1980களில் உலக வங்கி வறுமைக்கு ஒரு புது வரையறை அளித்தது. வறுமையை ஒழிப்பதே இலக்கு என்ற பெயரில் வறுமைக்கு ஒரு அடிமட்ட அளவுகோலை நிர்ணயித்தது. இது ஒரு நபருக்கான குறைந்த பட்ச தேவைகளையும், அடிப்படையான வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்யும் அடிப்படையில் கூட ஏற்படுத்தப்படவில்லை. உலகின் ஏழை நாடுகளின் தரங்களைப் பயன்படுத்தி உலகின் வறுமைவீதத்தை அளவிட உலக வங்கி முடிவு செய்தது. உலகின் ஏழ்மையான நாடுகளில் இருந்து தேசிய வறுமைக் கோடுகளை ஆராய்ந்து, வாங்கும் திறன் சமநிலையை (PPP) சர்வதேச அளவில் ஒரு பொதுவான வாங்கும் திறனின் அளவீடாக மாற்றியது. ஆறு ஏழை நாடுகளில் தேசிய வறுமைக் கோட்டின் மதிப்பு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் 1 டாலர் மதிப்பிடப்பட்டு அதன் அடிப்படையில் ஒரு நாளுக்கு ஒரு டாலர் வாங்கும் திறன் சமநிலை என்ற சர்வதேச வறுமைக் கோடு நிர்ணயிக்கப்பட்டது.

poor people in india1990ஆம் ஆண்டு உலக வளர்ச்சி அறிக்கையில் ஒரு நாளுக்கு ஒரு டாலர் என்ற சர்வதேச வறுமைக்கோடு (WDR) அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டாலர் வாங்கும் திறன் கொண்ட (ppp) வருவாயை பெறுவோர் வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ளவர் என்றும் ஒரு டாலருக்கும் குறைவான வாங்கும் திறன் கொண்டோர் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர் என்றும் வரையறுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உலக வங்கி 1990ல் உலகின் வறுமை விகிதத்தை 42 விழுக்காடாக கணக்கிட்டது. அதாவது உலகளவில் 40 விழுக்காட்டினர் இந்த வறுமைக்கோட்டிற்குக் கீழே இருந்துள்ளனர். 2008 முதல், சர்வதேச வறுமைக்கோடு 1.25 டாலராக நிர்ணயிக்கப்பட்டது. 2015ல் 1.90 டாலராக நிர்ணயிக்கப்பட்டது. இது உயர்வு அல்ல, டாலரில் ஏற்பட்ட மதிப்பிழப்பினால் ஏற்பட்ட அதிகரிப்பே. இது 1990ன் ஒரு டாலர் மதிப்புக்கு நிகரானதே தவிர அதை விட அதிகமானதல்ல. 2011 விலைகளில் 1.90 டாலரின் உண்மையான மதிப்பு 1990ன் ஒரு டாலர் மதிப்புக்கு நிகரானதே தவிர அதை விட அதிகமானதல்ல.

ரூபாயின் வாங்கும் திறன் சமநிலை என்றால் என்ன. ஒரு நாணயத்தின் மதிப்பீட்டிற்கு இரண்டு அளவுகோல்கள் உள்ளன. ஒன்று அந்த நாணயத்தின் சந்தைப் பரிவர்த்தனை மதிப்பு (MER), ஒரு அமெரிக்க டாலருக்கு சமமான ரூபாயின் பரிவர்த்தனை-மதிப்பு 2021ல் 73.60 ரூபாய். இன்னொரு அளவுகோலான நாணயத்தின் வாங்கும் திறன் சமநிலை அதன் உள்நாட்டு வாங்கும் திறனின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது (purchasing power parity-ppp). அதாவது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் வாங்கும் திறனின் மதிப்பு. அமெரிக்காவில் ஒரு டாலரில் வாங்கப்படும் பொருட்களை இந்தியாவில் எத்தனை ரூபாயில் வாங்க முடியும் என்பதன் மதிப்பைக் குறிக்கிறது. 2020ஆம் ஆண்டில் ஒரு டாலருக்கு இணையான ரூபாயின் வாங்கும் திறன் சமநிலை 21.990 ஆகும். இது போல் உலகின் ஒவ்வொரு நாட்டு நாணயத்திற்கும் டாலருடனான வாங்கும் திறன் சமநிலை கணக்கிடப்படுகிறது. உலகவங்கி ஆண்டுதோறும் உலக நாணயங்களின் வாங்கும் திறன் சமநிலை குறித்த தரவுகளை வெளியிடுகிறது.

