சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு பற்றிய விவாதம் தற்போது இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை எப்படியும் நடைமுறைப்படுத்திவிட வேண்டும் என்று நடுவண் அரசு முனைப்புடன் இருக்கிறது. இந்த விவாதத்தில் சமூக, பொருளாதார, அரசியல் பரிமாணங்கள், அவற்றின் விளைவுகள் தொடர்பான பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில்லறை வணிகம், மொத்த வணிகம் எதுவாக இருந்தாலும், இங்குள்ள நுகர்வுப் பண்பாட்டில் அதிரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதே பன்னாட்டு நிறுவனங்களின் வழிமுறையாக இருக்கும். விளம்பர வலிமையைப் புரிந்து வைத்திருக்கிற இந்த நிறுவனங்கனின் அணுகுமுறையால், அந்நிய முதலீடுகள் அந்நியமாக வரப்போவதில்லை; சிரித்த முகத்தோடு அபிமான முகங்களாகத்தான் வரப்போகின்றன.

 துடைப்பத்தால் அடிபட்ட பெட்டிக்கடைக்காரர்

2005ஆம் ஆண்டளவில் தமிழகத் தொலைக்காட்சிகளில் விளம்பரம் ஒன்று ஒளிபரப்பானது. இது நடிகர் விக்ரம், நடிகைகள் ஸ்ரேயா ரெட்டி, மீரா வாசுதேவன் ஆகியோர் நடித்த கோகோ கோலா விளம்பரம்.

இளம்பெண்களாக ஸ்ரேயா ரெட்டி, மீரா வாசுதேவன் இருவரும் ஒரு பெட்டிக் கடைக்கு வருவார்கள். பெட்டிக்கடைக்காரர் (நகைச்சுவை நடிகர்) சிறிய குச்சியால் பல் குத்திக்கொண்டிருப்பார். இளம்பெண்கள் அவரிடம் ‘கூல் ட்ரிங்’ வேண்டும் என்று கேட்பார்கள். உடனே அவர், கோலி சோடா மாதிரியான உள்நாட்டுக் குளிர்பானம் ஒன்றை எடுத்துக் கொடுப்பார். “இதைப் பார்த்தா கூல் ட்ரிங் மாதிரியா தெரியுது?” என்று கிண்டலாகக் கேட்பார் ஸ்ரேயா. “எனக்கு இதுதான் கூல் ட்ரிங்” என்று மிரட்டலாகச் சொல்வார் கடைக்காரர். அப்போது, சந்தைப் பகுதியில் புயலடிக்க விக்ரம் அதிரடியாக வருவார். பெட்டிக்கடைக்கு முன் தரையில் கிடக்கும் துடைப்பத்தை தனது பூட்ஸ் காலால் தட்டி எடுப்பார். அதே துடைப்பத்தை கடைக்காரரின் முகத்துக்குமுன் நீட்டி, அவரை அடிப்பதுபோல் பற்களை வன்மையாகத் துலக்கிவிடுவார் விக்ரம். உடனே அவரது பற்கள் பளிச்சிடும். ‘சாதாரண’ குளிர்பானத்தை இளம்பெண்களுக்குக் கொடுத்ததற்காக, கடைக்காரரின் விரலை உடைத்து அவரை அலற விடுவார். அந்த அலறல் சத்தத்தை ‘புது எஃப்.எம் ரேடியோ’ என்று கிண்டல் செய்வார் விக்ரம். அந்த அலறலை ‘பாகவதரின் தெய்வீக நாதம்’ என்று மேலும் விளக்கமாகக் கிண்டலடிப்பார். இந்தத் தண்டனைக்கு பிறகு பெட்டிக்கடைக்காரர் ‘மனம் திருந்தி’ கோகோ கோலா பாட்டிலை எடுத்துக் கொடுத்து, “கூல் ட்ரிங்னா கோகோ கோலா” என்று வாக்குமூலம் கொடுப்பார்.

