மரணத்திற்குப் பிறகு வாழ்வு உண்டா? என்று நாம் இன்னமும் வாதிட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தக் கேள்வியுடன் மற்றொரு கேள்வியையும் நாம் சேர்த்துக்கொள்ள முடியுமா? ஜனநாயகத்திற்குப் பிறகு வாழ்க்கை உண்டா? ஜனநாயகம் என்று நான் கூறும் போது ஒரு லட்சிய இலக்கையோ, ஒரு ஆதர்சத்தையோ நான் கூற வரவில்லை. நான் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ஒரு மாதிரியைக் கூறுகிறேன். மேற்கத்திய தாராளவாத ஜனநாயகம் மற்றும் அதன் பல்வேறு வகைகளைக் கூறுகிறேன். அவை எவ்வாறு உள்ளனவோ அதைப் போலவே.
அப்படி என்றால், ஜனநாயகத்திற்குப் பிறகு வாழ்வு இருக்கிறதா?
இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் முயற்சிகள் பல்வேறு ஆட்சி முறைகளை ஒப்பிட்டுப் பார்த்து, ஓரளவு எரிச்சலுடன் ஜனநாயகத்தை மூர்க்கமாக ஆதரிக்கும் நிலையுடன் முடிவடைகின்றன.
இந்த ஜனநாயகத்தில் குறைகள் உள்ளன என்று கூறுகிறோம். அது அவ்வளவு சிறந்ததாக இல்லை. ஆனால், தற்போது பேசப்படும் எந்த ஒரு ஆட்சி முறையையும்விட அது சிறந்ததாக உள்ளது. நம்முடன் விவாதிப்பவர்களில் ஒருவர் ‘ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சவுதி அரேபியா, சோமாலியா... போன்ற நாடுகளில் உள்ள முறைகளில் ஒன்று தான் உங்களுக்கு வேண்டுமா’ என்று கட்டாயம் கேட்பார்கள். அனைத்து ‘வளரும்’ நாடுகளும் தங்கள் இலக்காகக் கொள்ள வேண்டிய கற்பனாவாத அமைப்பாக ஜனநாயகம் விளங்க வேண்டுமா என்பது முற்றிலும் மாறுபட்ட கேள்வி ஆகும். ஜனநாயகத்திற்குப் பிறகு வாழ்க்கை உண்டா என்ற கேள்வி, ஏற்கனவே ஜனநாயக நாடுகளில் அல்லது ஜனநாயக நாடுகள் என்று காட்டிக் கொள்ளும் நாடுகளில் வாழும் நம்மைப் போன்ற வர்களை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்வி ஆகும். இவ்வாறு கேள்வி கேட்பது, நாம் மீண்டும் பழைமையான, மதிப்பிழந்த, சர்வாதிகார அரசாட்சி முறைக்குப் போக வேண்டும் எனக் குறிப்பால் உணர்த்துவதாக அல்ல. இது தற்போது உள்ள பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் சில அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் கேட்கப்படுவதாகும்.
நாம் ஜனநாயகத்திற்கு என்ன செய்துவிட்டோம்? அதை என்னவாக மாற்றி உள்ளோம்? ஜனநாயகத்தை முழுமையாகப் பயன்படுத்திய பின் என்ன ஆகும்? அது உள்ளீடற்றதாக, அர்த்தம் இல்லாததாக மாற்றப் பட்டுவிடும் போது என்ன ஆகும்? ஜனநாயகத்தின் ஒவ்வொரு நிறுவனமும், பயங்கரமானவைகளாக மாறிவிடும் போது என்ன ஆகும்? தற்போது, ஜனநாயகமும், கட்டற்ற சந்தையும் மனிதர்களைக் கொன்று தின்றும் ஒரே அழித்தொழிக்கும் உயிரினமாக, லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட குறுகலான பார்வையுடன் செயல்படும் போது என்ன ஆகும்? இந்த நடைமுறையைத் தலைகீழாக மாற்றி அமைக்க முடியுமா? உருமாற்றம் அடைந்த ஒன்று மீண்டும் தனது பழைய நிலைக்குப் போக முடியுமா?
