நமது நாட்டில் 50 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் உண்மையான எண்ணிக்கை அதைவிட நான்கு மடங்குகள் இருக்கலாம். ஒரு நாடு என்ற முறையில் நாம் அவர்கள் ஒவ்வொருவரையும் ஏமாற்றி வருகிறோம்.

பல லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளியிலோ விளையாட்டுத் திடல்களிலோ இருக்க வேண்டிய நேரத்தில், இன்னும் தொழிற்சாலைகளிலும் பண்ணைகளிலும், செங்கற்சூளைகளிலும், சுரங்கங்களிலும், வீடுகளிலும், நகர குப்பை மேடுகளிலும் வேலை செய்கின்றனர். நாம் மிக மோசமாக அவர்களை ஏமாற்றி வருகிறோம், கூட்டாக அவர்களது கல்வி, விளையாட்டு, ஓய்வு, ஆரோக்கியமான வளர்ச்சி, குழந்தைப்பருவம் ஆகியவற்றைப் பறித்து வருகிறோம். ஜனநாயகம் மற்றும் மின்னும் பொருளாதார வளர்ச்சி இருந்தபோதும் குழந்தை உழைப்பை சமூக ரீதியாகவும் சட்டரீதியாகவும் நாம் தொடர்ந்து வருகிறோம் என்பது நியாமற்ற செயலாகும்.

இந்தியச் சட்டங்கள் குழந்தை உழைப்பை சட்டரீதியாக அனுமதிக்கத்தக்கதாக நடத்துகின்றன. 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு சில தொழிற்பிரிவுகள் தாம் ‘தீங்கிழைப்பவையாகத்’ தடை செய்யப்பட்டுள்ளன.

2006ல் தான் வீட்டு வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவது சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு தான் குப்பைக் கூள‌ங்களைச் சேகரிப்பது குழந்தைகளிடையே தடை செய்யப்பட்டது. நாடு முழுவதிலுமே ஒரு சில ஆயிரம் வழக்குகள் தாம் ஒவ்வொரு ஆண்டும் தொடுக்கப்பட்டு மிகக் குறைந்த தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
14 வயதைத் தாண்டுகிற குழந்தைகளுக்கு எந்த வகையான உழைப்புக்கும் தடை எதுவும் இல்லை.

அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கைகள்

ஏறத்தாழ ஐம்பது லட்சம் குழந்தைகள் உழைப்புச் சந்தையில் பொருளாதார ரீதியாக கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மிக அண்மைகால அதிகாரபூர்வ மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இது 5-14 வயதுகளில் இருக்கும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கையில் 2 விழுக்காடு ஆகும். இருப்பினும், குழந்தைத் தொழிலாளர்களின் உண்மையான எண்ணிக்கை மிகவும் கூடுதலானது, ஏனெனில், பள்ளிகளில் இல்லாத குழந்தைகள் மறைமுகக் குழந்தைத் தொழிலாளர்கள் ஆவர், அவர்கள் இளம் குழந்தைகளை பார்த்துக் கொள்கின்றனர், வீட்டைப் பராமரிக்கின்றனர் அல்லது வயல்களில் வேலை செய்யும் பெற்றோருக்கு உதவுகின்றனர் வீட்டோடு செய்யப்படும் வேலை அல்லது வணிகத்தில் உதவுகின்றனர். கணக்கில் சேர்க்கப்படாத அவர்களின் எண்ணிக்கை கணக்கில் வந்துள்ளதைவிட நான்கு மடங்கு மிகுதியாகும்.

கடந்த பத்து ஆண்டுகளில் பள்ளிகளின் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து, குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது ஊக்கமளிப்பதாக இருக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கையை நாம் எச்சரிக்கையுடன் கணக்கில் கொள்ளவேண்டியுள்ளது. ஏனென்றால் விரைவான பொருளாதார வளர்ச்சியில் உழைக்கும் மக்களை முறைசாராதவர்கள் ஆக்குவதற்கான ஆதாரம் அதிகரித்து வருகிறது. தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களையும் பொறுப்புக்களையும் தவிர்ப்பதற்காக பெரிய நிறுவனங்கள் பல நேரங்களில் வேலைகளை வீடு சார்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களிடம் ஒப்பந்தமுறையில் அளிக்கின்றன. மேலும் வேலையானது வீட்டிலிருந்து வேலை செய்யும் குழந்தைகளுக்கு மாற்றப்படுகிறது. அதன் விளைவாக குழந்தைகள் ஐந்து அல்லது ஆறு வயதிலேயே வீடுகளில் வேலையில் அமர்த்தப்படுகின்றனர். அத்தகைய குழந்தைத் தொழிலாளர்கள் பலநேரங்களில் கணக்கெடுப்போர் கண்களுக்குத் தெரிவதில்லை.

