வரி நீதிக்கான வலையமைப்பு வரிப் புகலிடம் குறித்து அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு:

வரிப் புகலிடம் என்றால் என்ன? என்பதற்கு உலகளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட வரையறை இல்லை என்றாலும், வரிப் புகலிடம் என்பது பொதுவாகப் பன்னாட்டு நிறுவனங்களும் தனிநபர்களும் தங்களின் செல்வத்தையும், நிதி நடவடிக்கைகளையும் தாங்கள் செயல்படும், வாழும் நாடுகளின் சட்டத்தின் ஆட்சியிலிருந்து தப்பிக்க வைக்க உதவும் நாடு அல்லது சரகம்யைக் குறிக்கிறது. நிறுவனங்களும் தனிநபர்களும் செலுத்த வேண்டியதை விடக் குறைவாக வரி செலுத்தவும் (வரி மோசடி செய்ய) அந்த நாடுகள் உதவுகின்றன.

"கமுக்கச் சரகம்" (secret jurisdiction) என்ற சொல் சில நேரங்களில் "வரிப் புகலிடம்" என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது, இது பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த வரி செலுத்துவதற்காக நாடுகளிலிருந்து வரியைக் கடத்துவதைத் தாண்டி தனிநபர்கள் தங்கள் செல்வம் மற்றும் நிதி விவகாரங்களை சட்டத்தின் ஆட்சியிலிருந்து மறைப்பதற்கு நிபுணத்துவம் பெற்ற சரகங்களைக் குறிக்கவும் பயன்படுகிறது.

வரிப் புகலிடங்களில் பணக்காரர்கள் எவ்வாறு செல்வத்தை மறைத்து வைக்கிறார்கள்?

வரிப் புகலிடங்களில் மக்கள் தங்கள் செல்வத்தை மறைக்கும் பொதுவான வழிகளில் ஒன்று, அவர்களின் அடையாளம் அல்லது சொத்துகள் பற்றிய தகவல்களை வெளியிடாமல் தங்கள் சொத்துக்களை வைத்திருக்கச் சட்டப்பூர்வமான அமைப்பை (நிறுவனம் அல்லது அறக்கட்டளை போன்றவை) ஏற்படுத்துவதாகும். இந்த கமுக்கக் கட்டமைப்புகள் உரிமையாளருக்கும் அவர்களின் செல்வத்துக்கும் இடையே திரைச்சீலை அல்லது மறைப்பு போல் செயல்படுகின்றன, உரிமையாளரின் அடையாளத்தை மறைத்து, அவர்களது செல்வத்தின் உண்மையான மதிப்பை மறைக்க உதவுகின்றன, இதனால் இறுதியில், அவர்கள் செலுத்த வேண்டியதை விடக் குறைவான வரியையே செலுத்துகின்றனர்.

வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், வங்கியாளர்கள், அறக்கட்டளை நிறுவனத்தை உருவாக்கும் முகவர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்கள் ஆகியோரின் பெரிய உள்கட்டமைப்பு மூலம் செல்வந்தர்கள் பயன்படுத்தக் கூடிய பலவிதமான நிதிக் கருவிகள் உள்ளன. சில கமுக்க சரகங்க்ள் தங்கள் அதிகார வரம்பிற்கு கீழ் நிறுவப்பட்ட நிறுவனங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டிருப்பதில்லை. இதனால் அவர்களை தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவலை வெளிப்படுத்த கட்டாயப்படுத்த முடியாது. வங்கியாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களை புலனாய்வு அதிகாரிகளிடம் வெளியிடுவதை சட்டவிரோதமாக்குவதன் மூலம் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் வெளிப்படைத் தன்மைக்கும் தீவிரமான தடைகளையும் ஏற்படுத்துகின்றனர்.

வரிப் புகலிடங்கள் எப்படி உருவாயின?