 தலையில் துண்டைப் போட்ட பால்காரர்

ஆரோக்யா பால் அறிமுகமாகி, நுகர்வோர்களிடம் பரவ ஆரம்பித்தக் காலக்கட்டம் அது. அப்போது வெளியானது ‘மினி ஆரோக்யா’ விளம்பரம் ஒன்று. நடிகைகள் ஊர்வசி, ஸ்ருதிகா, கோவை சரளா நடித்த இந்த விளம்பரத்தில் பால்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

வயதான பால்காரர் (மற்றொரு நகைச்சுவை நடிகர்) ஒருவர் பால்கேனை ஏற்றியபடி நடுத்தரக் குடும்பங்கள் வசிக்கும் ஒரு காலனிக்குள் சைக்கிளில் வருகிறார். கேனின் விளிம்பு வைக்கோலால் சுற்றப்பட்டிருக்கிறது. பாலில் தண்ணீரை ஊற்றியபடி (அதாவது கலப்படம் செய்கிறாராம்), “அம்மா.... பால்...” என்று குரல்கொடுக்கிறார். ஊர்வசி, கோவை சரளா, ஸ்ருதிகா மூவரும் குடும்பப் பெண்களாக வெளியே வந்து, “வேண்டாம் வேண்டாம் தண்ணிப் பால்” என்று பாடியபடியே ஆடுகிறார்கள். பாலில் குப்பை கூளம் மிதப்பது காட்டப்படுகிறது. பால்காரர் கொண்டுவரும் பாலில், ‘கலப்படம் அதிகம், சுத்தம் இல்லை, கெட்டியாக இல்லை, விலை அதிகம்’ என்று குற்றச்சாட்டுப் பட்டியல் நீள்கிறது. பால்காரர் தடுமாறி தரையில் விழுகிறார். பக்கத்தில் ஆரோக்யா நிறுவனத்தின் கடை திறக்கப்படுகிறது. குடும்பப்பெண்கள் கூட்டமாக வந்து, சிரித்தபடியே ஆரோக்யா பாலை போட்டிபோட்டு வாங்கிச் சென்று பயன்படுத்துகிறார்கள். அதன் பலவிதப் பயன்பாட்டைப் பட்டியலிடுகிறார்கள். எல்லாக் குடும்பங்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றன. இதற்கிடையில் பால்காரர் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு பரிதாபமாக ஓடுகிறார்.

குற்றப் பத்திரிகை

‘சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு’ பிரச்சனையில் மறந்துபோன இந்த விளம்பரங்கள் மீண்டும் நினைவுக்கு வந்ததில் ஆச்சரியம் இல்லை. இந்த விளம்பரங்கள் சொல்கின்ற செய்தி என்ன? கோக் விளம்பரத்தைப் பொருத்தளவில்,

- சிறு வியாபாரிகள் நாகரிகமற்றவர்கள்

- சிறு வியாபாரிகள் சுத்தமற்றவர்கள்

- சிறு வியாபாரிகள் துடைப்பத்தால் அடிக்கப்பட வேண்டியவர்கள்

- உள்நாட்டு குளிர்பானங்கள் குளிர்பானங்களே அல்ல

- கோக் தவிர்த்து வேறு குளிர்பானத்தை விற்கக் கூடாது

- இந்த வரம்பை மீறினால், கடைக்காரர்களை யாரும் வன்மையாகத் தண்டிக்கலாம்

என்று கருத்துகள் பரப்பப்படுகின்றன.

இதேபோல, ஆரோக்யா பால் விளம்பரம் சொல்கின்ற செய்தி என்ன?

- பால்காரர்கள் கலப்படம் செய்யும் குற்றவாளிகள்

- அவர்கள் நம்பத்தகாதவர்கள்

- பாலில் குப்பை கூளம் மிதக்கும் அளவுக்கு, சுத்தம் இல்லை

- சுகாதாரத்தில் அக்கறை காட்டாதவர்கள் பால்காரர்கள்

- பால் கெட்டியாக இல்லை

- அதிக விலை வைத்து பால்காரர்கள் கொள்ளை அடிக்கிறார்கள்

என்று பால்காரருக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை நீள்கிறது. இதனால் அவர்கள் தடுமாறி விழுவதும், தலையில் துண்டைப் போடுவதும் நியாயமாகத் தென்படுகிறது.

