ஆனந்த விகடன் உள்ளிட்ட பிற தளங்களில் நடக்கும் பிரச்சாரத்திற்கான பதில்

ஆனந்த விகடனில் வெளியாகி இருக்கும் பேட்டியை, ஏற்கனவே டெசோ மாநாட்டில் மையப்படுத்தப்பட்ட மறுவாழ்வு, மறு சீரமைப்பு என்பதன் தொடர்ச்சியாக‌வே எங்க‌ளால் புரிந்து கொள்ள‌ முடிகிற‌து.

விடுதலை கோரிக்கை என்பது எவ்வகையிலும் உயிர்ப்போடு இருக்கக் கூடாது என்பதற்காக நடைபெறும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியை விகடன் செய்திருப்பதுதான் வேதனை.

இன்று உலக நாடுகள் 'தமிழீழ விடுதலை' என்கிற கோரிக்கையை எப்படி புதைப்பது என்று திணறுகிறார்கள்... புலம்பெயர் அமைப்புகளை மனித உரிமை என்று குழப்பினார்கள்.. தமிழக அரசியல் களத்தில் அப்படியான ஒரு தொண்டு நிறுவன வேலையை செய்ய இந்திய-இலங்கை-அமெரிக்க அரசுகள் முயன்றன.

1.    முதல் கட்டமாக 2010 ஜூன் மாதம் 30ம் தேதியில் நடிகை அசினை வைத்து கண்சிகிச்சை முகாம் மற்றும் தொண்டு நிறுவன உதவிகள் என்றார்கள். நடிகர் சல்மான் கானை, விவேக் ஓபராயை வைத்து அவ்வாறே பேசினார்கள். (அசின் பங்கு பெற்ற தொண்டு நிறுவனம் ராஜபக்சே மனைவியின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமாகும். இலங்கை ராணுவ ஹெலிகாப்டரில் யாழ்பாணம் சென்று இறங்கினார் அசின்).    அசினை வைத்து தமிழக திரைப்படத் துறையை சேர்ந்தவர்களை மறுவாழ்வு தொண்டு நிறுவன வேலைகளில் இழுத்து, தமிழீழ கோரிக்கையை நீர்த்துப் போக வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதை முன்னின்று நகர்த்தியவர் நடிகர் சரத்குமார். பின்பு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தோம். அசினின் கண் சிகிச்சை முகாமில் நடந்த அவலத்தினை மே 17 இயக்கம் அம்பலப்படுத்த, இந்தத் திட்டம் உடைந்தது.

asin_rajapaksa_wife

2. பாடகர் ஹரிஹரனை கொழும்பு நகரின் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாட்டுக் கச்சேரி நடத்த வைத்து, அதன் மூலமாக இலங்கையில் சிங்கள அரசின் ஆட்சியில் தமிழர்களும் நிறைவான வாழ்க்கை வாழ்வதாக இலங்கை அரசு நிறுவ முயன்றது. இதனாலேயே மே பதினேழு இயக்கம் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்யும் முயற்சியை மேற்கொண்டது. அதனை தோழர் தாமரையின் முயற்சியும், இயக்குனர் அமீரின் கடிதமும் வெற்றியாக மாற்றின‌. இவ்வாறு தொடர்ச்சியாக தமிழகத்தின் தமிழீழ ஆதரவு தலைவர்களும், செயற்பாட்டாளர்களும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை முறியடித்து வருவதைத்தான், இந்தப் பேட்டி மூலம் கொச்சைப்படுத்த முயற்சி செய்வதாகக் காண்கிறேன்.

3.    பிறகு ஐ. நா அறிக்கையின் மூலமாக இனப்படுகொலையைம், விடுதலைக் கோரிக்கையும் சர்வதேச விவாதங்களில் மறைக்கச் செய்யப்பட்டது. உடனடியாக இலங்கை LLRC அமைத்தது. இதற்கு மேற்குலகமும், இந்தியாவும் பெரும் உதவியை செய்தன‌. அந்த அறிக்கை-விசாரணையில் மறுசீரமைப்பு மையப்படுத்தப்பட்ட்து. மறுசீரமைப்பிற்கு சர்வதேசம் உதவி செய்யவேண்டும் என்கிற கோரிக்கையை இலங்கை முன்வைத்தது. சீனா ஆதரித்தது. இந்தியா முன்மொழிந்தது. மேற்குலகம் மெளனமாக ஆதரித்தது.

