந்தித்த இலக்கியவாதிகள் அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கினர். அந்த நூல்களின் படிகள், எனக்கும் கிடைத்தன. எழுத்தாளர்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசகக்கூடிய வாய்ப்புகளும் கிட்டின. அவர்கள், தங்களுடைய படைப்புகளை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். நானும் புத்தகங்களை வழங்கினேன்.

அவர்களுள் பலர், தாங்கள் முதன்முறையாகத் தமிழகத்துக்கு வந்து இருப்பதாகவும், தங்களுடைய கொடிவழியை அறிந்து கொள்ளவும், தம் முன்னோர் வாழ்ந்த இடங்களைப் பார்ப்பதற்காகவும் வந்ததாகக் கூறினர். சிலருக்கு, தங்களுடைய முன்னோர்கள் பற்றிய குறிப்புகளே கிடைக்கவில்லை. அதுகுறித்த அவர்களது கவலையை உணர முடிந்தது.

vaiko_malaysia_writers

வைகோவுடன் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள்

தமிழகம் முழுவதும், சென்னை, மாமல்லை, புதுவை, சிதம்பரம், தஞ்சை, மதுரை, பழநி, பொள்ளாச்சி, திருவண்ணாமலை, திருச்சி என அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம், இருதரப்பு எழுத்தாளர்களுக்கு இடையே, கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. புத்தகங்களும் கைமாறின. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பல இடங்களில் வரவேற்பும், சில இடங்களில் விருந்தும் அளிக்கப்பட்டது.

தமிழகப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அவர்கள் புறப்பட இருந்த நாள் விடிந்தபொழுதில், ஆழிப்பேரலை தமிழகத்தைத் தாக்கியது. அன்றைய நாளில், அதன் பாதிப்புகள் முழுமையாகத் தெரியாத நிலையில், சிலநூறு பேர் இறந்து போயிருக்கலாம் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு வேதனையுற்று, உடனடியாகத் தங்களுக்குள் கூடிப்பேசி, உதவி நிதியைத் திரட்டி, அன்று தங்களைச் சந்தித்த வைகோ அவர்கள் மூலமாக, பத்து ஆயிரம் ரூபாயை, தமிழக அரசுக்கு வழங்கினர்.

2007 இரண்டாவது பயணம்:

இம்முறை, தமிழக அரசின் விருந்தினர்களாகவே, மலேசிய எழுத்தாளர்கள் குழு, பயணம் மேற்கொண்டது. இப்பயணத்தின்போது, தமிழ் இலக்கியங்களைப் போதிக்கும் பல்கலைக்கழகங்களை முதன்மையாகக் கொண்டு, சுற்றி வந்தனர்.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மலேசியத்தமிழ் எழுத்தாளர்களின் மூன்றாவது குழுவினர், தமிழகத்துக்கும், புதுவைக்கும் இலக்கிய உறவுப் பயணம் வருவதாக, மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் இராஜேந்திரன், மின் அஞ்சல் எழுதி இருந்தார். வழக்கம்போல இம்முறையும், சென்னை விமான நிலையத்திலும், தமிழகத்தில் அவர்கள் சென்ற இடங்களிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இப்பயணம் குறித்தும், எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகங்களுடனும், ‘மலேசிய-தமிழக-புதுவை இலக்கிய உறவுப் பயணம்’ என்ற தலைப்பில், ஒரு புத்தகத்தை, நல்ல, உயரிய தரத்தில் அச்சிட்டுக் கொண்டு வந்து இருந்தனர். முகப்பு அட்டையில், வள்ளுவர் கோட்டம், கோலா லம்பூரில் உள்ள இரட்டைக் கோபுரங்களின் படங்களை இடம் பெறச்செய்து இருப்பது, பொருத்தமாக இருக்கின்றது.

மலேசிய மனிதவள அமைச்சர், மலேசியாவில் இந்தியர்களின் அமைப்பான, தமிழர்களால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற, மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேலு, (பிரதமர் துறை அமைச்சர்), டத்தோ ஸ்ரீ எஸ். சுப்பிரமணியம், (மலேசிய மனிதவளத்துறை அமைச்சர்), டத்தோ எம். சரவணன் (கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர்) அ. கோகிலன் பிள்ளை (வெளியுறவுத்துறை துணை அமைச்சர்) ஆகியோர், இந்நூலுக்கு அணிந்துரையும், வாழ்த்து உரையும் எழுதி உள்ளனர்.