சட்டங்கள் குழந்தை உழைப்பை, தீங்கிழைக்கும் தொழில்துறைகளில் கூட, தடுத்து நிறுத்துவதில் வெற்றிபெறவில்லை. ஒப்புக்கொள்ளப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில் மூன்றில் ஒருவர் தீங்கிழைக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தீங்கிழைக்கும் தொழில்களில் வேலை செய்துகொண்டிருக்கும் குழந்தைகளின் மொத்த எண்ணிகையில் 53 விழுக்காடு பான், பீடி, சிகரெட் தொழில், கட்டிட வேலை, வீட்டுதவி ஆகியவற்றில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட குழந்தை உழைப்பாளர்களில் 72 விழுக்காடு விவசாயத்தில், அதாவது மொத்த விவசாயத் தொழிலாளர்களில் ஏறத்தாழ 9 விழுக்காடு இருக்கின்றனர். இக்குழந்தைகள் பண்ணைகளில் நீண்ட நேரம் வேலை செய்து பூச்சிக்கொல்லிகளையும் பிற வேதிப் பொருட்களையும் நுகரவேண்டிய தீங்கிழைக்கும் விளைவுகளை எதிர்கொள்கிறார்கள். பல பெண்குழந்தைகள் வேலை செய்யும் இடங்களில் 10 அல்லது 12 வயதிலேயே உடல் ரீதியான, பாலியல் ரீதியான துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

குழந்தைத் தொழிலாளர் உழைப்பை சகித்துக் கொள்ளும் அதிகாரவர்க்கம் குழந்தை உழைப்பு என்பது வறுமையின் தவிர்க்கமுடியாத விளைபொருள் என்ற நம்பிக்கையைச் சார்ந்திருக்கிறது. குருபாதசுவாமி தலைமையிலான அதிகாரபூர்வக் குழு 1981ல், வறுமை தொடரும் வரை குழந்தை உழைப்பை முற்றிலுமாக அகற்றுவது கடினம், மேலும் அதனால் அதைச் சட்டப்பூர்வ நடவடிக்கை மூலம் ஒழிக்கும் எந்த முயற்சியும் ஒரு நடைமுறை ரீதியான தீர்வாக இருக்காது என்றது. இந்த ‘நடைமுறைவாதம்’ உழைக்கும் குழந்தைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மீது மேலாதிக்கம் செய்வது தொடர்கிறது.

வறுமையும் குழந்தை உழைப்பும்

வறுமை தான் குழந்தை உழைப்புக்குக் காரணமா அல்லது அதற்கு வேறு காரணமும் உள்ளதா என்பது குறித்து ஓர் உயிரோட்டமான மற்றும் முக்கியமான விவாதம் நடந்து வருகிறது. வறுமை குறித்த நிபுணர்கள் பலர் ஏழைக் குடும்பங்களுக்குக் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது தான் அவர்கள் பிழைத்திருப்பதற்கான ஒரே வழியாக இருப்பதாக வாதிடுகின்றனர். அதன் விளைவாக அவர்கள் பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை. மேலும் பண்ணைகள், கால்நடைகளைப் பராமரிப்பது, தூயமைப்படுத்துவது, சமைப்பது, தண்ணீர் மற்றும் விறகு கொண்டுவருவது மேலும் தமக்குக் கீழுள்ள இளம் குழந்தைகளைப் பராமரிப்பது போன்ற ஊதியமளிக்கப்படாத வீட்டு வேலைகளிலும் பல குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இளம் குழந்தைகளை முழு நாளும் பராமரிப்பதே பெரும்பாலான மூத்த குழந்தைகளை முதல் முறையாகப் பள்ளிக்கு அனுப்ப உதவும். பல மாநிலங்களில் பள்ளிகள் மோசமான நிலையில் இருப்பதாலும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விடுத்து வேலைக்குச் செல்கின்றனர். இந்தப் பள்ளிகளில் குழந்தைகள் நம்பிக்கை இழந்து ஒன்றும் கற்றுக் கொள்வதில்லை, மேலும் ஒரேயடியாக பள்ளிக்குச் செல்ல மறுத்து விடுகின்றனர். பெற்றோருக்கு பெரும் வேலைவாய்ப்பு, பாதுகாப்புடன் கூடிய குறைந்த பட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்தும் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமானால் குழந்தை உழைப்பு குறைந்து பின்னர் இல்லாமல் போகும்.

