தமிழகச் சட்டப்பேரவையில் அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.கருணாநிதி அவர்கள், புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு மேற்கொள்வதற்காகத் தனி இருக்கை ஒன்று உருவாக்கப்படும் என்று அறிவிக்கிறார் (2000 ஏப்ரல் 4). இது, ஆங்கில நாளிதழ்களில் செய்தியாக வெளிவருகிறது. இதனைக் கோடிட்டுக் காட்டி அன்றைய ஜேஎன்யு துணைவேந்தர் பேராசிரியர் ஆசிஸ் தத்தா (Prof. Asis Datta) முதலமைச்சர்க்கு நன்றிக் கடிதம் எழுதுகிறார் (25.04.2000). தமிழ்நாடு அரசு, ரூபாய் 10 இலட்சம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடுகிறது (G.O.(2D) No.137,09.06.2000); நிதியை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகிறது. அந்த வரைவோலை பல்வேறு நிர்வாக நடைமுறைகளைக் கடந்து வங்கிக்குச் செல்லும்போது ‘காலாவதி’ ஆகிறது. இதனால், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசுக்கு வேறு வரைவோலை கேட்டு மடல் எழுதுகிறது(22.03.2001). தொடர்ந்து, ஜேஎன்யு இந்தியமொழிகள் மையத்தின் அன்றைய தலைவர் பேராசிரியர் மேனேஜர்பாண்டே (Prof Manager Panday) தமிழ்நாடு அரசுக்கு விரிவான மடல் ஒன்றை எழுதுகிறார்(24.09.2001). அதில், தமிழ் இருக்கைக்கான நிதிநல்கை தொடர்பான தெளிவான ஒரு குறிப்பை அளிக்கிறார். அக்குறிப்பின் மையநீரோட்டம், ‘தமிழ் இருக்கை வளர்ச்சிக்கு, முதல் ஐந்தாண்டுகளுக்கு நிதி வேண்டும். அது, ஒருமுறை 50 இலட்சம் அளிப்பதாகவோ ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் அளிப்பதாகவோ அமையலாம்’ என்று அமைகிறது.
ஜேஎன்யுவின் கோரிக்கையைப் பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு, ரூபாய் 10 இலட்சத்துடன் எஞ்சிய நிதி ரூபாய் 40 இலட்சத்தையும் சேர்த்து வழங்க முன்வருகிறது. இதனை அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழகச் சட்டப்பேரவையில் அறிவிக்கிறார் (21.04.2003).ரூபாய் 40 இலட்சத்திற்குத் தனி அரசாணை (G.O.(2D) No.15 , 04.07.2003) வெளியிடப்பெறுகிறது. அதில், இருக்கையின் செயல்பாடு தொடர்பான தெளிவான சில வரையறைகளைத் தமிழக அரசு முன்வைக்கிறது. அந்த வரையறைகளின் சாரம், ‘தமிழ் மொழி, இலக்கியம் பண்பாடு ஆகியவற்றைக் கற்றலுக்கும் அவற்றில் ஆய்வு மேற்கொள்வதற்கும் இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்வதற்கும் தமிழக அரசு வழங்கும் நிதியின் வட்டித்தொகையைப் பயன்படுத்தலாம்’ என்று அமைகிறது. தமிழ் நாடு அரசு, இரண்டு வரைவோலைகளை (RBI DD N0 038465, dt 29.08.2003, Rs 40,00,000/- and RBI DD No 038506, dt 02.09.2003,Rs 10,00,000/-) ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகிறது.
