யார் பொய்யர்? அ.மார்க்ஸா? ச.பாலமுருகனா?: அ.ராஜரத்தினம்

(ச.பாலமுருகனின் கட்டுரைக்கு அ.ராஜரத்தினம் எழுதிய எதிர்வினை)

'கோவை இராணுவ வாகன எதிர்ப்பு போராட்டமும்
, அ. மார்க்சின் பொய்யும்’ என்ற கட்டுரையை வாசித்தேன். அதில் மனித உரிமைப் போராளி ச. பாலமுருகன் அவர்கள் வசதியாக மறைத்த தலையாய உண்மைகளை நாம் இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது.

“கோவை செஷன்ஸ் நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் எங்களின் வாதம் ஒரு அரசியல் வாதமாக மட்டுமே இருந்தது. தமிழக சட்டமன்ற தீர்மானம், சர்வதேச மனித உரிமைச் சட்டம், ஜெனிவா மாநாட்டு வரைவு போன்றவைகளுக்கு எதிரான இந்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான இந்திய அரசின் செயல்பாடு அமைந்திருப்பதையும், இனப்படுகொலை, போர் குற்றம் போன்றவற்றிற்கு இந்தியாவில் யாரேனும் உதவினால் அது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்ட விளக்கத்தையே முன்வைத்தோம். மக்கள் சிவில் உரிமைக்கழகம் (பி.யு.சி.எல்) சார்பில் அதன் மாநில செயலாளர் என்ற முறையில் நான் உறுதிமொழிப் பத்திரம் கொடுத்தேன். இதில் நாங்கள் எங்களின் இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் அதன் செயல்பாடுகளைப்பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தோம். ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை நாங்களோ, மதிமுகவோ கொடுக்கவில்லை.” என பத்தி நெடுக தன் பக்க விளக்கத்தை முன் வைக்கும் பாலமுருகன் கவனமாக திட்டமிட்டு மறைத்த உயர்நீதிமன்ற உறுதிமொழிப் பத்திர வாசகங்கள் இதோ:

ஜுன் 26, வெள்ளிக்கிழமை, ஹிந்து நாளிதழ் செய்தி:

உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். ரெகுபதி முன்னிலையில் ம.தி.மு.க., பி.யு.சி.எல் இன் வழக்கறிஞர் கூறியவை, “ராணுவத்தொடர் வண்டியானது சிறீலங்கா படையினருக்கு படைக்கலன்களை விநியோகிக்கத்தான் செல்கிறது என கும்பல் நம்பியது.”

ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், பி.யு.சி.எல். இன் தமிழ்நாடு, புதுச்சேரி அலகுகளின் பொதுச் செயலாளரும் அளித்திட்ட உறுதிமொழி பத்திரத்தில், தாங்கள் தொடர்ச்சியாக சிறீலங்கத் தமிழர்களின் நலன்களுக்காகப் போராடுவதாகவும் கூறியிருந்தனர்.

அத்துடன் நடந்துவிட்ட சம்பவங்களுக்காக வருந்துவதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது எனவும் கூறினர். சமூக சேவை செய்வதற்கு விரும்புவதாகவும், நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைக்கும் பணிந்து நடப்பதாகவும் கூறியுள்ளனர்.

கோவை இராணுவத்தொடர் வண்டித் தாக்குதலில் பங்கெடுத்தவர்களின் தியாகம், அரசியல் மற்றும் உறுதித்தன்மை போன்றவற்றை அ.மார்க்ஸ் நையாண்டி செய்வதாக நொந்துக்கொள்ளும் ச. பாலமருகன் தான் நீதிமன்றத்தில் அளித்த சரணாகதி வாக்குமூலத்திற்கு ‘மாவீரர்’ பட்டயமா எதிர்பார்க்கிறார்?

இலங்கைப் பிரச்சினையில் பி.யூ.ஸி.எல். இன் பலமுகம்

தொடர்ச்சியாக சிறீலங்கத் தமிழர்களின் நலன்களுக்காக தாங்கள் போராடுவதாக உரிமையுடன் கூறிக்கொள்ளும் பி.யூ.ஸி.எல் இன் இரட்டை வேடங்களையும், இலங்கை இனப்போராட்டத்திற்கு எதிரான அதன் நுண்ணிய கீழறுப்பு வேலைகளையும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

இலங்கை இனப்பிரச்னை தொடர்பாக பெங்களூரில் பெரிய அளவில் மாநாட்டை பி.யூ.ஸி.எல் நடத்தியது. இதற்கான நிதிப்பின்புலம் எங்கிருந்து வந்தது? இம்மாநாட்டில் பேசிய முன்னாள் இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஏ.பி. வெங்கடேஸ்வரன் இலங்கைப்பிரச்னையில் ஈழத் தமிழர்களின் தலையாய எதிரியாக சீனாவை சித்தரித்துள்ளார். போகிற போக்கில் இந்தியாவின் குறைபாடுகளை லேசாகச் சொல்லியுள்ளார்.

