ஒரு வாக்கியத்தில் வரும் சொற்களை, இடம் விட்டு எழுத வேண்டிய சொற்களை இடம் விட்டும், சேர்த்து எழுத வேண்டிய சொற்களைப் பிரிக்காமலும் எழுதப் பழக வேண்டும். பேசும்போதும் எழுதும்போதும், கேட்போருக்கும் படிப்போருக்கும் எளிதில் பொருள் விளங்குமாறு சொற்களைப் பிரித்துத் தெளிவாகப் பேசியும், இடம் விட்டு எழுதியும் வரவேண்டும்.

உதாரணமாக இனி வரும் சொற்களைப் பாருங்கள்.

ஈசல்போல, உயிர்நீத்து, என்உடன்பிறப்புகள், மறந்துவிட்டாயே, நித்திரைகலைந்து, எங்கள்விழித்திரையை, உந்தன்விழியில், புதைந்துகிடக்கிறார்கள், நிர்வாணகோலத்தில், இறந்துபோனார்கள், மானம்காக்க, நான்வெட்கபடுகிறேன், அப்பாவிமக்களை, கூண்டுகிளியைபோல, அடைத்துகொடுமைபடுத்தினார்கள், சிரிப்புசத்தம், எங்கள்இரத்தம், எங்கள்சத்தம், உன்மனதில் போன்ற சொற்றொடர்களில் சொற்கள் இடம் விட்டு எழுதப்படாமல் சேர்த்தே எழுதப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் ஒற்றெழுத்துக்கள் இல்லாமல் சொற்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

இங்கு வரும் சொற்களை, ஈசல் போல, உயிர் நீத்து, என் உடன்பிறப்புகள், மறந்து விட்டாயே, நித்திரை கலைந்து, எங்கள் விழித்திரையை, உந்தன் விழியில், புதைந்து கிடக்கிறார்கள், நிர்வாணக் கோலத்தில், இறந்து போனார்கள், மானம் காக்க, நான் வெட்கப்படுகிறேன், அப்பாவி மக்களை, கூண்டுக்கிளியைப் போல, அடைத்துக் கொடுமைப் படுத்தினார்கள், சிரிப்புச் சத்தம், எங்கள் இரத்தம், எங்கள் சத்தம், உன் மனதில் என்று எழுதப்பட்டால் சிறப்பாகவும், சரியாகவும் அமையும் என்பது உறுதி.

மேலும், வரிக்கு வரி, வாக்கியத்திற்கு வாக்கியம், புதிய பத்தித் தொடக்கம் முதலிய இடங்களிலும் இடம் விட்டு எழுதுவதைப் பழக வேண்டும்.

இடம் விட்டு எழுதாவிட்டால், பொருள் விளங்காதது போலவே, சில சமயங்களில் சேர்த்து எழுதாவிட்டாலும் பொருள் விளங்காது.

உதாரணமாக,

அப்பா ஓடு கடைக்குப் போனாய் ஆ,
உன் ஆல் இந்தக் கணக்கு ஐ போட முடி ஆது,
ஆல் உம் வேல் உம் பல்லுக்கு உறுதி

இதையே கீழ்க்கண்டவாறு சரியான முறையில் சேர்த்து எழுதத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்பாவோடு கடைக்குப் போனாயா?
உன்னால் இந்தக் கணக்கைப் போட முடியாது.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.

Pin It