நவீனத் தமிழில் சுற்றுச்சூழல் அக்கறை, சுற்றுச்சூழல் செயல்பாடு, சுற்றுச்சூழல் புரிதல் போன்றவை மிகத் தாமதமாகவே கவனம் பெற்றன. இங்கொன்றும் அங்கொன்றுமாக சில பதிவுகள் இருக்கலாம். ஓர் இயக்கமாக 1990களில்தான் அது உருப்பெற்றது எனலாம். அதேநேரம் உலக அளவில் 1960களிலும் இந்திய அளவிலும் 1970-80களிலுமே அது கருக்கொள்ளத் தொடங்கி விட்டிருந்தது.

அடிப்படையில் இயற்கையை, சூழலியலை மையமாகக் கொண்ட ஒரு மொழி தமிழ் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதேநேரம் நவீன காலத்துக்கு ஏற்ப அது வளர்த்தெடுக்கப்பட்டதா என்கிற கேள்வி முக்கியமானது. 1960களில் மொழிபெயர்ப்பு நூல்கள் வழியாகவும் 1970களில் தமிழ்நாடு பாடநூல் கழகமும் அறிவியல் கருதுகோள்களை, அறிவியல் நூல்களை குறிப்பிடத்தக்க அளவு மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கின்றன. ஆனால், அறிவியல்பூர்வ சிந்தனை, நடைமுறை வாழ்க்கையை அறிவியல் மனப்பான்மையுடன் அணுகுதல் போன்றவை நம் சமூகத்தில் பரவலாக இருக்கின்றனவா என்பது இன்றுவரை கேள்விக்குரியதாகவே இருக்கிறது. இந்திய அளவில் எடுத்துக்கொண்டால் பல மாநிலங்களைவிட சமூகரீதியில் நாம் முன்னோக்கி நடைபோட்டிருக்கிறோம். ஆனால், அனைத்துத் துறைகளிலும் அது எதிரொலித்தது என்று சொல்ல முடியவில்லை.

வலுவான அடித்தளம்

சுற்றுச்சூழல் சீரழிப்பு என்பது இயற்கையாக நடைபெறும் ஒன்றல்ல. மனிதர்களின் அறிவியல்பூர்வமற்ற பார்வையால், அறிவியல்பூர்வமற்ற செயல்பாடுகளால் ஏற்படும் இயற்கை அழிப்பே சுற்றுச்சூழல் தாக்கமாக வெளிப்படுகிறது (பல நேரம் அது அறிவியல் - தொழில்நுட்ப வளர்ச்சிகள், வசதிகள் ஊடாகவும் உருவாக்கப்படுகிறது). இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய மக்கள், பெண்கள், குழந்தைகள், உழவர்கள், மீனவர்கள், தலித், பழங்குடி மக்கள் போன்ற விளிம்புநிலையினர்தான். அந்த வகையில் சுற்றுச்சூழல் சீரழிப்புக்கு எதிராக ஒருவர் ஆரோக்கியமாக வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. அந்த வகையில் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் என்பது ஓர் அடிப்படை மனித உரிமை. சமூக நீதியின் விரிவாக சுற்றுச்சூழல் உரிமையையும் அவசியம் உள்ளடக்கியாக வேண்டும்.

இந்தப் புரிதலுடன் 1990களில் நவீன சுற்றுச்சூழல் சிந்தனைகளையும் உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் செவ்வியல் நூல்களையும் நெடுஞ்செழியன் ஒருங்கிணைப்பிலான 'பூவுலகின் நண்பர்கள்' (தற்போது அதே பெயரில் செயல்பட்டுவரும் அமைப்பு அல்ல) குழுவினர் தொடர்ச்சியாக மொழிபெயர்த்தனர். ஜப்பானிய வேளாண் அறிஞர் மசானபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’, ரேச்சல் கார்சனின் ‘மௌன வசந்தம்’, வந்தனா சிவாவின் ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ போன்ற சுற்றுச்சூழல் செவ்விலக்கியங்களை நெடுஞ்செழியன் குழுவினர் மொழிபெயர்க்க, ‘சவுத் விஷன்’ பாலாஜி, மறைந்த ‘ஓயாசிஸ்’ பிரபலன் உள்ளிட்டோர் நடத்திவந்த பதிப்பகங்கள் அவற்றைப் பதிப்பிப்பதில் அன்றைக்கு ஆர்வம் காட்டின.