இதற்கிடையே, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகப் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தமிழ் இருக்கைக்கு என்று பேராசிரியர் ஒருவரை நியமிக்க அனுமதி வழங்குகிறது (D.O.No.F.19 - 1/2005(CU), 03.10.2005). தமிழ்ப் பேராசிரியரை நியமிக்க ஜேஎன்யு விளம்பரம் வெளியிடுகிறது. வரப் பெற்ற விண்ணப்பங்களை ஆராய்ந்த அறிஞர் குழு, ஒருவரையும் தெரிவு செய்ய இயலாத நிலையைத் தெரிவிக்கிறது. தகுதியுள்ள பேராசிரியர் ஒருவரை அழைத்துப் பணிநியமனம் செய்யலாம் என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் முடிவெடுக்கிறது. அறிஞர் குழு, மூவர் பெயர்களை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குப் பரிந்துரைக்கிறது. அந்த மூவரில் இருவர் விருப்பம் இன்மையைத் தெரிவிக்கின்றனர்; ஒருவர், ‘தான் வேறு பல்கலைக்கழகத்தில் பணிப்பொறுப்பு ஏற்றுள்ளதாகவும் பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்களை அழைக்கலாம்’ என்றும் தெரிவிக்கிறார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், பேரா.கி.நாச்சிமுத்து அவர்களைப் பேராசிரியராகப் பணிப் பொறுப்பேற்க அழைக்கிறது. பேராசிரியர் கி.நாச்சிமுத்து 27.02.2007 அன்று பணியில் இணைகிறார். தொடர்ந்து துணைப்பேராசிரியர்க்கு நேர்முகம் நிகழ்கிறது. முனைவர் நா.சந்திரசேகரன் 04.08.2008 அன்று பணியில் இணைகிறார். ஆய்வியல் நிறைஞர் பட்ட(எம்.பில்.), முனைவர் பட்ட (பிஎச்.டி.) ஆய்வுகளுக்காக ஆய்வாளர்கள் தமிழ் இருக்கையில் இணைகின்றனர். இந்தச் சூழலில், தமிழ் இருக்கையானது (Tamil Chair), தமிழ்ப்பிரிவு (Tamil Stream) எனும் அடுத்தகட்ட வளர்நிலையை எய்துகிறது (தமிழ்ப் பிரிவில் 2022 ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு விவரங்களுக்குக் காண்க: ஜேஎன்யு தமிழாய்வு).
பேராசிரியர் கி.நாச்சிமுத்து 2013 இல் பணிநிறைவு பெறுகிறார். இரா.தாமோதரன் (அறவேந்தன்) பேராசிரியராகப் பணியில் இணைகிறார் (20.11.2013). தொடர்ந்து சில ஆண்டுகளில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மொழிகள் மையத்தில் கன்னடம், ஒடியா ஆகிய மொழிகளுக்கான இருக்கைகளை உருவாக்க உரிய மாநிலங்களிடம் ஒவ்வோர் இருக்கைக்கும் 5 கோடி நிதி கேட்கப்படுகிறது. இந்தச் சூழலில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தமிழ் இருக்கைக்கும் கூடுதலாக நிதி கேட்டுத் தமிழ்நாடு அரசுக்குப் பலமுறை (09.04.2013, 23.01.2014, 05.11.2014, 24.06.2016) மடல் எழுதுகிறது. தமிழ்ப் பிரிவில், திருக்குறள் மொழிபெயர்ப்புகளை மையப்படுத்திக் கருத்தரங்கம் நிகழ்த்தத் தமிழ் வளர்ச்சித் துறைக்கு விண்ணப்பிக்கப் பெறுகிறது (27.09.2019). இது தொடர்பாகப் சிலமுறை (11.10.2019, 06.03.2020) நினைவூட்டிய சூழலில், 01.01.2022 அன்றைய நினைவூட்டலுக்கு மறுமொழி 28.02.2022 நாளிட்ட மடலில் கிடைக்கிறது (மின்னஞ்சல்: 01.03.2022 மாலை). அதில், ‘கருத்தரங்கிற்கான நிதி கேட்டு இருப்பதைப் பரிசீலிக்க வேண்டும் என்றால், சில விளக்கங்களை விரைவாக அளிக்க வேண்டும்’ என்ற குறிப்பிருந்தது. அவ்வாறு, கேட்கப்பட்ட விளக்கங்களில் ஒன்று, ஜேஎன்யு தமிழ்ப்பிரிவை விரிவுபடுத்துதல் தொடர்பானது. இதற்கு 03.03.2022 அன்று மாலை மின்னஞ்சல் மற்றும் அஞ்சல்வழி அனுப்பப்பட்ட விளக்கத்தில் தமிழ் இருக்கை , தமிழ்ப்பிரிவு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு தெளிவாக்கப்படுகிறது; கன்னட இருக்கை, ஒடிய இருக்கை ஆகியவற்றுக்கும் இந்திப் பிரிவு , உருதுப் பிரிவு, இந்தி மொழிபெயர்ப்புப் பிரிவு, தமிழ்ப் பிரிவு ஆகியவற்றுக்கும் இடையே நிலவும் கல்வி மற்றும் ஆய்வு மேற்கொள்ளல் தொடர்பான வேறுபாடு எடுத்துரைக்கப் பெறுகிறது.மேலும், தமிழ்ப்பிரிவைத் தமிழ் மையமாக (துறையாக) உருவாக்கலாம், முதுகலை தொடங்கலாம் எனும் விவரம் அளிக்கப் பெறுகிறது.