இதே போன்றதொரு உரையையே கடந்த 06.09.2009 அன்று சென்னையில் நடந்த ஈழப்பிரச்னை தொடர்பான கருத்தரங்கில் பி.யூ.ஸி.எல் இன் சுரேஷ் ஆற்றினார். இலங்கை இனப்பிரச்னையில் தமிழக சட்டமன்றத் தீர்மானம், சர்வதேச மனித உரிமைச்சட்டம், ஜெனிவா மாநாட்டு வரைவு போன்றவைகளுக்கெதிராக இந்திய அரசின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாக குன்றேறி கூவும் பாலமுருகனும் அவர் சார்ந்த பி.யூ.ஸி.எல். உம் நைசாக இந்திய விரிவாதிக்க தேசிய வெறியின் கையாளாக எப்படித் தொழிற்படுகின்றனர் என்பதை அவதானியுங்கள்.

சீனாவை நியாயப்படுத்தவோ, இலங்கை அரசின் யுத்த வெறிக்கு அது செய்த உதவிகளை சரிகாணவோ முடியாது. ஆனால் ஈழ இனப்படுகொலையில் வட்டார விரிவாதிக்க வெறிப்போட்டியில் தலையாயக் குற்றவாளியான இந்தியாவின் பங்களிப்பை சிறியதாகக் காட்டும் முகமாக குற்றப்பட்டியலில் எங்கோ தொலைவில் உள்ள சீனாவை முதலிடத்திற்கு கொண்டுவரும் பி.யூ.ஸி.எல் இன் ஜகஜ்ஜால வித்தையையும், துரோகத்தையும் இந்திய விரிவாதிக்க வெறித்தனத்தின் முகவராக அது செயல்படுவதையும் நாம் தீவிரமாக கணக்கிலெடுக்க வேண்டும்.

தலைமைப்போக்கிரி அமெரிக்காவிற்கு சீனாவை எதிர்க்க வேண்டிய தேவையுள்ளது. அந்த திருப்பணிக் குழாமில் திருத்தொண்டர் இந்தியாவும் சீனாவைக்காட்டி தேசிய வெறியைக் கிளப்பி ஏகாதிபத்திய பாதஸேவை செய்து வருகிறது. இந்த அமெரிக்க இந்திய போக்கிரி அச்சின் ஊதுகுழலாக பி.யூ.சி.எல். செயல்படுவதை மனித இன விடுதலைப்போராளிகள் கணக்கிலெடுக்க வேண்டும்.

ஆயிரங்குறைகள் இருந்தாலும் சீனா தனது அண்டை அயலவர்களுடன் நல்லுறவையேப் பேணி வருகின்றது. ஆனால் இந்தியா தன்னைச் சுற்றிலும் உள்ள நாடுகளுடன் ஒரு பேட்டை போக்கிரித்தனமான வெளியுறவுக் கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றது. போக்கிரித்தனத்திற்கு உயர்ந்த நட்புறவா பரிசாக கிடைக்கும்?

மாற்று ஊடகமாக தன்னை அறிமுகப்படுத்திய கீற்று இணையதளம் இன்று அவதூறுகள், அபத்தங்களின் புகலிடமாக மாறியுள்ளது வேதனையளிப்பதாக உள்ளது. நாட்டின் தலையாய ஊடகங்கள் கடைப்பிடிக்கும் ஊடக அறங்கள் கூட கீற்றுவிற்கு இல்லையென்பதை என்னவென்று சொல்ல?

ஈழப்பிரச்னை, திபெத் பிரச்னையில் ஹிந்து நாளிதழ் ஓரவஞ்சனையாக நடந்தாலும் கூட வாசகர் கருத்துகளுக்கு மதிப்பளித்து (Reader’s Editor) என்ற பக்கத்தை அறிமுகப்படுத்தி செய்திகளில் ஏற்படும் பிழைகள், விடுபடல் ஆகியவற்றை ஒப்புக்கொண்டு அடுத்தடுத்த நாட்களில் அதற்கான விளக்கம், சமாதானத்தை தருகின்றனர். தேவையென்றால் மன்னிப்பு கூடக் கேட்கின்றனர்.

ஆனால் கீற்றுவின் வழித்தடத்தைப் பாருங்கள் - அகிலன், கதிர்காமரை, காலஞ்சென்ற லட்சுமண் கதிர்காமரின் மகன் என சொல்லியது. தவறைச்சுட்டிக்காட்டியவுடன் அதற்காக வருத்தம் கூடத் தெரிவிக்காமல் அதை நீக்கியது.