இந்தப் பூமி நீடித்து நிலைத்து இருக்க நமக்கு இன்று தேவைப்படுவது ஒரு தொலைநோக்கு தரிசனம். உடனடி நலன்களைக் குறிக்கோளாகக் கொண்ட, சுரண்டுகின்ற, குறுகிய கால லாபத்தை தனது இருப்பின் அடிப்படையாகக் கொண்ட அரசுகளால் இத்தகைய நீண்ட காலப் பார்வையை அளிக்க முடியுமா? நமது குறுகிய கால நம்பிக்கைகள், வேண்டுதல்களுக்கு விடையாக இருக்கக்கூடிய, நமது தனி மனித சுதந்திரத்தின் பாதுகாவலனாக விளங்கக்கூடிய ஜனநாயகமே, மனித குலத்தின் இறுதி விளையாட்டாக அமைந்துவிடுமோ? நமது மிகப்பெரிய முட்டாள்தனங்களில் ஒன்றாக விளங்கக் கூடிய குறுகிய காலப் பார்வையையே ஜனநாயகமும் பிரதிபலிப்பதால்தான் அது நம்மிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளதோ என்னவோ? முழுமையாக நிகழ்காலத்தில் வாழவும் முடியாத, எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வையும் இல்லாத காரணத்தால் நாம் விலங்குகளாகவும் இல்லாமல், தீர்க்கதரிசிகளாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் உள்ள விநோத பிராணி களாக வாழ்கின்றோம். நமது அதிசயத்தக்க அறிவாற்றல், வாழ்வதற்கான நமது உள்ளுணர்வை வெற்றி கொண்டுவிட்டது உபரியான பொருட்கள். நாம் இழந்துவிட்ட உணர்ந்து அறிய முடியாத அற்புதத்திற்கு ஈடாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நாம் இந்தப் புவிக்கோளைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு எழுத்தாளராக, படைப்பிலக்கியவாதியாக சிந்திக்கும்போது எனக்கு ஒரு வினா எழுவது உண்டு. எப்பொழுதும் நடந்தவற்றை அப்படியே சித்திரிக்க முயற்சிக்கும் போது, மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருப்பவற்றைக் குறைத்துக் காட்டுவதாக ஆகிவிடாதா? என்பதுதான் அது. அவ்வாறு எழுதுவது ஒரு மிகப்பெரும் உண்மையை மறைக்கிறதா? நமக்குத் தேவையாக இருப்பது ஒரு வன விலங்கின் ஊளையாகவோ, மாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி கொண்ட ஒரு கவிதையின் கூர்மையாகவோ இருக்கும்போது, எழுச்சி ஊட்டாத, நடப்பவற்றை அப்படியே தரக்கூடிய எழுத்துகளை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளேனா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவில் நடைபெறும், வஞ்சகமான, பார்ப்பனீய, அதிகார வர்க்கக் கோப்புகளும், ‘உரிய வழியாக விண்ணப்பிக்கவும்’ ஆகிய தன்மைகளை உடைய அரசாட்சியும், அதன் ஒடுக்குமுறையும் என்னை ஒரு குமாஸ்தாவாக ஆக்கிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. உலகின் மிகவும் விருப்பமான புதிய வல்லரசின் வன்முறையை, வெளிப்பூச்சுகளை அகற்றி, வெளி உலகிற்குக் காட்ட வித்தியாசமான கருவிகள் தேவைப்படுகின்றன என்பதை வேண்டுமானால் எனது செயல்பாட்டுக்கான காரணமாகக் கூறமுடியும். உரிய வழியிலான ஒடுக்குமுறை, சில நேரங்களில் உரிய வழியிலான எதிர்ப்பை உருவாக்கக்கூடும்.
1915-ஆம் ஆண்டு துருக்கியில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர். அந்த இனப்படுகொலை குறித்து இஸ்தான்புல்லில் கடந்த 2008-ஆம் ஆண்டு நான் பேசினேன். இனப்படுகொலை, அந்த இனப்படுகொலையை மறுத்துக்கூறல், ‘முன்னேற்றத்திற்கும்’ இனப் படுகொலைக்கும் உள்ள தொப்பூழ் கொடி உறவு போன்றவற்றைப் பற்றியதாக என் பேச்சு அமைந் திருந்தது.
துருக்கியில், ஆர்மீனிய இனப்படுகொலையை மேற்கொண்ட அரசியல் கட்சி ஐக்கியத்திற்கும் முன்னேற்றத்திற்குமான குழு என்று அழைக்கப் பட்டது என்ற உண்மை என்னை எப்போதும் வியக்கவைத்துள்ளது.
