புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற வேட்கை காலம் காலமாக படைப்பாளிகளிடம் இருந்து வருகிறது. கால மாற்றங்களினால் இயந்திரகதியாகிப்போன எல்லா விசயங்களிலிருந்து இலக்கியமும் தப்ப முடியவில்லை. அறை மூலையில் மாட்டிக்கொண்ட எலிபோல படைப்பாளிகள் இலக்கிய நிர்பந்தங்களிலிருந்து தப்பிக்கும் வழி வகையறியாது மூலைச் சுவரில் ஏறுவதும் பின் சறுக்கி விழுவதுமாய் சமீப காலமாய் பல வழிகளில் முயன்று தோற்று வருகிறார்கள். இலக்கியவாதிகள், வாதி பிரதிவாதிகள் என தங்களுக்குள்ளாகவே குழு பிரித்துக் கொண்டு வழக்காடியதில் இலக்கியம் தோற்றுப் போய்விட்டது. இந்நிலை நீடித்தால் இன்னும் பலகாலம் தோற்றுக்கொண்டே இருக்கும். இவர்களை இந்நிலைக்குத் தள்ளியது எது. எது இவர்களைப் பிடித்து ஆட்டுகிறது என்று ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயம். இலக்கியத்திற்கும் எதிர்காலம்.

புதிய சிந்தனையாளர்கள் என்று ஒரு கும்பல் சமீப காலமாக புறப்பட்டிருக்கிறது. இதைப் புயல் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் புயல் எப்பொழுதும் கடலை மையம் கொண்டிருக்கும். ஆனால் இந்தப் புதுப் பயல்(கள்) கூவத்தை மையமாக கொண்டிருக்கின்றனர். இவர்கள் இலக்கியத்திற்கு நாற்றமும் வாடையும் அவசியம். இதற்கு நடுவில் இவர்கள் மையம் கொண்டிருப்பார்கள். தெருமுனை போதகர்கள் போல் இவர்கள் ஏற்கனவே சிதையுண்டிருக்கும் சோர்வு இலக்கியப் படைப்பாளிகளை தேடி அலைவார்கள். அவர்களைக் கண்டவுடன் சிநேகமாய் சிரிப்பார்கள். கடைசியில் சியர்ஸ் சொல்லி முடிப்பார்கள்.

எவ்வளவு மோசமான படைப்பாக இருந்தாலும், அதன் படைப்பாளியின் பார்வையில் அது ஒரு பொக்கிஷமே. அதையும் மறுக்கும் கூட்டமாக நவீன படைப்பாளிகள் குழு ஒன்று புறப்பட்டிருக்கிறது. இது தாயின் எதிரிலேயே அவள் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொல்லும். புதைச் சேற்றில் அழுத்திச் சாகடிக்கும்.

தன் படைப்புகளின் மேல் அபார நம்பிக்கை வைத்திருக்கும், ஆனால் நடைமுறை இலக்கியச் சூழலில் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைக்கும் படைப்பாளிகள் இக்கூட்டத்தில் இருப்பர். இவர்களின் சோகத்தை ஆற்ற 'கிளாஸ்'கள் எடுக்கப்படும். ஏதோ கொஞ்சமாவது புரிகிறமாதிரி எழுதிக் கொண்டிருந்தவர்களும் இந்தக் கூட்டத்தில் சேர்ந்தவுடன் வழி தவறி விழி பிதுங்கி மொழி மறந்து போவார்கள். ஆனால் இக்கூட்டத்தை வழி நடத்திச் செல்லும் மேய்ப்பர்கள், நல்ல கதைகளாக எழுதி 'இந்தியா டுடே'யில் ஆயிரம் ரூபாய் சன்மானம் பெறுவார்கள்.