காலனியாதிக்கம், பேரரசியத்திற்குப் பிந்தைய சகாப்தத்தில் வரிப் புகலிடங்கள் வளர்ந்தன. நாடுகள் காலனியாதிக்க ஆட்சியில் இருந்து சுதந்திரம் கோரியதால், 'குடியேறியவர்கள்', காலனியாதிக்க நாடுகளின் அதிகாரிகள், வணிகர்கள் காலனிகளின் உலகத்தை விட்டு வெளியேறினர், மேலும் 'தங்கள்' சொத்துக்களை வரிக்குட்படுத்தாமல் தங்களுடன் எடுத்துச் செல்வதற்கான அதிநவீன வழிமுறைகள் தேவைப்பட்டன. இந்தச் சூழல் உலகப் பொருளாதாரத்தில் வரிப்புகலிடங்களை உட்பொதிப்பதற்கு முக்கியக் காரணமானது.

பல்வேறு வழிகளில், வரிப் புகலிடங்கள் 'இரண்டாம் பேரரசுகளாக'ச் செயல்படுகின்றன, இது செல்வம் மற்றும் சக்திவாய்ந்தவர்கள் வரி வருவாயைத் தொடர்ந்து சுரண்டுவதற்கு உதவுகிறது. செல்வந்தர்கள் தங்களுடைய செல்வத்தை (அல்லது தங்களை) பிற அதிகார வரம்புகளுக்கு கொண்டுசெல்வதும், தங்கள் தாய்ச் சமுதாயத்தின் பொறுப்புகளில் இருந்து தப்புவதும் எப்போதுமே சாத்தியமாக உள்ளது, ஒரு காலத்தில் அவர்கள் கட்புலனாகக் கூடிய வகையில் அவர்கள் சார்பாக மற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல முடிந்த அல்லது பணம் செலுத்த முடிந்ததை விட வரி புகலிடங்கள், நவீன நிதியமைப்பின் வாய்ப்புகள் அதிகமாக இன்று எல்லையற்றதாகக் காணப்படுகிறது.

1848இல் சுவிஸ் கூட்டமைப்பு நிறுவப்பட்டது, முதல் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அடையாளங்காணக் கூடிய வரிப் புகலிடத்தின் பிறப்பைக் குறிக்கக் கூடும். இருப்பினும் ஜெனிவா மற்றும் சூரிச்சில் உள்ள வங்கியாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கமுக்கமான சூழ்நிலையில் ஐரோப்பியர்களின் செல்வத்தைப் பாதுகாத்தனர். கரீபியன், ஆங்கிலக் கால்வாய் மற்றும் பிற இடங்களில் உள்ள பல்வேறு கடற்கொள்ளையர்களின் குடாக்களை ஆரம்பகால நாடுகடந்த நடவடிக்கை (offshore) என்று குறிப்பிடலாம்.

1960களில் இருந்து நிதி-உலகமயமாக்கத்தின் சகாப்தம் நாடுகடந்த நடவடிக்கையின் ஒரு புதிய, மிகவும் தீவிரமான கட்டத்தைக் குறித்தது, ஏனெனில் நிலையான, கமுக்கமான சுவிஸ் பாணியிலான வங்கிக் கமுக்கத் தன்மையை, கரீபியன், பிரிட்டானிய முடியாட்சியைச் சார்ந்த நாடுகள், இலக்சம்பர்க் மற்றும் பிற ஐரோப்பியப் புகலிடங்களின் அதிதீவிரமான, அதிவேகமான ஆங்கிலோ-சாக்சன் வகைகள் இட்டு நிரப்பின.

குறிப்பாக 1970களில் இருந்து அமெரிக்கா திட்டமிட்டே கமுக்க வசதிகளை ஏற்படுத்தத் தொடங்கியது. அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய சரகங்கள் நாடுகடந்த நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கின. ஆசியப் புகலிடங்கள், குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகியவையும் நீண்ட வரலாறுகளைக் கொண்டிருக்கின்றன, அவை பெரும்பாலும் சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்ட நிதிக்கான மையங்களாக உள்ளதுடன் அவை இச்செயல்பாடுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளன.

