ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தால் அது உண்மையாகி விடும் என்ற கோயாபல்சின் தத்துவத்தை யார் மறந்தாலும் தமிழக ஆட்சியாளர்கள் மறக்கமாட்டார்கள் போலிருக்கிறது. தமிழகத்தில் பல ஆயிரம் ஏக்கர் அரசு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை அரசதிகாரம் வசதிபடைத்தவர்களும், பெரும்பணக்காரர்களும் வளைத்துப் போட்டுள்ளதை மீட்க வேண்டுமென எவ்வளவு கூப்பாடு போட்டாலும் அது உரியவர்கள் காதில் விழுந்தபாடாக இல்லை. கையளவு நிலம் இருந்தாலும் அது பிரித்துக் கொடுக்கப்படும் என்ற வசனங்கள் மட்டும் அவ்வப்போது வெளிவருகிறது.

தமிழகத்தில் கையளவு நிலம் தான் உள்ளதா என்ற கேள்வி முதலில் எழுகிறது. வளைக்கப்பட்ட நிலங்களை மீட்டு அதை ஏழை, எளிய மக்களிடம் வழங்க வேண்டும் என போராடினால் அதற்கு எதிராக தன்னுடைய காவல்துறையை வைத்து ஒடுக்கப்பார்க்கும் தமிழக முதல்வர் கருணாநிதி, திருவள்ளுர் மாவட்டம் காவேரிராஜாபுரம் கிராமத்தில் தலித் மக்கள் பயன்பாட்டில் இருந்த நிலத்தை கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரன் ஆக்கிரமித்துள்ளதற்கு சப்பைக்கட்டு கட்டுகிறார்.

தலித் மக்கள் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் களமிறங்கி போராடிய போது, சிறுதாவூரில் நிலமீட்புப்போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தாதது ஏன் என முதல்வர் கிண்டல் செய்கிறார்.

சிறுதாவூர் நில ஆக்கிரமிப்பு குறித்து அமைக்கப்பட்ட விசாரணைக்கமிஷன் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சாட்சியம் அளித்தது தமிழக முதல்வருக்கு நன்றாகத் தெரியும். நிலம் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதால் தான் சிவசுப்ரமணியம் கமிஷன் அறிக்கை வெளியிட முடியவில்லை எனக்கூறிய தமிழக அரசு, தற்போது காவேரிராஜாபுரத்தையும், சிறுதாவூரையும் இணைத்து குழப்பப் பார்க்கிறது. ஐந்தாவது முறையாக முதல்வராகியுள்ள கருணாநிதி, இவ்வளவு நாள் சிறுதாவூர் நிலம் குறித்து ஏன் கவனம் செலுத்தவில்லை என்ற கேள்வி அனைவருக்கும் எழும். அரசியலுக்காக எதையும் பயன்படுத்துவதில் வல்லவரான முதல்வர், தனது அரசியலுக்காக அவ்வப்போது முரசொலியில் மார்க்சிஸ்ட்டுகள் மீது பாயும் போது பழைய கீறல் விழுந்த ரிக்கார்ட்டைப் போல சிறுதாவூர் நிலம் குறித்து பெட்டிச்செய்தி எழுதுவார். சிறுதாவூராக இருந்தாலும், காவேரிராஜபுரமாக இருந்தாலும் ஆக்கிரமிப்பு என்றால் அது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஒரு கண்ணில் வெண்ணை, மறுகண்ணில் சுண்ணாம்பு என்பதைப் போல முதல்வருக்கு சிறுதாவூர் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.

காவேரிராஜாபுரம் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலரால் ஆக்கிரமிப்பட்டு உள்ள நிலக்குவியலை மீட்பதற்காக போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆனால், அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சி நடத்தும் தமிழக முதல்வர் கருணாநிதி, தலித் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலத்தை மீட்க மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இது “மேற்கு வங்கம் அல்ல” என எச்சரிக்கிறார். அதன் அர்த்தம், தமிழகத்தில் நில உச்சவரம்பு அமுலாகாது என எடுத்துக் கொள்ளலாமா?