இன்னொருபுறம், குழந்தைகள் பெற்றோரின் வறுமையிலிருந்து தப்பிக்க ஒரே வாய்ப்பு பள்ளிக்குச் செல்வது தான் என்று குழந்தைகளின் உரிமைக்கான செயல்வீரர்கள் பலர் கூறிவருகின்றனர். இது மட்டுமே ஒரு குழந்தை வயதுவந்தோரின் நிலையை எட்டும்போது, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேறுவதற்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும். குழந்தை உழைப்பு குறிப்பிடத்தக்க வாழ்நாள் முழுதுமான, மீட்கப்படமுடியாத உளவியல் மற்றும் உடலியல் ரீதியான இழப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் உடல்கள், எண்ணங்கள் மற்றும் முடிவுகள் ஆகியவை அவர்களுடைய பதின்ம வயதுகளின் பிற்பகுதி வரை கூட வளர்ந்துகொண்டிருக்கின்றன, அதனால் இளம் வயதில் உழைப்பின் உலகில் நுழைவது முன்கூட்டியே முதுமை அடைவது, ஆற்றல் குறைவு, குறுக்கப்பட்ட மற்றும் வீணடிக்கப்பட்ட வளர்ச்சி, வேலை தொடர்பான நோய்கள், உணர்வுகள் நசுக்கப்படுவது, கவலையற்ற குழந்தைப் பருவத்திற்கேயுரிய மகிழ்ச்சிகளை நிரந்தரமாக இழப்பது ஆகியவற்றுக்குக் காரணமாகிறது.

‘குழந்தைகள் உழைப்பிலிருந்து மீட்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்படும்போது ஆண், பெண் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பும் ஊதியமும் கணிசமாக உயர்கிறது என்பதை அனைத்து சமகால அனுபவமும் காட்டியுள்ளது' என்று சாந்தா சின்ஹா தீவிரமாக வாதிடுகிறார். அவர் 50,000 குழந்தைகளை வேலையிலிருந்து மீட்டு, நிலையான பள்ளிகளுக்கு அனுப்பிய இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். வயது வந்தோருக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதற்கான காரணங்களில் ஓன்று குழந்தைத் தொழிலாளர் உழைப்பு, குறிப்பாக அமைப்புசாராத் துறையில், அபரிமிதமாகக் கிடைப்பதாகும். குழந்தை உழைப்பு வயது வந்தோர் ஊதியத்தை வீழ்ச்சியடையச் செய்கிறது. பெரும்பாலான நாடுகளில் தொடக்ககால குழந்தைப் பராமரிப்பு பலப்படுத்தப்பட்டு, நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது. அங்கு சிறுமிகள் வீட்டு வேலைகளுக்குக் கிடைப்பதில்லை. குழந்தைகள் உரிமைப் பார்வையில் குழந்தைகளின் உரிமைகள் தாம் முதலாவதாக இருக்கவேண்டும், குழந்தை பெரும் ஒவ்வொரு உரிமையும் ஆழமான பொருளாதார, சமூக, மற்றும் கலாச்சாரத் தாக்கங்களைக் கூட, பெரும் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தின் மீது ஏற்படுத்தும்.

வறுமையை ஒழிக்கப் போராடுவது, அமைப்புசாராத் தொழிலாளர்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்துவது சமூகப் பாதுகாப்பை வழங்குவது, பகல் நேர குழந்தைப் பராமரிப்பு சேவைகளை வழங்குவது, பள்ளிகளில் தரமான மற்றும் பொருத்தமான கல்வியை வழங்குவது ஆகிய அரசின் பலவகையான பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியதன் காரணமாகத் தான் குழந்தைகள் உழைக்கின்றனர் என்பது உண்மை. ஆனால் இது குழந்தை உழைப்பை சட்டபூர்வமாக்குவதை நியாயப்படுத்துவதல்ல. குழந்தை உழைப்பை ஒழிப்பதற்கு அரசாங்கம் அடிப்படைரீதியாகப் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரு அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். சட்டபூர்வத் தடைகளை நடைமுறைப்படுத்துவது கட்டாயத் தேவையாகும். ஆனால் அதுவே போதும் என்று ஒப்புக்கொள்ள முடியாது. அரசாங்கங்கள் தரமான, பொருத்தமான, பாகுபாடற்ற கல்வியை உத்தரவாதப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும், குழந்தைப் பராமரிப்பு சேவைகளையும் சமூகப் பாதுகாப்பையும், எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தையின் வீட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும்.