அதனை அடுத்து, கடந்த காலப் பயணங்கள் குறித்தும், அதனால் விளைந்த நன்மைகள் குறித்தும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் இராஜேந்திரன், மூன்றரைப் பக்கங்களில் சுருக்கமாகக் முன்னுரை எழுதி உள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:

வேர்களை நோக்கிய எங்களது தொப்புள் கொடி உறவுப் பயணம், மூன்றாவது முறையாகத் தொடர்கிறது. 2004 ஆம் ஆண்டு, முதன்முறையாக, 35 தமிழ் எழுத்தாளர்களோடு, தமிழகத்திற்கு இலக்கியப் பயணம் மேற்கொள்கிறோம் என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன், வியப்புடன் புருவத்தை உயர்த்தியவர்கள் பலர். பயணங்கள் என்பவை, உல்லாச நோக்கம் உடையதாக மட்டும்தான் இருக்க வேண்டுமா? நேர்த்திக் கடன் செலுத்துவதற்கும், உறவுகளைச் சந்திப்பதற்கும் மட்டும்தான் அமைய வேண்டுமா? இலக்கியம் வளர்ப்பதற்கும், இலக்கியப் பரிமாற்றத்திற்கும், இலக்கியவாதிகளுடனான அறிமுகத்திற்கும், அனுபவப் பகிர்வுக்கும், பயணங்கள் அமையக்கூடாதா?

எனக் கேள்வி எழுப்புகின்றார்.

மலேசியாவுக்கு வருகை புரியும் தமிழக எழுத்தாளர்களை வரவேற்பதிலும், உபசரிப்பதிலும், மலேசியத் தமிழர்கள் காட்டும் ஆர்வமும், அக்கறையும்அலாதியானது. ஆனால், மலேசியத் தமிழர்களைத் தமிழகத்தில் கண்டு கொள்வது இல்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

இந்த நூலில், பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியின், தமிழ்த் துறைத் தலைவர், மலேசியத் தமிழ் இலக்கிய ஆய்வு மையத்தைச் சேர்ந்த முனைவர் பழனிசாமி எழுதிய கட்டுரை இடம் பெற்று உள்ளது.

அக்கட்டுரையில், பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியின் தமிழ்த் துறையில், மலேசியத் தமிழ் இலக்கியத் துறையின் செயல்பாடுகள் குறித்துச் சுருக்கமாகக் கூறி உள்ளார்:

இந்த ஆய்வு மையம், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது; 500 க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழ் இலக்கிய நூல்கள், இக்கல்லூரி நூலகத்தில் இடம் பெற்று உள்ளன; 2005 ஆம் ஆண்டு முதல், அனைத்துப் பட்ட வகுப்பு மாணவர்களுக்கும், பாடத்திட்டத்தில், பகுதி - ஐ- தமிழ்த்தாளில் மலேசியத் தமிழ்க் கவிதைகள் பாடமாக வைக்கப்பட்டு உள்ளன; டிசம்பர் 2007 ஆம் ஆண்டு, மலேசியத் தமிழ் இலக்கியம்- பன்னாட்டுக் கருத்து அரங்கம் நடைபெற்றது; 40 க்கும் மேற்பட்ட அறிஞர்கள் பங்கு ஏற்றனர்

என்ற குறிப்புகளைத் தந்து இருப்பதுடன், மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்து நடைபெற்ற முனைவர் பட்ட ஆய்வு ஏடுகளைப் பற்றியும் தகவல்களைத் தந்து உள்ளார்.

டிசம்பர் 2005: ப. சுகந்தி: தலைப்பு: மலேசியச் சிறுகதைகளில் சமுதாயம்; பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்று உள்ளார்.

ஜனவரி 2006: த. செல்வ சங்கீதா: தலைப்பு: மலேசியத் தமிழ்க் கவிதைகளில் சமுதாயம்: பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று உள்ளார்.

ஏப்ரல் 2010: நா. தனராசு: தலைப்பு- குயில் கூவி துயில் எழுப்ப, சங்கமம், புதினங்களில் புலப்பாட்டுத் திறமும், உத்திகளும் எனும் தலைப்பில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்று உள்ளார்.

