நம்முடைய கிரிக்கெட் அணி 1983ல் உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பின்னர்தான் நமது நாட்டில் பட்டிதொட்டிகளில்கூட கிரிக்கெட் ஆட்டம் பிரபலமானது. ஆள்நடமாட்டம் இல்லாத தெருக்கள் எல்லாம் பிட்ச்களாக உருமாறி அடுத்தடுத்த தெருக்களுக்கிடையிலான போட்டிகள் ஆவேசமாக நடைபெற்றன. ஏராளமான கண்ணாடி சன்னல்கள் உடைந்து காவல்நிலையங்களில் புகார் மனுக்கள் குவிந்தன. பாக்கெட் ரேடியோக்களை காதுகளில் ஒட்டிக்கொண்டு நகரும் நாகரிகம் பிறந்தது. கிராமங்களில் தென்னை மட்டைகள் கிரிக்கெட் மட்டைகளாக அவதாரமெடுத்து கிராமங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன. சில கிராமங்களில் கத்தி கபடா சமாச்சாரங்கள் புகுந்து களேபரமான கதைகளும் உண்டு. பொங்கல் விழா மற்றும் கூழ்வார்க்கும் திருவிழாக்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது கெளரவமாக கருதப்பட்டது. சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும்போதெல்லாம் உள்ளூர் முனுசாமிகளும் கோவிந்தன்களும் பெருமூச்சு விட்டுக்கொண்டு செய்திகள் மேய்ந்தனர்.

விசுவநாதன் ஆனந்த் தானொரு உலக சாம்பியன் என்று நிருபித்தபோது குறிப்பாக நம் தமிழகத்தில் சதுரங்க காய்ச்சல் அடிக்கத் தொடங்கியது. கிராண்ட்மாஸ்டர் கனவுகளுடன் நமது குழந்தைகள் கோச்சுகளின் வீடுகளைத் தேடி ஆவிகளாக அலையத் தொடங்கிவிட்டார்கள். சிறிய மற்றும் பிரமாண்டமான சதுரங்கப் போட்டிகள் ஊருக்கு ஊர், கல்லூரிகளிலும் கல்யாண மண்டபங்களிலும் நடைபெறத் தொடங்கியுள்ளன. இலட்சங்களில் பரிசுகள் வழங்கப்பட்டு, பரிசென்ற போதை குழந்தைகளையும் பெற்றோர்களையும் கவர்ந்து இழுக்கின்றது. இதனால் குடும்பம் குடும்பமாக போட்டிகள் நடைபெறும் ஊர்களுக்கு ஆர்வத்துடன் மக்கள் திக்விஜயம் செய்கிறார்கள்.

சமீபத்தில் நமது முதலமைச்சரும் 7 முதல் 17 வயது வரையிலான் பள்ளி குழந்தைகளுக்கு சதுரங்கம் அவசியமானது என்று சுட்டிக்காட்டி பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்கத்தை சேர்ப்பதாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். முதல்வர் வெளியிட்ட அறிக்கை பள்ளிகளில் முக்கியத்துவம் பெற்று அர்ப்பணிப்போடு நடைமுறைப் படுத்தப்படுமேயானால் உலக சதுரங்க அரங்கில் தமிழகத்தின் கொடி பட்டொளி வீசி உயரப்பறக்கும் என்பதில் சந்தேகமேதுமில்லை.

இந்தியாவில் ஆதிகாலத்தில் தோன்றிய சதுரங்க விளையாட்டை உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு தற்பொழுது விளையாடி வருகின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ள எல்லா வயதினரும் எளிதாக கற்றுக்கொண்டு விளையாடக்கூடிய ஒரு விளையாட்டாக சதுரங்கம் திகழ்கிறது. மற்ற விளையாட்டுகளை விளையாடும் வீரர்களுக்கு வயது முதிர்ந்தால் ஓய்வு உண்டு. சதுரங்கம் விளையாடும் வீரர்களுக்கு மட்டும் ஓய்வு பெற வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. மனதில் விருப்பமும் ஆர்வமும் இருந்துவிட்டால் குழந்தைகள் முதியவர்களுடனும் முதியவர்கள் குழந்தைகளுடனும் சமபலத்துடன் மோதி விளையாட முடியும். ஆண்டியும் அரசனும் எதிரெதிரே அமர்ந்து விளையாடுவதும் இவ்விளையாட்டில் சாத்தியமே.

சதுரங்க விளையாட்டின் கோட்பாடுகள் சிக்கல்கள் நிறைந்தவை. இவ்விளையாட்டில் இடம்பெற்றுள்ள பலவகையான சதுரங்க காய்களின் நகர்வு விதிகளைக் கற்று அவற்றின் போக்குகளை அலசி, ஆராய்ந்து விளையாடுவதன் மூலமாக குழந்தைகளின் நினைவாற்றல் மேம்படுகிறது. சதுரங்க ஜாம்பவான்கள் தங்கள் அனுபவத்தில் கண்டறிந்த நீண்ட வரிசையிலான திறப்பு நகர்வுகளை மனப்பாடம் செய்து விளையாடுவது குழந்தைகளின் நினைவாற்றல் பயிற்சிக்கான வழிமுறையாகவும் இருக்கிறது.