இன்றைய சொல்லாடலில் கூற வேண்டுமானால், நவீன, சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தின் இரண்டு தூண்களாக உள்ள தேசியவாதத்திற்கும், வளர்ச்சிக்குமான உறவு குறித்தே எனது சமீபத்திய கட்டுரைகள் அமைந்துள்ளன.
தேசியவாதம், வளர்ச்சி ஆகிய இரண்டும், அவற்றின் தீவிர வடிவத்தில், அணு ஆயுதப் போர், பருவநிலை மாற்றம் ஆகிய ஊழிக்காலப் பேரழிவைக் கொண்டு வருவதற்கான சாத்தியத்தை தம் உள்ளே கருக்கொண்டுள்ளன.
சோவியத் யூனியனும், பெர்லின் சுவரும் வீழ்ச்சியடைந்த ஒரு சில மாதங்களிலேயே, ஒரு காலத்தில் அணிசேரா இயக்கத்தின் தலைவராக விளங்கிய, இந்திய அரசாங்கம் மிகப்பெரிய பல்டி அடித்து, புதிய ஒற்றைத் துருவ உலகின் சக்கர வர்த்தியான அமெரிக்காவுடன் ழுமுமையாக அணி சேர்ந்துவிட்டது.
ஆட்டத்தின் விதிகள் திடீரென, முழுமையாக மாறிவிட்டன. வெளி உலகத்தோடு அதிகம் தொடர்பு இல்லாத கிராமங்களில் - காடுகளின் மத்தியில் வாழ்ந்த மக்களுக்கு, (இவர்களில் பலர் பெர்லின் - சோவியத் யூனியன் என்ற வார்த்தைகளை ஒரு போதும் கேட்டிருக்க மாட்டார்கள்) அந்த தொலைதூரப் பகுதிகளில் நடந்த சம்பவங்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கப்போகிறது என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க மாட்டார்கள். பிலாய், பொக்காரோ போன்ற மிகப்பெரிய இரும்பு ஆலைகளும், மிகப் பெரிய அணைகளும் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கக்கூடிய சோவியத் மாதிரியின் அடிப்படை யிலான வளர்ச்சிப் பாதையை 1950-களில் இந்தியா தேர்வு செய்த போதே இந்த (பழங்குடியின - கிராமப்புற) மக்களின் நிலஉடைமை இழப்பும், வாழிடங்களில் இருந்து பெயர்க்கப்படுவதும் ஏற்கனவே தொடங்கிவிட்டது. தனியார் மயம், கட்டமைப்பு சீர்திருத்தம் ஆகியவை இந்தப் போக்கை எண்ணிப் பார்க்க முடியாத அளவு வேகம் கொள்ளச் செய்துவிட்டன.
இன்று, ‘பொருளாதார சீர்திருத்தம்’, ‘தாராள மயம்’, ‘தனியார் மயம்’ ஆகிய வார்த்தைகள் ‘முன்னேற்றம்’, ‘வளர்ச்சி’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. இன்று ‘சுதந்திரம்’ என்பது மனித உணர்வு என்பதைவிடப் பல்வேறு வகையான உடல் வாசனைத் திரவங்கள் என்று ஆகிவிட்டது. தற்போது ‘சந்தை’ என்ற சொல், நமக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறி போன்ற பொருள்களை வாங்கச் செல்லும் இடத்தைக் குறிக்கவில்லை. அது, இடமில்லாத வெளியாக, முகம் இல்லாத பெரும் நிறுவனங்கள் வியாபாரம் செய்யும் இடமாக மாறிவிட்டது. நீதி என்பது மனித உரிமைகள் ஆகிவிட்டது. இந்த மொழித் திருட்டு, வார்த்தைகளைக் கைப்பற்றி மறைத்து குறிப்பிட்ட சொல்லுக்கு, இதுவரை வழங்கி வந்ததற்கு அவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்தும் போக்கு, தங்களது நோக்கத்தை மறைத்து குறிப்பிட்ட சொல்லுக்கு, இதுவரை வழங்கி வந்ததற்கு மாறாக நேர் எதிரான பொருளை ஏற்றுவது ஆகியவை புதிய ஒடுக்குமுறையாளர்களின் கேந்திரமான வெற்றியாக அமைந்துவிட்டது.
