தாராளமயமாக்கத்துக்குப் பின் இந்தியா கண்டுவரும் பொருளாதார வளர்ச்சி மனித மேம்பாடாக மாறியிருக்கிறதா? மாறியிருக்கிறது என்றால் மனித நலனின் வெவ்வேறு அம்சங்கள் ஏன் முரண்படுகின்றன?

கான்பூரில் சிக்கந்தர் கான் என்பவர் சில தெரு நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து கடித்ததில் 2011 ஜூலை 30ந் தேதி இறந்தார். அந்தத் தெரு நாய்கள் பிறகு அவரது உடலின் சில பாகங்களை கடித்து உண்டன. அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில்தான் சிக்கந்தர் கானுக்கு இதெல்லாம் நடந்தது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது. எந்த ஒரு நாகரிக சமூகத்திலும் இது போன்றதொரு நிகழ்வு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும். ஆனால் இது போன்ற நூதன சோகங்கள், உலகில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நாடும், உலகின் நான்காவது மிகப் பெரிய பொருளாதாரத்தைப் பெற்றிருக்கும் நாடுமான இந்தியாவில் மிகச் சாதாரணமாக அரங்கேறுகின்றன.

india_603

1991க்குப் பிந்தைய இந்தியாவின் முரண்நிலையை ஒரே ஒரு விஷயம் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டிவிடும்: அது மனிதன் நலமாக இருப்பதில் அடங்கியிருக்கும் பல்வேறு விஷயங்களுக்கு இடையிலான ஒப்பீடுதான். இந்தியாவில் 63 சதவீத குடும்பங்களில் தொலைபேசி வசதி இருக்கிறது. ஆனால் 47 சதவீத வீடுகளில் மட்டுமே கழிப்பறை இருக்கிறது. இந்த ஒப்பீடு ஆச்சரியம் தராமல் போகலாம். “வளர்ச்சி” என்பது எப்போதும் முணுமுணுக்கப்படும் சொல்லாக இருந்தாலும், அதைச் சார்ந்து வாழ்பவர்களுக்குக் கிடைக்கும் பலன் மட்டும் ஊட்டம் குறைந்ததாகவே இருக்கிறது. இந்த வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியைப் பற்றி மட்டுமே பேசுகிறது, மனித வளர்ச்சி பற்றி இது சற்றும் கவலைப்படவில்லை.

ஆனால் கடந்த 20 ஆண்டு காலத்தில் இந்தியா கண்ட அபாரமான பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னர், இந்தியாவின் மனித மேம்பாட்டு குறியீட்டு எண் (ஹெச்.டி.ஐ. – 2011) மட்டும் கட்டக்கடைசியில் இருக்கிறது. இந்த பட்டியலில் சீனா எங்கோ உயரத்தில் இருக்கும் நிலையில், தெற்கு ஆசியாவிலேயே இந்தியா கடைசியில் இருக்கிறது. சுகாதாரத் துறையில் நேபாளமும் வங்கதேசமும் இந்தியாவைவிட நல்ல நிலையில் இருக்கின்றன. அதேநேரம் பாகிஸ்தான் சம அந்தஸ்தில் இருக்கிறது. ஆண் – பெண் சமத்துவத்தில் ஆஃகானிஸ்தானைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் இந்தியாவைவிட சிறப்பான நிலைகளில் இருக்கின்றன.

