விடுதலைப் புலிகள் மீதான அவதூறு அல்லது நேர்மையற்ற விவாதங்களை மீண்டும் துவக்கி இருக்கிறது போலி மனித உரிமை/போலி முற்போக்கு அறிவுசீவி வர்க்கம். கடந்த சில நாட்களில் இதுதொடர்பாக தொடர்ச்சியாக கட்டுரைகள் தி இந்து, எகனாமிக் பொலிடிகல் வீக்லி ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் ஒருபடி மேலே சென்று இலங்கையின் உள்நாட்டு விசாரணைக் கமிசன் ஒன்றின் அறிக்கையை மேற்கோள் காட்டி, தி இந்து தனது சர்வதேச செய்திப் பக்கத்தில் “51 சிறுமிகளை புலிகள் கொன்றதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது” என்று தலைப்பிட்டு செய்தியை அவதூறாக திரித்து வெளியிட்டது. உண்மையில் இலங்கையின் அறிக்கையில் “புலிகள் (செஞ்சோலை) சிறுமிகளை ராணுவத் தாக்குதல் நடத்தக்கூடிய வகையிலான இடத்திற்கு சென்ற காரணத்தினால் ராணுவ தாக்குதலில் 51 பெண்கள் 17-19 வயதிற்குட்பட்டவர்கள் இறந்தார்கள்” என்று குறிப்பிடப்பட்டதை தனது தலைப்பில் புலிகள் கொலை செய்தது போன்று திரித்து எழுதி இருந்தது.

Ahilan Kadirgamarஇது மட்டுமல்லாமல் தி இந்துவில் அகிலன் கதிர்காமரின் கட்டுரை ஒன்றினையும் வெளியிட்டது. சிங்கள ஆதரவு சிவில் சமூகத்தின் நிலைப்பாடு சிங்கள அரசினை ஆதரிப்பதாக இருக்கும் நிலையில் இவர்களின் கட்டுரைகள் தமிழக - இந்திய ஊடக தளத்தினை நிரப்புகின்றன. இதன் பின்னணியை அறிவது அவசியம் என்பதால் சுருக்கமாக இதை விவாதிக்க விரும்புகிறோம்.

எகனாமிக் பொலிடிகல் வீக்லியில் எந்தவித அரசியல் நேர்மையுமின்றி இலங்கை அரசினைக் காக்கும் கட்டுரை ஒன்றினை இலங்கையின் சிவில் சமூக செயல்பாட்டாளாரும், இந்தியாவின் மும்பையில் இருந்து இயங்கக் கூடிய முற்போக்களாராக அறியப்பட்ட ரோகிணி ஹென்ஸ்மென் எழுதி இருக்கிறார். இந்தப் பிரச்சாரம் ஏன் இவ்வளவு தீவிரமாக நிகழ்கிறது என்பதை தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்த விரும்புகிறோம். இதுகுறித்து ஒத்த கருத்துடைய தோழர்கள் இந்த கருத்தியல் அடியாள் தாக்குதலை எதிர்கொள்ள அறைகூவல் விடுகிறோம்.

ஈழப்படுகொலையின் சர்வதேச விவாதம் சிங்களத்தினையும், அதனைச் சார்ந்து இயங்கும் போலி மனித உரிமை செயல்பாட்டாளர்களையும் பதட்டமடைய வைத்திருந்தது. அமெரிக்காவின் சார்பில் கொண்டுவரப்பட்ட இலங்கை ஆட்சி மாற்ற நிகழ்ச்சி நிரலில் பணியாற்றிய இந்த சோ-கால்டு சிவில் சமூகம் இப்பொழுது தங்களது புதிய அரசினை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதன் அடையாளமே 'இசுலாமியர்களை புலிகள் வெளியேற்றி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது' எனும் பெரும் புலம்பல்.