இதே காலகட்டத்தில் ஜேஎன்யுவின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் டாக்டர் சாந்திஸ்ரீ டி பண்டிட் (Prof.Santishree Dhulipudi Pandit) பொறுப்பேற்கிறார். துணைவேந்தர், தமிழ்ப் பின்புலம் உடையவர் என்பதை அறிந்த தமிழ்நாடு - விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் (மணற்கேணி) இதழின் ஆசிரியர் டாக்டர் து.ரவிக்குமார் துணைவேந்தரைச் சந்திக்கலாம், ஊக்கப்படுத்தலாம் என்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் & நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களும் டாக்டர் ரவிக்குமார் அவர்களும் 07.04.2022 அன்று துணைவேந்தரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப் பெறுகிறது. இருவரும், சுமார் ஒரு மணி நேரத்திற்குமேல் ஜேஎன்யு துணைவேந்தருடன் கலந்துரையாடுகின்றனர். அப்போது, இருவரும் ஜேஎன்யு தமிழ்ப்பிரிவை மேம்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை எழுத்துப்பூர்வமாகத் துணைவேந்தரிடம் அளிக்கின்றனர். அதில், தமிழ்த் துறையாக வளர்த்தல், கூடுதல் ஆசிரியர்களை நியமித்தல், முதுகலை தொடங்குதல் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லி வலியுறுத்துகின்றனர்.
தொடர்ந்து, ஜேஎன்யு மொழி இலக்கிய பண்பாட்டுப் பள்ளிக்கு ((School of Lanuage, Literature and Cultural Studies) வருகை புரிந்து புலமுதன்மையர் (Dean) பேராசிரியர் மஜார் ஆசிப் (Prof.Mazhar Asif), இந்திய மொழிகள் மையத் தலைவர் பேராசிரியர் ஓம்பிரகாஷ் சிங் (Prof.Om Prakash Singh)) ஆகியோருடன் துணைவேந்தரைச் சந்தித்தது தொடர்பான விவரங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.இவற்றை முகநூலில் பதிவிட்டுத் தமிழக அரசுக்கான கோரிக்கையாகவும் டாக்டர் ரவிக்குமார் மாற்றுகிறார்.
2022 மே மாத இறுதியில் முனைவர் ந.அருள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராகப் பொறுப்பேற்கிறார். ‘அருளுக்கு வாழ்த்துத் தெரிவித்தீர்களா’ என்கிறார் கவிஞர் வைரமுத்து.நேரில் தமிழ் வளர்ச்சித்துறைக்குச் சென்றபோது, இயக்குநர் அருள் துணை இயக்குநர் திரு.ம.சி.தியாகராசனை அறிமுகம் செய்கிறார்(23.05.2022).வாய்ப்பைச் சிக்கெனப் பற்றிக்கொண்ட திரு. தியாகராசன், ஜேஎன்யு தமிழ்ப் பிரிவு மேம்பாட்டிற்காகப் பல மணி நேரம் செலவிடுகிறார். தலைமைச் செயலகம் சென்று (24.05.2022) செயலர்களைச் சந்திக்க அனுமதி பெறுதல், உரிய ஆவணங்களைத் தயாரித்தல், செப்பம் செய்தல் (செலவின முன்வரைவு, பணி அறிக்கைச் சுருக்கம்) எனப் பலவற்றைச் செய்தளித்து ‘இந்தத் தமிழ்ப்பற்றுள்ள அதிகாரிங்க டீம் இருக்கும்போதே முடிச்சிக்குங்க’ என்று தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறார்.
