பிழை இன்றித் தமிழ் பேச எழுத என்ற தலைப்பில், ‘புணர்ச்சி விதியை அகற்றுவோம்’ என்று நான் எழுதி இருந்த கருத்துக்கு, முனைவர் கன்னியப்பன் அவர்கள் எழுதி இருந்த எதிர்வினையை, நன்றியோடு வரவேற்கிறேன். ஒரு விளக்கம் அளிக்கக் கிடைத்த வாய்ப்பாகக் கருதுகிறேன். இது தொடர்பாக, என்னுடைய கருத்துகள் சிலவற்றை, எடுத்துக்காட்டுகளுடன், ‘கீற்று’ இணையதள வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். 

அச்சு ஆணியா? அச்சாணியா? 

எப்போதும் பாடல்களை முணுமுணுத்துக்கொண்டே இருப்பது என் வழக்கம். அப்படி ஒருநாள், வீட்டில் பாடிக்கொண்டு இருந்தேன். 

‘வண்டி உருண்டோட அச்சாணி தேவை

என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே

இரண்டு அன்புள்ளம் தேவை’ 

என்ற பாடல் வரிகளை நான் பாடும்போது, ‘சே... அப்பா சாணி தேவை என்று பாடுகிறார், அம்மா!’ என்றாள் என் மகள். 

‘அது சாணி இல்லையம்மா; அச்சு ஆணி’ என்று பிரித்து, பொருள் விளக்கினேன். 

இங்கே, அச்சும் ஆணியும் புணரும்போது, அச்சும் மறைந்தது - ஆணியும் காணாமல் போய், ‘அச்சாணி’யாகி விட்டது. 

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலன் ஆள்பவர்க்கு

என்ற குறளை எடுத்துக்கொள்வோம். 

ஒரு மாணவனை அழைத்து இதற்குப் பொருள் சொல்லும்படிக் கேட்டுப் பாருங்கள். ‘துணி உடைமை’ என்று சொல்லக்கூடும். ‘துணிவுஉடைமை’ என்றே எழுதினால், பொருள் விளக்கம் சொல்லத் தேவை இல்லையே? 

‘அன்னியர்க்கி

டங்கொடோம்’ - என்ன இது? புதுச்சொல்லாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா?

தமிழ்ச்சொற்களைத் தனித்தனியாக முழுமையாக எழுதுவது பற்றி, அண்ணன் முனைவர் சபாபதி மோகன் (மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்) அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தேன்.

‘ஆமாம் நீங்கள் சொல்வது சரியான கருத்துதான். இளம்வயதில் நானும், என் தங்கையும் சேர்ந்து படிக்கும்போது, என் தங்கை ‘அன்னியர்க்கி டங்கொடோம் ....அன்னியர்க்கி டங்கொடோம்’ என்று படிப்பார்.

அப்படிப் படிக்கக்கூடாது - ‘அன்னியர்க் கிடங்கொடோம்’ என்றுதான் படிக்க வேண்டும் என்று நான் திருத்துவேன். ஆனால், அவரது வசதிப்படி, மீண்டும் மீண்டும் அப்படித்தான் படித்தார். வேகமாகப் படித்தாரே தவிர, அதன் பொருளைப் புரிந்து படிக்கவில்லை. எனவே, தமிழ்ச்சொற்களைப் பிரித்து முழுமையாக எழுதினால்தான், இளைய தலைமுறையினர் ஓரளவேனும் பொருள் புரிந்து படிப்பர்’ என்றார்.

‘அன்னியர்க்கிடங்கொடோம்’ என்பதை, ‘அன்னியர்க்கு இடம் கொடோம்’ என்று அச்சிட்டு விட்டால், பிரச்சினை இல்லையே? (‘அன்னியர்’ என்பதும் தமிழ்ச்சொல் அல்ல.) 

இன்றைய குழந்தைகள் இப்படிப் பொருள் விளங்கிக் கொள்கிறார்கள். இன்றைக்கே நிலைமை இப்படி இருந்தால், எதிர்காலத்தில் எப்படியோ?

புறநானூறு, அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியப் பாடல்கள் பாமர மக்களிடம் போய்ச் சேராமல், எளிதில் புரிந்து கொள்ள இயலாமற் போனது ஏன்? அதைக் கண்டு மாணவச் செல்வங்கள் அஞ்சுவது ஏன்? மனப்பாடம் செய்யத் தடுமாறுவது ஏன்?