4.    மறுசீரமைப்பு என்பது எதற்காக ?... விடுதலைக் கோரிக்கையை கைவிடச்செய்தல் என்பதே மறுசீரமைப்பின் முதல் படி. சர்வதேச புவிசார் அரசியல், புவிசார் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு கிழக்கு கடற்கரையை வர்த்தக, பொருளாதார, ராணுவ கேந்திரமாக அமெரிக்காவும், இந்தியாவும் மாற்றுவது என்பது நடக்க வேண்டுமானால் மறுசீரமைப்பு நடைபெறுதலும், விடுதலை என்கிற கோரிக்கை கைவிடப்படுதலும் இலங்கை மைய நீரோட்டத்தில் தமிழர்கள் இணைவதும் அவசியம்.

5.    இதை செய்வதற்குத் தேவையானது- வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்புகள். வேலைவாய்ப்பு அங்கு இல்லை என்பதன் மூலமாக பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுவது. அதாவது ராம்கோ, டிவிஎஸ், அசோக் லேலண்ட் நிறுவனங்களுக்காக‌ தமிழர்களின் நிலங்களைப் பிடுங்கி சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது. அதற்கான கட்டமைப்பு வசதிகளுக்காக‌ அமெரிக்காவும், சீனாவும், இந்தியாவும் சாலை-ரயில்- நீர் வசதிகளை செய்தன. காங்கேசன் துறைமுகம், ரயில் வசதித் திட்டங்களை இந்தியாவும் சீனாவும் பகிர்ந்தன.

6.    அமெரிக்காவின் தொண்டு நிறுவனம் யு.எஸ்.எய்ட் மூலமாக அங்கே பின்னலாடை நிறுவனங்கள் கட்டமைக்கப்பட்டன. 2012 ஜூலையில் இரண்டாவது பின்னலாடை நிறுவனத்தினை அமெரிக்காவின் இலங்கைக்கான தூதர் மூலம் கிழக்குப் பகுதியில் திறந்தது. இது 4-6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. இதில் தமிழர்கள் கூலிகளாக அமர்த்தப்படுகின்றனர். இத‌ற்கிடையே, திரிகோண‌ம‌லையில் ரூ.20000 கோடி செல‌வில் பெட்ரோலிய‌ சுத்திக‌ரிப்பு ஆலையை அமைக்க‌வுள்ள‌தாக‌ இந்திய‌ன் ஆயில் கார்ப்ப‌ரேஷ‌ன் க‌ட‌ந்த‌ ஜூலை மாத‌ம் அறிவித்த‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

7.    போரில் சின்னாபின்னமாக்கப்பட்ட தமிழர்களின் திறமைகளை கூர்மையாக்குவது, அவர்களை மனரீதியாக தயார் செய்வதுமான வேலைகளை யு.எஸ்.எய்ட் (USAID) செய்து கொண்டிருக்கிறது. இதைத் தான் மறுசீரமைப்பிற்கான அடிப்படை வேலைகள் என்கிறார்கள். இந்தப் பயிற்சியின்போது அம்மக்கள் அரசியல் கோரிக்கையிலிருந்து விடுவிக்கப்படுதல் நடைபெறும். மேலும் அவர்களை பிழைப்பு சம்பந்தப்பட்ட வேலைகளில் கவனம் செலுத்த வைப்பது, அவர்களது பாரம்பரியத் தொழில்களில் இருந்து வெளியேற்றி நகரமயமான வேலைவாய்ப்பிற்குள் தள்ளுவது என பல்வேறு திட்டங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. ஒரு தென்கொரியாவினைப் போலவும், பிலிப்பைன்ஸ் போலவும் அமெரிக்காவின் ராணுவ கேந்திரமாக மாற்றி, அமெரிக்க-இந்திய-சீன சந்தையை நிறுவி உலகமயமாக்கலின் மையத்திற்கு இழுப்பதும், விடுதலைக் கோரிக்கையை சுத்தமாக துடைப்பதும் இந்த திட்டத்தின் அடிப்படையாகும்.

8.    rajapaksa_450கடந்த 2012, ஜூன் ஜூலை மாதத்தில் மறுசீரமைப்பினைப் பற்றிய தீவிரமான விவாதங்களை மேற்குலகமும், ஐ.நா.வும் பேசியது. மறுசீரமைப்பிற்கான ஐ.நா.வின் சர்வதேசத் தலைவர் ஜான், இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதியில் மறுசீரமைப்பு உலகின் மற்ற பகுதிகளை விட மிகச் சிறப்பானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருப்பதாகச் சொன்னார்.