சில அரசாங்க அதிகாரிகள் குழந்தை உழைப்பை நியாயப்படுத்துகின்றனர், ஏனென்றால் அது நாட்டுக்கு வர்த்தகத்திலும் ஏற்றுமதியிலும் ஒப்பீட்டளவிலான ஆதாயத்தைத் தருகிறது, ஏனென்றால் குறைந்த விலைகள் மற்றும் குழந்தைகளை வேலையில் (the ‘nimble fingers’ theory) ஈடுபடுத்தும் திறன் காரணமாகக் கூறப்படுகிறது. கூறப்படும் இந்தப் பொருளாதார ஆதாயங்கள் கூட விவாதத்துக்குரியவை தாம். ஆனால் வளர்ச்சி லாபங்கள் இருந்தாலும், உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் குழந்தைகளைப் பாதிக்கிற, அவர்கள் எதிர்காலத்தில் முதன்மையான கல்வி மூலமாக வறுமையை உடைத்து முன்னேறும் வாய்ப்புக்களைப் பறிக்கிற வேலைகளில், பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்காகக், குழந்தைகளை ஈடுபடுத்துவதை நாம் தொடர்வோம் என்று வாதிடுவதில் எந்த நெறிமுறை ரீதியான நியாயப்படுத்தலும் இருக்கமுடியாது.

இது போதாது

தடை செய்யப்பட்ட குழந்தை உழைப்பை ஈடுபடுத்துவதற்கு இப்போதுள்ள தண்டனைகள் அக்குற்றதைத் தடுப்பவையாக இல்லை. மூன்று மாதத்திலிருந்து இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் ரூ.10லிருந்து 20,000 வரை அபராதம் என்பது மிகவும் அற்பமானதாகும். இக்குற்றங்கள் நீதிமன்றப் பிணைவிடாக் குற்றங்களாக இன்னும் கடுமையான தண்டனைகளுடன் இருக்கவேண்டும். ஆனால் தங்களுடைய கடினமான சூழல்களைச் சமாளிக்க தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களை எந்தவகையிலும் குற்றவாளிகளாக்கித் தண்டிப்பது தவறாகும். சட்டத்தின் பிரிவுகள் வேலைக்கமர்த்துவோரைத் தான் இலக்காக்க வேண்டும். மேலும் அரசாங்க்தின் மீது சட்டபூர்வக் கடமைகளுக்குப் பொறுப்பேற்கச் செய்யவேண்டும்.

விடுவிக்கபட்ட குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்குத் திட்டமிடுவதில் மிகவும் பெரிய அறிவுணர்ச்சி தேவை. மக்கள்திரளிடம் விழிப்புணர்வையும் நுகர்வோரிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் அரசாங்கங்கள் நிறையச் செய்ய வேண்டியுள்ளது. மக்களிடம் குழந்தைத் தொழிலாளர் உழைப்பை பயன்படுத்தும் உற்பத்திப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக, சான்றளிக்கப்பட்ட அறிவிப்புக்கள், முத்திரைகள் கோரப்பட வேண்டும். வீட்டுவேலை மற்றும் உணவுப் பண்டங்கள் தயாரிப்பு உட்பட குழந்தை உழைப்புக்கு எதிராக பள்ளிக் குழந்தைகளே பிரச்சாரம் மேற்கொள்வது மிகவும் பயனளிப்பதாக இருக்கும்.

கல்வி உரிமையை அனைத்துக் குழந்தைகளுக்குமான அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளச் செய்வது வரை குழந்தை உழைப்பு குறித்த விவாதம் தொடரப்படவேண்டும். குழந்தை முதன்மையான பள்ளியில் இருக்க வேண்டும் என்று சட்டம் கோருமாயின், அக்குழந்தை அதே நேரத்திலும் வேலையிலும் ஈடுபட முடியாது. பள்ளிநேரத்திற்குப் பின்பும் விடுமுறை நாட்களிலும் சொந்த வயல்களிலும் வீட்டு வேலைகளிலும் விறகு சேகரிப்பதிலும் வணிகத்திலும் குழந்தைகள் உதவியாக இருப்பதற்கு தடை வேண்டியதில்லை, ஆனால் இவற்றில் எதுவும் குழந்தைகளின் படிப்பையோ பாதுகாப்பையோ பாதிப்பதாக இருக்கக் கூடாது.

இவர்களில் குடியேற்றத் தொழிலாளர் குழந்தைகள், கொத்தடிமை மற்றும் குழந்தை கடத்தலுக்கு உள்ளான குழந்தைகள், மற்றும் தெருக் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் ஆகியோர் அடங்குவர். அவர்களுடைய கல்விக்கான மற்றும் குழந்தைப் பருவத்திற்கான உரிமையை உத்தரவாதப்படுத்துவது, சுதந்திரத்திற்கான மிக உயர்ந்த நிறைவேற்றப்படாத நிகழ்ச்சிநிரலாகவே இருந்துவருகிறது.

நன்றி: தி இந்து நாளிதழ், 19.11.2011.

- ஹர்ஷ் மந்தர்

தமிழில்: வெண்மணி அரிநரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It