பொதுவாக அதிக வருவாய் பெறும் வளர்ந்த நாடுகளுடைய நாணயங்களின் பரிவர்த்தனை மதிப்பும், வாங்கும் திறனும் ஏறத்தாழ சமமாகக் காணப்படுகின்றன. ஆனால் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளுடைய நாணயங்களின் பரிவர்த்தனை மதிப்புக்கும், வாங்கும் திறனுக்கும், இடையே அதிக வேறுபாடு காணப்படுகிறது. வளரும் நாடுகள், ஏழை நாடுகள் / குறைந்த வருவாயுடைய நாடுகளில் உழைப்பிற்குக் குறைந்த கூலியே வழங்கப்படும் நிலை உள்ளதால் அங்கே பல பொருட்களையும், சேவைகளையும் மலிவாகப் பெற முடிவதே இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. சர்வதேச அமைப்புகள் நாடுகளுக்கு இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடுவதற்கு அவற்றின் தேசிய நாணயங்களின் வாங்கும் திறனைப் பயன்படுத்துகின்றன.

சர்வதேச ஒப்பீட்டு அமைப்பு மூலமாக 3,000 முக்கியமான நுகர்வுப் பொருட்கள், சேவைகள், 30 தொழில்கள், 200 வகையான உபகரணப் பொருட்கள், 15 கட்டுமானத் திட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டு நாணயங்களின் வாங்கும் திறன் மதிப்பு கணக்கிடப்படுகிறது. (விலைக் குறியீட்டின் தலைகீழியே வாங்கும் திறன் ஆகும்). நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான பணவீக்கமும் இதையொத்த முறையிலேயே கணக்கிடப்படுகிறது.

உலக வங்கியின் சர்வதேச வறுமைக்கோடானது வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையிலே கணக்கிடப்படுகிறது. 1.9 டாலர் வாங்கும் திறன் சமநிலை என்ற சர்வதேச வறுமைக்கோடு, 1.9 டாலருக்கான ரூபாயின் சந்தை பரிவர்த்தனை மதிப்பான 139.84 ரூபாயைக் (1.9 X 73.6 = 139.84) குறிப்பிடவில்லை (2021ல் ஒரு டாலரின் பரிவர்த்தனை மதிப்பு 73.6 ரூபாய்), 41.781 ரூபாயையே (1.9 X 21.990 = 41.781) குறிக்கிறது. உலக வங்கியின் கணக்கீட்டின் படி தினசரி 42 ரூபாயை மட்டுமே ஈட்டக்கூடிய இந்தியர் வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ளார் இந்த சர்வதேச வறுமைக் கோட்டை உலகின் மிக வளர்ந்த நாடாகக் கருதப்படும் அமெரிக்காவின் வறுமைக்கோட்டுடன் ஒப்பிட்டால் ஏணி வைத்துக் கூட எட்ட முடியாத அளவுக்கு அதீதமான வேறுபாடு காணப்படுகிறது.

சர்வதேச வறுமைக் கோட்டுடன் அமெரிக்காவின் வறுமைக் கோட்டை ஒப்பிட்டுப் பார்ப்போம். அமெரிக்காவில் ஒரு நாளுக்கு, ஒரு நபருக்கான வறுமைக்கோட்டு வறுவாய் 35 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வறுமைக்கோட்டு வருவாய் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 25 முதல் 38 டாலர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 டாலருக்கான சந்தை பரிவர்த்தனை மதிப்பு 2576 ரூபாய் (35 X 73.6 = 2576). தினசரி 42 ரூபாய் மட்டுமே வருவாய் பெறும் இந்தியர் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளார். தினம் 2500 ரூபாய் வருவாய் பெறும் அமெரிக்கர் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளார். இதை எவ்விதத்தில் நியாயப்படுத்த முடியும்?. ஒரு நாளைக்கு 42 ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும். குறைந்தபட்சம் இருவேளை உணவு பெறுவதற்குக் கூட அது போதாது, முக்கால் பட்டினி, முழு பட்டினி நிலையை குறிப்பிடுவதாகத் தான் சர்வதேச வறுமைக் கோடு உள்ளது. உலகவங்கி இத்தகைய தரந்தாழ்ந்த வறுமைக்கோட்டினை பயன்படுத்துவன் மூலம் வறுமையினைக் மிகவும் குறைத்து மதிப்பிடுகிறது. பல கோடி மக்களை வறுமையிலிருந்து ரட்சித்ததாக பொய்யான பரப்புரையைச் செய்து வருகிறது.