அந்தக் குழுவின் பங்களிப்பாளர்கள் சி.மா.பிரிதிவிராஜ், குமாரசாமி, புருஷோத்தமன், நீலகண்டன், சீனு.தமிழ்மணி, பாமயன், செந்தில்குமரன், போப்பு, சுதாலட்சுமி, ரமேஷ்பாபு, புனித பாண்டியன். எழுத்துப் பணி மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் களச் செயல்பாடுகள் தொடக்க அடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், உள்ளூர் மக்களை ஒருங்கிணைத்து இவர்கள் செயல்படவும் தொடங்கினர். அன்றைக்கே உலகமயம்- தாராளமயம்-தனியார்மயத்தை இந்தக் குழு கடுமையாக எதிர்த்தது. மனித உரிமையின் நீட்சியாகவே சுற்றுச்சூழல் உரிமையை அவர்கள் முன்வைத்தனர். அந்தக் குழுவினர் உருவாக்கித் தந்த வலுவான அடித்தளம் அடுத்த கட்டத்துக்கு அப்படியே கடத்தப்படவில்லை. நெடுஞ்செழியனின் அகால மரணம் உள்ளிட்ட காரணங்களால் அந்த அமைப்பின் செயல்பாடுகள் தேய்ந்து போயின.

புதிய எழுச்சி

புத்தாயிரம் ஆண்டுக்குப் பின்னர் சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்தில் கவனம் சற்று அதிகரித்தது. இயற்கை-காட்டுயிர்- தாவரங்கள் சார்ந்த எழுத்து,  விழிப்புணர்வும் இயற்கை வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வும் பரவலாகத் தொடங்கின. சு.தியடோர் பாஸ்கரன், பாமயன், நம்மாழ்வார், ச.முகமது அலி, பேராசிரியர்கள் கு.வி.கிருஷ்ணமூர்த்தி, வறீதையா கான்ஸ்தந்தின், பொ.ஐங்கரநேசன், மருத்துவர் வெ.ஜீவானந்தம், நக்கீரன், ப.ஜெகநாதன் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக எழுதத் தொடங்கினர்.

சு.தியடோர் பாஸ்கரன் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் குறித்தும், பாமயன் சுற்றுச்சூழல் நுண்அரசியல்-சிந்தனைப் பின்புலம் குறித்தும், முகமது அலி இயற்கை-காட்டுயிர் குறித்தும், கு.வி.கிருஷ்ணமூர்த்தி தாவரங்கள் குறித்தும், வறீதையா கடல் சூழலியல் -மீனவர்கள் குறித்தும், நக்கீரன் சூழலியல் அரசியல்-பண்பாடு குறித்தும், ப.ஜெகநாதன் காட்டுயிர்கள் குறித்தும் கவனப்படுத்தி எழுதி வருகின்றனர். முதல் நிலையில் சுற்றுச்சூழல் செவ்விலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டுப் பசுமை இலக்கியத்துக்கான வலுவான பாதை கட்டமைக்கப்பட்டிருந்தது. அதன் அடுத்த கட்ட நகர்வாக தமிழில் கடந்த 10-15 ஆண்டுகளில் எழுதப்பட்ட நேரடி நூல்கள் அமைந்தன. சு.தியடோர் பாஸ்கரனின் 'கையிலிருக்கும் பூமி', கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் 'தமிழரும் தாவரமும்', நக்கீரனின் 'காடோடி', 'நீர் எழுத்து', 'சூழலும் சாதியும்', 'தமிழ்: ஓர் சூழலியல் மொழி' உள்ளிட்ட நூல்கள் வாசிக்கத் தவறக்கூடாத வரவுகள்.