அதேபோல் வேறு யாரோ படத்தைப்போட்டு சுசீந்திரனை அவதூறு செய்தது தவறு என சுட்டிக்காட்டப்பட்டவுடன் அதை நீக்கிவிட்டு, செய்த அவதூறுக்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காமலிருப்பது; கீற்று ஆசிரியர் குழுவைச் சார்ந்த பாஸ்கரிடம் ஆதவன் தீட்சண்யா இதைச்சுட்டிக் காட்டியபோது, “உங்களைப்போல் மூன்று மாத சஞ்சிகைக்கு வேண்டுமென்றால் சரிபார்க்க நேரமிருக்கும். மூன்று நாளைக்கொரு தடவை upload செய்யும் எங்களுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை” எனக் கூறியது; டாக்டர் வி. பாண்டியன் போன்ற ஹிந்துத்வ பாணி தூய தமிழ்த் தேசியவாதிகள், ச. பாலமுருகன் போன்ற இந்திய விரிவாதிக்க வெறிமுகவர்களின் நாலாந்தர நடையிலுள்ள கடிதங்களை வெளியிடுதல் என காலச்சுவடு பாணியிலான மாற்று ஊடக வலதுசாரி வழித்தடத்தை கீற்று தேர்ந்தெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. தீவிர இலக்கிய உலகில் காலச்சுவட்டின் வலது சாரி வடு அம்பலப்படுத்தப்பட்டதைப் போல் கீற்றுவிற்கு எதிராகவும் போராட வேண்டிய வரும் போலிருக்கின்றது.

- அ.ராஜரத்தினம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

*****

'ஹிண்டுல போட்டுருக்கான் ஸார்!'

- இரா.முருகவேள்

(அ.மார்க்ஸ் மற்றும் அ.ராஜரத்தினம் கட்டுரைகளுக்கு இரா.முருகவேள் மறுப்பு)

கோவை இராணுவ வாகனத் தாக்குதல் வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ச.பாலமுருகன் தாக்கல் செய்த வாக்குமூலத்தை அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன். இந்த ஆவணம் உண்மையானதுதானா என்பதில் சந்தேகமிருந்தால் உயர்நீதி மன்றத்தில் சான்றிட்ட நகல் பெற்று, சரி பார்த்துக் கொள்ளலாம்.

 

 

வரிக்கு வரி இந்து செய்தியை மொழிபெயர்த்தவர்களுக்கு இந்த வாக்குமூலத்தைப் புரிந்துகொள்வது சிரமமாக இராது. இதில் ஒரு சொல்லாவது கோவை இராணுவ வாகனத் தாக்குதல் சம்பவம் பற்றிக் குறிப்படப்பட்டுள்ளதா?

வாக்குமூலத்தின் எந்த இடத்திலாவது அ. மார்க்ஸும், ராஜ ரத்தினமும் கூறுவது போல,

“ராணுவத் தொடர் வண்டியானது சிறீலங்கா படையினருக்குப் படைக்கலன்களை விநியோகிக்கத்தான் செல்கிறது என்று கும்பல் நம்பியது.”

“நடந்துவிட்ட சம்பவங்களுக்காக வருந்துகிறோம், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாது,” என்ற வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளனவா? இப்போது பொய் சொல்வது யார் என்பதில் குழப்பம் இருக்காது என்று நினைக்கிறேன்.

***

பத்திரிகைச் செய்திகளை முழுமையாக நம்பவிடக்கூடாது என்பது உண்மையறிதலின் அரிச்சுவடி. ஊடகங்கள் தரும் செய்தியை அப்படியே நம்புவதாக இருந்தால், ‘வீரப்பனை போலீஸ் பிடிச்சிருச்சி போல’ என்று டீக்கடைகளில் செய்தித்தாள் புரட்டியபடி பேசும் பொதுஜனத்தின் அறிவுமட்டத்திற்கும், எல்லோரையும் மிஞ்சிய அறிவுஜீவியாக தங்களைக் கருதிக்கொள்பவர்களின் அறிவுமட்டத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. ஓய்வுபெற்ற பிறகு பல உண்மையறியும் குழுக்களை தலைமையேற்று நடத்திய அ. மார்க்ஸுக்கு இது தெரியாமலிராது. எனவே அவர் தெரிந்தே இப்படியொரு அப்பட்டமான பொய்யைக் கூறி வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட தோழர்களின் சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்க முயன்றிருக்கலாம் என்று நினைக்க இடமிருக்கிறது.