இவர்களின் இந்த வெற்றியானது. இவர்களை எதிர்ப்பவர்களை ‘வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’, ‘முன்னேற்றத்திற்கு எதிரானவர்கள்’, ‘சீர்திருத்தத்திற்கு எதிரானவர்கள்’, உச்சபட்சமாக ‘தேசத்திற்கு எதிரானவர்கள்’ எனக்கூறி விளிம்புக்குத் தள்ளப் பயன்படுகிறது. ஒரு நதியைக் காப்பாற்றுவது குறித்தோ, ஒரு வனத்தை அழிவில் இருந்து
காப்பாற்றுவது குறித்தோ பேசிப் பாருங்கள்! ‘முன்னேற்றத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?’ என்பார்கள். அணைகள் கட்டப்படுவதால் தங்களது விவசாய நிலங்களை இழக்கும் விவசாயிகளிடமும், வீடுகள் இடிக்கப்படுவோரிடமும் அவர்கள் கேட் பார்கள் - ‘உங்களிடம் மாற்று வளர்ச்சித் திட்டம் இருக்கிறதா?’ என்று மக்களுக்கு அடிப்படைக் கல்வி, மருத்துவ வசதி, சமூகப் பாதுகாப்பு வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது என்று நம்புவோரைப் பார்த்து அவர்கள் கூறுவார்கள். ‘நீங்கள் சந்தைக்கு எதிரானவர்கள்’ என்று.
இந்தியாவில், 20 ஆண்டு காலம் பின்பற்றப் பட்ட இத்தகைய ‘வளர்ச்சி’யானது திடீர் செல்வம் - அதனுடன் சேர்ந்து வரும் திடீர் மதிப்பு ஆகியவற்றால் மதிமயங்கி இருக்கும் மிக அதிக எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்கம் ஒன்றையும் - அதைவிட மிக மிக அதிக எண்ணிக்கையுடைய என்ன செய்வது என்று அறியாத அடித்தட்டு வர்க்கத்தையும் உருவாக்கி உள்ளது. வெள்ளம், வறட்சி, பெரும் அணைகள், சுரங்கங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றால் கோடிக்கணக்கான மக்களின் நிலங்கள் பறிக்கப் பட்டன. அவர்கள் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தத் திட்டங்கள் அனைத்தும் ஏழைகளுக்காகவே என்று கூறப்பட்டு உருவாக்கப்படுகின்றன. ஆனால், இவற்றின் உண்மையான நோக்கம் புதிய மன்னர்களின் (பணம் படைத்த மேல்தட்டு வர்க்கம்) அதிகரிக்கும் தேவைகளுக்குச் சேவை செய்வதே ஆகும்.
‘வளர்ச்சி’ குறித்த விவாதத்தின் மையத்தில் இருப்பது நிலத்திற்கான போராட்டமே ஆகும். ப.சிதம்பரம் இந்தியாவின் நிதி அமைச்சராக ஆவதற்கு முன் என்ரான் நிறுவனத்தின் வழக்கறிஞராக இருந்தார்; ஒரிசா மாநிலத்தின் நியம்கிரி மலைகளை அழித்துக்கொண்டிருக்கும் பன்னாட்டுச் சுரங்க நிறுவனமான ‘வேதாந்தா’வின் இயக்குநர்கள் குழுவில் இருந்தார். ஒரு ஆண்டுக்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவின் மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் நகரங்களில் வாழ்வதே தனது தொலைநோக்குப் பார்வை என்று கூறியிருந்தார். இந்த ‘தொலைநோக்குப் பார்வையை’ நனவாக்க நாம் கற்பனைகூடச் செய்திராத அளவு சமூகப் பொறியியல் தேவை. இதற்கு, 50 கோடி மக்களை ஆசை காட்டியோ, நிர்ப்பந்தப்படுத்தியோ கிராமங்களை விட்டு வெளியேற்றி நகரங்களுக்குக் குடிபெயரச் செய்தாக வேண்டும். இதற்கான நடைமுறைகள் ஏற்கனவே பின்பற்றப்படுகின்றன. இது இந்தியாவை ஒரு போலீஸ் அரசாக மாற்றி வருகிறது.