2012- ஜெயந்தி என்பவர், ‘மகேஸ்வரி சிறுகதைகளில் சமுதாயக் கூறுகள்’ எனும் தலைப்பில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

மலேசியத் தமிழ் அறிஞர்கள் தமிழகத்துக்கு வருகின்றபோதெல்லாம், இக்கல்லூரிக்கு வருகை தருகின்றனர். மேலும், இக்கல்லூரியில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள்தலைவரும், மலேசியத் தமிழ் இலக்கியங்களை உலகத் தமிழர்களிடத்தில் அறிமுகப்படுத்தி, அதன் அனைத்துப் பரிமாணங்களையும் விரிவாக்கம்செய்ய முனைந்தவருமமான, நினைவில் வாழும் ஆதி குமணன் அவர்கள் பெயர்கள் நினைவுப் பரிசு ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளனர். எஸ். வித்யாசாகர், ஆர். கௌதம், எம்.என். அரவிந்த், ஆர்.ரமேஷ், எஸ்.சங்கர், தனஞ்செயன், வி.விவேக், கே.எஸ். அகிலன், சுந்தர் மற்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியோரால், இதற்கான அறக்கட்டளை நிறுவப்பட்டு உள்ளது. அறக்கட்டளையின் வைப்பில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையினை, கீழ்காணும் செயல் ஆக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும்:

தமிழ் இலக்கியக் கருத்து அரங்கு, சிறப்புச் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்தல்;
பேராசிரியர்கள், மாணவர்களின் இலக்கிய ஆய்வுப் பணிகளுக்கு நிதி உதவி செய்தல்;
நூலகம் ஏற்படுத்துதல், நூலகங்களுக்கு நூல்கள் வாங்க உதவுதல்;
தமிழ் இலக்கியம் பயிலும் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி;
சிறந்த தமிழ் அறிஞர்களின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று விழா எடுத்தல்;
தமிழ் மொழிப் பாடத்தில் முதல் இடம் பெறும் மாணவர்களுக்கு அறக்கட்டளை பரிசு வழங்குதல்;
அறக்கட்டளையின் பெயரில், பல்கலைக்கழக அளவில், இலக்கியப் படைப்பு ஆற்றல் போட்டிகள்நடத்திப் பரிசு வழங்குதல்.

என்பது போன்ற விரிவான தகவல்களைத் தருகிறார் பழனிசாமி.

ஆர்வம் உள்ள இளைய தலைமுறையினர், இவ்வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்க!

malaysia_literature_450பொள்ளாச்சி கல்லூரி மட்டும்தான் இப்பணிகளைச் செய்ய வேண்டுமா என்ன? தமிழகத்தில் வளர்ந்து வலுப்பெற்று உள்ள இதர தனியார் பல்கலைக்கழகங்களும், இத்தமிழ்த் தொண்டை முன்னெடுக்கலாமே?

மற்றொரு கட்டுரையில், ‘உலகளாவிய தமிழ் இலக்கியம் மலேசியாவில் வேர் கொண்ட வரலாறு’ என்ற தலைப்பில் முன்னணி எழுத்தாளர் முனைவர் ரெ. கார்த்திகேசு, மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்த செய்திகளை அள்ளித் தருகிறார்.

மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு ஏறக்குறைய 140 ஆண்டுகள் வரலாறு உள்ளது எனக் குறிப்பிடுகிறார். மா. இராமையா, மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியத்தைத் தொகுத்து உள்ளார்;இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் படைகளின் தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மலேசியாவில், சற்றே தடைப்பட்ட தமிழ் இலக்கியம், 1946 ஆம் ஆண்டு, மறு உயிர்ப்பு பெற்றது. இதன்பிறகு, பல இலக்கிய அமைப்புகள் தோன்றின. எழுத்தாளர்களுக்குப் பரிசுப் போட்டிகளை நடத்தின. மலேசிய தமிழ் எழுத்து வளர்ச்சி பெற்றது.

2007 ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின்போது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், பொள்ளாச்சி என்.ஜி.எம்.கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில், மலேசிய இலக்கியம் பற்றிய விரிவான கருத்து அரங்குகள் நடைபெற்றன.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், சிங்கைத் தொழில் அதிபர் கொடை நெஞ்சர் முஸ்தபா, மலேசிய, சிங்கப்பூர் தமிழ் இலக்கியங்களுக்கான தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையை நிறுவினார். ஆதி. குமணன் பெயரில் நூலகமும் அமைக்கப்பட்டது.

மலேசிய-சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஆண்டுதோறும் பதிப்பிக்கும் நூல்களுள் சிறந்த ஒன்றுக்கு, கரிகாலன் விருது நிறுவப்பட்டது. இந்தப் பரிசை இதுவரை இரண்டு மலேசிய எழுத்தாளர்கள் ப. சந்திரகாந்தம் (2010), கே. பாலமுருகன் (2011) ஆகியோர் பெற்று இருக்கின்றனர்.