அ.மார்க்ஸ் எவ்வளவு அபத்தமாக எழுதியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள ஒப்புதல் வாக்குமூலம் பற்றிக் கொஞ்சம்...

தாங்கள் குற்றமற்றவர்கள் என்று போராடி நிரூபிக்க விரும்புபவர்களே விசாரணை காலம் முழுக்க வெளியில் இருப்பதற்காக பிணை கோருவார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு மனு தாக்கல் செய்தால் அது நேரடியாக தண்டனைக்கு இட்டுச் செல்லும். எனவே ‘குற்றத்தை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்து வாக்குமூலம் எழுதிக்கொடுத்துவிட்டுப் பிணையில் வந்தார்கள்’ என்பது எவ்வளவு பெரிய அபத்தம்? அதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக பாலமுருகன் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்று நீதிமன்றம் பிணை வழங்கியது என்பது இன்னும் பெரிய அபத்தம்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் குற்றங்களை உறுதிப்படுத்தி அரசு தரப்பு அந்தக் கட்டத்தில் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்திருக்கவில்லை. பின்பு எந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்வது?

அ.மார்க்ஸ் தமிழ் சினிமா கோர்ட் சீன்களைப் பார்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்று பரிந்துரை செய்கிறேன்.

***

எதையும் சரிபார்க்காமல் அ.மார்க்ஸ் ஒரு அப்பட்டமான பொய்யைச் சொல்லிவிட்டார். அது கண்டுபிடிக்கப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டவுடன் திருத்திக்கொள்வதுதானே நேர்மை? புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவதையே தொழிலாகக் கொண்ட இந்துவின் பின் ஒளிந்து கொண்டு தப்பிக்கப் பார்ப்பது சரியா?

இந்துவின் மீது இன்னும் நம்பிக்கை இருந்தால் டாக்டர்.ரமேஷ் எழுதிய “வெந்த பன்றியின் கதை” கட்டுரையைப் படித்துக் கொள்ளலாம்.

ஒரு பொய்யை மறைக்கும் முயற்சியில் அ.மார்க்ஸும் அவர் நண்பர்களும் அரச பயங்கரவாதத்தின் முகவர்களோடு மேலும் மேலும் நெருக்கமாகத் தங்களைப் பிணைத்துக் கொள்கிறார்கள். இந்தப் பிணைப்புதான் சொந்த நாடாக இருந்தாலும், அண்டை நாடாக இருந்தாலும் அரச பயங்கரவாதத்தையும், இராணுவத்தையும் மட்டுமே கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளியிருக்கிறது.

***

நீதிமன்றம் விதித்த நிபந்தனையைப் பொருத்தவரை வழக்கமாக நீதிமன்றம் பிணை பெற்றவர்கள் காலையும் மாலையும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கும். இவர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லப்பட்டதால் காவல் நிலையம் போவதற்குப் பதில் அனாதை ஆசிரமத்திற்குச் சென்று சமூக சேவை செய் என்றது. ஏற்றுக்கொண்டார்கள். என்ன தவறு?

பி.யு.சி.எல் கணக்கு வழக்குகள், இந்திய விரிவாதிக்கத்தை ஆதரிப்பவர்கள் யார், ஆறு மாதத்திற்கு முன் தமிழ்நாட்டில் யார்யாரெல்லாம் அறிவுஜீவிகளாக இருந்தார்கள், தற்போது யாருடைய அறிவு மட்டம் குறைந்து போயிருக்கிறது, அப்புறம் காஷ்மீரில் அ.மார்க்ஸ் கைது செய்யப்பட்டதாகப் பரவிய குறுஞ்செய்தி, அதற்கு அவர் ஆற்றிய எதிர்வினை போன்றவை பற்றியெல்லாம் கட்டாயம் விரிவாக விவாதிக்கலாம். ஆனால் முதலில் இந்த யார் பொய்யர் பிரச்சினைக்கு விடை கண்டாக வேண்டும்.

அ.மார்க்ஸ் கூறியது அப்பட்டமான பொய் என்று நாங்கள் கூறுகிறோம். பாலமுருகன் கூறுவது பொய் என்றால் அ.மார்க்ஸ் அல்லது ராஜரத்தினம் அதை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். ‘ஹிண்டுல போட்டுருக்கான் ஸார்’ வாதங்களெல்லாம் அறிவுப்பூர்வமானவையல்ல; ‘அம்மாஞ்சி’த்தனமானவை.

உயர்நீதிமன்றத்தில் சான்றிட்ட நகல் பெற அல்லது சரிபார்க்க இவர்களுக்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம். அதுவரை காத்திருக்க நாங்கள் தயார்.

- இரா. முருகவேள் 

Pin It