round sitting ladiesஇன்றைய அரசாங்கம் யார் ஆட்சி செய்தாலும், அது மக்களை குறிப்பாக ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கின்றது. கடந்த 73 ஆண்டு கால ஆட்சியில் யார் மேம்பாடு அடைந்தனர் என்பதை சாதாரணமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரிந்துவிடும். இதற்கு ஒரு ஆதாரத்தைத் தந்தால் நாம் புரிந்து கொள்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

சமீபத்தில் ஒரு ஐ.நா.நிறுவனத்தின் விழா ஒன்றில் காணொளிக் காட்சி மூலம் பேசிய நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு புள்ளி விவரத்தைக் கொடுத்தார். அது ஒரு மெய்யான புள்ளி விவரம் தான்.

அதாவது இந்தியாவில் உள்ள குடும்பங்களில் உள்ள 80 கோடி மக்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் உணவு வழங்கி, பசியிலிருந்து அவர்களை பாதுகாத்து இருக்கின்றோம் என்று கூறியதுதான். இந்தப் பிரகடனம் என்ன செய்தியை நமக்கு விளக்குகின்றது.

இந்தியாவில் உள்ள 138 கோடி மக்களில் 80 கோடி மக்கள் விளிம்பு நிலையில் வாழ்கின்றார்கள். அரசாங்கத்தின் உதவியின்றி அவர்களுக்கு உணவு பாதுகாப்பு கிடைக்காது என்பதுதான். இன்னொரு புள்ளி விவரத்தை முன் வைத்தால் இந்திய வளர்ச்சிப் பாதை யாருக்குச் சாதகமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 8 சதவிகிதத்தை எட்டியபோது தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்கி குறைந்தது 100 நாட்களுக்கு வேலை வேண்டும் என்று கூறிவரும் கிராமத்துக் குடும்பங்களுக்கு பணி தர வேண்டும், என ஒரு சட்டம் இயற்றி கிராமங்களிலிருந்து வாழ்வாதாரம் தேடி நகரத்துக்குச் சென்று பிழைப்பைத் தேடும் சூழலை மாற்ற மத்திய அரசு முனைந்தது எதைக் காட்டுகிறது? நீங்கள் அடைந்த பொருளாதார வளர்ச்சி ஏழையின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற உண்மையைத்தான்.

இன்னும் ஒருபடி மேலே சென்று ஒரு புள்ளி விவரத்தைத் தந்தால் நம் அரசும், கொள்கைகளும், திட்டங்களும் யாரை கைதூக்கி விட்டிருக்கிறது என்பது புரியும்.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை பயன்படுத்தியபோது, நகரங்களிலிருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்குப் படையெடுத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும், அவர்களின் வாழ்வாதாரச் சூழலும் அவர்கள் நகரங்களில் வாழ்ந்த வாழ்க்கை முறையும் அப்பட்டமாக நமக்கு ஒரு செய்தியைக் கொண்டு வந்து சேர்த்தது.

சுதந்திர நாட்டில் நம் தொழிற்சாலைகள் எப்படி கொத்தடிமைகளாக தங்கள் தொழிலாளர்களை வைத்திருந்திருக்கின்றனர் என்பதை படம் பிடித்துக் காட்டியது. நம் கம்பெனி முதலாளிகளுக்கு தங்கள் கம்பெனிகளில் பணியாற்றியவர்கள் சக மனிதர்கள் என்ற எந்த உணர்வும் அற்று செயல்பட்டு அவர்களை அற்ப உயிரினமாகப் பார்த்து நடத்தியதுதான் நம் வளர்ச்சி வரலாற்றில் ஒரு சோக நிகழ்வு.

இப்படிப்பட்ட சூழல்தான் உருவாகப் போகிறது என்பதை 100 ஆண்டுகளுக்கு முன் காந்தி மிகவும் தெளிவுபட நம் தலைவர்களிடம் எடுத்துக் கூறினார் தன் கொள்கைப் பிரகடனமான இந்து சுயராஜ்யத்தின் மூலம்.