1800ல் 80 விழுக்காடாக இருந்த வறுமை விகிதத்தை, 1981ல் 42.7 விழுக்காடாகவும், 2017ல் 9.3 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக உலகவங்கி வெற்றிப் பெருமிதம் கொள்கிறது. நவீனதாராளமய பொருளாதார முன்னேற்றத்தால் உலகின் பெருமளவு வறுமை நீக்கப்பட்டுள்ளதாகவே உலக வங்கி பரப்புரை செய்து வருகிறது. உலக வங்கியின் முடிவுகளையே ஐநாவும் ஓத்துப் பாடி வருகிறது

2000 ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையால் பிரகடனப்படுத்தப்பட்ட எட்டு சர்வதேச வளர்ச்சி இலக்குகள் மில்லினியம் மேம்பாட்டு இலக்குகள் என அழைக்கப்படுகின்றன. செப்டம்பர் 2000த்தில் ஐநாவின் உறுப்பு நாடுகளால் கையெழுத்திடப்பட்ட ஐக்கிய நாடுகளின் மில்லினியம் பிரகடனம், 2015க்குள் வறுமை, பசி, நோய், கல்வியறிவின்மை, சுற்றுச்சூழல் சீரழிவு, பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை கணிசமாகக் குறைக்கும் விதத்தில் எட்டு சர்வதேச இலக்குகளை அடைய உறுதியேற்குமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது. 2015க்குள் உலகின் வறுமையில் பாதிக்கு மேல் குறைக்க வேண்டும் என்பதே அதன் முதல் இலக்கு. ஆனால் மில்லினிய இலக்குகள் அடையப்படவேயில்லை. 2015ல் ஐக்கிய நாடுகள் 2030க்குள் 17 வளங்குன்றா மேம்பாட்டு இலக்குகளின் மூலம் வறுமையை ஒழித்து, புவிக்கோளத்தின் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என பிரகடனப்படுத்தியது. எல்லா வகையான வறுமையையும் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதே இதன் முதல் இலக்கு. உலக வங்கியும் 2030 ஆம் ஆண்டிற்குள் தீவிர வறுமையை 3 விழுக்காடு (அல்லது அதற்கும் குறைவாக) குறைக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்தது.

உலகவங்கியின் 2015ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி 1.90 டாலர் வாங்கும் திறன் சமநிலை சர்வதேச வறுமைக்கோட்டுக்கு கீழ் 13.4 விழுக்காட்டினர் அல்லது 17.58 கோடி மக்கள் உள்ளனர். உலக வங்கி மூன்று வறுமைக் கோடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 1.90 டாலர் ஏழை நாடுகளுக்கான வறுமைக்கோடு. கீழ் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கான வறுமைக் கோடு 3.20 டாலராக நிர்ணயிக்கப்பட்டது. உலகளவில் இந்த வறுமைக் கோட்டின் கீழ் 50.4 விழுக்காட்டினர் அல்லது 65.98 கோடி மக்கள் உள்ளனர். மேல் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கான வறுமைக் கோடு 5.50 அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டது. உலகளவில் 82.3 விழுக்காட்டினர் 1,07.79 கோடி இந்த வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர்.

