நாடு முன்னேறி வருகிறது. பொருளாதாரத்தில், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் இராணுவ பலத்தில், தொழில் வளர்ச்சியில் என பல துறைகளிலும் நாடு பீடு நடை போட்டு முன்னேறி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நாட்டின் முன்னேற்றத்திற்கு அறிகுறிகளாக நகரங்களில் பெருகி வரும் வசதிகளைக் கூறுகிறார்கள். மிகப்பிரம்மாண்டமான மால்கள், மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகள், பளபளக்கும் கண்ணாடிகளை இழைத்து கட்டபப்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் கட்டிடங்கள், அங்கு பணிபுரியும் அதிகாரிகள், நாள்தோறும் சந்தையில் அறிமுகமாகும் பல இலட்சம் விலை மதிப்புடைய புதிய ரக கார்கள், இரு சக்கர வாகனங்கள், பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புடைய கைபேசிகள் ஆகியவற்றைத்தான் திரும்ப திரும்ப காட்டுகிறார்கள். ஆனால் அதே சமயத்தில் நகரங்களில் வாழ வழியின்றி சேரிகளில் வசிப்பவர்களின் நிலை குறித்தோ அவர்களின் வறுமை குறித்தோ எந்த ஊடகமும் காட்டுவதில்லை. நகரங்களிலுள்ள வீடற்றவர்களின் நிலை குறித்து எந்த செய்தியும் வெளியாவதில்லை.

வளர்ச்சித்திட்டங்களாக மேற்கு வங்கத்தில் நந்தி கிராமத்தில் மிகப்பெரிய சுரங்கங்களை தோண்டுவது, போஸ்கோ திட்டம் மும்பையிலும் ஹரியானாவிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது, போலாவரத்தில் பெரும் அணைகளை கட்டுவது போன்றவற்றை ஊடகங்கள் காட்டுகின்றன. இன்னொரு பக்கம் இத்திட்டங்களுக்காக கைப்பற்றப்பட்ட நிலங்களிலிருந்து இலட்சக்கணக்கில் விரட்டியடிக்கப்படும் மக்கள் குறித்து எந்த ஊடகமும் மூச்சு கூட விடுவதில்லை. தங்கள் நிலங்களை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம் என்று மக்கள் போராடுவதால் வேறு வழியின்றி ஊடகங்கள் இவற்றை வெளியிட்டாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்திய ஆட்சியாளர்கள் இதைத்தான் நாட்டின் வளர்ச்சிப்பாதை என்கின்றனர். இந்த வளர்ச்சி பாதையில் மேலும் மேலும் மக்கள் வறுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பதை ஐ.நா சபையின் ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. 177 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மனித மேம்பாட்டு ஆய்வில் வளர்ச்சியில் மிக பின்தங்கிய நிலையில் 127 இடத்தில் இந்தியா உள்ளது.

 அனைத்து மக்களும் இங்கு வளர்ச்சி அடைய முடியாது. ஏற்கனவே பணக்காரர்களாக உள்ளவர்களும் முதலாளிகளும் மேலும் வளர்ச்சி அடைவர். ஏழைகள் மேலும் ஏழைகளாவர். ஏனெனில், தொடர்ந்து பல ஆண்டுகளாக பன்னாட்டுக் கம்பெனிகளுக்காகவும் நாட்டின் கார்ப்பரேட்டுகளுக்காகவும் விளை நிலங்களும் கடற்கரை நிலங்களும் காடுகளும் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அங்குள்ள மக்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர். அல்லது தங்களது நிலங்களை விட்டுதராத மக்கள் போலீசாராலும் இராணுவத்தினாலும் விரட்டியடிக்கப்படுகின்றனர். இதுதான் நாடு முழுவதும் பல பத்து ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகள். சுதந்திரமடைந்த 1947லிருந்து 2000 வரை 6 கோடி மக்கள் கட்டாயப்படுத்தி வளர்ச்சித்திட்டங்களினர்ல் இடம் பெயரச் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மறுவாழ்வோ மறு குடியமர்வோ செய்யப்படவில்லை. இவர்கள் இதுவரை காணமல் போனவர்களாக உள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரிய விசயம். இது வளர்ச்சிப்பாதை அல்ல; ஒரு சில கம்பெனிகளுக்காக, தங்களின் வாழ்வாதாரத்திற்காக நிலங்களை சார்ந்திருக்கும் மக்களை விரட்டியடித்து அழிக்கும் பாதையாகும். இது ஒரு வகையில் வளர்ச்சி பயங்கரவாதமே. இந்த வளர்ச்சி பயங்கரவாதத்தின் பன்முகங்களை இங்கு காண்போம்:-

