சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை காங்கிரஸ் அரசு அனுமதித்திருக்கிறது. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசிடம் இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் உட்பட நாட்டின் பிரதான கட்சிகள் அனைத்தும் இதனை எதிர்த்துள்ளன. ராகுல் காந்தியின் வெளிநாட்டு நண்பர்கள் பயனடைவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உத்திரப் பிரதேச முதலமைச்சர் மாயாவதி கடுமையாகச் சாடியுள்ளார். தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவும் மத்திய அரசின் இந்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசு இந்த முடிவில் இருந்து பின்வாங்கும் எண்ணத்தில் இல்லை.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வியாபாரம் செய்ய நுழைந்துப் பின்னர் படிப்படியாக இந்திய மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த போது, நாட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் எதிர்ப்பைத் வெளிப்படுத்தத் தொடங்கினர். அந்தச் சூழலில் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புணர்வை ஒருங்கிணைத்து சுதந்திரப் போராட்டமாக உருவெடுக்க வைத்ததில் காங்கிரஸ் பேரியக்கத்துக்கு மறுக்க முடியாத இடம் உண்டு.
அதே சமயம் காங்கிரஸ் இயக்கம் உருவானதன் நோக்கம் மக்கள் விடுதலை அல்ல. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் வியாபாரம் செய்தபோது அதனால் பெருமளவு பாதிக்கப்பட்டது பெரும்பான்மை மக்களை விட, இங்கிருந்த முதலாளிகள்தான். அன்னியர்களின் வருகையால் பாதிக்கப்பட்டத் தங்களுடைய தொழில்களை மீண்டும் மறுமலர்ச்சியடையச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி ஆங்கிலேயரை நாட்டிலிருந்து அகற்றுவதுதான் என்பதைத் தெளிவாக உணர்ந்த இந்திய முதலாளி வர்க்கம் உருவாக்கியதுதான் காங்கிரஸ் இயக்கம். இவ்வியக்கத்தின் அடிப்படை நோக்கம் ஆங்கிலேயர்களை விரட்டுவது மட்டும்தானே ஒழிய, நாட்டு மக்கள் அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்பது இல்லை.
ஆனால் நாட்டு மக்களின் ஆதரவின்றி அன்னிய ஆட்சியை அகற்றுவது சாத்தியப்படாது என்பதை உணர்ந்திருந்த இந்திய முதலாளிகள், காங்கிரஸ் இயக்கத்தை மக்கள் நலனுக்காகப் பாடுபடும் ஓர் இயக்கம் என்பதான கருத்தை முன்வைத்து, எல்லாக் காலத்திலும் முதலாளிகளின் நலன்களுக்காகப் பாடுபடும் வெகுசன ஊடகங்களின் மூலம் அந்தக் கருத்தை மக்களிடையே பரப்பினர். சுதந்திரப் போராட்டம் எனும் மிகப்பெரும் வரலாற்று நிகழ்வுக்குக் காங்கிரஸ் கட்சி தலைமையேற்றதற்கு இந்தப் பின்னணிதான் காரணம்.
சுதந்திரப் போராட்டத்தின் ஓர் அங்கமாகத் தங்களின் தொழில் நலனைப் பேணும் ஓர் உத்தியாகச் சுதேசியம் என்பதைக் காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்தினர். அக்காலகட்டத்தில் உருவானதுதான் ‘இந்தியப் பொருட்களை வாங்கு; இந்தியனாய் இரு’ எனும் கோஷம். இந்தக் கோஷத்தின் மையத்தில் அடங்கியிருப்பது இந்திய முதலாளிகளுக்கும், பிரிட்டிஷ் முதலாளிகளுக்கும் இடையிலான தொழில் போட்டிதான். ஆனால் இந்த கோஷத்தை மக்களிடம் நேர்மறையான பொருளில் கொண்டு செல்ல தேசப்பற்று எனும் கருத்தாக்கம் உதவி செய்தது. 'இந்தியனாய் இருந்தால் இந்திய முதலாளிகளிடமே பொருட்களை வாங்கு' என்னும் அர்த்தத்தை மக்கள் மனத்தில் பதிய வைக்க தேசப்பற்று எனும் ஆயுதம் பயன்பட்டது. தேசிய வாதம் என்பது எப்போதும் முதலாளிகளின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறை என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
இந்திய மக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் வழியாக அன்னிய ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு ஆங்கிலேயர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். எதிர்பார்த்ததைப் போலவே காங்கிரஸ் இயக்கம் ஆங்கிலேயர்கள் இருந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. இதன் பொருள் காங்கிரசின் பின்னணியில் இருந்த இந்திய முதலாளிகள் ஆட்சி பீடத்தில் ஏறினர். அதன் பின்னர் உலகம் முழுவதும் தோன்றிய புதிய பொருளாதார மாற்றங்களால் உள்நாட்டுச் சந்தைகளின் பொருளாதார மதிப்பை விடப் பன்னாட்டுச் சந்தைகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. அதிலும் இந்தியா போன்ற மிகப்பெரும் சந்தையின் மீது பன்னாட்டு நிறுவனங்களின் கண் விழுந்தது. இந்தியாவில் நுழைய அவை தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தன.
நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வழியாக பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கின. புதிய பொருளாதாரக் கொள்கை, தாராளமயமாக்கல் என்ற பெயர்களில் மன்மோகன் சிங் மூலம் இந்தியத் தொழிற் சந்தையை காங்கிரஸ் அரசு அன்னிய நிறுவனங்களுக்குத் திறந்து விட்டது. இதனால் இந்தியப் பெருமுதலாளிகள் பாதிக்கப்பட்டு விடாத வண்ணம், இந்தியப் பெருமுதலாளிகளின் வர்த்தக நலன்கள் பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்துடன் இணைக்கப்பட்டன. ஒரு விதத்தில் இந்தியச் சந்தையை கூட்டாகப் பங்கிட்டுக் கொண்டு கொள்ளை லாபம் ஈட்டும் திட்டம்தான் இது. இந்தத் திட்டம் இருதரப்புக்கும் வெற்றிகரமாக அமைந்தது.
இந்தியத் தொழில் துறையில் அன்னிய நேரடி முதலீட்டினால் பெப்சி, கோலா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவில் கோலோச்சத் தொடங்கியது. பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களுக்கேற்ற வகையில் இந்தியச் சந்தையை பதப்படுத்தித் தரும் அமைப்பாக மத்திய அரசு மாறியது. அன்னிய முதலீட்டை ஈர்த்தல் என்ற பிரயோகத்தின் மூலம் மக்களிடம் இச்சூழலை நல்ல விதமாகப் பார்க்கப் பழக்கப்படுத்தியது. ஊடகங்கள் இதில் பெரும்பங்கு வகித்தன.
இந்தியப் பொருட்களையே வாங்கு எனும் சுதேசியத்தின் அடிப்படைக் கொள்கையை, அதனை உருவாக்கிய காங்கிரஸ் இயக்கமே தகர்த்தெறிந்தது. அத்துடன் அது நிற்கவில்லை. அன்னியப் பொருட்களை விற்கும் உரிமையையும் தற்போது இந்தியர்களிடமிருந்து பிடுங்கி அன்னிய நிறுவனங்களிடம் வழங்கத் தயாராகியுள்ளது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவின் பின்னணியில் உள்ள பொருளை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பொருளை மட்டும் விற்கும் அன்னிய நிறுவனங்களுக்கு நூறு சதவீதமும், ஒன்றுக்கு மேற்பட்ட பிராண்ட் பொருட்களை விற்பதற்கு 51 சதவீதமும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளைக் காட்டவும் அரசு மறக்கவில்லை. ஆனால் இந்தியா முழுக்க உள்ள பல கோடி சிறுவியாபாரிகளின் வேலை (தொழில்) பறிபோகும் என்பதை அரசு மறைக்கிறது. இந்தியச் சந்தை என்பது விவசாயப் பொருட்களின் உற்பத்தியுடனும் இணைந்தது. எனவே இந்தியாவின் பெரும்பான்மைத் தொழிலான விவசாயமும் இனி அன்னிய நிறுவனங்களின் பிடியில் சிக்கிக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. விவசாயத்துக்குத் தேவையான உற்பத்திப் பொருட்களை அன்னிய நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டிய சூழலை உருவாக்குவதன் மூலம் சிறிது காலத்தில் விவசாயத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பன்னாட்டு நிறுவனங்களால் எளிதாக முடியும்.
உலகம் முழுக்க எதிர்க்கப்படும் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்து சந்தையைக் கொள்ளையடிப்பதற்கு இனித் தடையில்லை. இரையைக் கவ்வக் காத்திருக்கும் கழுகு போல் காத்திருந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழி திறந்து விடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது காலனி ஆதிக்கதை எதிர்த்து மக்கள் போராடிப் பெற்ற இந்திய நாட்டின் இறையாண்மையைப் படிப்படியாக புதிய காலனி ஆதிக்கத்திடம் அடகு வைத்திருக்கிறது மத்திய காங்கிரஸ் அரசு. ஏற்கனவே பெருமளவு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவிட்ட இந்தியச் சந்தையைத் தற்போது முழுதாக விற்கும் கொலைவெறியுடன் களமிறங்கியுள்ளது. 'அன்னியப் பொருட்களை வாங்கு; அன்னியரிடமே வாங்கு; ஆனால் இந்தியனாய் இரு' என்பதே இந்த அரசின் வெளிப்படையாய் அறிவிக்கப்படாத தாரக மந்திரம்.