ஒவ்வொரு நாளும் காலையில் வரும் குறுந்தகவல்களில் சில துயரச் செய்திகளை சுமந்தே வருகின்றன. பேப்பரை பிரித்தால் துன்ப நிகழ்வுகளும் அவதூறுச் செய்திகளும் வந்து கொட்ட, குறுந்தகவல்களும் இந்த வரிசையில் சேர்ந்துவிட்டன. நல்லவேளையாக எங்கள் வீட்டில் டிவி இல்லை. இருந்திருந்தால், அது காட்சிரீதியிலான வன்முறையை மிகப் பெரிய அளவில் செலுத்திக் கொண்டிருக்கும். நேற்று காலையில் வந்த ஒரு குறுந்தகவல் வழக்கத்துக்கு மாறான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “தமிழத்தின் பிரபல சமையல் கலை நிபுணர்களில் ஒருவரான செஃப் ஜேக்கப் இறந்துவிட்டார். இதை உறுதி செய்ய முடியுமா?” என்று என் பத்திரிகையாள நண்பன் ஒருவனிடம் இருந்து அது வந்திருந்தது. நாளிதழ்களில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டிருந்த அந்த செய்தியை நானும் அவனும் பார்த்திருக்கவில்லை.

chef_jacobஎன்னால் அதை நம்ப முடியவில்லை. செஃப் ஜேக்கப் என்று அறியப்படும் ஜேக்கப் சகாயகுமார் அருணியை, சில கட்டுரைகளை எழுதுவதற்காக சந்தித்து இருக்கிறேன். நமது உணவு, பண்பாடு பற்றிய ஆர்வத்தை வெளிப்படுத்திய ஒரு சில சமையல்கலை நிபுணர்களில் அவரும் ஒருவர். அவரது உதவியுடன் “தமிழ் பாரம்பரிய உணவு” குறித்து இந்தியா டுடே இதழிலும், பிறகு ஊர் சிறப்பு உணவு வகைகள் தொடர்பாக ஃபெமினா இதழிலும் எழுத வாய்ப்பு கிடைத்தது. வெறுமனே சுவை, செய்முறை, ஆங்காங்கே ஊட்டச்சத்து தகவல்களை தெளித்துத் தருவதிலேயே பெரும்பாலான சமையல்கலை நிபுணர்கள் கவனம் செலுத்தி வந்த நிலையில், ஓர் உணவு, அதன் பின்னணி, வரலாறு, பண்பாட்டுடன் அதற்கிருந்த பிணைப்பு போன்றவற்றை வெகுமக்களை கருத்தில் கொண்டு முன்வைத்தவர்களில் ஒருவர் ஜேக்கப். பெரும் வணிக உணவகங்கள் வெளிநாட்டு உணவுத் திருவிழாக்களை நடத்தி வந்த நிலையில் சங்ககால உணவு, உள்ளூர் உணவு போன்றவற்றில் கவனம் செலுத்தியவர். இதற்கெல்லாம் மேலாக ஒவ்வொரு ஊருக்கும் உள்ள சிறப்பு உணவு வகைகளை பிரபலப்படுத்தியவர். அவற்றுக்கான பெயர் காரணங்களை விளக்கி, சில நேரம் குறிப்பிட்ட ஊரில் அதை சிறப்பாகச் செய்யும் நபரின் பெயரிலேயே உணவு வகைகளை அடையாளப்படுத்தியவர்.

உத்தமபாளையத்தில் பிறந்து மதுரையில் வளர்ந்த அவர், தனது அம்மா அளித்த ஊக்கம் காரணமாகவே சமையல்கலை நிபுணராக மாறியதாக முன்பு கூறியிருக்கிறார். ரசம் என்றிருந்து, பிறகு ரசா என்று பெயர் மாற்றப்பட்ட உணவகத்தை நிர்வகித்து வந்த அவர், சில மாதங்களுக்கு முன்னால்தான் சொந்தமாக ஜேக்கப்ஸ் கிச்சன் என்ற உணவகத்தை ஆரம்பித்தார். அதற்குப் பிறகு கூடுதலாக பரபரப்பாகிவிட்ட அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பொதுவாக, பெரிய உணவகங்கள், பிரபல சமையல்கலை நிபுணர்களைப் போல பிகு செய்யும் பண்பை அவரிடம் நான் பார்த்ததில்லை. கட்டுரைகள் எழுதுவதற்காக அணுகியபோதும், உணவு தொடர்பான பிற சந்தேகங்களைக் கேட்டபோதும், நட்புணர்வுடன் பதில் சொல்வார். நமது உணவு, பண்பாட்டுடன் அது கொண்டுள்ள உறவு குறித்து தமிழ் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்திருந்தபோதும் (வீ.அரசு, பொ.வேல்சாமி, நாஞ்சில் நாடன் போன்றோர் இதற்கு உதவியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்), அதை வெகுமக்களிடம் கொண்டு சென்றதில் ஜேக்கப் போன்றவர்களது பங்கு குறிப்பிடத்தக்கது என்று நினைக்கிறேன். மேலும், ஒரு சில ஊர்களின் அடையாள (சிக்னேச்சர்) உணவு வகைகளே பிரபலமாக இருந்த நிலையில், தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் புகழ்பெற்றிருந்த உணவு வகைகளை பிரபலப்படுத்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

செட்டிநாட்டு சைவ, அசைவ உணவு வகைகள்தான் தமிழகத்திலும் வெளியிலும் பிரபலமானவையாக இருந்து வந்தது. உண்மையில் நம்முடைய ஒவ்வொரு பகுதிக்கும் தனிப்பட்ட உணவுக் கலை உண்டு. அவற்றை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு உணவு வகைகளை தேடிச் செல்ல வேண்டும் என்று கூறுவார்.