பெண்களுக்கே பாதிப்பு

மேற்கண்ட நாடுகள், குறிப்பாக வங்கதேசமும் பாகிஸ்தானும் பெண்களை மிக மோசமாக நடத்துகின்றன என்பது நமது பொதுவான நம்பிக்கை. சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் “இந்தியாவைப் பொருத்தவரை இதுதான் உலகம்” என்ற நகைச்சுவை தொகுப்பு, ஸ்டீரியோடைப் விஷயங்கள் பற்றி கூறுகிறது. அதன்படி, பாகிஸ்தான் என்பதற்கு “பயங்கரவாதிகளுக்கு பயிற்சி தரப்படும்”, வங்கதேசம் என்பதற்கு “அகதிகள்” என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அமர்த்தியா சென்னும் ஜீன் டிரீஸும் கூறுவதன்படி, “1990களில் தெற்குஆசியாவில் இலங்கைக்கு அடுத்தபடியாக ஒட்டுமொத்த சமூக சுட்டிக்காட்டிகளில் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால் இப்போது அதே வகைகளில் இரண்டாவது மிக மோசமான நாடாக இருக்கிறது. இப்போது இந்தியாவுக்குக் கீழே பாகிஸ்தான் மட்டுமே இருக்கிறது. “இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவின் தனிநபர் வருமானத்தில் பாதியை மட்டுமே கொண்டிருக்கும் வங்கதேசம் குழந்தைகள் உயிர்பிழைப்பு, சராசரி ஆயுள்காலம், இனப்பெருக்க விகிதம், தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட வகைகளில் இந்தியாவை விஞ்சிவிட்டது. 40 ஆண்டு சோஷலிச வறுமையை புறந்தள்ளிவிட்டு, கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்தை கைக்கொண்டு வளம் பெற்றுவிட்ட நமது நாட்டைப் பற்றிய அப்பட்டமான சித்தரிப்பு இது.

பொருளாதார வளர்ச்சி, சந்தை வரிவாக்கம் ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுவதில் இருந்து “வளர்ச்சி” என்றைக்கு மீட்டெடுக்கப்படுகிறதோ, அது வரை இந்த நிலைமை தொடரவே செய்யும். மனித நலனின் பல்வேறு அம்சங்கள் குறித்து புரிதல் ஏற்பட, சமூக விழிப்புணர்வில் புதிய புரட்சி ஏற்பட வேண்டும். வளர்ச்சி என்பது பொருள்களின் பெருக்கம் மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொள்வதற்கு, அமர்த்தியா சென்னின் புகழ்பெற்ற கோட்பாடான “வளர்ச்சி என்பது சுதந்திரமாக மாறுவது” என்ற கோட்பாட்டை புரிந்துகொள்ள வேண்டும்: “மனிதர்கள் வாழும் உலகில் பொருளாதார நிலையை மேம்படுத்துவதைவிட, மனித வாழ்க்கையின் தரத்தையே மேம்படுத்த வேண்டும். பொருளாதாரம் என்பது மனிதர்கள் வாழும் உலகின் ஒரே ஒரு பகுதி மட்டுமே” என்பதே அந்தக் கோட்பாடு. பொருளாதார வளர்ச்சியைப் புரிந்துகொள்ள, மனிதர்களின் திறன்கள் எவ்வளவு உச்சத்தை அடைகின்றன என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதாது. எடுத்துக்காட்டாக, பொருளாதார வறட்சியால் உருவாகும் பட்டினி மட்டும் மனித மேம்பாட்டைத் தடுக்கவில்லை. உடல்பெருத்தலும் மனித மேம்பாட்டைத் தடுக்கும் மிக மோசமான காரணமாக இருக்கிறது என்பதையும் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். இது பொருளாதார செழிப்பின் ஒரு பின்விளைவே (வட அமெரிக்காவில், உடல்பெருத்தல் நோயின் காரணமாக கடந்த ஆண்டில் 63,500 கோடி ரூபாய் (127 பில்லியன் டாலர்) சுகாதார செலவு அதிகரித்திருக்கிறது).

இதைவிட முக்கியமாக, மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை வணிகமயமாக்க முடியாது, அப்படிச் செய்யவும் கூடாது. அல்லது அவை பொருளாதார மொழியால் விவரிக்க முடியாத அளவுக்கு, அதன் எல்லைக்கு அப்பாற்பட்டிருக்கின்றன. இருந்தாலும், மனித நலனின் மிக முக்கியமான அம்சங்களாக அவை இருக்கின்றன.