நிராயுதபாணியான சிறுவியாபாரிகள்

கோக் விளம்பரமும் ஆரோக்யா விளம்பரமும் சிறுவியாபாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்ற விவாதத்திற்குள் இறங்க வேண்டியதில்லை. அதற்கு முன்பாக, கோக் விளம்பரத்தில் சிறு வியாபாரிகள்மீதும், ஆரோக்யா விளம்பரத்தில் பால்காரர்கள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பது, நிராயுதபாணியின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இதே கோக் விளம்பரம், பெப்சிக்கு எதிராகவோ மற்றொரு பன்னாட்டுக் குளிர்பானத்திற்கு எதிராகவோ தாக்குதல் நடத்தியிருந்தால், நிச்சயமாகப் பதிலடி கிடைத்திருக்கும். கோக்கிற்கு பதில் சொல்லும் முகமாக போட்டி நிறுவனங்கள் பதில் விளம்பரங்களைத் தயாரித்து வெளியிட்டிருப்பார்கள். அதே போல, ஆரோக்யா பால் மற்றொரு பாக்கெட் பாலுக்கு எதிராகவோ, மற்றொரு பன்னாட்டு பாலுக்கு எதிராகவோ தாக்குதல் நடத்தியிருந்தால், பதில் விளம்பரம் கிடைத்திருக்கும். ஆனால், பாவம் சிறுவியாபாரிகள்! சில நூறு அல்லது சில ஆயிரம் ரூபாய்களிலேயே அவர்களின் முதலீடு முடிந்து விடுவதால், பலகோடி ரூபாய்களைக் கொட்டி நட்சத்திரங்களை அழைத்துப் பதிலடி விளம்பரம் கொடுக்க சாத்தியமில்லை. அதனால்தான், இத்தகைய தாக்குதல் நிராயுதபாணியின்மீது நடத்தப்படும் தாக்குதல் என்று பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது. நீதிமன்றத்திலாவது, குற்றம் சாட்டப்பட்டவர் பதில்சொல்வதற்கு வாய்ப்பளிக்கப்படும். விளம்பர உலகத்தில் அதெல்லாம் சாத்தியமில்லை. “வாயுள்ள புள்ள பிழைச்சுக்கும்” என்பது விளம்பரங்களின் நியதி. இந்த விளம்பரப் போட்டியில் சில்லறை வியாபாரிகள் சின்னாபின்னமாகிவிடுவார்கள் என்பதே இரண்டு விளம்பரங்களும் நமக்குக் கற்றுத் தரும் பாடம். ஆக, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு குறித்த பிரச்சனையில் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால் இந்த விளம்பரத் தாக்குதல். அந்நிய முதலீட்டிற்கு ஒரு சிறிய தளம் கிடைத்தால்கூட போதும். மற்றதை விளம்பரங்கள் பார்த்துக்கொள்ளும்.

இந்த இரண்டு விளம்பரங்களிலும் நாம் கவனிக்கத் தக்க அம்சம் என்னவென்றால், பால்காரராகவும், பெட்டிக்கடைக்காரராகவும் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நகைச்சுவை நடிகர்கள். ஒருவேளை, துடைப்பத்தால் அடிவாங்குவதும், தலையில் துண்டைப்போடுவதும் நகைச்சுவையான செயல்களாக இருக்குமமோ!

விளம்பரத் தாக்குதல்

இந்த கோக் விளம்பரம் வந்தபோதே சிறுவியாபாரிகள் கொதித்துப் போனார்கள். இந்தக் கொதிப்பு குறித்து, “கோலி சோடா குடிப்பவர்கள் காட்டுமிராண்டிகளா?” என்ற தலைப்பில் குமுதம் வார இதழ் (23.05.2005) ஒரு கட்டுரை வெளியிட்டிருந்து. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன், “கோக் விளம்பரத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன்..... நமது நடிகர் நடிகைகளுக்கு ஒரு வார்த்தை. எந்த விளம்பரத்தில் நடிப்பதாக இருந்தாலும் இந்த நாட்டையும் இந்த நாட்டு மக்களையும் ஒரே ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நம் பொருளாதாரத்தைச் சீரழித்துச் சிதைத்து, நம் மக்களை கேவலப்படுத்துகிற மாதிரியான விளம்பரங்களில் நடிக்காதீர்கள்” என்று குமுறினார். இதுபோன்ற குமுறல்களைத் தொடர்ந்து, விக்ரம் கடைக்காரரை துடைப்பத்தால் அடிக்கும் காட்சி மட்டும் இவ்விளம்பரத்திலிருந்து நீக்கப்பட்டது. மற்றபடி, பன்னாட்டு குளிர்பானங்கள் ஏற்படுத்திய இத்தகைய விளம்பரப் பேரலையின் விளைவாக, உள்நாட்டுக் குளிர்பானங்கள் ஏறக்குறைய மறைந்து விட்டன. விரல் விட்டு எண்ணத்தக்க ஓரிரண்டு குளிர்பானங்கள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கின்றன. விளம்பரப் போட்டியில் தங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதுதான், மறைந்துபோன குளிர்பானங்களின் தயாரிப்பாளர்கள் சொல்லுகின்ற மிக முக்கியமான காரணம்.