இந்தியா வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவது எளிதானது. அதைவிட மிக முக்கியமாக வெள்ளைக்காரத் தனத்திலிருந்து நம் மக்களை விடுவிப்பதுதான் கடினமான பணி அந்தப் பணியைச் செய்வதுதான் சுயராஜ்யத்திற்கான பணி என்று விளக்கினார்.

அவர் அடிப்படையில் வெள்ளைக்காரர்களிடமிருந்து இந்தியா விடுதலை அடைவதை முழுச் சுதந்திரம் என்பதாகப் பார்க்கவில்லை. சுதந்திரம் என்பது வெள்ளைக்கார ஆட்சிமுறை, வெள்ளைக்கார பொருளாதார முறை, வெள்ளைக்கார நிர்வாகம், வெள்ளைக்கார வாழ்வு முறை இவைகள் அனைத்திலிருந்தும் நம் மக்களை விடுதலை அடையச் செய்ய வேண்டும் அதுதான் இந்திய மக்கள் அனைவருக்குமான சுதந்திரமாக இருக்கும். அதுதான் சுயராஜ்யம் என்று பிரகடனம் செய்தார்.

இந்தப் பாதையில் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் நடைபோடவில்லை என்றால் வெள்ளையர்கள் இருந்த இடத்தில் நம்மவர்கள் இருந்து வெள்ளையர்கள் செய்ததையே இவர்களும் செய்து பெரும்பான்மையாக வாழும் இந்திய ஏழை மக்களைச் சுரண்டி வாழ்வார்கள் என்றார். ஆகையால்தான் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே இரண்டு இயக்கங்களை மகாத்மா காந்தி நடத்தி வந்தார்.

ஒன்று இந்தியாவை விட்டு வெள்ளையர்களை அகற்றுவது. இரண்டு இந்தியா தன்னை புனரமைத்துக் கொண்டு இந்திய வாழ்வு முறைக்குத் திரும்புவது. அந்த இந்திய வாழ்வு முறைக்குத் திரும்பும் நிகழ்வு முழுக்க முழுக்க இந்திய நாகரிக கலாச்சார பண்பாட்டின் பின்புலத்தில் நடைபெறவேண்டும் என்பதனையும் தெளிவுபடக் கூறினார்.

இந்திய நாகரிகத்தின் அடிப்படை என்பது கிராமிய வாழ்வில் மிளிர்ந்த விழுமியங்கள். எனவே இந்த வாழ்க்கை முறையில் நம் நாகரிக கலாச்சார அடையாளங்களில் காணப்படுகின்ற பிற்போக்குத் தனங்கள் அகற்றப்பட்டு மற்ற கலாச்சாரங்களிலிருந்து ஒரு சில வாழ்க்கை நெறிமுறைகளை உள்வாங்கி இணைத்து ஒரு உயர்ந்த வாழ்வு முறையை உருவாக்கி வாழ மக்களுக்கு வழிகாட்டுதல் என்ற அடிப்படையைக் கொண்டு வந்தார் காந்தி.

அதை முற்றிலுமாக நிராகரித்தனர் மேற்கத்தியக் கல்வி பயின்ற மேற்கத்திய வாழ்வு முறையை உயர்வானது என்று கருதிய காங்கிரஸ்காரர்கள். அவர்களுக்கு இந்தியா என்ற நாட்டை உருவாக்குவது, அதில் ஒரு வலுவான அரசைக் கட்டுவது, அதன் மூலம் அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சியை மேற்கத்திய வளர்ச்சி முறையில் கொண்டு வருவது என்ற அடிப்படையில் மேற்கத்திய அமைப்புக்களையும், அணுகுமுறைகளையும் தக்கவைத்து செயல்பட முனைந்தனர்.

இவர்கள்தான் இந்தியத் தலைவர்களில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். மற்றுமொரு குழு காந்திய வழிமுறை மேற்கத்திய கலாச்சாரத்தையும் கிழக்கத்திய கலாச்சாரத்தையும் இணைத்த ஒரு ஒட்டுக்கட்டிய வழிமுறை, அது இந்திய வழிமுறை அல்ல, இதில் அடிப்படை இந்துத்வா சாரம் கிடையாது என விமர்சனம் செய்து நிராகரித்தனர்.