மேற்கு வங்கம் மாநிலத்தில் நிலவிநியோகம் சிறப்பாக நடைபெற்று வருவதை அறிந்து தமிழகத்தின் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் நாகநாதன், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் சென்று வந்து அம்மாநிலப் பெருமை குறித்து எழுதியதை கருணாநிதி வசதியாக மறந்துவிட்டார். தமிழகத்தில் தலித் மக்களுடைய நிலங்களைப் போலவே பஞ்சமர்களுக்கு என வழங்கப்பட்ட நிலங்களும் முற்றிலும் சூறையாடப்பட்டுள்ளன.

தலித் மக்களுக்காக கடந்த 30.9.1892 ஆம் ஆண்டு நிலம் வழங்க லண்டன் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு நிலம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழகத்தில் பள்ளர், பறையர், சக்கியிலியர் என அரசால் வரையறுக்கப்பட்ட( பஞ்சமர்) மக்களுக்கு 12லட்சம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட நிலங்கள் தற்போது அந்த மக்களிடமோ, அவர்களின் வாரிசுகளிடமோ இல்லை. பஞ்சமர்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் நிலத்தில் தமிழகத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 13.6 ஏக்கர் நிலம்தான் உள்ளதாக தமிழக நில நிர்வாகத்துறை ஆணையர் கடந்த 26.7.2006 அன்று தெரிவித்துள்ளார். இந்த நிலங்களும் பெருமளவில் மிகப்பெரிய தொழிலதிபர்களிடமும், தலித் அல்லாதவர்களிடமும் சிக்கியுள்ளது.

தமிழகத்தில் பஞ்சமர்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சத்து 61 ஆயிரத்து 13 ஏக்கர் நிலம் எந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு இருந்தது என முதலில் பார்ப்போம்.

ஊர் நிலம்(ஏக்கரில்)

-------------------------------------------------------

கோயம்புத்தூர்              - 1,838

கடலூர்               - 188.26

தர்மபுரி - 4,253.81

 

திண்டுக்கல் - 3,402.43

 

காஞ்சிபுரம் - 507.80

 

கரூர் - 545.72

 

கிருஷ்ணகிரி - 5,749.34

 

மதுரை - 3,096.15

 

நாகை - 8.38

 

நாமக்கல் - 8,060.76

 

பெரம்பலூர் - 8,260.01

 

சேலம் - 4,504.14

 

சிவகங்கை - 21.88

 

தஞ்சாவூர் - 322.88

 

நீலகிரி - 3,774.46

 

தேனி - 1010.01

 

திருச்சி - 3,420.70

 

நெல்லை - 2,473.88

 

திருவள்ளூர் - 662.04

 

திருவண்ணாமலை - 33,034.99

 

திருவாரூர் - 24.08

 

வேலூர் - 20,339.44

 

விழுப்புரம் - 16,446.44

 

------------

மொத்தம் - 12,61,13.06

 