மீட்க வேண்டிய பிணைப்பு

சுற்றுச்சூழல் அக்கறை, விழிப்புணர்வு எனும்போது முதலில் இயற்கையிடமிருந்து மனிதர்களின் அறுபட்ட பிணைப்பைப் புதுப்பித்தாக வேண்டியுள்ளது. தேசிய அளவில் காட்டுயிர், இயற்கை சார்ந்த கல்விப்புல ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்களில் கணிசமானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதேநேரம் இவர்களில் பெரும்பாலோர் தங்கள் துறை சார்ந்த புரிதலை மக்களுக்கு விளக்கவோ, உள்ளூர் மொழியான தமிழில் எழுதவோ இல்லை. சொற்பமானவர்களே எழுதினர்.

சங்க இலக்கியக் காலம் தொட்டு திணையியல் அடிப்படை- யிலான பண்பாட்டு, வாழ்க்கை முறைகள் நமக்கு ஆதாரமாக இருந்தன. இப்படி நெடிய இயற்கை சார்ந்த பின்புலம் இருந்தும்கூட பண்டைய காலப் புரிதலுக்கும் நவீன காலத்தில் கல்வி பரவலானபோதும் அச்சு வடிவ அறிவுப் பரவலிலும் சுற்றுச்சூழல் முதன்மை அம்சமாக இருந்திருக்கவில்லை. சமூகத்திலோ கல்விப்புலத்திலோ அது போதிய கவனம் பெற்றிராத நிலையில், இயற்கையுடன் மக்கள் கொண்டிருந்த பிணைப்பு அறுபட்டுப் போனது. பாடநூல் அடிப்படையிலான மேற்கத்தியக் கல்வி முறை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

எனவே, இயற்கையுடனான மனிதர்களின் இயல்பான பிணைப்பை முதலில் மீட்டெடுக்க வேண்டிய தேவை எழுந்தது. அந்தப் பிணைப்பை இயற்கை குறித்த கல்வி, களச் செயல்பாடுகள், அறிவியல்பூர்வ புரிதல் போன்றவற்றை பரவலாக்குவதன் மூலமே ஏற்படுத்த முடியும். அந்த வகையில் பறவைகள், காட்டுயிர்கள், காடுகள் குறித்த அறிவை மக்கள் புரிந்துகொள்ளும் வகையிலும் அறிவியல்பூர்வமாகவும் முன்னெடுக்க வேண்டியது அடிப்படைத் தேவை.

மக்களுடன் கைகோர்ப்பு

ஒரு நீர்நிலையையோ, காட்டையோ, உயிரினத்தையோ பாதுகாக்க எளிய மக்களிடையே அவற்றின் அவசியத்தையும் நமது வாழ்க்கையுடனும் வசதிகளுடனும் கணக்கற்ற வகையில் அவை பின்னிப் பிணைந்திருப்பதை விளக்கமாக எடுத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. ஐ.நா. துணைநிறுவனங்களும், இயற்கை சார்ந்து ஆராய்ச்சி செய்துவரும் உலக நிறுவனங்களும் இயற்கை அம்சங்களை ஆவணப்படுத்துவதன் அவசியத்தை வலுவாக எடுத்துரைக்கின்றன. இயற்கையை அழிக்கும் வளர்ச்சித் திட்டம், நிலத்தைத் திருத்தும் செயல்பாடு, தொழிற்சாலை தொடங்குதல் போன்ற எந்த ஒன்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும், தடுத்து நிறுத்தவும் இந்த ஆவணப்படுத்துதல் மிகவும் அவசியமாகிறது. துறைசார் நிபுணர்கள் மட்டுமில்லாமல், உள்ளூர், சுற்றுப்புற மக்களும் இந்தச் செயல்பாடுகளில் கைகோக்கும்போதுதான் இந்த ஆவணப்படுத்துதல் முழுமையடைகிறது. உள்ளுர் மக்களின் பங்கேற்பு என்பது இந்தச் செயல்பாடுகளில் மிக அவசியமானது. காரணம், ஒரு வளர்ச்சியால் ஏற்படும் நன்மை, தீமைகளை நேரடியாக அனுபவிக்கப் போகிறவர்கள் அவர்களே.