காந்தி மேற்கத்திய கிறித்துவ வாழ்வியலில் பலவற்றை உள்வாங்கி இந்திய வாழ்வு முறையில் உள்ள புனிதத்துவத்தை கெடுத்து விட்டார் என்று விமர்சனங்களை முன் வைத்து, மேற்கத்திய முறையை முழுமையாக ஆதரிப்பவர்களை விட மோசமான எதிரியாகக் காந்தியைப் பார்த்து விமர்சனத்தை வைத்து முற்றிலுமாக காந்தியை நிராகரித்தனர்.

காந்தியை உள்வாங்கிய காந்தியர்களோ அடித்துச் செல்லும் வெள்ளத்தில் சிக்கியவர்கள்போல் சுதந்திர இந்திய அரசாங்கச் செயல்பாடுகளைப் பார்த்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாக மாறி காந்திக்கு அஞ்சலியும் புகழாரமும் சூட்டுபவர்களாகவும் மாறி செய்வதறியாது ஒரு சில கிராமப் பணிகளில் ஈடுபட்டுச் செயல்பட்டதுடன் காந்தியை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக்க முடியாமல் போனது ஒரு துன்பியல் நிகழ்வு.

இந்தியா சுதந்திரமடைந்து இந்தியாவை அமைதிப்படுத்துவதற்கும், இந்தியா என்ற நாட்டை உறுதிப்படுத்துவதற்கும் செயல்பட்ட நம் ஆட்சியாளர்கள் தங்கள் செயல்பட்டு வரும் விதத்தில் பெரும்பான்மை மக்கள் பயன் பெறுகின்றார்களா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்கத் தவறவில்லை.

காந்தியின் பாதையில் சுதந்திர இந்தியாவைக் கொண்டு செல்ல இயலவில்லை என்றாலும் காந்தியின் இலக்கை அடைய வேண்டும் என்று எண்ணினார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதற்கு மிக முக்கியமான சான்றுகள் உள்ளன.

சுதந்திரம் அடைந்தவுடனேயே நேரு அமைத்த கோர்வாலா குழு ஒரு அறிக்கையைத் தந்தது. அதில் பொதுவாழ்க்கைத் தூய்மை, ஒழுக்கமான பொதுவாழ்க்கை, ஊழலற்ற நடைமுறைகள் அரசியலில் ஆளுகையில், நிர்வாகத்தில் பேணப்பட வேண்டும் என்பதை எடுத்துக் கூறியது, இந்த அறிக்கை எனக் காட்டுகிறது என்றால் சுதந்திரமடைந்த உடனேயே நம் அரசியல்வாதிகளிடமும் ஆட்சியாளர்களிடமும், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சுயநலம் மேலோங்கி, ஊழல் செயல்பாடுகள் வெளிப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தச் சூழலை கடுமையாக நாம் எதிர்கொண்டு முறியடிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்தது இந்தக் குழுவின் அறிக்கை.

அதனைத் தொடர்ந்து நிர்வாகவியல் வல்லுனர் பால் ஆப்பல்பி தன்னுடைய நிர்வாகச் சீர்திருத்த அறிக்கையில் நேரு, அவர்களிடம் சமர்ப்பிக்கும்போது ஒன்றை தெளிவாக் குறிப்பிட்டிருந்தார். காலனியாதிக்க காலத்தில் உருவாக்கப்பட்ட நிர்வாக அமைப்பு பெருமளவு மக்களை மதித்து நடத்தாது, மாறாக அரசுக் கட்டிலில் உள்ளவர்களுக்கு மக்களைச் சுரண்டுவதற்கு வழிசெய்து கொடுத்துவிடும் என்ற எச்சரிக்கையை தன் அறிக்கையின் மூலம் சமர்ப்பித்தார். இந்த இரண்டு அறிக்கைகளிலும் ஆளுகையிலும் நிர்வாகத்திலும் அடிப்படை மாற்றம் தேவை என்று கூறப்பட்டது. அதேபோல் என்.என்.வோரா குழு அறிக்கை 1993ஆம் ஆண்டு ஒரு குறிப்பைக் கொண்டுவந்து தந்தது. அது கூறியது நம் நெஞ்சத்தைப் பிளக்கும் செய்தி.