இலங்கை மீது மையம் கொண்டிருந்த இனப்படுகொலை விவாதத்தின் தீவிரத்தினை மட்டுப்படுத்த வேண்டுமென்றால், புலிகளை குற்றவாளிகளாக சித்தரிக்கும் பிரச்சாரத்தினை தீவிரப்படுத்த வேண்டும். அதனால் 2009க்குப் பின்பான புலிகள் இல்லாத தேசத்தில், இலங்கையின் அட்டூழியங்களைப் பேசாமல் அடைகாத்த இந்த 'பிராய்லர் கோழிகள்' இப்பொழுது மூக்கு சிந்தி அழுவதாக கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை மீது எந்தவிதமான காத்திரமான விமர்சனத்தினையும், சிங்களப் பேரினவாதத்தினை உடைக்கும் எந்த செயலையும் செய்யாத இந்தக் கூட்டம் இப்பொழுது மூக்கு சிந்தியவாறு சந்திக்கு வந்து நின்றுகொண்டு வருவோர் போவோரிடம் 25 வருசத்திக்கு முந்தி இப்படி நடந்துச்சுன்னு அழுகாச்சி காவியத்தை துவக்கி இருக்கிறது. பார்வையாளனோ, "உண்மைதான், தவறுதான், அதே சமயம் இந்நிகழ்ச்சியைப் பேசும் பொழுது, 6 வருடத்திற்கு முன் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை விடயங்களையும் என்றாவது ஒரு நாள் பேசுங்களேன்” என்று கேட்டால், 'தமிழ்ப்பாசிசம்', 'புலிப்பாசக்காரன்’, ’இசுலாமிய எதிர்ப்பாளன்’ என்று முத்திரை குத்தலைத் தவிர வேறேதும் பதிலாக வராது.

அதாவது சுருக்கமாக சொல்வதெனில், இலங்கை மீதான விவாதத்தினை, ’புலிகள் எதிர்ப்பு’ விவாதமாக மாற்ற வேண்டுமென்கிற ஐ.சி.ஜி. உள்ளிட்ட அமெரிக்க-மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் 2012இல் வெளியிடப்பட்ட என்.ஜி.ஓக்களின் செயல்திட்டம் நடைமுறைக்கு வர ஆரம்பித்திருக்கிறது.

சிங்கள இனவெறியின் இந்த பினாமிக் கும்பலை எந்த சமரசமின்றி மே 17 இயக்கம் எதிர்கொள்ளும்.

இசுலாமிய வெளியேற்றம் குறித்து 'தி இந்து'வில் எழுதப்பட்ட அகிலன் கதிர்காமரின் கட்டுரையைத் தொடர்ந்து, இணைய வெளியில் அ.மார்க்ஸ் போன்றவர்கள் எழுதித் தீர்க்கும் இந்த நாடக மனித உரிமை அழுகாச்சி காவியத்திற்குப் பின், திரையில் நடக்கும் நிகழ்வுகளை தொகுத்து பார்ப்போம்.

அகிலன் கதிர்காமர் மனித உரிமை செயற்பாட்டாளர், ஆராய்ச்சியாளார் என்று விவரணத்துடன் எழுதப்பட்டிருக்கும் செய்திகளை வாசித்த பின்னர், இந்த அகிலன் தனது கட்டுரையை எழுதவதற்கு முன், கடந்த வாரத்தில் என்ன செய்திருக்கிறார் என்பதையும் சேர்த்து வாசித்தல் நலம்.

இலங்கையின் மீது சர்வதேச விசாரணை/ கலப்பு விசாரணையும் கூட தேவையில்லை எனும் ஓர் ஊர்வலத்தினை, கோரிக்கை கையெழுத்து இயக்கத்தினை சிங்கள சிவில் சமூகம் நடத்தியது. இதில் ‘இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவையில்லை’ என்று கையெழுத்திட்டிருப்பவர் இந்த அகிலன். இவர் மட்டுமல்ல நிமால்கா பெர்ணாண்டோ எனும் அறியப்பட்ட மனித உரிமை செயல்பாட்டாளரும் என்று, இவருக்கு வக்காலத்து வாங்கும் தமிழகத்தின் சோ-கால்டு மனித உரிமை செயல்பாட்டளரும் தனது ரகசிய இலங்கை ஆதரவு நிலைப்பாட்டினையே உங்களிடத்தில் என்றேனும் சொல்லக் கூடும்.