உலகமயமாக்கலையும் தாராளமயமாக்கலையும் எதிர்த்து ஆவேசமாகப் பேசும் சிற்றிதழ்காரர்களும், தன் மேலிருக்கும் நிழல் படமெடுக்கும் நாகத்தினுடையது என்பதை அறியாமல் கூட்டத்தோடு கூட்டமாக இருப்பார்கள். அடுத்த தலைமுறையில் எவனும் பேரெடுத்து விடக்கூடாது என்ற ஆதிக்கவெறி சில படைப்பாளிகளைப் பிடித்து ஆட்டுவதனால்தான், அவர்களே தங்களுக்குள் பேசி இப்படி ஒரு விபரீதக் குழுக்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்தக் குழுவைச் சார்ந்த கவிஞர்கள் மேல் சஞ்சாரம் செய்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு பூமி ஒரு சிறு இலையைப் போலவும், சக மனிதர்கள் சிற்றெறும்பு போலவும் தென்படுவார்கள். இவர்கள் இறைவனையோ, இயற்கையையோ பாடினால் ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளலாம். ஆனால் இவர்கள் எதைப் பாடாய் பாடுகிறார்கள் என்பது இயற்கைக்கே வெளிச்சம். ஓரளவிற்கு நல்ல கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தவர்கள் கூட இப்போதெல்லாம் இப்படி எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.

சரளமாகக் கவிதை எழுதிவிட்டு ஒரு வரி விட்டு ஒரு வரி கோர்த்து நவீனக்கவிதை என்று சொன்ன காலமெல்லாம் போய் முதல் கவிதையின் மூன்றாவது வரி, இரண்டாவது கவிதையின் ஏழாவது வரி என்று சம்பந்தமில்லாமல் ஒட்டுத் துணிக் கவிதை படைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் நவீனக் கவிஞர்கள்.

நவீனக் கதை சொல்லிகள் விஞ்ஞானத்தைத் துணைக்கழைத்திருக்கிறார்கள். இவர்கள் கதைகளில் டார்வின் தத்துவம் நிறைய இருக்கும். அதாவது ஒன்றிலிருந்து ஒன்று தாவும் பிறப்புணர்ச்சி. நேராக எதையும் சொல்லத் தெரியாது இவர்களுக்கு. சொன்ன போது யாரும் கவனிக்கவில்லை என்ற கோபம் இவர்கள் அடம் பிடிக்கும் குழந்தையைப் போல் விமர்சனத்திற்காவது என்னைத் திரும்பிப் பார்க்க மாட்டார்களா என்று புரியாத புதினங்களை எழுத வைக்கிறது. பொளதீகமும் கணிதமும் கலந்த பெயர்களை இவர்கள் தலைப்பாக வைப்பார்கள். உதாரணமாக இப்படி ஒரு பெயர் இருக்கலாம்:

“குழாய்க்குள் கிணறு” இது ஒரு சதுரப் புதினம். சுரங்கப்பாதைக்குள் பலவழிகள் இருப்பது போல் மனம் போனபடியெல்லாம் இவர்கள் கதைகள் போகும். கடைசியில் வழி தெரியாமல் இவர்களே விழிக்கும்போது “முற்றும்” வந்து விழும். அதை வெளியிட்ட நாலு பேர் அதைப் பாராட்டியபின் “முற்றும்” இன்னும் முற்றும்.

சமீப காலமாக நவீன படைப்பாளிகள் கட்டுரைகளையும் “தொத்த” ஆரம்பித்திருக்கிறார்கள். வார்த்தை பிரயோகங்களில் கவனம் செலுத்தும் இவர்கள் சொல்ல வந்த விசயம் யாருக்கும் புரிந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். குழு நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது கட்டுரை புரியவில்லை என்பதை கவனமாக மறைப்பார்கள். ஒரு சில புரியாத சொற்றொடர்களை கட்டுரையிலிருந்து எடுத்து பிரயோகம் செய்து அதை பெரிதும் சிலாகிப்பார்கள். இதைக் கேள்வியுறும் கட்டுரையாளன் அடுத்தடுத்த குழப்ப வார்த்தைகளைத் தேடி அலைவான். இம்மாதிரியான கட்டுரைகளுக்கு யாருமே அறிந்திராத நூல்களிலிருந்து ( அது மட்டும் இறக்குமதி ) மேற்கோள்கள் காட்டவேண்டியது அவசியம். சிலசமயம் அடிக்குறிப்பிட்டு சொந்த சரக்கை அள்ளி விடுபவர்களும் உண்டு.