அரசியல் எப்படி குற்றப் பின்னணி கொண்டதாக மாறி, ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு இணையாக ஒரு அரசாங்கத்தையும் பொருளாதாரத்தையும் மாபியாக்கள் நடத்தி வருகின்றனர் என்பதைப் படம் பிடித்துக் காட்டியது. அரசியல் கட்சித் தலைவர்கள் எப்படி தாதாக்களாக செயல்படுகிறார்கள் என்பதையும் படம் பிடித்துக் காண்பித்துள்ளது.

அரசியல்வாதிகளுக்கும், கிரிமினல்களுக்கும், அரசுத்துறை அதிகாரிகளுக்கும் இருக்கும் வலுவான உறவு முறையையும் எடுத்து வைத்தது. இதை அடிப்படையாக வைத்துத்தான் மறைந்த நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஒரு கருத்தை முன் வைத்தார்.

இந்தியாவில் அரசியல் நடக்க வேண்டுமெனில், அதற்கு குண்டர்கள் இல்லாமல் இயலாது என்றும், இதற்கு யாரும் விதி விலக்கு அல்ல என்ற கருத்தை ஒரு பொது நிகழ்வில் பதிவு செய்தார். அது மட்டுமல்ல, ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ஒரு கருத்தைப் பதிவு செய்தார். அதாவது மத்திய அரசு அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஒரு ரூபாயை டெல்லியிலிருந்து அனுப்பினால் அதில் 15 பைசா மட்டுமே ஏழைகளின் கைக்குக் கிடைக்கிறது என்று கூறினார்.

அந்தக் கருத்தை வைத்து எதிர்க் கட்சிகள் கடும் விமர்சனத்தைச் செய்தன. 85 பைசா ஊழலாகச் சென்று விட்டது என்பதுதான் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு. அதில் உண்மை என்ன என்பதை ஆய்வு செய்த மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் தன் ஆராய்ச்சி அறிக்கையின் மூலம் இந்த 85 பைசா ஒட்டுமொத்தமாக ஊழலாக இல்லாமல் நிர்வாகம் மற்றும் ஊழலாக இரண்டும் கலந்ததாக இருப்பதை அறிவித்தது.

இன்னும் ஒரு அடிப்படை ஆதாரம், ராஜீவ் காந்தியின் இன்னொரு முக்கியமான உரையில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மும்பைக் கூட்டத்தில் நிகழ்த்திய உரையில் இருக்கிறது அடுத்த ஆதாரம். அது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஓர் ஆய்வுரை. அது இந்தியாவில் அதுவரை நடந்த ஆட்சியின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, சுயமதிப்பீடு செய்து கட்சியை பலரது ஊழல் பிடியிலிருந்து மீட்டெடுக்க ஆற்றிய உரை.

இந்த உரையில் அவர் கோடிட்டுக் காட்டியது கடந்த கால அரசுச் செயல்பாடுகளில் ஏழை மக்கள் அடைந்த பயன்களைவிட, நம் கட்சிக்காரர்களும் அரசுத்துறை அதிகாரிகளும் அடைந்தவைகள் தான் அதிகம் என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த நிர்வாகச் சீர்திருத்த அறிக்கைகள் இதற்குமுன் மொரார்ஜி தேசாய் தலைமையில் கொண்டு வந்த முதல் நிர்வாகச் சீர்திருத்த அறிக்கைகள் அனைத்தும் நமக்குச் சொல்லும் செய்தி நம் சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஆளுகை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு அதன் செயல்பாடுகளால் பெருமளவு ஏழைகளைத் தொட முடியவில்லை என்பதைத்தான்.

இந்த அறிக்கைகள் அனைத்தும் ஆராய்ச்சியின் வெளிப்பாடாக வந்தவைகள். இவைகள் அத்தனையும் நமக்குத் தரும் செய்தி இன்றைய அரசாங்க அமைப்புக்கள் இன்றைய வடிவில் ஏழைகளுக்குச் செயல்படாது என்பதைத்தான். இதைத்தான் மகாத்மா காந்தியும், ஜே.சி.குமரப்பாவும் 100 ஆண்டுகளுக்கு முன் எடுத்துக் கூறினர்.