இலங்கை மீது சர்வதேச விசாரணை/ கலப்பு விசாரணைகூட நடப்பதினால் இவர்களுக்கு என்ன பிரச்சனை?... இவர்கள் இலங்கை அரசோ, அரசப் பிரதிநிதிகளோ, அதிகாரிகளோ, ராணுவத்தினரோ இல்லை எனும் பொழுதில் ஏன் இந்த நிலைப்பாடு?

hindu ram and chandrikaஇலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்தோ, இதர குற்றங்கள் குறித்தோ இவர்களுக்கும் சிங்கள பேரினவாதிகளுக்கும் பெரிய நிலைப்பாடு வித்தியாசம் கிடையாது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் சர்வதேசமயமாக மாறிய பின்னர், தங்களுக்கு சாதகமான மேற்குலக ஆதரவு அரசினை இலங்கையில் நிலை நிறுத்தும் ‘ப்ராஜெக்டில்’ இவர்களும் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். அல்லது அமெரிக்கா இவர்களை இணைக்கிறது. மேற்குலகில் படித்த இந்த அதிமேதாவிகள், இந்த ரகசிய ஆட்சி மாற்றத் திட்டத்தில் சந்திரிகாவின் தலைமையை ஏற்றுக்கொண்டதில் பெரிய ஆச்சரியம் கிடையாது. இந்த மைதிரி பாலாவின் ஆட்சி சந்திரிகா குமாரதுங்காவின் நிழல் அரசு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த சந்திரிகாவை மேற்குலகம் ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் பாதுகாத்தது. ஆட்சி மாற்றத்தினை “வைபர் எனும் இண்டர்நெட் டெலிபோன் சேவை” மூலமாக சாத்தியமாக்கினேன் என்று சந்திரிகாவே சொல்லி இருக்கிறார்.

இந்த சந்திரிகா இலங்கையின் நல்லிணக்கம், தேச ஒற்றுமைக்கான ஆணையக்குழுவின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறார். இதன் மூலம் இலங்கைக்குள் நல்லிணக்கத்தினை கொண்டுவருவதும், இம்ப்யூனிட்டியை முடிவுக்கு கொண்டுவருவது என்றும் இலங்கை சர்வதேசத்தின் முன் சொல்லி இருக்கிறது. மேலும், இந்த அமெரிக்க தீர்மானத்தில், “விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, உரிய நல்லிணக்க நகர்வுகளை செய்ய வேண்டுமென்று” முதன்முறையாக வெளிப்படையாக புலிகளை குற்றவாளிகளாக்கி இலங்கை - அமெரிக்கா - இங்கிலாந்து - இந்தியா கூட்டுத் தீர்மானத்தில் பகிரங்கப்படுத்தி இருக்கிறது. அதாவது பாலஸ்தீன விவகாரத்தில் ஹமாஸின் குற்றங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு இசுரேலிடம் விசாரிக்கும் அதிகாரத்தினை ஒப்படைத்தால், அது எத்தகைய அயோக்கியத்தனமோ அதைத் தான் இங்கே நிகழ்த்தி இருக்கிறார்கள்.

ஆக இந்த செய்திகளை இணைத்துப் பாருங்கள்...

ஆட்சி மாற்றம் ==> ஆட்சி மாற்ற சூத்திரதாரி ‘சந்திரிகா’ ==> உள்நாட்டு விசாரணை ==> இலங்கையே தனது குற்றத்தினை சந்திரிகாவின் நிழல் ஆட்சி விசாரிக்கும் ==> விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களையும் இலங்கை விசாரிக்கும் ==> விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களை கணக்கில் கொண்டு நல்லிணக்கம் பேசுவோம் ==> நல்லிணக்கத்தின் ஆணையத் தலைவர் சந்திரிகா ==> இனப்படுகொலை போரினை தலைமை அரச பதவியில் செய்த மைதிரிபாலாவின் ஆட்சியில் தமிழர்களை சிங்கள பேரினவாதம் விசாரிக்கும்.