தற்போது கம்பெனிகளின் நில அபகரிப்புக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் நடந்து வரும் பகுதிகளாவன: கலிங்கநகர், போஸ்கோ, காசிப்பூர், நியாயம்கிரி, நந்திகிராமம், சிங்கூர், ஜெய்த்தப்பூர், யமுனா எக்ஸ்பிரஸ்வே, சென்னையிலும் செங்கையிலும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும் துணை நகர உருவாக்கங்களுக்கும் எதிராக நடந்து வரும் போராட்டங்கள், நாகையில் அனல் மின் நிலையங்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் என பட்டியல் தொடர்கின்றன. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயமே ஒவ்வொரு பன்னாட்டு கம்பெனிக்கும் அரசு வழங்கும் சலுகைகள்தான்.

ஒரிசாவில் கொரிய கம்பெனியான போஸ்கோவில் மிகப்பெரிய பங்குதாரராக இருப்பது நியூயார்க் வங்கி ஆகும். இதைத்தவிர மற்ற அமெரிக்க முதலீட்டாளர்களும் பெருமளவில் பங்குகளை கொண்டுள்ளனர்.

ஜெய்தாப்பூரில் அமையவிருக்கும் அணு உலையானது பொதுத் துறை நிறுவனமான என்.பி.சி.ஐ.எல்வினால் அமைக்கப்பட உள்ளது. ஆனால் இதற்கான உலைகள் பிரஞ்சு கம்பெனியான அரேவாவினாலும் நிதி உதவியானது பிரான்சினாலும் அளிக்கப்படுகிறது.

ஒரிசாவிலுள்ள நியாயம்கிரியில் வசித்து வரும் பழங்குடி மக்களின் நிலங்களை அபகரிக்கத் துடிக்கும் வேதாந்தா கம்பெனியின் செயல்பாடுகள் இந்தியாவில் நிலை கொண்டிருந்தாலும் அதன் தலைமையகம் லண்டனில் உள்ளது. அங்குள்ள பங்கு சந்தை பட்டியலில் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி கொண்டுள்ளது. அனில் அகர்வால் மற்றும் அவருடைய குடும்படுத்தினரால் கட்டுபடுத்தப்படும் பஹமாசிலுள்ள வோல்கன் முதலீட்டு நிறுவனத்தினால் அதிகமான பங்கு வகிக்கப்படுகிறது. மீதமுள்ள பங்குகள் சர்வதேச முதலீட்டாளர்களினால் வகிக்கப்படுகிறது.

காசிப்பூரில் பழங்குடி மக்களின் வாழ்வாதாரமான நிலங்களை அபகரித்து அவர்களின் போராட்டத்தை ஒடுக்கி வரும் உத்கல் அலுமினிய கம்பெனியின் பங்குகளில் 55 விழுக்காட்டினை ஆதித்யா பிர்லா குழுவினரின் இந்தல்காவும் 45 விழுக்காட்டை கனடா நாட்டைச்சேர்ந்த அல்கன் என்ற கம்பெனியும் வைத்துள்ளனர். இதில் இந்தல்காவின் பங்குகளில் 32 விழுக்காட்டை பிர்லாவின் கம்பெனிகளும் அறக்கட்டளைகளும் 31 விழுக்காட்டை வெளிநாட்டு கம்பெனிகளும் வைத்துள்ளனர். இதில் நியூயார்க்கின் மோர்கன் கியாரண்டி அறக்கட்டளையின் 9.3 விழுக்காடு பங்குகளும் அடக்கம். சுருக்கமாக இந்தல்கா கம்பெனியில் பிர்லா குழுவினரை விட வெளிநாட்டினரே அதிகம் பங்குகளை வைத்துள்ளனர்.

