உத்தபுரம்  தலித் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் 20-10-2011 அன்று அக்கிராமத்தின் இரு பெரும் சமூக மக்களிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.அஸ்ரா கார்க் முன்னிலையில் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் வருமாறு :

1.     தலித் மக்களின் முத்தாலம்மன் கோவில் வழிபாட்டு உரிமை, அரசமர வழிபாட்டு உரிமை நிலைநாட்டப்படும். இம்மக்களின் கோவில் வழிபாடு, அரசமர வழிபாடு உரிமைகளுக்கு யாரும் இடையூறு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

2.     2007ல் தீண்டாமைச்சுவர் உடைக்கப்பட்டு தலித் மக்களின் பொதுப்பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட பொதுப்பாதையை அம்மக்கள் சுதந்திரமாகவும், முழுமையாகவும் பயன்படுத்திக் கொள்வார்கள். இப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் அகற்றப்படும். இடையூறுகள் அனுமதிக்கப்பட மாட்டாது.

3.     உத்தபுரத்தில் கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு சம்பவங்களின் போது இரு தரப்பினர் மீதும் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

4.     உத்தபுரம் மக்களின் பொதுப்பயன்பாட்டிற்காக பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்துத் தரப்படும்.

5.     முத்தாலம்மன் கோவில் வளாகம் பட்டா சம்பந்தமான பிரச்சனையில் இரு தரப்பினரும் அரசு நிர்வாகத்தை அணுகிக் கொள்ளலாம்.

6.      சட்டத்தையும், அமைதியையும் பாதுகாக்க இரு தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தருவது. இரு தரப்பு மக்களும் ஒற்றுமையுடனும், இணக்கத்துடனும் வாழ்வது.

இந்த ஒப்பந்தத்தில் தலித் மக்கள் சார்பாக தோழர்கள் பொன்னையா, சங்கரலிங்ம் ஆகியோரும் மாற்று தரப்பினர் சார்பாக ஆடிட்டர் திரு.முருகேசன் அவர்களும்  கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்ததின் மூலம் தலித் மக்களுக்கு 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட சில உரிமைகள் மீட்கப்பட்டுள்ளன. சில புதிய வாய்ப்புகளும் அவர்களுக்கு உருவாகியுள்ளன. இரு தரப்பு மக்களும் பயனடையக்கூடிய புதிய வாய்ப்புகள், மற்றும் சூழலும் இந்த ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் உத்தபுரத்தில் சமூக நீதியையும், இணக்கத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலை நாட்ட உதவும் ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

இத்தகைய ஒப்பந்தமும் சூழலும் உருவாக கடந்த பல ஆண்டகளாக ஒன்றுபட்டுப் போராடிய தலித் மக்களுக்கும் இத்தகைய ஒப்பந்தம் ஏற்பட ஒத்துழைப்பு தந்துள்ள இதர சமூகத்தினருக்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பல தலித் அமைப்புகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் இத்தகைய ஒப்பந்தம் ஏற்பட பல்வேறு இயக்கங்களையும் தலையீடுகளையும் கடந்த காலங்களில் மேற்கொண்டுள்ளன.

காலதாமதமாகியுள்ள போதிலும், இத்தகைய ஒப்பந்தம் உருவாக மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இதர அதிகாரிகள் மேற்கொண்ட முன்முயற்சிகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்று பாரட்டுகிறது. இந்த ஒப்பந்தத்தை உறுதியாகவும், விரைவாகவும் அமல்படுத்துமாறும், அதன் மூலமே தற்போது ஏற்பட்டுள்ள சூழலை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் முடியும் என்பதையும் தமிழ்நாடு அரசிற்கும், மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிசுட்டிக்காட்டி கேட்டுக் கொள்கிறது. அதற்கான அனைத்து முயற்சிகளிலும் இணைந்து செயல்பட்டு சமூக நீதியையும், அதன் அடிப்படையிலான சமூக நல்லிணக்கத்தையும் நிலை நாட்ட முன்வருமாறு அனைத்து ஜனநாயக சக்திகளையும் அனைத்துப்பகுதி மக்களையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேட்டுக் கொள்கிறது.

(தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக மாநிலத்தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை)
Pin It