ஆனால் உலக வங்கி வறுமையை பெருமளவு குறைத்து சாதனை செய்ததாகக் காட்டிக் கொள்வதற்கு ஏழை நாடுகளுக்கான வறுமைக் கோட்டினையே பயன்படுத்துகிறது. உலகவங்கியின் 5. 50 டாலர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உலகின் 82.3 விழுக்காடு மக்கள் உள்ளனர் என்ற போதும் உலக வங்கி வறுமையை பெறுமளவு குறைத்து விட்டதாகவே குறிப்பிட்டு வருகிறது.

உலக வங்கி இந்தியாவை கீழ் நடுத்தர வருவாய் (lower middle income) கொண்ட நாடாக வகைப்படுத்தியுள்ளது. கீழ் நடுத்தர வருவாய் கொண்ட நாட்டிற்கான வறுமைக் கோடு 3.2 டாலர் வாங்கும் திறன் சமநிலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்திய ரூபாயில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் 70 ரூபாய் நுகர்வு செலவு என்பதே வறுமைக்கோடாக வரையறுக்கப்பட்டுள்ளது. உலகவங்கியின் ஒரு தனிநபருக்கு ஒரு நாளுக்கான நுகர்வு செலவினமான 70 ரூபாயும் போதாக்குறையானதே. ஒரு நாளைக்கு 75 ரூபாயைக் கொண்டு, உணவு, குடிநீர், வாடகை, போக்குவரத்து மின்சாரம் ஆகிய அனைத்து செலவுகளையும் நிறைவு செய்ய எப்படிப் போதுமானதாக இருக்கும்?.

2020 ஏப்ரலில் உலக வங்கி வறுமை குறித்து வெளியிட்ட அறிக்கையில் 2000த்தில் இருந்து இந்தியா அறுதி வறுமையைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக உலக வங்கி குறிப்பிடுகிறது. 2011-2015 க்கு இடையில், 1.9 சர்வதேச வறுமைக் கோட்டு அளவுகோலின் அடிப்படையில் இந்தியாவின் வறுமை 21.6 விழுக்காட்டிலிருந்து 13.4 விழுக்காடாகக் குறைக்கப்பட்டதாகவும், 9 கோடி பேர் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. 2015ல் 17.6 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதாகவும் உலகவங்கி குறிப்பிட்டுள்ளது.

உலக மக்கள்தொகையில் 85 விழுக்காட்டினர் (650 கோடி மக்கள்) ஒரு நாளைக்கு 30 டாலருக்கும் குறைவான வருவாயில் வாழ்கிறார்கள் என்று சமீபத்திய உலகளாவிய தகவல்கள் கூறுகின்றன. ஒரு நாளைக்கு 45 டாலர் என்ற உயர் வறுமைக் கோட்டிற்கு கீழ் 92 விழுக்காட்டினர் உள்ளனர். தினமும் 20 டாலர் என்ற கீழ் வறுமைக் கோட்டிற்கும் கீழ் 78 விழுக்காட்டினர் உள்ளனர். இந்த மூன்றில் எந்த அளவுகோலை தேர்வு செய்தாலும் உலகின் முக்கால்வாசி மக்கள் வறுமையில் தான் வாழ்கிறார்கள் என்றும் இவை அனைத்தும் கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன் பெறப்பட்டத் தரவுகள். கோவிட் தாக்கத்திற்குப் பின் வறுமையின் அளவு மேலும் அதிகரித்துள்ளது. (https://ourworldindata. org)

கோவிட் தொற்றுநோயின் விளைவாக சுமார் 12.0 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டனர் என்றும், 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இது 15.0 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கியே குறிப்பிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றத்தால் 6.8 முதல் 13.2 கோடி நபர்கள் வறுமைக்கு தள்ளப்படுவர் என்று ஒரு புதிய ஆய்வு மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செத் டோனெல்லி எழுதிய உலகளாவிய வளர்ச்சி பொய். வறுமையையும், சுரண்டலையும் மறைக்க புதிய தாராளவாதிகள் எவ்வாறு தரவை திரிக்கின்றனர் என்ற நூலில் உலக வங்கி எவ்வாறு வாங்கும் திறன் சமநிலை தரவுகளை பயன்படுத்தி உண்மையான வறுமையையும், பொருளாதார சமமின்மையையும் மறைத்து வருகிறது என்பதை விவரித்துள்ளார்.