9.    ஆனால் சர்வதேசம்-இந்தியா-இலங்கையின் மிகப்பெரும் பிரச்சனை தமிழகத்தில் இருந்து எழும் நெருக்கடி. 2009க்குப் பிறகு, தமிழீழப் போராட்டத்திற்கு தமிழகம் நேரடி பங்களிப்பினை வழங்கமுடியாது எனினும், அரசியல் கோரிக்கையினை மிகவும் உயிர்ப்புடன் வைக்க பெரிதும் துணை நின்றது; நிற்கிறது. ஓர் இனம் இரண்டு நாடுகளில் இருக்கும்போது ஒடுக்கப்படும் தனது சகோதரர்களுக்காக அதன் அரசியல் கோரிக்கையை மற்றொரு நாட்டில் இருப்பவர்கள் உயர்த்திப் பிடித்தல் என்பதே ஒரு பெரும் வரலாற்று பங்களிப்பாகும். மறுசீரமைப்பில் தமிழகத்தின் தமிழீழ ஆதரவு தலைவர்களோ, இயக்கங்களோ பங்களிப்பது தடுக்கப்பட்டுள்ளது. தமிழீழத்தில் இருந்து உதவி பெற முனைந்தவர்கள் கடத்தப்பட்டும், கொலைசெய்யப்பட்டும் இருந்ததை கடந்த காலத்தில் பார்த்து இருக்கிறோம். இந்திய அரசின் மறுசீரமைப்புப் பணிகளில் தமிழகத்தின் பரிசீலனை இல்லாமலேயே நடக்கிறது. ஏன் தமிழகத்தின் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல், குஜராத் போன்ற வடமாநில நிறுவனங்களுக்கே அனுமதி அளிக்கபட்டன.

10.   மேலும், இலங்கை விவசாய உற்பத்தியின் தொட்டிலாக இருக்கும் வன்னிப்பகுதியில் விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தவும், மீதமிருக்கும் பெண்கள்-குழந்தைகளை விவசாயக் கூலிகளாக மாற்றி, பெரும் விளைச்சலைப் பெறுவதற்கான உதுறு-வசந்தியா( வடக்கின் வசந்தம்) திட்டம் இந்தியாவின் அழிவு விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனால் நடத்தப்பட்டது. 2010-2011இல் இலங்கை உணவு உற்பத்தியில் சுயசார்பு நிலையை அடையும் வகையில் இவர் தமிழீழ மக்களைப் பயன்படுத்தி செயல்படுத்திக் காட்டினார். மூன்று மடங்கிற்கு நெருக்கமாக விளைச்சல் தமிழர்கள் பகுதியில் அதிகரித்தது என 2011 அக்டோபர்- நவம்பரில் அறிவித்தார். மறு சீரமைக்க இயலாத வறுமைக் குடும்பங்கள் விவசாய பண்ணைக் கூலிகளாக மாற்றப்பட்டார்கள். நிலம் ராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டது. பின் இது இந்திய பெரு நிறுவனங்கள்- வணிகர்கள், சிங்கள வணிகர்-விவசாயிகளுக்கு மாற்றிக் கொடுக்கப்படுகிறது அல்லது விற்கப்படுகிறது. ஆக தமிழர்களின் அரசியல் கோரிக்கை மையப்படுத்திய நிலம் இப்போது கூலிகளால் நிரப்பப்படுகிறது.

11.   இந்த இடத்தில்தான் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் இறப்பும், அதைச் சுற்றிய மாயையை உடைத்தல் என்கிற பாணியில் விடுதலைக் கோரிக்கையை பின்னுக்குத் தள்ளுதல் என்பது நடக்கிறது. இன்றும் அன்றும் பிரபாகரன் என்பது விடுதலை அரசியலை முன்னிலைப்படுத்தும் அடையாளமாகவும், குறியீடாகவும் நிற்பதை உடைக்கவேண்டும் என்பது இவர்களது ஆகப்பெரும் சவால். அதாவது பிரபாகரன் என்கிற பூதம் இவர்களை(சர்வதேசம்-இந்திய-இலங்கை அரசு வர்க்கம்) விரட்டுவதை நிறுத்த வேண்டும். இதைத் தான் தன்னாலான பாணியில் காலச்சுவடும், அ.மார்க்ஸும் செய்து வருகிறார்கள்.