வரிப் புகலிடங்களில் எவ்வளவு பணம் உள்ளது?

$21 முதல் $32 டிரில்லியன் நிதிச் சொத்துக்கள் நாடுகடந்த வரிப் புகலிடங்களில் உள்ளன. வரிப் புகலிட அமைப்பில் மறைந்திருக்கும் கமுக்கம் காரணமாக, துல்லியமான மதிப்பு கிடைப்பது கடினம், எனவே மதிப்பீடுகள் மாறுபடலாம். வரி நீதிக்கான வலையமைப்பு மதிப்பிட்டுள்ளபடி, 427 பில்லியன் டாலர் வரியானது வரிப் புகலிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கட்த்தப்பட்டு இழக்கப்படுகிறது.

வரிப் புகலிடங்கள், கமுக்கச் சரகங்கள்:

வரிப் புகலிடம் என்ற சொல்லே பிரச்சனைக்குரியதாக உள்ளது, ஏனெனில் இந்த இடங்கள் வரி மோசடியைத் தாண்டிப் பல வசதிகளை வழங்குகின்றன. அவை குற்றவியல் சட்டங்களையும், கோரப்படும் வெளிப்படைத்தன்மையையும், நிதிக் கட்டுப்பாட்டையும், பரம்பரை விதிகளையும் மற்றும் பலவற்றையும் தவிர்க்க அனுமதிக்கின்றன.

தனிநபர்கள் தங்கள் செல்வம் மற்றும் நிதி விவகாரங்களை சட்டத்தின் ஆட்சியிலிருந்து மறைக்கவும், பன்னாட்டு நிறுவனங்கள் தாங்கள் செயல்படும் நாடுகளில் குறைந்த வரி செலுத்தவும், அங்கிருந்து வரியை கடத்தவும் நிபுணத்துவம் வாய்ந்த சரகங்ககளைக் குறிக்க வரிப் புகலிடத்திற்குப் பதிலாக "கமுக்கச் சரகம்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, அயர்லாந்து ஒரு பெருநிறுவன வரிப் புகலிடமாகும், ஆனால் உண்மையில் அது ஒரு கமுக்கச் சரகம் அல்ல. சுவிட்சர்லாந்து, இலக்சம்பர்க் ஆகிய நாடுகள் கமுக்க வங்கியியல், பெருநிறுவன வரி மோசடி மற்றும் பரந்த அளவிலான பிற நாடுகடந்த சேவைகளை வழங்குகின்றன. ஐக்கிய முடியரசு கமுக்க வங்கிச் சேவை வழங்கவில்லை, ஆனால் அது தளர்வான நிதிக் கட்டுப்பாடு உட்பட இன்னும் பரந்த அளவிலான நாடுகடந்த சேவைகளை விற்பனை செய்கிறது.

பல சர்வதேச அமைப்புகள் தங்களுக்கென சொந்த வரிப் புகலிடங்களின் பட்டியலைக் கொண்டுள்ளன, அவை அரசியல் தேவைகளுக்களால்ல் அடிக்கடி வளைந்து கொடுக்குமாறு செய்யப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை அரசியல்மயமாக்கப்பட்டவை. மேலும் அவை ஆதார அடிப்படையிலான பட்டியல்கள் அல்ல. இந்த பட்டியல்கள் அமெரிக்கா போன்ற பெரிய, சக்திவாய்ந்த நாடுகளை ஒதுக்கி அல்லது இத்தகைய நடவடிக்கைகளில் அவற்றின் பங்கைக் குறைத்துக் காட்ட முனைகின்றன. ஆனால் சிறிய, பலவீனமான நாடுகளை முன்னிலைப்படுத்துகின்றன.