அந்த நூலில் அவர் வெளிப்படுத்தியுள்ள முக்கியமான தகவல்களின் குறிப்புகள் பின்வருமாறு:

வாங்கும் திறன் சமநிலையானது (ppp) சமூக நலனை அளவிடும் குறிகாட்டியாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் வாங்கும் திறன் சமநிலை உண்மையான பொருளாதார நடவடிக்கையையும் குறிப்பிடவில்லை, சமூக நலனையும் குறிப்பிடவில்லை என்ற போதிலும் கடந்த 25 ஆண்டுகளாக இவற்றை பிரதிபலிக்கும் குறிகாட்டியாகக் கருதப்படுகிறது. இதனால் வறுமையும், பொருளாதார சமமின்மையும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. இது நவீனதாராளாமயத்தின் கோரங்களை சாதனைகளாகத் திருத்திக் காட்டவே பயன்படுத்தப்படுகிறது. உலகமயமாதலின் வெற்றிப் பெருமிதங்களை பறைசாற்றும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது (செத் டோனெல்லி).

ஒரு பகுப்பாய்வு கருவியாக வாங்கும் திறன் சமநிலை என்ன செய்துள்ளது? எதை வெளிப்படுத்த வேண்டுமோ அதை மறைத்துள்ளது. மேம்படுத்த வேண்டிய சமூகப் பொருளாதார நிலைகளை மேலும் மோசமாக்கியுள்ளது. வறுமையையும், வளர்ச்சியையும் தவறாக மதிப்பிடுவதற்கே துணைபுரிகிறது. உலகமயமாக்கத்தின் 'சாதனைகள்' வளர்ச்சியின் மூலம் அடையப்படவில்லை. வளர்ச்சியைத் தடுப்பதன் மூலமே பெறப்பட்டுள்ளன (செத் டோனெல்லி).

உண்மையில் நிதி, வர்த்தக தாராளமயத்தின் விளைவாக மூன்றாம் உலகில் நுகர்வோர் பொருள்களின் விலை குறைந்ததன் விளைவாகவே வாங்கும் திறன் சமநிலை அடிப்படையிலான புள்ளிவிவரங்களில் வறுமை குறைந்ததாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த விலைக்குறைவு உற்பத்தித் திறனில் அதிகரித்ததால் ஏற்படவில்லை. இவை முதல் உலகத்துடன் ஒப்பிடும் போது மூன்றாம் உலக நாடுகளின் குறைந்த ஜிடிபியுடன் குறைந்த பொருளாக்கத்துடன் தொடர்புடையதாகவே உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1981 முதல் மூன்றாம் உலக நாடுகளின் விலைகளுக்கும், முதல் உலக நாடுகளின் விலைகளுக்கும் இடையில் பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. 1980 முதல் மூன்றாம் உலகில் நுகர்வுப் பொருட்களின் விலை வீழ்ச்சியின் போக்கே சமத்துவமின்மை அல்லது வறுமையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு முற்றிலும் காரணமாக உள்ளது என்கிறார் செத் டோனெல்லி. இந்தக் காலகட்டத்தில் உண்மையான வளர்ச்சியோ, நீடித்த மற்றும் நிலையான வறுமைக்குறைவோ அடையப்படவில்லை. மூன்றாம் உலக நாடுகளின் நுகர்வோர் பொருட்களின் விலை வீழ்ச்சியே தோல்வியை மறைத்தது. (செத் டோனெல்லி).

முதல் உலக நாடுகளை விட மூன்றாம் உலக நாடுகளில் நுகர்வு பொருட்களுடன் ஒப்பிடும்போது மூலதனம் மற்றும் இடைநிலை பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக உள்ளன. நுகர்வோர் பொருட்கள் விலை சரிவு, உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு உண்மையான வளர்ச்சிக்கான குறிகாட்டி அல்ல. அவை வளர்ச்சியின் தடைக் கற்களாகவே வரலாற்றில் இருந்து வந்துள்ளன.