-------------

ஆனால், தற்போது தமிழகத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 13.6 ஏக்கர் நிலம் தான் இருப்பதாக நிலநிர்வாகத்துறை கூறியுள்ளது. மீதமுள்ளள 10 லட்சத்து 73 ஆயிரத்து 887 ஏக்கர் நிலம் குறித்து இதுவரை தமிழக முதல்வர் கருணாநிதி வாய்திறக்காதது ஏன்? ஒரு வெள்ளையறிக்கைக் கூட வெளியிடாதது ஏன்? பஞ்சமி நிலங்கள் வருவாய்த்துறை பதிவேட்டின் படி அது தலித் மக்கள் பெயரில் தான் உள்ளதா என்பதை அறிய வருடத்திற்கு 12 முறை பார்வையிட்டு அதுகுறித்து மண்டல வட்டாட்சியர்களுக்கு கிராம நிர்வாக அதிகாரி அறிக்கை சமர்பிக்க வேண்டும். ஆனால், 1892-ஆம் ஆண்டுக்குப் பிறகு யூடிஆர் சர்வே நடைபெற்றது. அதன் பின் 1986-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின் அந்த சர்வே நடைபெற்றதா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் பஞ்சமர்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் நிலத்தில் நிலையில் மீதமுள்ள நிலங்கள் தற்போது யாரிடம் இருக்கிறது என அறிய ஒரு தொண்டு நிறுவனம் கடந்த 2005-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி தகவல் கேட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பஞ்சமி நிலம் உள்ளது என நிலவநிர்வாகத்துறை ஆணையர் அனுப்பிய பட்டியலுக்கும், மாவட்ட ஆட்சியர்கள் அனுப்பிய பட்டியலுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெரம்பலூரில் உள்ள பஞ்சமி நிலங்களில் பெருமளவு சிமிண்ட் ஆலைகள் இயங்கி வருவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்தது. இதே ஊரில் பாண்டக்கப்படி கிராமத்தில் பஞ்சமி நிலம் பொதுப்பணித்துறை ஏரியாக மாறியுள்ளது. வாழிகண்டபுரத்தில் ஒரு அறக்கட்டளை பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து ஒரு நிறுவனத்தை நிறுவியுள்ளது. நாகமங்களம் வருவாய் கோட்டம் ரெட்டிபாளையம் கிராமத்தில் இரண்டு சிமிண்ட் ஆலைகள் பெருமளவு பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. பெரிய திருக்கோணம் கிராமத்தில் ஒரு தனியார் நிறுவனம் பஞ்சமி நிலத்தைச் சுருட்டியுள்ளது. செந்துறை மாத்தூர் உள்வட்டத்தில் உள்ள ஆலத்தியூர், புதுப்பாளையம், அருங்கல், பளிங்காநத்தம் பகுதிகளில் உள்ள பஞ்சமி நிலங்களும் தனியார்களால் சூறையாடப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் தேவர் மலைப்பகுதியில் ஒரு சிமிண்ட் ஆலை, நாகை மாவட்டத்தில் த.மறவக்காடு கிராமத்தில் இறால் பண்ணைகள் ஆகியவற்றிற்கு பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு நிலங்கள் மட்டுமில்லாது பஞ்சமி நிலங்களையும் வளைத்துள்ளவர்களைக் கண்டுபிடிப்பது அரசிற்கு ஒன்றும் சிரமமான காரியமல்ல. ரியல் எஸ்டேட் என்ற பெயரில் செய்யப்பட்டு வரும் நிலவிற்பனையில் தற்போது தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினர் பெருமளவு ஈடுபட்டு வருவதால் அரசு நிலம் எது, பஞ்சமி நிலம் எது என்ற பட்டியலை அவர்களிடம் கேட்டால் வழங்கிவிடுவார்கள்!

தமிழகத்தில் உள்ள பல கல்வி வள்ளல்களும், சில மாண்புமிகுக்களும் பஞ்சமி நிலங்களை வளைத்துப் போட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. நீதிபதி தினகரன் தலித் மக்கள் நிலங்களை வளைத்ததை எதிர்த்த போராட்டத்தைப் போல பஞ்சமி நிலங்களையும் மீட்பதற்கான போராட்டம் நடத்தப்படுவது காலத்தின் அவசியமாகும். இடதுசாரி சக்திகளோடு, ஜனநாயக சக்திகள் இணைவதன் மூலம் இப்போராட்டத்தை வென்றெடுக்க முடியும். நிலங்களையும் மீட்டு அதன் மரபுவழி சொந்தங்களிடம் ஒப்படைக்க முடியும். அதற்கான போராட்டம் வேகப்படுத்த வேண்டும்.

- ப.கவிதா குமார்