பல வருட முழுமையான ஆராய்ச்சியின் விளைவாக வரி நீதிக்கான வலையமைப்பு இரண்டு குறியீடுகளை வெளியிடுகிறது. அவை: 1. நிதிக் கமுக்கத்திற்கான குறியீடு, 2. பெருநிறுவன வரி மோசடிக்கான குறியீடு. இக்குறியீடுகள் நாடுகளுக்கு எந்த சலுகையும் அளிக்காமல் பாரபட்சமின்றி ஈராண்டுக்கு ஒரு முறை நிபுணர் குழுவின் கடுமையான மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகின்றன:

நிதிக் கமுக்கக் குறியீடு, சரகங்களை அவை எவ்வளவு உலகளாவிய நிதிக் கமுக்கத்தைச் செயல்படுத்துகின்றன என்பதன் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது.

பெருநிறுவன வரி மோசடிக்கான குறியீடு, அவை எவ்வளவு உலகளாவிய பெருநிறுவன வரி மோசடிகளைச் செயல்படுத்துகின்றன என்பதன் அடிப்படையில் சரகங்களை வரிசைப்படுத்துகிறது.

இந்தக் குறியீடுகளில் உங்கள் நாடு முதலிடத்தில் இருந்தால், அது உலகின் மிக மோசமான குற்றவாளிகளில் ஒன்று என்று அர்த்தம். ஆனால் குறியீட்டில் கீழே உள்ள நாடுகள் அப்பழுக்கற்றவை என்று பொருள் கொள்ள முடியாது. அனைத்து சரகங்களும் உலகளாவிய வரிமோசடியில் தங்கள் பங்கை முடிவுக்குக் கொண்டுவர அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

பெருநிறுவன வரி மோசடிக்கான குறியீடு:

பெருநிறுவன வரி மோசடிக்கான குறியீடு என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெருநிறுவன வருவாய் வரியை குறைவாக செலுத்த உதவுவதில் மிகவும் உடந்தையாக இருக்கும் ஆட்சிப்பகுதிகளின் தரவரிசையாகும். பெருநிறுவன வரி மோசடிக்கான குறியீடு ஒவ்வொரு ஆட்சிப்பகுதியின் வரி மற்றும் நிதி அமைப்புகளையும் முழுமையாக மதிப்பீடு செய்து, உலகளாவிய பெருநிறுவன வரி மோசடிக்குத் துணைபோகும் உலகின் மிகப் பெரிய உதவியாளர்களைப் பற்றிய தெளிவான சித்திரத்தை தருகிறது. மேலும் ஆட்சிப்பகுதிகளின் பெருநிறுவன வரி மோசடிக்கான செயல்பாடுகளைக் குறைக்க கொள்கை வகுப்பாளர்கள் திருத்தவேண்டிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை முன்னிலைப்படுத்தவும் உதவுகிறது.

சரகங்கள் அவற்றின் பெருநிறுவன வரி மோசடிக்கான குறியீட்டைக் கொண்டு தரவரிசைப்படுத்தப்படுகின்றன, இக்குறியீடு ஒரு சரகத்தின் புகலிட மதிப்பெண்ணை, உலகுதழுவிய அளவிலான அதன் எடையுடன் இணைத்துக் கணக்கிடப்படுகிறது. சரகத்தின் புகலிட மதிப்பெண்ணில், பெருநிறுவன வரி மோசடிக்கான எவ்வளவு வாய்ப்புகளை சரகங்களில் உள்ள வரி மற்றும் நிதி அமைப்புகள் அனுமதிக்கின்றன என்பது 20 குறிகாட்டிகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. ஒரு சரகத்தின் உலகுதழுவிய அளவிலான எடை என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு எவ்வளவு நிதிச் செயல்பாடுகளை அச்சரகம் வழங்குகிறது என்பதற்கான அளவீடு ஆகும். சரகத்தில் உள்ள புகலிட மதிப்பெண்ணை உலக அளவிலான எடையுடன் இணைக்கும் போது, சரகத்தில் உலகின் பெருநிறுவன நிதிச் செயல்பாடுகளுக்கு எவ்வளவு பெருநிறுவன வரி மோசடி அச்சுறுத்தல் உள்ளது என்பதைப் பற்றிய சித்திரம் பெறப்படுகிறது.

- சமந்தா

Pin It