காந்தியும் ஜே.சி.குமரப்பாவும் அவர்களுடைய ஆழ்ந்த உள்ளுணர்வின் அடிப்படையில் மிகத் தெளிவாக இந்த மேற்கத்திய முறை பொருளாதாரம், அரசியல், அனைத்தும் சுரண்டுவோருக்கானது என்பதை பிரகடனப்படுத்தினர்.

இன்றைய சூழலில் இவற்றையும் கடந்து பல சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. அது எதற்கானது என்று பார்த்தால், அது சந்தைக்கானதாக இருக்கிறது. மக்களுக்கானதாக இல்லை. அப்படி ஒன்று வந்தால் அது மக்களை வதைத்து சந்தையை வலுப்படுத்துவதற்காக வருகிறது.

எப்படிப்பட்ட ஆளுகை மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் வேண்டும் என்பதை சந்தையே தீர்மானம் செய்து, சந்தையே ஆலோசனை வழங்கி, சந்தையின் உந்துதலால் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. இதன் விளைவு சுரண்டல் செயல்பாடுகள் என்பது சட்டரீதியாக்கப்பட்டுவிட்டது.

இன்று பல ஊழல்கள் கொள்கைகள் மூலமாகவே செய்யப்பட்டுவிடுகின்றன. எப்படிப்பட்ட கல்வி வேண்டும் என்பதை இந்த முறை கார்ப்பரேட்டுக்கள் ஒவ்வொன்றும் ஒரு அறிக்கை கொடுத்து சந்தைச் செயல்பாட்டுக்கு ஆட்கள் தயாரிப்பதை கல்வி என்று ஏற்றுக்கொள்ளச் செய்துவிட்டனர். இந்த சந்தைச் செயல்பாடுகள் அரசாங்கத்தை தன்வயப்படுத்திக் கொண்டுவிட்டது.

அடுத்து சமூகத்தை நுகர்வு தீவிரவாதிகளாக மாற்றி மயக்கத்தில் வைத்துக் கொண்டுவிட்டது. அரசியலையும் அது விட்டு வைக்கவில்லை. அதன் வெளிப்பாடாக கட்சிகளை கார்ப்பரேட் கம்பெனி மாடலில் நடக்க வழிகாட்டி, வாக்குகளையும், சந்தைப் பொருளாக மாற்றியமைத்து விட்டனர்.

அதன் விளைவு மக்கள் பிரச்சினைகளுக்கு போராட வேண்டிய அரசியல் கட்சிகள் மக்களை போராட வைத்துவிட்டு, மக்கள் போராட்டத்தின் பின்னணியில் அறிக்கை விட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் தேர்தல் அரசியலுக்குமேல் முன்னேற முடியவில்லை. இந்தச் சூழலில் ஐ.நாவின் மானுட மேம்பாட்டு அறிக்கை (2020) அடுத்த அபாயச் சங்கை ஊதி இருக்கிறது.

இனிமேல் மானுடச் சமூகம் இதுவரை வாழ்ந்த வாழ்க்கைபோல் வாழ இயலாது. இயற்கையை இனிமேலும் வளர்ச்சி என்ற பெயரில் அழிக்க இயலாது. மாற்று முறை வளர்ச்சி காணுங்கள் என்று தேசங்களுக்கு அறிவுரை கூறிவிட்டது. இதைத்தான் மகாத்மா காந்தியும், ஜே.சி.குமரப்பாவும் 100 ஆண்டுகளுக்கு முன் கூறினார்கள்.

எனவே இன்று நம் ஒட்டுமொத்த அரசியல், அரசாங்கம், ஆளுகை, நிர்வாகம் அனைத்தும் மாற்றியமைக்கப்படல் வேண்டும். அதுதான் இன்றைய தேவை. அரசியலும் சரி, அரசாங்கமும் சரி, ஆளுகையும் சரி, நிர்வாகமும் சரி, அடிப்படையில் மாற்றியமைக்கப்படல் வேண்டும். அதற்கான அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த ஒரு அறிவு ஜீவிகளின் இயக்கம் உருவாக வேண்டும்.

- க.பழனித்துரை

Pin It