மலேசியாவில் பள்ளிகளில் தமிழ் இலக்கியம் போதிக்கும் ஆசிரியர்களுக்கான முழுநேரப் பயிற்சி வகுப்புகளை 2008 இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், 2009 இல் செம்மொழி மையத்தின் ஆதரவோடு, இருமுறை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் நடத்தப்பட்டன. 130 மலேசிய ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கு ஏற்றுப் பயன் பெற்றனர்.

என்பது போன்ற தகவல்களுடன், மலேசிய இலக்கியம் குறித்த ஒரு தகவல் சுரங்கமாகவே, கார்த்திகேசு அவர்களுடைய கட்டுரை திகழ்கின்றது.

1980 ஆம் ஆண்டுக்குப் பின் ‘மலேசியாவில் தமிழ்ப் பத்திரிகைகள்’ என்ற தலைப்பில், பெ.இராஜேந்திரன் அருமையாகத் தொகுத்து உரைத்து உள்ளார்.

1875 ஆம் ஆண்டு வெளிவந்த, ‘சிங்கை வர்த்தமானி’ முதல் தமிழ் நாளிதழ்;

இன்றுவரையிலும், இடைவிடாமல் வெளிவரும் மூத்த தமிழ் ஏடாகிய தமிழ் நேசன், 10.09.1924 ஆம் ஆண்டு, தொடங்கப்பட்டது என்ற தகவலைத் தருகிறார்.

தமிழ் முரசு ஏடு, 6.7.1935 ஆம் நாள் அன்று, வார இதழாக வெளியிடப்பட்டது. முதல் பதிப்பு, நான்கு பக்கங்கள், விலை ஒரு காசு. எண்.20,கிள்ளான் சாலையில் இருந்த ‘தமிழவேள்’ கோ.சாரங்கபாணி அவர்களின் இல்லத்தில், இந்த ஏட்டின் வெளியீட்டு விழாவும் நடந்தது. 1937 டிசம்பர் 1 ஆம் நாள் முதல், நாளிதழாக வெளிவரத் தொடங்கியது. அப்போது, மலேசியாவும், சிங்கப்பூரும் இணைந்து இருந்தன. இப்போது, தமிழ் முரசு, சிங்கப்பூரில் மட்டும் வெளியாகிறது.

1981 ஆம் ஆண்டு, தினமணி, தமிழ் ஓசை நாளிதழ்கள் தொடங்கப்பட்டன. பின்னர் சில வழக்குகளால், தமிழ் ஓசை மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1994 முதல் மக்கள் ஓசை, வார ஏடாக வெளிவரத் தொடங்கியது.
தற்போது மலேசியாவில், தமிழ்நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஒசை, தினக்குரல், நம்நாடு என ஐந்து தமிழ் நாள்இதழ்கள்;

வானம்பாடி, நயனம், தென்றல், மின்னல், மக்கள் ஆட்சி ஆகிய ஐந்து வார இதழ்கள்;

மன்னன், நாயகன், நிலா, அன்பு இதயம், ஒளி விளக்கும், உங்கள் குரல் ஆகிய மாத இதழ்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

என்பது போன்ற குறிப்புகளைக் கொடுத்து உள்ளார்.

மலேசிய செய்தித்தாள்கள், இலக்கிய ஏடுகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை அறிந்து கொள்ள விழைவோர், இக்கட்டுரையைப் படித்தால் போதும்.

‘மலேசியத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் மலாய்ப் பண்பாட்டுத் தாக்கங்கள்’ என்ற தலைப்பில் இணைப்பேராசியர் டாக்டர் வே.சபாபதி எழுதிய கட்டுரையில், மலாய் மொழியின் தாக்கம் குறித்து விரிவாகப் பேசுகிறது.

‘சயாம்-பர்மா மரண ரயில்: மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு’ என்ற தலைப்பில், ஆ. குணநாதன் எழுதி உள்ளார். இவர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக உள்ளார். ‘சயாம்-மரண ரயில்’ என்ற தலைப்பில், தனியாகவே முழுமையான நூல் ஒன்றும் வெளிவந்து உள்ளது. இந்த ரயில் பாதையை அமைப்பதற்கான பணியில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிர் இழந்த கதையை, சுருக்கமாக விவரிக்கின்றது குணநாதனின் கட்டுரை.