எனவே வளர்ச்சி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், மனித நலனின் முக்கிய அம்சங்களாக சுகாதாரம், கல்வி, சூழலியல் (மனிதர்களான நமக்கு மட்டுமின்றி, உலக நலனுக்கே அத்தியாவசிமானது) மற்றும் பல்வேறு அம்சங்கள் லாப நோக்கங்களில் இருந்தும் சந்தையின் பிடிகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். முற்றிலுமாக இல்லாவிட்டாலும், குறிப்பிடத்தக்க அளவுக்காவது. ஆனால் இதற்குப் பதிலாக, சந்தை தாராளமயமாக்கப்பட்ட பிறகு, இதற்கு எதிரான விஷயமே நடந்திருக்கிறது. இந்தத் துறைகள் அதிக விலை கேட்டவர்களுக்கு விற்கப்பட்டன. அப்படி யாரும் விலை கேட்காதபோது, தகுதியற்ற, பேராசை கொண்ட அரசு அமைப்புகள் இத்துறைகளை கொன்று புசிக்கின்றன.

அதன் காரணமாகத்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் மாட்டுத் தொழுவங்களாகவும், மற்றொரு பக்கம் தனியார் பள்ளிகளில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் தரமுள்ள உணவும் பரிமாறப்படுகின்றன. அதன் காரணமாகத்தான் அரசு மருத்துவமனையில் சிக்கந்தர் கான் நாய்களால் வேட்டையாடப்படுகிறார். ஆனால் உலகத்தரமான தனியார் மருத்துவமனைகளில் இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சையை, தாஜ்மகாலுக்கான இலவச டூருடன் சேர்த்து அமெரிக்கர்கள் அனுபவிக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் 80 சதவீத மக்கள் சுகாதாரத்தைப் பாதுகாக்க தனியார் துறைக்கு தங்கள் சம்பாத்தியத்தை கொட்டி அழுகிறார்கள். அதேநேரம் சோஷலிச நாடான கியூபாவிலும், முதலாளித்துவ நாடான நார்வேயிலும் 80 சதவீதம் பேருக்கு மேல் சுகாதார வசதிகள் அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன.

வெறும் பொருளாதார செலவினம்

அதன் காரணமாகவே சமூக முரண்பாடுகளும் எதிரெதிர் துருவங்களும் தொடர்கின்றன. “சந்தைப் பொருளாதாரம்” என்பதில் இருந்து நகர்ந்து, தத்துவவாதி மைக்கேல் சாண்டெல் கூறிய “சந்தை சமூகத்தை” நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். “சந்தையற்ற நடைமுறைகளால் காலங்காலமாக நிர்வாகம் செய்யப்பட்டு வந்த அனைத்து துறைகளிலும்” சந்தைகளும், சந்தை விழுமியங்களும் முற்றிலும் ஊடுருவுவதே சந்தை சமூகம். எனவே, தேசிய ஊரக சுகாதார இயக்கம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், உணவை உறுதிப்படுத்துதல் போன்றவை பசியால் வாடும் நாய்களுக்கு விட்டெறியப்படும் எலும்புத் துண்டுகளைப் போலிருக்கின்றன. அவை வெறும் “பொருளாதார செலவினங்களாக” மட்டுமே பார்க்கப்படுகின்றன. புனிதம் நிறைந்த பங்குச்சந்தை குறியீட்டெண்ணை பாதுகாப்பதற்காக இந்தத் திட்டங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தகுதி இறக்கப்படலாம். ஏழைகளையும் மனிதர்களாகக் கருதி ஆரோக்கியமான, வேலைவாய்ப்பு பெற்றவர்களாக உருமாற்றும் தலைகீழ் மாற்றத்தின் ஒரு பகுதியாக மேற்கண்ட திட்டங்கள் கருதப்படவில்லை.