1981ல், ஒரு நாளைக்கு ஒரு டாலர், ஒரு மாதத்திற்கு 32.74 டாலர் என்ற அளவீட்டைப் பயன்படுத்தி, உலகளவில் வறுமையின் அளவு 40 விழுக்காடாக மதிப்பிடப்பட்டது. அதே அளவு விலைகள் (விலைவாசி) நீடித்திருக்குமானால் 2004ல் அதே வாழ்நிலையை பராமரிக்க ஒரு நாளைக்கு 2.4 டாலர் வருவாய் தேவைப்பட்டிருக்கும், அதன் விளைவாக உலகின் வறுமை 54 விழுக்காடாக அதிகரித்திருக்கும்.

உண்மையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும், நிரந்தரமாக வறுமையைக் குறைப்பதற்கும், உணவுப் பொருட்களின் மலிவு விலையையோ, நுகர்வோர் பொருட்களின் விலைவாசியை மட்டுமே சார்ந்தது அல்ல. அவற்றின் உற்பத்தி சாதனங்களின் விலை குறைவு, குறிப்பாக மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்களின் விலைக் குறைவைப் /விலை நிலையைப் சார்ந்ததாகவே அமையும் என்கிறார் செத் டோனெல்லி.

உண்மையான மற்றும் நீடித்த வறுமை குறைப்பு என்பது இதன் காரணமாக ஒரு மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், திறன் மிக்க உழைப்புச் சக்தியைப் பெறுவதையும் முன் நிபந்தனையாகக் கொண்டுள்ளது. மூன்றாம் உலகின் பெரும்பகுதிகளில் வளர்ச்சியின் மையப் பிரச்சினைக்கு - தீர்வு காண்பதற்கு மூலதனப் பொருட்களையும், இடைநிலைப் பொருட்களையும் மலிவாகப் பெறச்செய்வது மிகவும் அவசியம் (செத் டோனெல்லி).

மூலதனப் பொருட்களின் அதிக விலையை வாங்கும் திறன் சமநிலை அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் குறைத்து மதிப்பிடுகின்றன. இடைநிலை பொருட்கள் அதன் மதிப்பீட்டிலிருந்து முற்றிலும் தவிர்க்கப்படுகின்றன. வாங்கும் திறன் சமநிலை கணக்கீட்டில் முதலீட்டுப் பொருட்கள் உள்ளடக்கப் படுவதில்லை.

ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார முன்னேற்றத்திற்கான முன் நிபந்தனை மூலதனம் மற்றும் இடைநிலைப் பொருட்களை வாங்கும் திறனின் அடிப்படையிலானது, அது நுகர்வுப் பொருட்களை மட்டும் சார்ந்தது அல்ல. மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்களின் விலை வளர்ந்த நாடுகளால் நிர்ணயிக்கப்படுகிறது, இவற்றின் விலை மூன்றாம் உலக நாடுகளில் மிக அதிகமாக உள்ளது. ஆனால் இந்த எதார்த்த நிலையை வாங்கும் திறன் சமநிலை அடிப்படையிலான தரவுகள் வெளிக்கொணரத் தவறிவிட்டன. வாங்கும் திறன் சமநிலை அளவிடப்படும் போது நுகர்வு செலவினங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டன, உற்பத்தி செலவினங்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்பதையும் செத் டோனெல்லி சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்றாம் உலக நாடுகளின் மொத்தப் பொருளாக்க மதிப்பில் இடைநிலை மூலதன பொருட்கள் 50 விழுக்காட்டிற்கு மேல் பங்குவகித்த போதிலும் வாங்கும் திறன் சமநிலை அடிப்படையிலான கணக்கீடுகளில் அவை முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகிறது இவற்றின் அதிக விலைகள் மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக உள்ளன. மூலதனப் பொருட்கள், நுகர்வுப் பொருட்களுக்கு இடையேயான விலை வேறுபாடு புதிய தாராளமய திறந்த வர்த்தகக் காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளன. இதனால் பல தென்நாடுகள், வட நாடுகளை சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு புதியக் காலனியாதிக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மூலதனப் பொருட்கள் மட்டும் அல்லாது நுகர்வு பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால் கோடிக் கணக்கான மக்கள் ஆபத்தில் உள்ளனர். அதை எந்தப் புள்ளியியல் கருவி கொண்டும் மறைக்க முடியாது என்கிறார் செத் டோனெல்லி.