ஹேட்சன் நிறுவனத்தின் தயாரிப்பான ஆரோக்யா பால் வருகைக்குப் பிறகு பாக்கெட் பால் புகழ்பெற ஆரம்பித்தது. விளம்பரங்கள் மூலை முடுக்கெல்லாம் கண்ணில்பட ஆரம்பித்தன. மக்களிடம் பாக்கெட் பால் பயன்படுத்தும் பழக்கம் பரவ ஆரம்பித்தது. இதன் விளைவாக, பால்காரர் என்ற சமூகமே அழிந்துவிட்டது போன்றே தோன்றுகிறது. கறக்கப்படும் பால் நேரடியாக பண்ணைகளுக்குச் செல்வதால், பால்காரர் என்ற சொல் பழைய, வரலாற்றுச் சொல்லாக மாறிவிட்டது. பால்காரரை தடுமாறச் செய்து விழ வைத்ததையும், அவரின் தலையில் துண்டைப்போட வைத்ததையும் சாதாரணமான விளம்பர உத்திகளாக எடுத்துக்கொள்ள முடியாது. சிறு வணிகத்தின்மீதான குறியீட்டுத் தாக்குதல் என்றே கொள்ளவேண்டும்.

நுகர்வோரின் பாரம்பரியமான பழக்கத்தை மாற்றிக் காட்டும் ஆற்றல் விளம்பரங்களுக்கு உண்டு. சிறு வியாபாரிகளின் சில்லறை வணிகம் நமது பாரம்பரியம் என்று எடுத்துக்கொண்டால், அதை உடைத்து ‘வணிக வளாக’ப் பண்பாட்டிற்கு நம்மை இட்டுச் செல்வது விளம்பரத்திற்குக் கடினமான செயலாக இருக்காது. ஏற்கெனவே, வணிக வளாகப் பண்பாட்டிற்கு நடுத்தரக் குடும்பத்தினர் பழகிவிட்ட சூழ்நிலையில், விளம்பர உத்திகள் இதை இன்னும் வலுவூட்டும்.

நிர்ணய உரிமையும் பேர உரிமையும்

“ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் வச்சான் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி

காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்”

என்ற நாட்டுப்புறப் பாடல், நம் விளைபொருள்களுக்கு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் அவர்கள் விலைநிர்ணயித்ததைச் சுட்டிக்காட்டுகிறது. அன்று அவர்கள் விலையைத்தான் நிர்ணயித்தார்கள். பெரு வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்டோபஸ் கரங்கள் ஆக்கிரமித்துவிட்ட இன்றைய சூழலில், சில்லறை வணிகத்தையும் விட்டு வைக்காமல், இந்நிறுவனங்கள் நேரடியாகவே களத்தில் குதிக்கின்றன. மேலும், உள்நாட்டில் தயாராகும் விளைபொருள்கள் மற்றும் உள்நாட்டுத் தயாரிப்புகள் முகவரி இழந்து தவிக்கின்ற இக்காலத்தில், பெட்டிக் கடைகளில்கூட பன்னாட்டுப் பொருள்கள் புழங்குவதை தவிர்க்க முடியவில்லை. இனி அதற்கும் வழியில்லை என்ற சூழலை உருவாக்குகிறது இந்த நேரடி அந்நிய முதலீடு.

பல சமயங்களில் விளம்பரங்களில் வரும் பொருளுக்கான விலையை முகம் சிரித்தபடியே அறிவித்துவிடுவார்கள். விலை உயர்வைக்கூட மகிழ்ச்சியாக அறிவிக்கும் ஆற்றல் விளம்பரங்களுக்கே உண்டு. இப்படி அறிவிப்பதன் நோக்கம் என்ன? வணிக வளாகங்களில் நுகர்வோர் பொருளைத் தேர்ந்தெடுக்கும்போது, என்ன விலை என்று கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டியிருக்காது. அதை விட முக்கியமாக, பொருளை விற்பவர்கள் அல்லது தயாரிப்பவர்கள் விலையை நிர்ணயிக்கும் உரிமையைப் பெற்று விடுகிறார்கள். ஆனால், நுகர்வோர்கள் பேரம் பேசுகின்ற உரிமையை இழந்துவிடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், நுகர்வோரும் விற்பவரும் உரையாடுவதற்கான தேவை குறைந்துவிடுகிறது. சிறு வியாபாரிகளிடம் உள்ள சில்லறை வணிகத்தின் சிறப்பம்சமே, இந்தப் பேரம் பேசுகிற உரிமைதான். வணிக வளாகங்கள் வந்த பிறகு அந்த உரிமை ஓரளவு காலியாகிவிட்டது. நேரடி அந்நிய முதலீட்டிற்குப் பிறகு, ஒட்டுமொத்தமாக அந்த உரிமைக்குச் சாவு மணி அடிக்கப்பட்டுவிடும்.