இந்த வகையில் அறிவியல்பூர்வமான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்பது சுற்றுச்சூழல் செயல்பாட்டில் அடிப்படைத் தேவையாகிறது. தமிழ்நாட்டில் சமீப ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை நோக்கும்போது சில முதன்மைப் போக்குகளைப் பார்க்க முடிகிறது.

முக்கியப் போக்குகள்

- மரக்கன்று நடுவது, சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்துப் பேசுவது, இயற்கையாக வாழும் உயிரினங்களுக்கு உணவு அளிப்பது உள்ளிட்டவை ஒரு வகை.

நடுத்தர மக்களிடையே ஒருவித குற்றவுணர்வைத் தூண்டுவது, சுற்றுச்சூழல் குறித்த அச்சத்தை விதைப்பது, தனிமனித மாற்றத்தைத் தீவிரமாக வலியுறுத்துவது இன்னொரு வகை. இவர்கள் கவனம் செலுத்தாத மிக முக்கியமான அம்சம், சுற்றுச்சூழல் கல்வியை அனைத்துத் தரப்பினரிடமும் எடுத்துச்செல்லாதது. மக்கள் அறிவியலாளர்களாக, உள்ளூர் செயல்பாட்டாளர்களாக மக்களை மாற்ற முயலாதது.

- சுற்றுச்சூழல் குறித்த அறிவியல்பூர்வ புரிதலுடன், சமூக- அரசியல்-பொருளாதாரத் தொடர்புகள் குறித்து உரைப்பது, சுற்றுச்சூழல் உரிமையை மனித உரிமையாக, சமூக நீதி உரிமையாக, அடிப்படை உரிமையாக வலியுறுத்தி அனைத்து வகைகளிலும் செயல்படுவது மூன்றாவது வகை.

ஆழமற்ற செயல்பாடு

மூன்றாவது வகையில் சில முன்னணி அமைப்புகள் செயல்படுவதுபோலத் தோன்றினாலும் பலரும் இரண்டாவது வகை சார்ந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் இருப்பை நியாயப்படுத்த மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் பெயர்களை அவ்வப்போது அவர்கள் நினைவுபடுத்தினாலும், அந்த ஆளுமைகள் முன்மொழிந்த கொள்கைகளின் அடிப்படையில் இன்றைய பிரச்சினைகளை விளக்கும், தீர்வுகளைப் பரிந்துரைக்கும், அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வை எடுத்துரைக்கும் திறம் பலரிடம் இல்லை.

 பெருமளவு மேம்போக்கான, ஏதோ ஒன்றைப் பிரதி எடுத்த போக்காகவே இது இருக்கிறது. இந்தத் தரப்பினர் மக்களிடையே குறிப்பிட்ட அளவுக்குத் தாக்கம் செலுத்துகிறார்கள். அதேநேரம் கள அளவில் மக்களுடன் நேரடித் தொடர்பற்றவர்களாக, நடுத்தர வர்க்கத் தன்மையுடன் மேசைகள்- கணினிகள் -சமூக ஊடகத்தில் சுற்றுச்சூழல் அக்கறை போன்றதொரு பிம்பத்தை கட்டியெழுப்பும் அம்சமே இவர்களிடம் தூக்கலாக இருக்கிறது.