12.   மாவீரர் கல்லறையை அழித்தல், புலிகளது அடையாளத்தினை அழித்தல், தமிழர்கள் மிகக் குறுகிய காலமென்றாலும் மிக மகிழ்ச்சியுடனும், சுயசார்புடனும் வாழ்ந்த ஆட்சியை மறக்கடித்தல் மூலமாக விடுதலையை நினைவுபடுத்தலை அழிக்கும் அரசியல் நடைபெறுகிறது. இன்றைய நிதர்சனமாக வந்திறங்கி இருக்கிற இந்திய-அமெரிக்க நிறுவன‌ங்களுக்கு வேலை செய்து பிழைத்தல் என்பதை முன்னிலைப்படுத்தவே இந்த முயற்சிகள் என்பதை அழுத்தமாக சொல்ல வேண்டியிருக்கிறது.

13.   மறுசீரமைப்பு முன்னிலைப்படுத்தலை தமிழகத் தமிழர்களிடத்தே குறிப்பாக அரசியல் செயற்பாட்டாளர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டியது இலங்கை ஆதரவு சக்திகளுக்கு அவசியம். அதை மிக அழகாக நிதானமாக கொண்டு வருகிறார்கள். அதன்படியே டெசோ மாநாட்டு கோரிக்கையானது தமிழீழ வாழ்வுரிமை மாநாடாக மாற்றப்பட்டது. அதுவும் குறிப்பாக இந்தியாவின் வர்த்தகக் கண்காட்சி இலங்கையில் ஆகஸ்டு 5ம் தேதி நடப்பதை கணக்கில் கொண்டு கோரிக்கை கைவிடப்பட்டது மட்டுமல்ல, மாநாடே முன்னர் திட்டமிடப்பட்டிருந்த ஆகஸ்ட்5, 2012இல் இருந்து தள்ளி ஆகஸ்ட்12ம் தேதிக்கு மாற்றப்பட்டது. மறுசீரமைப்பினைப் பேசிய அந்த மாநாடு, விடுதலைக் கோரிக்கையை கவனமாகத் தவிர்த்தது என்பதை நாம் மறக்க முடியாது.

14.   டெசோ மாநாட்டினை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை ’செபா’ (சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்- இந்திய நிறுவனத்திற்கு இலங்கையை திறந்து விடுதல்) வர்த்தக ஒப்பந்தத்தினைக் காட்டியது. டெசோ மாநாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ராமேஸ்வரத்தில் இந்திய கப்பற்படையின் தளத்தினை அமைத்தல் என்கிற தீர்மானம் விசமாமனது மட்டுமல்ல, இந்திய உளவுத்துறை என்ன விரும்புகிறதோ அதையே இந்தத் தீர்மானம் முன்வைக்கிறது. மன்னார்-பாக் கடற்பகுதியை மீனவர்கள் அற்றதாக மாற்றி ராணுவ மையமாக மாற்றுவதும், கார்ப்பரேட் நிறுவனத்தின் மீன்பிடித்தல் தொழிலை கொண்டுவருவதற்கும் இது உதவி செய்யும். அதுமட்டுமல்ல தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் செயற்பாட்டாளார்கள் ஒருவேளை தமிழகம் நோக்கி தப்பி வரும் பட்சத்தில் வரும்காலத்தில் அதையும் கடற்படை மூலம் தடுத்திடமுடியும். ஆக விடுதலைப் போராட்டம் நடப்பதை எப்படியாகினும் தடுத்தல் என்பது இந்த முற்றுகை மூலம் சாத்தியமாகும்.

teso_meeting_640

15.   இந்தப் பேட்டியில் குறிப்பிடப்படும் செய்தியானது தமிழர்கள் வேலைவாய்ப்பின்றி வாழ்கிறார்கள் என்பதை தமிழீழ ஆதரவு மனநிலையிலிருந்து பேசுகிறார்கள். அதாவது பிரபாகரனை உயர்த்திப் பிடித்தவாறே பேசுகிறார்கள். முன்னர் புலிகளை விமர்சித்து இதே வாசகத்தினைப் பேசியது தோற்கவே தற்போது யுக்தி மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பேட்டிகளில் எங்குமே தமிழர்களின் வாழ்வாதாரம் குறித்த உரிமை மீறல்கள் அரசியல் ரீதியாக கேள்விகள் கேட்கப்படவில்லை; கேட்கப்படப் போவதும் இல்லை. அங்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தால் அங்கு விடுதலை கோரிக்கைக்கான அவசியம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதே அர்த்தம். அதை கவனமாகத் தவிர்த்து தமிழீழ மக்களை பிச்சை எடுக்க வைக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை பிச்சைகளல்ல. பசிக்கு ஒரு துண்டு மீன் அல்ல, மாறாக அவர்களது சொந்த குளத்தில் மீன்பிடிக்கும் உரிமை. அது பிச்சையின் மூலம் சாத்தியப்பட முடியாது.