வாங்கும் திறன் சமநிலையால் குறைந்த வருவாய் கொண்ட நாணயங்களின் வாங்கும் திறனை மிகைப்படுத்தப்படுகிறது. வாங்கும் திறன் சமநிலை அடிப்படையிலான அளவீடுகள் வறுமையை பற்றி மட்டுமல்ல, உலக வளர்ச்சியையும் தவறாக மதிப்பிடுவதற்கு வழிநடத்துகின்றன. உலகமயமாதலின் 'சாதனைகள்' தாராளமயத்தால் தூண்டப்பட்ட எந்த புதிய வளர்ச்சியிலிருந்தும் ஏற்படவில்லை, ஆனால் அவற்றைத் தடுத்ததன் விளைவாகவே ஏற்பட்டுள்ளது. நுகர்வோர் விலைகளின் ஒப்பீட்டளவிலான மலிவு நிலையே ஒரு குறிகாட்டியாகப் பயன்படுத்தி அளவிடப்படுவதால் மட்டுமே இது முன்னேற்றமாகத் தோன்றுகிறது. மூன்றாம் உலக நாடுகளின் நாணயங்களின் அதிக வாங்கும் திறன் சமநிலையின் 'நன்மைகளை மூன்றில் இருபங்கை மூலதனப் பொருள்களுக்கும், நுகர்வுப் பொருள்களுக்கும் இடையிலான விலை வேறுபாடு நீக்கிவிடும் என்கிறார் செத் டோனெல்லி.

இதன் மூலம் வாங்கும் திறன் சமநிலை அடிப்படையிலான புள்ளியியல் தரவுகள் உலக நாடுகளின் வறுமையை குறைத்துக் காட்டுவதற்கும் அவற்றிற்கிடையே காணப்படும் சமூகப் பொருளாதாரச் சமமின்மையை மறைக்கும் திரையாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்தேற்க முடியும்.

உலகமயமாக்கம், வர்த்தக தாராளமயமாக்கம், ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் உலகப் பொருளாதார வளர்ச்சி ஆகியவை ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தி வறுமையை ஒழித்துள்ளது என்றும், இவை ஏழைகளுக்கு நன்மையே செய்துள்ளது என்பதால் தொடர்ந்து ஆதரிக்கப்பட வேண்டும் என்று நம்பவைக்கவும், இத்தகையக் கொள்கைகளை இன்று போல் என்றென்றும் உலகளவில் பேராதாரவுடன் கடைபிடிக்கப்படவேண்டும் என்று பரப்புரை செய்தற்காகவுமே இத்தகைய கீழ்த்தரமான வறுமைக்கோட்டை உலக வங்கி நிர்ணயித்துள்ளது. வாங்கும் திறன் சமநிலை அடிப்படையிலான கணக்கீடுகளின் மூலம் வறுமையையும், பொருளாதார சமமின்மையும் மறைத்து வருகிறது.

உண்மையில் வறுமையை ஒழிப்பதற்கு நடப்பில் உள்ள உண்மையான வறுமைவீதத்தை ஒழிவு மறைவில்லாமல் அங்கீகரிப்பதே தொடக்கப் புள்ளியாக அமையும். தவறான மதிப்பீடுகள் புரையோடிப் போயுள்ள உலகின் வறுமையை மேலும் பெருக்கவும், நீடித்திருக்கச் செய்வதற்குமே வழிவகுக்கும். போப் ஃபிரான்சிஸ் முதல் பொருளாதார நிபுணர்கள் வரை நவீன தாராளமயம், உலகமயமாக்கத்தால் ஏற்பட்ட வளர்ச்சியியால் கோடிக்கணக்கான மக்கள் விலக்கப்பட்டு வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என்பதில் ஒருமித்தக் கருத்து கொண்டுள்ளனர். ஆனால் உலகவங்கி போன்ற நவீனதாராளமய அமைப்புகளின் ஏய்க்கும் அறிக்கைகளும், போலி அக்கறையும், பாசாங்கும் அதிகரித்துள்ளதே ஒழிய குறைந்தபாடில்லை.

சமந்தா

Pin It