‘புதுக்கவிதையில் பெண் ஆளுமைகள்’ என்ற தலைப்பில், கா. இராஜம் காளியப்பன்;
மலேசியத் தமிழர்களின் வாழ்வியலில் பெண்கள்- வே.இராஜேஸ்வரி;
மலேசிய இலக்கியத்தில் பெண் படைப்பாளிகளின் வளர்ச்சி- ஒரு பார்வை - கே.எஸ்.செண்பகவள்ளி;
மலேசிய இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் இலக்கியப்பாடம் - ஒரு பார்வை என்ற தலைப்பில் மு. உஷா மனோகரன்;
மலேசியாவில் தமிழ் வளர்க்கும் பணியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

என்ற தலைப்புகளில், எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளும் இடம் பெற்று உள்ளன.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை மட்டும் அன்றி, அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் எவரையுமே, தமிழக வாசகர்கள் கண்டு கொள்வது இல்லை என்ற அவர்களது மனக்குமுறலை, சென்னையில் நடைபெற்ற பல நூல் வெளியீட்டு விழாக்களில் நேரடியாகக் கேட்டு இருக்கின்றேன். எனவேதான், ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் என்ற நூலை நான் எழுதினேன். ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் 12 பேர், இலங்கை நாடாளுமன்றத்தின் தமிழ் உறுப்பினர்கள் 4 பேர்களையும் நேர்காணல் கண்டு, அவர்களுடைய கருத்துகளை அந்த நூலில் பதிவு செய்து இருக்கின்றேன். ‘விகடன் பிரசுரம்’ வெளியிட்டு நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது.

2004 ஆம் ஆண்டு, பயணத்துக்கு, கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து இருந்தார். புதுவையில், அரசு விருந்தினர்களாகவே தங்கி இருந்தனர். அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு, எழுத்தாளர்கள் மலேசியா திரும்பிய பிறகு, பயணம் குறித்த தமது அனுபவங்களைத் தொகுத்து, ஒரு நூலை எழுதி வெளியிட்டனர். அந்த நூலையும், அடுத்த பயணத்தில் தமிழகத்தில் தாம் சந்தித்த அனைவருக்கும், அன்பளிப்பாகவே வழங்கினர்.

2007 ஆம் ஆண்டு, அவர்கள் மேற்கொண்ட இரண்டாவது பயணத்தின்போது, தமிழக அரசின் விருந்தினர்களாகவே வந்து சென்றனர். சென்னை, புதுவை, தஞ்சை, மதுரை, பொள்ளாச்சி, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள பல்கலைக்கழங்கள், கல்லூரிகளில், மலேசியத் தமிழ் இலக்கியக் கருத்து அரங்குகள் நடைபெற்றன. அரசு முறைப் பயணம் என்பதால், இப்பயணம் வெற்றிகரமாகவே அமைந்தது. தமிழகத்தின் கிராமங்களில் கூட மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகம் கிட்டியது. பல்கலைக்கழகங்களில் மலேசியத் தமிழ் இலக்கியம் ஒரு பாடப் பிரிவாகச் சேர்க்கப்பட்டது. நூலகங்களில், மலேசிய நூல்களும் இடம் பெறத் தொடங்கின. தமிழகத்தின் இலக்கிய விருதுகள் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களையும் சென்று சேரத் தொடங்கின.

2012 மூன்றாவது பயணம்

தொடங்கியதைக் காட்டிலும், அதன் தொடர்ச்சியில்தான் நமது முயற்சியின் வெற்றியைக் காண முடியும்; எனவேதான், எண்ணற்ற இடர்ப்பாடுகளுக்கும், விமர்சனங்களுக்கும் இடையிலும், இந்த மூன்றாவது பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றோம் என்றார் இராஜேந்திரன்.

இம்முறை வந்த குழுவில் இடம் பெற்றோர்:

பெ. இராஜேந்திரன், குணநாதன் ஆறுமுகம், அ. இராஜேந்திரம், கே.எஸ். செண்பகவள்ளி, ஆஷா குமரன், வே. இராஜேஸ்வரி, மு. உஷா மனோகரன், அருள் க. ஆறுமுகம், மாணிக்கம் இராமசாமி, ஆர். தமிழரசி, ந.கு. முல்லைச்செல்வன், முருகையா பரசுராமன், கு.சா. கண்ணன் (சன்னி கண்ணன்), சுகுணா குமாரன், ரெ.கோ. ராசு, ஆதிலட்சுமி, புவான்ஸ்ரீ விஜயலட்சுமி கிருஷ்ணசாமி, ஜமுனா பொன்னையா, கோ. மல்லிகா, கோகிலா அய்யாக்கண்ணு, சாந்தா, கோபாலன் பொன்னுசாமி, ஜி. குணசேகரன், ராஜம் முருகேசு (சுடர்மதி), சாந்தா கிருஷ்ணன், கிருஷ்ணா ராஜ்மோகன், கிருஷ்ணன் சுப்பிரமணியம், கு. வேணுகோபால், விமலா, தேவராணி கிருஷ்ணன், எஸ். வெங்கடசாமி (கமலா சங்கர்), கு. பிரேமா குமரன், இராமன் எட்டியான், இரஜேவ் சுகுணசீலன், சர்வீன் சுகுணசீலன்.

