துாத்துக்குடி மக்கள் வேறு எதுவும் கேட்கவில்லை. சுவாசிப்பதற்கும் நல்ல காற்றும் குடிப்பதற்கு நல்ல குடிநீரும்தான் கேட்டனர். அதற்குப் பதிலாக அவர்கள் பெற்றது என்னவோ தடியடியும் துப்பாக்கிச் சூடும்தான்.

காற்றில் நஞ்சையும், குடிநீரில் இரசாயனக் கழிவையும் கொட்டி வரும் ஸ்டெர்லைட்டை எதிர்த்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போராட்டங்கள் தற்போது தீவிரமாகியுள்ளன. நேற்று முன் தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட அமைதியாகச் சென்ற பேரணியினர் மீது எந்த வித முன்னறிவிப்பும் இன்றி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஆனால் இந்தப் போராட்டங்களை சில ஊடகங்கள் கலவரங்களாக சித்தரித்தன. சில நாளிதழ்கள் மக்களின் உணர்வுப்பூர்வ போராட்டத்தை வெறியாட்டம் என்று தலைப்புச் செய்தியிட்டன. சில இதழ்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மீனவ மக்களுக்கு வன்முறைக்கும்பல் என்று முத்திரை குத்தினர். இந்த குறிப்பிட்ட ஊடகங்கள் யாருமே போலீஸ் சீருடை அணியாமல் வேனில் நின்று தீவிரவாதிகளை சுடுவது போல அதி நவீனத்துப்பாக்கியால் சுட்டதைக் கண்டிக்கவில்லை. இதை எப்படி ஒப்பிடுவது? சொந்த மக்கள் தீவிரவாதிகளாக சுடப்படுவதை சுடுபவர்களின் மனநிலையுடன் அய்க்கியமாகிப் பார்க்கும் பார்வையை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்?

tuticorin dinamalar

ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு ஈழப்போராட்டம் நசுக்கப்பட்டபோது அந்த இன அழிப்புக்கு உடந்தையாக இருந்தவா்கள் குறித்து கவிஞர் தமிழ்நதி, ரத்தச் சோறு தின்பவர்கள் என்று மனவேதனையின் உச்சத்தை வார்த்தைகளால் வடித்திருந்தார். உடந்தையாக இருந்தவர்களுக்கும் தற்போது ஊடகங்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களை எழுதியிருந்த விதத்திற்கும் என்ன வேறுபாடு?

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை (பெரும்பாலானவர்கள் தலித் மக்கள்) போலீஸ் விரட்டியடித்தபோது அவர்கள் தப்புவதற்காக தாமிரபரணி ஆற்றில் குதித்தனர். அவர்கள் நீந்திக் கரையேற விடாமல் இரு கரைகளிலும் போலீசார் நின்று கரையேறுபவர்களை தலையில் அடித்து நீரில் ஆழ்த்திக் கொன்றனர். அப்போது அந்தப்பகுதியில் இருந்த ஆதிக்க சாதியினர் வெகு சாதாரணமாக கூறியது இன்னும் மனதில் வலியாக உள்ளது, “இவன்களுக்கு இது வேணும்தான்”. இதற்கும் ஊடகங்கள் தற்போது நடந்து கொண்டதற்கும் என்ன வேறுபாடு?

தமிழகத்திலுள்ள சில அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சி ஊடகங்களும் அப்படி ஒரு போராட்டமே நடக்கவில்லை என்பதுபோன்று பாரா முகம் காட்டின. முக்கியமாக தந்தி தொலைக்காட்சி சம்பவம் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து தமிழக மனங்கள் கொதித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் சேனலில் வேறு செய்திகள் ஓடிக்கொண்டிருந்தன.

வெல்க தமிழ் என்று தலைப்பிட்டு டீக்கடைகளிலும், சலுான்களிலும் பரவலாகவும் அதிகமாகவும் விற்பனையாகும் தினத்தந்தி, மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியது, கும்பல் கலவரத்தில் ஈடுபட்டது, போலீஸ் மீது தாக்குதல், 20 போலீசார் படுகாயம் என்று அப்பட்டமாக போலீசார் அளி்த்த செய்தியை வெளியி்ட்டது. 