அவற்றில் உள்ள சொற்கள் ஒன்றோடு ஒன்று புணர்ந்து இருப்பதே ஆகும். பள்ளி, கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் சங்க இலக்கியப் பாடல்களுள், தேர்வுக்கான பாடல்களை, எப்படியோ மனனம் செய்து எழுதி விடுகிறார்கள். ஆனால், தங்கள் வாழ்நாள் முழுவதும் அதற்கான பொருளை அவர்கள் அறிந்து கொள்வது இல்லை. என்னையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்.

இப்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற என் மகளை, நாள்தோறும் செய்தித்தாள்களை வாசிக்கச் செய்து, அருகில் இருந்து கேட்கிறேன். எப்படித் தடுமாறுகிறார் என்பது புரிகிறது. திருத்துகிறேன். அதுபோல, உங்கள் பிள்ளைகளையும் வாசிக்கச் செய்து கேட்டுப் பாருங்கள். பிரித்து எழுதப்பட்ட சொற்களை எளிதில் புரிந்து கொள்கிறார்கள் என்பதை உணர முடியும்.

பொருள் பிரித்து எழுதும்போது, தொடக்கத்தில் அது கொஞ்சம் மாறுபாடாகவே தோன்றும். எளிதில் ஏற்றுக் கொள்ள இயலாது.

சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம். எனவே, போகப்போகச் சரியாகி விடும்.

மொழி வரலாறு எழுதிய அறிஞர் மு.வ. அவர்கள், பண்டித நடையில் எழுதாமல், எல்லோருக்கும் புரியும்படியான எளிய நடையில் எழுதினார். இறவாத இலக்கியங்களைப் படைத்தார். அவர், புணர்ச்சி விதிகளைக் கையாண்டு, புரியாமல் எழுதி தமிழர்களை அச்சுறுத்தக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். ‘நன்றாகவிருந்தது’ என்று எழுதாமல் ‘நன்றாக இருந்தது’ என்று எழுதினார்.

‘தமிழாசிரியர்’  -              ‘தமிழ் ஆசிரியர்’

‘தமிழறிஞர்’       -              ‘தமிழ் அறிஞர்’

மேற்கண்ட இரண்டு சொற்களையும், பலமுறை தனித்தனியாக ஒலித்துப் பாருங்கள். ‘தமிழாசிரியர்’ என்று எழுதும்போது, தமிழ் என்ற சொல் முழுமை பெறுவது இல்லை. ‘ஆசிரியர்’ என்பதும் ‘ழாசிரியர்’ என்றுதான் ஒலிக்கப்படுகிறது. ஆனால், ‘தமிழ் ஆசிரியர்’ என்று ஒலிப்பது முழுமையாகவும், இனிமையாகவும் இருப்பதை உணர்வீர்கள். பேசும்போது எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், அதையே எழுத்தாக, ஆவணமாகப் பதிவு செய்யும்போது சொற்கள் முழுமையாக இருப்பதே சிறப்பு. பெயர்ச் சொற்களைப் பிரிக்க வேண்டாம்.

நாள் இதழ்களில் ‘தனியார்மயப்படுத்தப்பட்டுவிட்டன’ என்று 19 எழுத்துகளை ஒரே சொல்லாக எழுதுகிறார்கள். அதையே ‘தனியார் மயம் ஆனது ’ அல்லது ‘தனியாரிடம் கையளிப்பு’ என சொற்களைப் பிரித்து எளிமையாக எழுதலாமே? 

தமிழாராய்ச்சி           -              தமிழ் ஆராய்ச்சி, தமிழ் ஆய்வு

தமிழீழம்       -              தமிழ் ஈழம்

அறிந்திருக்கவில்லையா?           -              அறிந்து இருக்கவில்லையா? அறியவில்லையா?

தெரிந்திருந்தும்       -              தெரிந்து இருந்தும், தெரிந்தும்

பதவியிலிருந்து     -              பதவியில் இருந்து

உலகறிய      -              உலகு அறிய

வந்துள்ளது -              வந்து உள்ளது, வந்து இருக்கிறது.

குறிப்பிடத்தக்கதாகும்     -              குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து           -              சென்னையில் இருந்து

சின்னாபின்னப்பட்டுக்கொண்டிருந்த           -              சிதறிக்கொண்டு இருந்த, சின்னாபின்னமாகிய

கண்டிக்கத்தக்கதாகும்     -              கண்டிக்கத்தக்கது, கண்டனத்துக்கு உரியது.

தலைவிரித்தாடுகின்றன              -              தலைவிரித்து ஆடுகின்றன.