இடதுசாரிப் புரிதல்

இடதுசாரிப் பின்புலம் கொண்டவர்கள் பொருளாதார, சமூக அம்சங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சுற்றுச்சூழலுக்குக் கொடுக்க இன்னும் தயாராக இல்லை. மேற்கண்ட நடுத்தர வர்க்கச் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களின் பின்னால் இடதுசாரிகளும் செல்வதையும் பார்க்க முடிகிறது. உண்மையில், இடதுசாரிப் பின்புலம் கொண்டவர்கள் சுற்றுச்சூழல் குறித்த மேம்பட்டதொரு புரிதலையும் தீர்வையும் முன்வைக்க முடியும். உலக அளவில் மார்க்ஸ், எங்கெல்ஸின் கோட்பாடுகளை எப்படி இன்றைய சுற்றுச்சூழல் புரிதலுக்குப் பயன்படுத்த முடியும் என்பது சார்ந்த முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. 'மன்த்லி ரிவ்யு' போன்ற இதழ்கள், ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் போன்ற அறிஞர்கள் இது குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகிறார்கள்.

தமிழில் மார்க்சிய அறிஞர் எஸ்.வி. ராஜதுரை சில கட்டுரைகளை இந்த வகையில் எழுதியுள்ளார். எழுத்தாளர் நக்கீரன் இந்தத் திசையில் சில முன்னெடுப்புகளைச் செய்துள்ளார். இந்த நோக்கில் நாம் செல்ல வேண்டிய தொலைவு மிக மிக அதிகம்தான். ஆனால், அதை விரைவுபடுத்தியே ஆக வேண்டிய அவசியம் உள்ளது. இதற்குக் காரணம் இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதைத் தாண்டி, காலநிலை மாற்றம் நம் உடனடி கவனத்தைப் பெரிதாகக் கோரி நிற்கிறது.

காலநிலை மாற்றம் என்கிற உலகை அச்சுறுத்தும் பேராபத்து உருவாக நமது பங்கு சிறுதுளியாக இருந்தாலும், அதன் பாதிப்புகளால் வளரும் நாடுகளில் உள்ள மக்களும், விளிம்புநிலையினரும்தான் மிக மோசமாக பாதிக்கப்படப் போகிறார்கள். இந்தப் பின்னணியில் தமிழ் போன்ற நெடிய மரபு கொண்ட ஒரு மொழியிலும் சமூகத்திலும் காலநிலை மாற்றம் குறித்த ஆக்கபூர்வமான விவாதங்கள் மிகக் குறைவாகவே நடைபெற்றுள்ளன. அதன் காரணமாகவே முற்போக்கு, திராவிட, அம்பேத்கரிய சிந்தனைப் போக்கை பின்பற்றுபவர்கள் இந்தத் துறை சார்ந்து ஆக்கபூர்வமான விவாதங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இது சார்ந்த எழுத்து அதிகம் இல்லை என்றாலும் நாராயணி சுப்ரமணியன், சு.அருண்பிரசாத், அ.சங்கர் பிரகாஷ் உள்ளிட்ட இளைஞர்கள் எழுதி வருவது நம்பிக்கையைத் தருவதாக உள்ளது.

சமூக, அரசியல், பொருளாதார, பண்பாடுப் பிரச்சினைகள், போக்குகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சூழலியல் பிரச்சினைகளுக்கும் கொடுத்தே ஆகவேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். அறிவியல்பூர்வ சிந்தனையும் சூழலியல் பாதுகாப்பும் இருவேறுபட்டவை அல்ல. அறிவியல் வளர்ச்சிகளைத் தம் கைவசப்படுத்திப் பூவுலகைச் சீர்கெடுக்க முதலாளித்துவம் பயன்படுத்திக் கொண்டு இருக்கலாம். ஆனால், அறிவியல் மனப்பான்மை, அறிவியல்பூர்வ சிந்தனையுடனே இயற்கையை மீட்டெடுக்கவும் சீரமைக்கவும் முடியும். அதற்கான அடிப்படைகளை வலுப்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் சீரழிப்பால் பெரும் கேடுகளை அனுபவிக்க இருக்கிற கடைக்கோடி மனிதனுக்கும் சுற்றுச்சூழல் உரிமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை சமூகத்தில் இயங்கி வரும் நம் அனைவருக்குமே உண்டு. அந்தத் திசையில் பணியாற்றத் தயாராவோம்.

- ஆதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.