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலர் திரு.மகேசன் காசிராஜன் 'இங்கேயே மடல் கொடுங்கள்’ என்கிறார். முதலமைச்சரின் முதன்மைச் செயலர் திரு.த. உதயச்சந்திரன் கடும் நேரநெருக்கடியில் முன் அனுமதி பெறாத சூழலில் ஒருநிமிடச் சந்திப்பில் ‘உங்கள் துணைவேந்தர் ஒப்புதல் கடிதம் கொடுத்தால் முதலமைச்சர் அறிவிச்சிடுவாங்க’ என்கிறார். செய்தித்துறை இயக்குநர் முனைவர் வி.பி.ஜெயசீலன் வரைவைப் படித்துப் பார்த்துத் ‘தமிழ்நாட்டில் தமிழ்த்துறைகள் இருக்கின்றன. ஜேஎன்யுவில் ஏன் தொடங்கப் பெற வேண்டும் என்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள்’ என்கிறார்.தொடர்ந்து, மூன்று நிமிடச் சந்திப்பிற்கு நேரம்கேட்டு மின்னஞ்சல் அனுப்பியதற்குத், தலைமைச் செயலர் டாக்டர் வெ.இறையன்பு வாய்ப்பு நல்கி அழைக்கிறார்; முப்பது நிமிடங்களுக்கு மேல் செலவிட்டு ஒவ்வொன்றையும் செவிமடுத்துக் கேட்கிறார், ஒவ்வொரு பக்கமாக வரைவையும் பணி அறிக்கையையும் புரட்டிப் பார்க்கிறார், சில பகுதிகளைப் படிக்கிறார், அப்போதே உரிய நடவடிக்கை எடுக்க உரியவர்களை அழைத்துப் பணிக்கிறார் (08.06.2022).
நடந்த எல்லாவற்றையும் ஜேஎன்யு துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் சாந்திஸ்ரீ டி பண்டிட் அவர்களிடம் தெரிவித்தபோது ‘உங்கக் கடிதத்த நேரடியாக எங்கிட்ட கொண்டுவாங்க. நான் கடிதம் கொடுக்கிறேன்’என்கிறார்; மகிழ்வுடன் அளிக்கிறார்(28.07.2022).
விளைவு
தலைமைச் செயலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. ‘தலைமைச் செயலாளர் தங்கள் அலைபேசி எண் கேட்கிறார்’ என்று எண்ணை உறுதி செய்துகிறது அந்த அழைப்பு. சில மணி நேரங்களில் ‘வாட்சப்’ ஒன்று வருகின்றது. அது, ’தனித்துறை (Centre of Tamil \ Dept of Tamil) தொடங்க 5 கோடி நிதி ஒதுக்கீடு’ என்று தமிழ்நாடு அரசின் ஆணையாக இருந்தது (அரசாணை (நிலை) எண் 126, நாள் (30.08.2022).
‘வாட்சப்’ வந்த எண்ணுக்குரியவரைத் தேடியபோது ‘இறையன்பு’ என்ற பெயரைக் காட்டிற்று கணினித் தொழில்நுட்பம்.
இப்படியும் நடக்குமா? அதுவும் சில மாதங்களுக்குள் - அரசியல்வாதியைச் சந்திக்காமல், அமைச்சர்களைச் சந்திக்கக் கால்கடுக்கக் காத்திராமல் - சாத்தியமானது எப்படி?
‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற திருக்குறளைத் தலைமைச் செயலகமாக வடிவமைத்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம் கண் முன் விடையாக வந்து செல்கிறார்.
துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ, மீண்டும் மீண்டும் ஊக்கப்படுத்துகிறார் ‘பாரதப் பிரதமர்க்கு எழுதுங்கள், நிச்சயம் நிதி அளிப்பார்’ என்று. இதற்காகத் தயாராகிக் கொண்டுள்ளது தமிழ்ப்பிரிவின் அடுத்த கட்ட முன்னெடுப்பு.
அயல்மொழிச் சூழலில் மத்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ்த்துறை வளமாகச் செயல்பட வேண்டுமென்றால், ஐந்து கோடி வைப்பு நிதியானது மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒவ்வோர் ஆண்டுக்குமான இயங்குநிலைச் செலவினத்திற்குத் தனியே நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதும் உலகறிந்த இரகசியங்கள்.
- இரா.அறவேந்தன், எழுத்தாளர், பேராசிரியர், தமிழ்த் துறை, ஜேஎன்யு பல்கலைக்கழகம், புதுதில்லி.