டாடாவின் நிறுவனங்களும் அறக்கட்டளைகளும் டாட்டா மோட்டார் கம்பெனியில் 34 விழுக்காடு பங்குகளையும் 19 விழுக்காடு பங்குகளை நியூயார்க் மற்றும் லக்சம்பர்க் பங்கு சந்தைகளிலும் வைத்துள்ளன. டாட்டா மோட்டாரின் வெளிநாட்டு பங்குகள் 42 விழுக்காடு ஆகும்.

 மேற்கு வங்கத்தில் முதலீடு செய்துள்ள சலீம் குழுமத்தைப் பற்றிய தகவல்கள் அவ்வளவாக கிடைக்கவில்லை. எனினும், சலீம் குழுமம் ஹாங்காங்கை தலைமையகமாகக் கொண்டு ஆசியா முழுவதும் தொலை தொடர்புத்துறைகளிலும், கட்டுமானங்களிலும், உணவு உற்பத்திப் பொருள்களிலும் மற்றும் இயற்கை கனிம வளங்களிலும் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இதில் 11.3 விழுக்காடுதான் ஆசியாவில் வைத்துள்ளது. மீதி 32 விழுக்காடு பங்குகள் வரை வட அமெரிக்காவிலும் ஐரோப்பிவிலும் வைத்துள்ளது.

இந்த விவரங்கள் முடிவில்லாமல் நீளுகின்றன. அவர்களின் இந்த வளர்ச்சி பயங்கரவாத பட்டியலில் இந்தியாவிலேயே 4 இலட்சம் மக்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து வெளியேற்றக்கூடிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மும்பை விமான நிலையத்தை தனியார்மயமாக்கியதிலிருந்து அதில் முக்கிய பங்குதாரர்களான ஆந்திராவைச் சேர்ந்த ஜி.வி.கே பவர் மற்றும் கட்டுமானக்கம்பெனி 4 இலட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு தரப் போவதாக கூறியுள்ளது. இவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக மும்பை விமான நிலையத்தை சுற்றியுள்ள சேரிகளில் வசித்து வருபவர்கள். விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மக்கள் வசித்துவரும் 276 ஏக்கர்கள் தேவைப்படுகின்றன என்று கூறி அவர்களை விரட்டத் தொடங்கி விட்டது. உண்மையில் இந்த 276 ஏக்கர்களிலும் மால்களும் ஹோட்டல்களும் கட்டுவதற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக எந்த கவனமும் செலுத்தப்படாத நாட்டின் வரலாற்றிலேயே இது வரை இல்லாத மிகப்பெரிய திட்டம் மும்பைக்கும் டில்லிக்கும் இடையிலான தொழில் நகரங்கள் கட்டும் திட்டம் ஆகும். டில்லி -– மும்பை தொழிற்சாலை மேம்பாடுக் கழகத்தினால் இந்த இரு நகரங்களுக்கு இடையில் 24 தொழில் நகரங்கள் கட்டப்பட உள்ளன. அதாவது, 5000த்திலிருந்து 5500 சதுரகிலோ மீட்டர் வரையிலான 1483 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நகரங்கள் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்தில் 3 துறைமுகங்கள், 6 விமான நிலையங்கள், மற்றும் அதிவிரைவு சரக்கு வாகனங்கள் செல்லும் தடையில்லா பாதை ஆகியவை கட்டப்பட உள்ளன. முதல் கட்டமாக, கடந்த ஜுலையில் நிதி அமைச்சர் ஒவ்வொரு நகரத்திற்கும் 2500 கோடி ரூபாய் அளிப்பதாக ஏற்றுக் கொண்டுள்ளார். இத்திட்டம் முழுமைக்கும் 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் எத்தனை கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இயக்கங்களில் எப்போதும் பாடப்படும் பாடல் ஒன்று உண்டு. அது நாட்டைக்கூட விலைபேசி இரகசியமாக விற்று விடுவார்கள் இலஞ்சத்திற்கு பிறந்த இந்த ஆட்சி அமைப்புடா என்று பாடுவார்கள் . அதைத்தான் உறுதிப்படுத்துகிறது இந்த திட்டங்கள்.

-சேது ராமலிங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It