ஒரு பிரபலமாக, அவர் நடத்திய டிவி சமையல்கலை நிகழ்ச்சிகளை நான் பார்த்ததில்லை. நண்பர்கள் கூறி கேள்விப்பட்டது, செய்திகளில் பதிவானதை படித்ததுடன் சரி. அதிலிருந்து வித்தியாசமாக சமையல்கலை நிகழ்ச்சியை நடத்தினார் என்று தெரிய வந்தது. அவரது கின்னஸ் சாதனை போன்றவற்றிலும் எனக்குப் பெரிய ஆர்வமில்லை. (கீழ்க்கண்ட விஷயங்களுக்கும் திரு. ஜேக்கப்புக்கும் நேரடி சம்பந்தமில்லை. ஆனால், அவருடைய மரணத்துடன் சேர்த்து பேச வேண்டியவை இவை.) 

துர்மரணம்

இந்த துர்மரணத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் ஜேக்கபின் வயது, வெறும் 37 என்பதுதான். சமீபகாலமாக எனக்குத் தெரிந்த வட்டத்தில் 35-45 வயதுக்குள் மாரடைப்பு, புற்றுநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை கட்டுமீறிப் பெருகிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இந்த மரணங்களுக்கான ஒட்டுமொத்தக் காரணம் அறுதியிடப்படவில்லை என்றாலும், இந்த மரணங்கள் அடிக்கோடிடும் செய்தி நமது உணவுப் பழக்கம், ஆரோக்கியத்தை பராமரிக்கும் முறையில் உள்ள பெரும் இடைவெளிகளையே சுட்டிக்காட்டுகிறது.

நமது உணவுப் பழக்கம் ஆரோக்கியமாக இல்லை என்பது திட்டவட்டம். மற்றொன்று, உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு நம்மிடம் சுத்தமாக குறைந்துவிட்டது என்பதுதான் (இந்த வரியை எழுதும் நானும் இதற்கு எந்த வகையிலும் விதிவிலக்கல்ல). நம்மிடையே உள்ள உடல்உழைப்பு, உடற்பயிற்சி சார்ந்த மனோபாவமும் சோம்பலும்தான் உடல்நலனுக்கு மிகப் பெரிய எதிரிகள். உழைப்பை மதிக்காத மனோபாவம், நமது சமூகத்தின் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், சிக்கல்களுக்கு தோற்றுவாயாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் உடல்நலனை முற்றிலும் பாதிக்கிறது.

மற்றொரு பக்கம், சமூக மாற்றம் உட்பட இன்னபிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், நமது பணிகள் அனைத்துக்கும் மூலதனமாக இருக்கும் உடலுக்கு என்று சிறிதளவு நேரத்தைக்கூட ஒதுக்குவதில்லை. ஒரு யோகக்கலை நிபுணரை சந்தித்தபோது, “வாக்கிங் செல்வது என்பது நேரத்தை வீணடிப்பது என்ற மனோபாவத்தை முதலில் கைவிடுங்கள். உங்கள் உடல்நலனுக்காகத்தான் அந்த நேரத்தைச் செலவிடுகிறீர்கள்” என்றார். என்னுடைய சித்த மருத்துவ நண்பரும், விகடனில் நமது உணவுப் பாரம்பரியத்தின் மகத்துவம் குறித்து “ஆறாம் திணை” என்ற பெயரில் எழுதி வருபவருமான சிவராமன், 35 வயதுக்கு முன்னதாக உடற்பயிற்சி நடைமுறைகளை கட்டாயமாக கடைப்பிடித்தாக வேண்டும் என்கிறார். முடி கொட்டுவது முதல், மாரடைப்பு வரை பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் நமது இதயம் சீராக இயங்க முடியாமல் போவதுதான். உடலின் ஒவ்வொரு நுண்ணிய பாகமும் ஒழுங்காகச் செயல்பட வேண்டுமானால், அதற்கு அந்த இடங்களுக்கெல்லாம் ஆரோக்கியமான ரத்தம் பாய வேண்டும். அதற்கு உடலை நாம் நன்றாக இயக்க வேண்டும்.

எதையோ நினைத்து, எதையோ தேடி கண்ணை மூடிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். எப்போது நின்று திரும்பிப் பார்க்கப் போகிறோம்?

- ஆதி வள்ளியப்பன்

Pin It