காற்றழுத்தம்            -              காற்று அழுத்தம்

உளத்திருத்துக        -              உள்ளத்தில் இருத்துக.

பணியிலீடுபட்டேன்           -              பணியில் ஈடுபட்டேன்

நூலாசிரியர்                -              நூல் ஆசிரியர்

இருந்திருக்கிறார்கள்         -              இருந்தார்கள்.

சமையல் செய்தார்கள்     -              சமைத்தனர்.

சிலை செய்தார்கள்              -              சிலை வடித்தார்கள், செதுக்கினார்கள்

தனியிதழ்     -              தனி இதழ்

திங்களிருமுறை   -              திங்கள் இருமுறை

‘ப்பட, உடைய, கூடிய’ தேவையா?

1984 ஆம் ஆண்டு. நான் பூடான் நாட்டில் வேலைக்குச் சேர்ந்த புதிது. டாடா நிறுவனத்தின் பூடான் டாலமைட் சுரங்க அலுவலகத்தில், என்னோடு பணியில் இருந்தவர்கள் ஒன்பது பேர். நான் ஒருவன்தான் தமிழன். மலையாள உடன்பிறப்பு ஒருவர் இருந்தார். மேலாளர், மைதிலி மொழிக்காரர். பிஹார் மாநிலத்தின் மிதிலாஞ்சல் பகுதியில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசுகின்ற மொழி அது. துணை மேலாளர் போஜ்புரி மொழி பேசுபவர். அதுவும், பிஹாரி மொழிதான். பெங்காலி, அஸ்ஸாமி, ஒரிய நண்பர்களும் அங்கே இருந்தார்கள்.

தொடக்கத்தில் ஒன்றிரண்டு மாதங்கள் நான் மலையாள உடன்பிறப்போடு மட்டும்தான் பேசிக்கொண்டு இருந்தேன். நான் தமிழில்தான் பேசுவேன். அவர் மலையாளத்தில் பேசுவார். இருவரும் புரிந்து கொள்வோம். அஸ்ஸாமி, பெங்காலி நண்பர்கள் எங்கள் அருகில் உட்கார்ந்து கொண்டு, நாங்கள் பேசுவதையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

‘நீங்கள் இருவரும் பேசுவது, டப்பாவில் கல்லைப் போட்டுக் குலுக்குவது போல் ஒலிக்கிறது; கேட்கவே அச்சமாக இருக்கிறது’ என்று சொன்னார்கள். ஏன்?

திராவிட மொழிகளைப் பேசும்போது, அவர்களுடைய காதுகளில், ‘கடபுட, படபட’வெனக் கேட்கிறது. அதாவது, ‘ப்பட, கூடிய, உடைய’ இந்த மூன்று இணைப்புச் சொற்களும், அவர்களுடைய காதுகளில், அப்படிக் கேட்கிறது. அதைக் கேட்டு அஞ்சுகிறார்கள். எனவே, மிகவும் தேவையான இடங்களில் மட்டுமே இச்சொற்களை ஒலிக்க வேண்டும். தொலைக்காட்சிகளில் பேசுகின்ற சொற்பொழிவாளர்களைப் பாருங்கள். புரிந்து கொள்ளலாம். மேற்கண்ட இணைப்புச் சொற்களைத் தவிர்த்தால், தமிழ் மேலும் இனிமையாக இருக்கும்.

‘தவிர்க்கப்படுதல் வேண்டும்’ என்பதை, ‘தவிர்த்தல் வேண்டும்’ அல்லது ‘தவிர்க்க வேண்டும்’ அல்லது தவிர்க்கலாம் என்று எழுதலாம்.

‘வழங்கப்பட’ வேண்டும்’ என்பதை, ‘வழங்க வேண்டும்’ என்று சொல்லி முடித்து விடுங்கள்.

                தனியார்மயப்படுத்தப்பட்டுவிட்டன  -              தனியாரிடம் ஒப்படைப்பு

                கூடி இருக்கக்கூடிய            -              கூடி இருக்கின்ற

                திரண்டு இருக்கக்கூடிய  -              திரண்டு இருக்கின்ற

                கழகத்தினுடைய செயல்மறவர்களே                -              ‘கழகத்தின் செயல்மறவர்களே

என்னுடைய எழுத்து நடை எளிமையாக இருக்கின்றது என்று சில நண்பர்கள் கூறுகிறார்கள். காரணம், ‘ப்பட, கூடிய, உடைய’ ஆகிய சொற்களை இயன்ற அளவில் தவிர்த்து விடுகிறேன். சொற்களைப் பிரித்து, எளிய நடையில் எழுதுவதால்தான். ஒவ்வொரு நாளும் இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொண்டு, எழுத்து நடையை மேம்படுத்தி வருகின்றேன்.