நவீன படைப்புலகில், கட்டுரை எழுதி அது வளராமல் வரி பிரித்து கவிதையாக்கப்பட்டுள்ளது. கவிதை எழுத ஆரம்பித்து அது நீண்டதால் கோர்க்கப்பட்டு கட்டுரையாக்கப்பட்டுள்ளது. கதை உயிரற்றுப் போய் கட்டுரையாக பதிவானதும் உண்டு. இவர்களை விசாரிக்க மேல் முறையீடு ஒன்றும் இல்லை. ஏனெனில் இவர்கள் கால்கள் நிலத்தில் படுவதில்லை. சக மனிதர்களின் விமர்சனமும் இவர்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் அவை இவர்களில் காதுகளில் நுழைவதேயில்லை. மீறி நுழைந்தாலும் மூளைக்குள் செல்வதேயில்லை. பிதுங்கி வழியும் மாநகரப் பேருந்துகள் போல் இவர்கள் கபாலம் கனவுகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. அதில் யதார்த்தத்திற்கு இடமில்லை.

இக்குழுக்களிலிருந்து கிளை நதியாக நவீன நாடக இயக்கம் சமீப காலமாக மீண்டும் தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது. இவைகளில் வீதி நாடகம் சற்று பரவாயில்லை. சமூக கருத்துக்களைச் சொல்வதற்காக இவர்களின் பாணி எத்தகையதாக இருந்தாலும் இவர்களை மன்னிக்கலாம். மேலும் இவர்கள் பார்வையாளர்களைத் தேடிப் போகிறார்கள். சரியான அரங்கோ, மின் சாதனங்களோ இல்லாத சூழல்களில்தான் இவர்கள் நாடகம் போடவேண்டியிருக்கிறது. வேறு சில நாடகக் குழுக்கள் பெரிய தொகையை மான்யமாகப் பெற்றுக்கொண்டு மயான காண்டம் நடத்துவார்கள். இன்னும் சிலர் தமிழ் நாடக உலகில் ஆழ்ந்த கருத்து சொல்வதற்கு படைப்பாளிகளே இல்லாத மாதிரி ஒரு மாயைத் தோற்றத்தை உண்டாக்கி இரவல் நாடகம் போடுவார்கள். நவீன நாடகம் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்து சொல்லி மாளாது. தனக்குள்ளே பேசிக்கொள்வார்கள். இயல்பு என்ற பெயரில் “புறம்” பேசுவார்கள். அதாவது பார்வையாளர்களுக்கு (பின்) புறம் காட்டி பேசுவார்கள். மேடையில் இங்கும் அங்கும் ஓடுவதை நடிப்பு என்றும் கூறுவார்கள்.

உண்மையான இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகள் உடனடியாக செய்யவேண்டியது இதுதான்.

தீவிரவாதத்தைப் போல் வாழ்வின் பல மட்டங்களில் பரவிக் கிடக்கும் நவீனப் புதினப் படைப்பாளிகளை இனம் கண்டு உண்மை வாசகனை அத்திசையின் பால் போகாமல் தடுக்க நல்ல இலக்கியப் படைப்புகளை கால இடைவெளியின்றி இலக்கியப் படைப்பாளிகள் மிகுந்த அளவில் அளிப்பதுதான். பெருவெள்ள இலக்கியம் புறப்பட்டால், சருகுகளும் சக்கைகளும் புறம் தள்ளப்படும். சாக்கடைகள் சுத்தமாகும்.

- சிறகு இரவிச்சந்திரன்

Pin It