இதை சாத்தியப்படுத்தி இலங்கை ராணுவத்தினைக் காப்பாற்ற வேண்டுமெனில், புலிகளை வில்லனாக சித்தரிப்பது, திரைக்கதையின் முதல் ‘சீன்’. இதை அமெரிக்கா டைரக்ட் செய்ய பின்னணி இசையுடன் நடிகர்கள் நமக்கு ‘படம்’ காட்டுகிறார்கள்.

இதனாலேயே 2009 இனப்படுகொலை போரின் இறுதிக்காலத்தில் கட்டளை அதிகார தளத்தில் இயங்கி கொலைகளை நேரடியாக நிகழ்த்திய மைத்ரி பாலாவினை ஆட்சியில் அமர்த்தியதை இவர்கள் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது என்றும், மாற்றம் வந்திருக்கிறது என்றும் முழங்கிறார்கள். சீனா ஆதரவு ராஜபக்சே தூக்கி எறியப்பட்டு, அமெரிக்கா ஆதரவு ஆட்சி வருவதற்கு பணியாற்றிய குழுவில் இவர்கள் கருத்துருவாக்க அடியாட்கள். இந்த அடியாட்களுக்கான ஊடகவெளியை ஏற்படுத்தித் தரும் மாஃபியா குழுவே தி இந்து குழுமம்.

அமெரிக்கா சார்பு ஆட்சி கொண்டுவருவதில் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முதல் லோக்கல் அகிலன், நிமால்கா வரை செயலாற்றினார்கள். இதற்காகவே அமெரிக்க தீர்மானம் பயன்படுத்தப்பட்டது. இதை ராஜபக்சேவே தெரிவித்திருந்ததை மறந்து விடக்கூடாது.

அம்னெஸ்டி இண்டர்நேசனல், ஹூமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற அமைப்புகள், நிமல்கா பெர்ணாண்டோ உள்ளிட்டவர்கள் ராஜபக்சே காலத்தில் சர்வதேச விசாரணையைக் கோரியவர்கள். மைத்ரி ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இவர்கள் இக்கோரிக்கையை கைவிட்டார்கள்.

ஜெனீவாவில் நடந்த மனித உரிமை அமர்வில் அமெரிக்க தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டு முறை நிகழ்ந்தது. இதில் சிவில் சமூகத்திற்கான வாய்ப்பு மூன்று முறை கொடுக்கப்பட்டது. இதில் இரண்டு முறையும் ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் நிறுவனத்தினை அழைத்தே அமெரிக்காவின் பிரதிநிதி பேசச் சொன்னார். ஆனால் அவர்கள் ஒருமுறை கூட தங்களது நிலைப்பாடான சர்வதேச விசாரணை ஏன் தேவை என்பது பற்றி பேசவில்லை. இலங்கையின் அரச கட்டுமானங்கள் மீது கடுமையான கேள்விகளை எழுப்பவும் இல்லை. நாடுகடந்த பிரதிநிதி ஒரே முறை மட்டுமே பேச இயன்றது. அவ்வரங்கில் இருந்த கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட தமிழ் பிரதிநிதிகளின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட வாய்ப்பளிக்கப்படவில்லை. வேண்டுமெனில் எழுத்துபூர்வமாக அளியுங்கள் என்று சொல்லி விட்டு இலங்கை அரசுடன் பேசி ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்மானத்தினைக் கொண்டு வந்தார்கள். இறுதி வரை நிமால்காவோ, அம்னெஸ்டியோ இதர மனித உரிமை அமைப்புகளோ சர்வதேச விசாரணை என்னவாயிற்று என்ற கேள்வியை எழுப்பவில்லை. சர்வதேச பங்களிப்பினை உறுதி செய்யுங்கள் என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்கள்.