தங்கள் நிலங்களை விட்டுத்தர மறுக்கும் விவசாயிகள், பழங்குடிகள் துப்பாக்கி முனையில் நிலத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். இதனால் தான் சிதம்பரம், எளிதாக நிதி அமைச்சகத்தில் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கு மிக எளிதாக இடம் மாற முடிந்திருக்கிறது. இரு அமைச்சகத்தையும் துளைகள் உள்ள ஒரு சவ்வுதான் பிரித்திருக்கிறது. அவரின் இந்த ‘தொலைநோக்குப் பார்வையின்’ அடிஇழையாக இருப்பது இந்தியாவின் பரந்த நிலப்பரப்புகளையும், நாட்டின் இயற்கை வளங் களையும் மக்களிடமிருந்து பறித்து, அதைப் பெரும் தொழில் நிறுவனங்கள் சுரண்டுவதற்கு விட்டுத் தரும் திட்டம். இதன் மூலம் நாட்டின் விடுதலைக்குப் பின் கொண்டுவரப்பட்ட நிலச்சீர்திருத்தக் கொள் கையைக் குழி தோண்டிப் புதைப்பதுதான் அவர்களின் நோக்கம்.
ஏற்கனவே, காடுகள், மலைகள், நீராதாரங்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் கொள்ளை யடிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, தனது அடிப் படைகளை மறந்த, இயற்கை அழிப்பை மேற் கொள்கிற அரசு துணைபோகிறது. இந்தியாவின் கிழக்குப் பகுதியில், பாக்சைட் மற்றும் இரும்புத் தாதுச் சுரங்கங்கள் இயற்கைச்சூழல் முழுவதையும் அழித்துவருகின்றன. இதனால், வளமான நிலங்கள், பாலைவனமாக மாறி வருகின்றன. இமயமலைப் பகுதியில் நூற்றுக்கணக்கான அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றால் ஏற்படும் விளைவுகள் பேரழிவாகத் தான் இருக்கும். கங்கை உள்ளிட்ட இந்தியாவின் புனித நதிகள் பலவும், நகரக் கழிவுகளையும், தொழிற்சாலைக் கழிவுகளையும் ஏந்திச் செல்லும் சாக்கடைகளாக மாறிவிட்டன. ஒரு ஆறு கூடத் தனது தீரத்தில் முழுமையாக ஓடிக் கடலைச் சென்று அடைவதில்லை.
ஒரு ஆறு கடலில் கலப்பது என்பது தண்ணீரை வீணாக்குவது என்ற முட்டாள்தனமான கருத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஆறுகள் இணைக்கப் படவேண்டும் என்று ஒரு தலைப்பட்சமாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்துவது என்பது மலைகளைக் குடைந்து, காடுகளை அழித்து, நதிகளின் டெல்டா பகுதிகளுக்கும், முகத்துவாரங் களுக்கும் அழிவை உண்டாக்குவது என்று பொருள். வேறு வகையாகக் கூறுவது என்றால், துணைக் கண்டத்தின் இயற்கைச் சூழலை முற்றிலும் அழிப்பது என்பதே. உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி பி.என்.கிர்பால், ஓய்வு பெற்ற பின்னர் கோ-கோ கோலா நிறுவனத்தின் சுற்றுச் சூழல் வாரியத்தில் சேர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர சந்தைப் பொருளாதாரக் கொள்கை களால், பயிர் சாகுபடி முறைகளில் கவலை தரத் தக்க மாற்றங்கள் உருவாகி உள்ளன. உள்ளூர் மண் நிலைமைகளுக்கும், தட்பவெப்ப நிலைகளுக்கும் ஏற்ற நீடித்த விவசாயத்துக்கு ஏற்ற உணவுப் பயிர் களுக்குப் பதிலாக, தண்ணீரைக் குடிக்கும் ஒட்டுரக, மரபணு மாற்ற பணப் பயிர்கள் சாகுபடி அதிகரித்து உள்ளது. இத்தகைய பணப்பயிர்கள் அதிக அளவு சந்தையைச் சார்ந்து இருப்பதுடன் மட்டுமின்றி, ரசாயன உரங்கள், பூச்சிகொல்லிகள், வாய்க்கால் பாசனம் மற்றும் நிலத்தடி நீரை அளவில்லாமல் உறிஞ்சுவதைச் சார்ந்து உள்ளன.