விளம்பர வருமானம்

சுட்டிக்காட்டப்பட்ட கோக் விளம்பரத்தையும், ஆரோக்யா பால் விளம்பரத்தையும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றே கொள்ள வேண்டும். திரைப்பட நட்சத்திரங்கள் இவற்றில் இடம் பெற்றிருப்பதே இவற்றின் கவன ஈர்ப்புக்கு முக்கிய காரணம் எனலாம். அந்நிய குளிர்பானங்களுக்கு விளம்பரம் செய்தவர்கள் என்ற வகையில் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும், ஹிர்திக் ரோஷன், அமீர்கான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், ராணி முகர்ஜி, மாதவன், விஜய், சூர்யா, விவேக், சிம்ரன், ராதிகா, அசின் ஆகிய திரைப்பட நட்சத்திரங்களும் இந்தப் பட்டியலில் அடங்குவர். நடிகைகள் குஷ்பு, நதியா, சிம்ரன் ஆகியோர் ஆரோக்யா பாலின் விளம்பரப் பட்டியலில் இடம்பெறுவர். இதர பன்னாட்டுப் பொருள்களையும் அதன் நட்சத்திரங்களையும் கணக்கிட்டால், பெரியதொரு பட்டியல் கிடைக்கும். திரைப்படத்தில் நடித்துச் சம்பாதிப்பதைவிட, கிரிக்கெட் ஆடிச் சம்பாதிப்பதை விட, இத்தகைய விளம்பரங்களில் நடித்துச் சம்பாதிப்பது சாதாரணமானதல்ல. ‘குறுகிய காலத்தில் கிடைக்கும் கைநிறைய பணம்’ என்பதே இதன் சிறப்பு.

கோட்டைக் கழற்றியபடி அபிசேக் பச்சன் அந்த ஆடம்பரமான வீட்டுக்குள் நுழைகிறார். அவர் வருவதை ரகசியமாகக் கவனித்துவிட்டு, பின்னிருந்து அவரது கண்களை கறுப்புத் துணியால் கட்டுகிறார் ஐஸ்வர்யா ராய். கண்கள் கட்டப்பட்ட நிலையில் மனைவியைத் தேடுகிறார் அபிசேக். ஒளிந்து விளையாடி ஊடல் செய்கிறார் ஐஸ்வர்யா. தொடரும் இந்த விளையாட்டில் தவறுதலாக உள்ளே வரும் பாட்டியைக் கட்டிப் பிடித்து அதிர்ச்சியடைகிறார் அபிசேக். இதைக் கவனித்து கண்களால் நையாண்டி செய்கிறார் ஐஸ்வர்யா. இது திரைப்படமல்ல, லக்ஸ் சோப் விளம்பரம்! இந்த விளம்பரத்திற்கான மொத்த நேரம் வெறும் 30 நொடிகள்தான். இக்காட்சியில் நடித்த இருவருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 25 கோடி ரூபாய்! எனவே, கோடிக்கணக்கான பணம் கொழிக்கும் விளம்பரத் தொழிற்சாலையில், நட்சத்திரங்களுக்கு இதுபோன்ற சில்லறை வணிக பிரச்சனைகள் எல்லாம் வெறும் ‘சில்லறைப் பிரச்சனை’கள்தான்!

சிரித்த முகங்கள்

அந்நிய முதலீட்டால் ஏற்பட்டுள்ள சில்லறை வணிகப் பிரச்சனையில் உள்ள சிக்கல்களெல்லாம் சரியா, தவறா என்ற கேள்விக்கே இடம்கொடுக்காமல், விளம்பரங்கள் நமது மனோபாவத்தை மாற்றிவிடும். ஏனென்றால், இத்தகைய விளம்பரங்கள் அந்நிய முகத்தோடு வருவதில்லை. நம்முடைய அபிமான முகங்களாகத்தான் வரப்போகின்றன. நம்முடைய அபிமான கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், நட்சத்திரங்கள் சிரித்த முகத்தோடு வந்து அந்நிய முதலீட்டில் கிடைக்கும் பொருள்கள் உயர்ந்தது, உன்னதமானது, உத்தரவாதமானது என்று வலியுறுத்துவார்கள். மறுத்தால், சிரித்த முகம் மாறாமல் துடைப்பக் கட்டையாலும் செருப்பாலும் அடிப்பார்கள். அப்பாவிகள் தங்கள் தலையில் போடுவதற்கு துண்டும் இருக்காது. சிரித்தபடியே இக்காட்சிகளை ரசிக்கும் பழக்கம், நமக்குப் புதிதா என்ன?

கோக் விளம்பரம் காண...

http://www.youtube.com/watch?v=JUXpgkGiRWA&feature=related