a marx 310இவ்வாறே இலங்கையில் இக்குழுக்களின் உதவியுடன் அமெரிக்கா ஆட்சி மாற்றத்தினைக் கொண்டு வந்திருக்கிறது. அமெரிக்கா-இங்கிலாந்து கொண்டு வந்த தீர்மானத்திற்கு தமிழர் தரப்பில் போதுமான ஆதரவு இல்லாமல், சர்வதேச விசாரணை என்று ஒற்றைக் குரல் முன்வைக்கப்பட ஆரம்பித்து, நிலைப்பாடு வலுக்க ஆரம்பித்தவுடன், இலங்கை - அமெரிக்கா- இந்தியாவினைக் காக்க இந்த கருத்துருவாக்க அடியாட்கள் களம் இறங்கி இருக்கிறார்கள்.

இப்பொழுது புலிகள் செய்த குற்றங்கள் என பட்டியலிடுவதன் மூலமாக இலங்கை - விடுதலைப் புலிகள் என சமப்படுத்தி, சர்வதேச பங்கேற்பு இல்லாத உள்நாட்டு விசாரணையை எந்தவிதக் கேள்வியும் இல்லாமல் நடத்தி விட முடியும். இந்த வேலைத் திட்டத்திற்கு எந்தவித அறிவு நேர்மையோ, அரசியல் நேர்மையோ இல்லாமல் இந்த என்.ஜி.ஓ சார்பு ஒட்டுண்ணிக்குழுக்கள் வாய் திறக்க ஆரம்பித்திருக்கின்றன. அதாவது மேற்குலகமும்-இலங்கையும் ஒரு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்தியதாக’ தனது ஏகாதிபத்திய கருத்துருவாக்கத்தினை நியாயப்படுத்தும் முயற்சியை ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் ஒரு பங்கினை நம்மூர் அ.மார்க்ஸ் முதல் அகிலன் கதிர்காமர் வரை மிகத் திறம்பட நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

இசுலாமியர்-புலிகள் குறித்தான விவாதத்தினை எந்தவித தயக்கமும் இல்லாமல் எம்மால் எதிர்கொள்ள இயலும். அதைக் குறித்தும் வெளித்தளத்தில் விவாதிக்க தயாராகவே இருக்கிறோம்.புலிகள் மீது விமர்சனம் வைக்கும் நபர்கள், புலிகள் இசுலாமியர் சமூகத்தோடு பிற்காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளையும், சிங்களம் செய்த வேலைகளையும், சர்வதேசத்தின் பங்களிப்புகளையும் பேசாமல், இப்போது மூக்கை சிந்தி அழுகாச்சி நாடகம் ஆடுவது, நரிக்கூட்டம் ஆட்டுக்கூட்டத்திற்கு கொட்டடி கிடைக்கவில்லை என்பது போன்றிருக்கிறது.

நீங்கள் கள்ள மெளனத்துடன் ஆதரிக்கும் சிங்கள-பெளத்த பேரினவாதம் அரசு அதிகாரத்துடனும், ராணுவ - நவீன ஆயுத - பொருளாதார வலிமையுடன் பல்லிளித்துக்கொண்டு நிற்கிறது. இதை வீழ்த்தாமல் (நீங்கள் பேச விரும்பாத தமிழர் விடுதலை மட்டுமல்ல) இசுலாமியர், ஏழை சிங்கள உழைக்கும் சமூகத்திற்கு விடுதலை கிடைக்காது.

(இந்த நிமால்கா பெர்னாண்டோ குழுவினர், தமிழகத்தின் மனித உரிமை அமைப்பினர் கடந்த ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்பதை வெளிப்படையாக அடுத்த பதிவுகளில் எழுதுவோம்.)

- திருமுருகன் காந்தி, மே பதினேழு இயக்கம்

Pin It