சதுரங்க விளையாட்டின் போது எதிரியின் ராஜாவைச் சிறைபிடித்து வெற்றி பெறவேண்டுமென்ற ஒரே குறிக்கோள் மனதை ஆக்கிரமிப்பதால் குழந்தைகளின் சிந்தனை ஒருமுகப்படுத்தப்படுகிறது.

சதுரங்கம் விளையாடும்போது தர்க்க ரீதியான சிந்தனைத் திறன்கள் குழந்தைகளிடம் அதிகரிக்கிறது. விளையாட்டு தொடங்கியது முதல் ஆழ்ந்த விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக அவர்கள் செயல்பட்டால்தான் உரிய நேரத்தில் அவர்களுடைய காய்களை நகர்த்தி எதிரியின் அரசனை சிறைப்படுத்தும் வாய்ப்பிற்காகத் திட்டமிட முடிகிறது. அதே வேளையில் தங்களுடைய காய்களை பலமுள்ள கோட்டையாக அமைத்து தன்னுடைய ராஜாவைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் வேண்டியிருப்பதால் அதிக கவனம் செலுத்தும் முன்யோசனை மனப்போக்கும் வளர்கிறது.

இவ்விளையாட்டினால் குழந்தைகளின் கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் அதிகரிக்கிறது. அற்புதமான நகர்வு ஒருங்கிணைப்புகள் நாளுக்குநாள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இன்னமும் கோடிக்கணக்கான நகர்வுகளை கண்டுபிடிக்கவும் வாய்ப்புகள் உள்ள நிலை இவ்விளையாட்டில் இருப்பதால் குழந்தைகளின் சுய சிந்தனை வளர்ந்து கற்றல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

நாகரீகமாக விளையாடக்கூடிய இவ்விளையாட்டை தன்னம்பிக்கையுடனும், தெளிவான சிந்தனையுடனும் ஒரு குழந்தை விளையாடத் தொடங்கிவிட்டால் அக்குழந்தையின் ஒய்வு நேரமும் விடுமுறை நாட்களும் பயனுள்ளனவாக மாறும். தீயநட்பும் தீயசெயல்களும் அவர்களிடமிருந்து விலகி ஓடத் தொடங்கும். .

சதுரங்கத்தை விளையாட படிப்படியாக கற்றுக்கொள்ளும் ஒரு குழந்தையிடம் வாழ்க்கைக்கு அவசியமான திட்டமிடுதல், நட்புணர்வு போன்ற நற்பண்புகள் வளரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இவ்விளையாட்டு குழந்தைகளிடம் மனஅமைதியையும் விடாமுயற்சியையும் வளர்க்கிறது. சதுரங்க ஆட்டக்கார குழந்தைகள் எந்த துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அத்துறையில் தனிமுத்திரை பதிப்பவர்களாக விளங்குகிறார்கள் என்பது நடைமுறை வாழ்க்கையில் நாம் நாள்தோறும் பார்க்கின்ற நிகழ்ச்சியாகும். சதுரங்கத்தைப் பற்றி சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் கற்றல் குறைபாடுகள் கொண்ட ஒரு குழந்தைக்கு சதுரங்கம் ஆடச் சொல்லி கொடுத்தால் அக்குழந்தை எல்லா விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும்.

முதல்வர் வெளியிட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே சதுரங்க போர்டுகள் வாங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சதுரங்கம் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களில் ஒருசிலரைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் சதுரங்க போர்டு, இதுதான் ராஜா, இது குதிரை என்று அடையாளம் காட்டும் அளவிலேயே சதுரங்க அறிவு உள்ளதாகத் தெரிகிறது.

சதுரங்க கோட்பாடுகளும் சதுரங்க கலைக்களஞ்சிய அறிவும் இல்லாத சம்பிரதாய நியமணங்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை. சதுரங்கத்தின் அடிப்படை விஷயங்களான சதுரங்க திறப்புகளின் முக்கியத்துவம், விளையாட்டின் போக்குகளைச் சிந்திக்கும் வழிமுறைகள், சதுரங்க காய்களின் நகர்வு நோக்கங்கள் மற்றும் பல்வேறு காய்களின் நகர்வுகளை ஒருங்கிணைக்கும் சிறப்பான காய்நகர்வு முதலிய நுணுக்கங்களை கற்றுத் தரும் திட்டமிட்ட சதுரங்கப் பாடவகுப்புகளுடன் பள்ளிகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்த முயற்சித்தால் புதிய மாயாஜாலக் கதவுகள் திறக்கின்ற வாய்ப்பு நடைமுறைக்கு சாத்தியமாகும்.

Pin It