இரண்டாம் நாள் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து தலைப்புச் செய்தியானது எப்படி வெளியிடப்பட்டது? இரண்டாம் நாள் கலவரம் என்றும், போலீஸ் வாகனம் தீ வைத்து எரிப்பு, போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு என்று துணைத்தலைப்புகள் வைத்து செய்திகள் வெளியிட்டிருந்தது. தலைப்பு புகைப்படமாக போலீசை முன் வைத்திருந்தது. செய்தி உள்ளே கலெக்டரைத் தாக்க முயற்சி என்று எழுதப்பட்டிருந்தது. அப்படி ஒரு சம்பவத்தை மற்ற எந்த ஊடகமும் வெளியிடவில்லை. பாமரா்களுக்குப் புரியும்படி தொடங்கிய இதழ் எப்படித் தரம் இறங்கியது என்பது புரியவில்லை.

தினமலரைப் பொருத்தவரை தொடக்கத்திலிருந்தே வேதாந்துடன் அப்படி ஒரு இயற்கையான நெருக்கம். ஸ்டெர்லைட்டை எதிர்ப்பவர்கள் சமூக விரோதிகள், அந்நிய கைக்கூலிகள், தேச விரோதிகள் என்று பாஜக ஆர்எஸ்எஸ்ஸின் முகமே அந்த நாளிதழில் வெளிப்படும். அவர்களின் வெறுப்பு மொழியே இவர்களின் பத்திரிகை மொழியாக இருந்து வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்களின் போராட்டங்களை வெறியாட்டம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்ட ஒரே நாளிதழ் தினமலர்தான். அதனிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. ஒரு வேளை இந்தியாவில் பாசிசம் அமல்படுத்தப்பட்டால் தினமலர் கட்டமைக்கும் மனோபாவம் அதை சுகமாக ஏற்றுக்கொள்ளும்.

இரண்டாம் நாள் துப்பாக்கிச்சூடு தினமணியில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்படவில்லை. ஆனால் முதல் பக்கத்தில் இரண்டாவது செய்தியாக 4 பத்தியில் வெளியிடப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் கம்பெனியின் விளம்பரங்கள் பெறுவது பாதிக்கப்படும் என்ற அக்கறையும் அதிலிருந்தது. 

எஸ்வி சேகர் விவகாரத்தில்அவர் வீட்டில் கல்லெறி வீசிப் போராட்டம் நடத்திய பின்னர் , அம்பானி நடத்தும் நியூஸ்18 இன் அணுகுமுறையே மாறி விட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அச்சுறுத்தல் விடப்பட்டது. அந்த எச்சரிக்கையின்போதே இது போன்ற மக்களின் போராட்டங்களை அடக்கி வாசிக்கவும் குறிப்பு அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மிகவிரிவாக 24 மணி நேர நேரடித் தொலைக்காட்சியாக ஒளிபரப்பை மேற்கொண்டது தற்போது சுருக்கிக் கொண்டதன் பின்னணிதான் என்ன?

நியூஸ் 7ஐப் பொருத்தவரை மிகக்குறைவான செய்திகளையே வெளியிட்டன. ஒரு வேளை காப்பரும் கார்னெட்டும் கனிம வளம்தான் என்ற புரிதல் ஏற்பட்டு ஞானம் அடைந்திருக்கலாம். 

பாலிமர், சன் நியூஸ், கலைஞர் நியூஸ், சத்யம் நியூஸ், காவேரி நியூஸ் ஆகியன தொடர்ந்து போராட்டச் செய்திகளை வெளியிட்டன. இவை மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. செய்தி நாளேடுகளைப் பொருத்தவரை, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினகரன், தி இந்து (ஆங்கிலம் மற்றும் தமிழ்), மாலை முரசு, மாலை மலர், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தீக்கதிர்ஆகியனவும், இணைய இதழ்களான தி பிரிண்ட், கவுண்ட்டர் கரண்ட்ஸ், வினவு ஆகியன ஏற்படுத்திய தாக்கத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.

அதே போல டவுன் டு எர்த் போன்ற சுற்றுச்சூழல் இதழ்களும் அவற்றின் ஸ்டெர்லைட் குறித்த கட்டுரைகளும் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pin It