ஆனால் வளர்ச்சி சுதந்திரத்தை தருவதற்கு எதிராக நாட்டின் கொள்கைகளும் பொது உணர்வும் இருக்கின்றன. தாராளமய சந்தைக்கு ஆதரவாக வலுவாகக் குரல் கொடுக்கும் ஜகதிஷ் பகவதி போன்ற பொருளாதார நிபுணர்களைப் பொறுத்தவரை, மனித மேம்பாட்டுக் குறியீட்டெண் போன்றவை, “அறிவியல்பூர்வமாக முட்டாள்தனமானவை”. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொத்த தேசிய உற்பத்தி போன்றவை அவருக்கு முட்டாள்தனமானவையாகத் தெரிவதில்லை. எனவே, அவரைப் பொருத்தவரை, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் 20 கோடி பேரிடம் இருந்து வறுமையை அகற்றியுள்ளன. இப்படி கூறப்படும்போது பல அடிப்படைக் கேள்விகள் கேட்கப்படுவதில்லை: ஏன் இந்தியாவைவிட ஏழ்மையான நாடுகள், நம்மைவிட மோசமான பொருளாதார வளர்ச்சியைக் காணும் நாடுகள் மனித மேம்பாட்டு குறியீட்டெண்ணின் பல்வேறு அம்சங்களில் நம்மைவிட சிறப்பான வகையில் சாதிக்கின்றன? ரூ. 28க்கு மேல் சம்பாதிப்பவர்கள் நகர்ப்புற வறுமைக் கோட்டுக்குக் கீழே வர மாட்டார்கள் என்று கீழ்த்தரமாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், ஏன் அவர்களால் வறுமையில் இருந்து வெளியேற முடியாமல் போகிறது. பிறகு, 1990க்குப் பிந்தைய தாராளமய பொருளாதார வளர்ச்சி பணக்காரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை ஏன் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது? (இந்த வகையில் வளரும் நாடுகளில் இந்தியாதான் மிக மோசமாக இருக்கிறதோ?)

வளர்ச்சி சுதந்திரத்தைத் தருவதற்கு, மக்களுக்கான வளர்ச்சியாக மாறுவதற்கு, சந்தைக் கோட்பாடுகளை மட்டும் ஒரே தர்க்கமாகக் கொண்டிருப்பதை முதலில் நாம் கைவிட வேண்டும். அப்போதுதான் 60 கோடி இந்தியர்களுக்கு கழிப்பறை வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் ஆண்டுக்கு 2,70,000 கோடி ரூபாயை (54 பில்லியன் டாலரை) சேமிப்பது மட்டுமில்லாமல், மனிதக் கழிவு அகற்றும் மோசமான நிலையில் இருக்கும் 13 லட்சம் தொழிலாளர்களுக்கு விடிவுகாலமாகவும் அமையும். ஒவ்வொரு மணி நேரமும் டயேரியா உள்ளிட்ட காரணங்களால் இறந்து போகும் 200 குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். இவை எதுவும் பயங்கரமான நிகழ்வுகளாகப் பார்க்கப்படுவதில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் புதியனவற்றை கண்டுபிடிக்கவில்லை. சுலப் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் ஏழைகளுக்கு குறைந்த செலவில் கழிப்பறை வசதிகளை செய்து தரும் பிந்தேஸ்வர் பதக்கின் கண்டுபிடிப்புகளும் புதிய கண்டுபிடிப்புகள்தான். “2015ஆம் ஆண்டுக்குள் 100 கோடி பேர் செல்போன் வைத்திருப்பது” என்பது நாகரிகத்தின் உச்சத்தில் இந்தியா இருப்பதாக கருதப்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

(ஏப்ரல் 1 தேதியிட்ட தி இந்து நாளிதழின் சண்டே மேகசினில் வெளியான Persistent paradoxes என்ற கட்டுரையின் தமிழாக்கம். டாக்டர் நிசிம் மன்னத்துக்காரன், கனடாவில் உள்ள டல்ஹௌசி பல்கலைக்கழகத்தின் சர்வதேச வளர்ச்சி ஆராய்ச்சி துறையின் தலைவர் (பொறுப்பு). தொடர்புக்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

தமிழில்: ஆதி வள்ளியப்பன்

Pin It