16.   தமிழீழப் பகுதியை விட மிக மோசமாக பாதிக்கப்பட்ட தெற்கு சூடானுக்கு கொடுக்கப்பட்ட ஐ.நா.வின் பொது வாக்கெடுப்பு ஈழத்தில் ஏன் நடத்தப்படவில்லை என பத்திரிக்கைகள் கேள்வி எழுப்பவில்லை. பேட்டியாளரும் ஒவ்வொருமுறையும் நிதர்சனத்தினை அம்பலப்படுத்தும் கேள்விகளை வைக்காமல் பச்சாதாபத்தினை வெளிப்படுத்தும் கேள்விகளை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறார். எனவே தான் இந்தப் பேட்டியை நேர்மையானதாக பார்க்க முடியவில்லை. கட்டுரையின் நோக்கமே தமிழக ஆதரவாளர்களை நோக்கி வைக்கப்படும் பச்சாதாப சிந்தனையோட்டமே… தமிழகத்தில் தமிழீழ அரசியல் கோரிக்கையை கைவிட்டு மறுசீரமைப்பிற்கும், வாழ்வாதாரத்திற்கும் பேசுங்கள், விடுதலைக் கோரிக்கையை கைவிடுங்கள் என்பதே. மறுசீரமைப்பிற்கு ஐ.நாவே அனுமதிக்கப்படாதபோது, நாம் எங்கே அனுமதிக்கப்படப் போகிறோம்?

17.   மே மாதம் 2009க்குப் பிறகு 15,000 தமிழர்களைக் காணவில்லை என செஞ்சிலுவைச் சங்கமே அச்சம் தரும் அறிக்கை அளித்துள்ளது. அதைப்பற்றி எப்போது பேசப் போகிறோம்? எப்போது பத்திரிக்கை தோழர்கள் இந்த நெருக்கடிக் கேள்விகளை கேட்கப் போகிறார்கள் என்பதே நம‌து கவலை

18.   நவம்பர் 01, 2012, ஐ.நா.வின் மனித உரிமை கமிசனில் வந்த மனித உரிமைக்கான பரீசீலனை விவாதத்தின்போது இலங்கை கேள்வி கேட்கப்படும் நேரத்தில் இந்தியாவில் இலங்கைக்கு ஆதரவாக கடுமையான பிரச்சாரங்கள் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.

அ.   இந்துப் பத்திரிக்கை கடந்த வாரம் முன்பக்கத்தில் தயாமாஸ்டரிடம் பேட்டி என்று புலிகளை எதிர்த்து, விடுதலைக் கோரிக்கையை கைவிடுதலின் அவசியத்திற்கான பேட்டியை வெளியிட்டது. இந்து நாளிதழை ஆதரித்து அ.மார்க்ஸ் கட்டுரைகள் எழுதுவது மறுபுறம்.

ஆ.   ரீடிஃப்.காம் (rediff.com) இணையத்தில் இலங்கை சுற்றுலாவிற்காக சிறப்பு புகைப்படத் தொகுப்பும், பயணக்கட்டுரையும் வெளியிடப்பட்டன.

இ.   இதே போன்றதொரு தொனியில் தான் சில மாதங்களுக்கு முன்பு புதிய தலைமுறையில் ‘உண்மையைத் தேடி’ என்கிற ஆவணப்படம் வெளியாகியது. இலங்கை அரசினை இது எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை. மாறாக புலிகள் மனித உரிமை மீறல்களைச் செய்தார்கள் என்று கட்டமைக்க முயன்றது.

ஈ.   இது போலவே விகடனிலும் இப்படியான தமிழீழ மக்களின் அவலத்தினை மையப்படுத்தி, இலங்கை அரசினை நோக்கிய கேள்விகளை கவனமாக தவிர்த்து, தமிழக அரசியல் செயற்பாட்டாளர்களைக் கேள்வி கேட்டு கட்டுரை வெளியிடப்படுகிறது.