ஐம்பது பேர் கொண்ட ஒரு குழுவாக, உள்நாட்டுச் சுற்றுலாப் பயணங்கள் சென்று வருவதிலேயே எத்தனை பிரச்சினைகள்? எத்தனைக் குளறுபடிகள்? என்பதையெல்லாம் நாம் அறிவோம். கடல் கடந்த பயணத்துக்கு, எழுத்தாளர்களை ஒருங்கிணைப்பதற்கு, எத்தகைய கடின முயற்சி தேவை என்பதை, சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களே அறிவர். மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, தமிழகத்தோடு உறவுப் பாலத்தைக் கட்டுகின்ற முயற்சிகளை மேற்கொண்டு உள்ள மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தையும், அதன் தலைவர் இராஜேந்திரன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

மலேசியாவில் தமிழர்கள் ஓரளவு வளமான வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்றாலும்கூட, ஒருமுறையேனும் தமிழகத்துக்கு வந்து செல்ல வேண்டும்; தமது கொடிவழியை, முன்னோர்களின் கிராமத்தை, தொப்புள் கொடி உறவுகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையே, பலருக்கு வாழ்நாள் குறிக்கோளாக இருக்கின்றது.

கடல் நம்மைப் பிரித்தாலும், தமிழ் நம்மை இணைக்க வேண்டும் என்பதுதான், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் தமிழகம், புதுவை, இலக்கிய உறவுப் பயணத்தின் நோக்கமாக, குறிக்கோளாக அமைந்து இருக்கின்றது.

தமிழகத்துக்கு மட்டும் அன்றி, வட இந்தியப் பயணங்களையும் மேற்கொண்ட மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள், கொல்கத்தா, தில்லித் தமிழ்ச் சங்கம் நடத்திய வரவேற்பு விழாக்களில் சிறப்பிக்கப்பட்டு உள்ளனர்.

அண்மைக்காலமாக, இருதரப்பிலும் தொடர்புகள் பெருகி வருகின்றன என்றே சொல்லலாம். இணையங்களின் வழியாக, உலகத் தமிழர்கள் இடையே ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு உருவாகிக் கொண்டு இருக்கின்றது. தமிழகத்தில் இருந்து அயல்நாடுகளுக்கு இசைப்பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது. தமிழ்த் திரை உலகத்தினர் அயல்நாடுகளில் பாடல் காட்சிகளைப் படம்பிடித்துக் கொண்டு வருகின்றார்கள்.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டு அமைப்பு (Federation of Tamil Sangams of North America-FETNA) ஆண்டுதோறும், அமெரிக்க விடுதலை திருநாளை ஒட்டி நடத்துகின்ற கொண்டாட்டங்கள், மதிப்பைப் பெற்று வருகின்றன. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கின்ற இலக்கிய விருதுகள், தமிழகத்திலும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. உலக நாடுகளில், ஆங்காங்கு உள்ள தமிழ்ச் சங்கங்கள் நடத்துகின்ற விழாக்கள் குறித்த, ஒளிப்பதிவுகள், இணைய வலையில் பதிவு ஏற்றம் செய்யப்பட்டு, புவியின் பல பாகங்களில் வாழ்கின்ற தமிழர்களும் பார்த்து மகிழக்கூடிய வகையில் காணக் கிடைக்கின்றன.

தமிழகத்தில், தினமலர் நாளிதழ், அயலகச் செய்திகளுக்கு என, தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி, தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அதுபோல, இதர தமிழ் நாள் இதழ்களும், அயலகத் தமிழர்களது செய்திகளுக்குத் தனி இடம் அளிக்க வேண்டும்.

பல வழிகளிலும், தமிழ்நாட்டு வாசகர்கள், அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துகளைப் படிக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன. உறவுகள் மேலும் வலுப்பெற வேண்டும்!

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It