கம்பன் அறநிலையின் தமிழ்ப்பணி

கோவை பாப்பநாயக்கன்பாளையம், ‘கம்பன் அறநிலை’ என்ற அமைப்பினர், கம்ப இராமாயணப் பாடல்களில் உள்ள சொற்களைத் தனித்தனியாகப் பிரித்து எழுதி வெளியிட்டு இருக்கின்றனர். படிப்பதற்கு எளிதாக இருக்கிறது- பொருள் புரிகிறது. ஆனால், அந்தப் பாடலுக்கு விளக்கம் அளித்து எழுதி உள்ள உரைநடையில், சொற்களைச் சேர்த்துத்தான் எழுதி இருக்கின்றனர். அவற்றிலும் சொற்களைப் பிரித்து எழுத வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு, அறநிலையின் தலைவர், மதிப்புக்கு உரிய பெரியவர் பெருந்தொழில் அதிபர் ஜி.கே.சுந்தரம் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். அக்கருத்தை ஏற்றுக்கொண்டு, அடுத்த பதிப்பில் உரைநடையிலும் சொற்களைப் பிரித்து எழுதி வெளியிடுவதாக எனக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.

பெரியாரின் கொள்கை வழியில், 13 வயது முதல் நான் ஒரு கடவுள் மறுப்பாளன். கருப்புச் சட்டை அணிபவன். கம்ப இராமாயணத்தை நான் படித்தது இல்லை. ஆனால், மேடைகளில் நிறையக் கேட்டு இருக்கிறேன். கம்பன் அறநிலை வெளியிட்டு இருக்கின்ற இராமாயணத்தை, இப்பொழுதுதான் கையில் எடுத்துப் படித்து வருகிறேன். 12,000 பாடல்கள், எட்டு தொகுதிகள், விலை ரு 800 மட்டுமே. உங்கள் இல்லங்களில் இடம்பெற வேண்டிய தமிழ்க் கருவூலம். இராமாயணக் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், இலக்கிய நயத்துக்காக, சொல்வளத்துக்காகப் படிக்கிறேன். பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழில் வழங்கி வந்த இலட்சக்கணக்கான சொற்கள் இராமாயணத்தில் பதிவு ஆகி உள்ளன. தமிழ் எழுத்தாளர்கள், அந்தச் சொற்களைப் படித்து உள்வாங்கிக் கொண்டு, ஏற்றவகையில் தங்களுடைய படைப்புகளில் எழுத வேண்டும். சில கவிஞர்கள் மட்டுமே அதைச் செய்து வருகிறார்கள்-அதனால், புகழ் பெறுகிறார்கள்.

ஆங்கில மொழியில் பத்து இலட்சம் சொற்கள் சேர்ந்து இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தார்கள். அதுபோல, நாம் எண்ணுவோம் என்று கருதினேன். ஆனால், அது தனி ஒருவனால் மட்டுமே முடியக்கூடிய செயல் அல்ல.

எனவே, தமிழில் எத்தனை சொற்கள் இருக்கின்றன என்பதை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அல்லது சென்னைப் பல்கலைக்கழகம் எண்ணிச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு எண் கொடுக்க வேண்டும்.

புணர்ச்சியால் புதிய உயிர்கள் பிறக்கின்றன. ஆனால், தமிழ்ச் சொற்களின் புணர்ச்சியால், இருக்கின்ற இரண்டு சொற்களும் மறைந்து, உருவாகின்ற புதுச்சொல்லும் முழுமையான பொருளைத் தராமல், பிறமொழியினர் எளிதில் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுகின்றது. அதுவே, தமிழின் வளர்ச்சிக்குத் தடைக்கல் ஆக இருக்கின்றது.

ஆங்கில மொழியில் இரண்டு சொற்களைச் சேர்த்து எழுதுவது இல்லை. அவ்வாறு இருந்தால், அது அரிதினும் அரிதுதான். இந்தி மற்றும் பிற மொழிகளிலும் அப்படித்தான். தமிழில், ‘உரைநடை’ என்பதும் புதிதுதானே?

எனவே, தமிழில் புணர்ச்சி இலக்கணம் தேவையா? கருத்துகளைப் பரிமாறுங்கள்.

- அருணகிரி

Pin It