19.   ஆக இது போன்ற கட்டுரைகளும், பிரச்சாரங்களும் மிகக் கவனமாக, நுணுக்கமாக நமது தளத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. இவர்கள் எவரும் சர்வதேச விசாரணையைப் பற்றி பேசுவதில்லை. சர்வதேச ராணுவம் தமிழீழப்பகுதியில் காவல் காக்க வேண்டும் எனக் கேட்பதில்லை. துன்புறும் தமிழர்களைப் பற்றி பேசும் இவர்கள் சட்ட ஒழுங்கையும், வாழ்வுரிமைப் பாதுகாப்பையும், அரசியல் கோரிக்கையையும் பாதுகாக்க ஐ.நா.வின் தலையீட்டினைக் கேட்பதில்லை. அல்லது குறைந்தபட்சம் சர்வதேச இடதுசாரி சிந்தனையாளர்களை நோக்கி கேள்விகள் வைப்பதோ, கோரிக்கைகள் வைப்பதோ இல்லை. தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கையாக செயற்பாட்டாளர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இவர்கள், இந்த அவலங்களை விளக்கி அரசியல் விடுதலை பற்றிய விவாதங்களை முன்னெடுப்பது இல்லை. ஆனால் இவர்கள் தங்களை தமிழீழ விடுதலைக்கு ஆதரவானவர்கள் என்று பேசுகிறார்கள்; ஒருபோதும் இலங்கை அரசினை-இந்திய அரசினை- அமெரிக்காவினை நோக்கிய ஆழமான‌ கேள்விகளை, எட்வர்ட் செயித் பாலஸ்தீனத்திற்காக பேசியதைப் போல பேசுவதோ எழுதுவதோ கிடையாது.

20.   தோழர்களே நம்மை குழப்புவதே இந்த கட்டுரைகளின் நோக்கம். தமிழீழத்தில் அவலங்கள் நிகழ்வதை நாமும் பேசுகிறோம். அதற்கான தீர்வாக நாம் சர்வதேசப் படைகள் அனுப்பப்படவேண்டும் என்கிறோம். ஒட்டுக்குழுக்களும், ஆக்கிரமிப்புப் படைகளும் வெளியேற்றப்படுதலும் அவசியம் என்கிறோம். இந்தியாவின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பகவதி அவர்கள் தலைமை தாங்கிய சர்வதே நீதிபதிகள் குழு 'இலங்கையில் நீதித் துறை மரித்து விட்டது' என்று கூறியதை நாம் கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.

21.   இலங்கையில் நீதி கிடைக்காது. எனவே தான் நாம் சர்வதேச விசாரணையின் மூலம் குற்றவாளி விசாரிக்கப்படுதலும் தண்டிக்கப்படுதலும் அவசியம் என்கிறோம். பாதிக்கப்பட்ட‌வர்களுக்கான நீதியாக ஐ.நா.வின் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்கிறோம். குற்றவாளிக்கு விசாரணை, பாதிக்கப்பட்டவனுக்கு அவன் கோரிய அரசியல் விடுதலையான தமிழீழ விடுதலை. இதுவே அரசியல் நீதி, இதுவே சர்வதேச நீதி, இதுவே மனித நீதி. இதைத் தவிர்த்து எதுவும் 'ஓநாய்கள் ஆட்டிற்கு வழங்கும் நீதியே'

22.   நம்முடைய தேவை நமது சொந்த குளத்தில் மீன் பிடி உரிமை, பிச்சைகளாக கிடைக்கவேண்டிய மீன் துண்டுகள் அல்ல. சுதந்திரத் தமிழீழத்தினை சர்வதேச தமிழ்ச் சமூகம் தூக்கி நிறுத்தும். அங்கு சென்று தமது உழைப்பின் மூலம் உன்னதமான ஆட்சியையும், நாட்டினையும் தமிழர்கள் உருவாக்குவார்கள். அதை புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், மலேசிய-பர்மா-சிங்கப்பூர்-பிஜி-கரீபிய-தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தமிழீழத் தமிழர்களுடன் கைகோர்த்து செய்து காட்டுவார்கள். நாம் பெற இருப்பது நாடு. அதில் சமரசமில்லை.

 நாம் வெல்வோம்!!

- திருமுருகன் காந்தி, மே பதினேழு இயக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It