தமிழகத் தேர்தலில் வாக்காளத் தமிழர்கள் திமுகவுக்கு மரண அடி கொடுத்து விட்டார்கள். ஒரு பெரும் சுனாமியைப் போல மக்கள் ஆழிப் பேரலைகளாய் திரண்டுவந்து திமுக-காங்கிரஸ் ஊழல் கோட்டைகளைச் சூறையாடி விட்டனர். தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு அவர்கள் குட்டிச்சுவர்களைப் போலக் காட்சி தருகின்றனர். அஇஅதிமுக தனிப் பெரும்பான்மை பெற்று செல்வி ஜெயலலிதா தலைமையில் 33 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்று விட்டது.

தேர்தல் முடிவுகள் வெளியானபின் கறை வேட்டிகள், படகுக்கார்கள், கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் பிளக்ஸ் போர்டுகள் காணாமல் போய்விட்டன. இனி அவர்கள் கொள்ளையடித்த பல லட்சம் கோடிகளைப் பதுக்குவதில் ஈடுபடுவார்கள். எப்படியும் ஆட்சி கிடைக்கும் என்று கருணாநிதி குடும்பம் பல கோடி ரூபாய்களை வாக்காளர்களுக்கு லஞ்சமாக வாரி இறைத்தது. ஊழல் பணத்தை மக்கள் ஊதித் தள்ளி விட்டனர். இலவசங்களாலும் பணத்தாலும் மக்களை ஏமாற்றி விடலாம் என்று கருணாநிதி நினைத்தார். அவர் ஆசையில் மக்கள் மண்ணைப் போட்டுவிட்டனர். அவரோடு சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியையும், விடுதலைச் சிறுத்தைகளையும் மக்கள் பதம்பார்த்து விட்டனர். சாதி, மதம், இனம் போன்றவற்றையும் மக்கள் இம்முறை தகர்த்தெறிந்து விட்டனர்.

அஇஅதிமுக, தேமுதிக, இடதுசாரிக்கட்சிகளைக் கொண்ட அணி பலமிக்கதாக அமைந்தது. ஏற்கெனவே விலைவாசி, மின்வெட்டு, கொலை கொள்ளைகள்,மணல், அரிசிக் கடத்தல்கள், பலவித ஊழல்களில் மக்கள் தத்தளித்தனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்ததும் மக்களின் கோவா வேசம் கூடிவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் கருணாநிதி குடும்பம் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் வகித்தது. கருணாநிதி மகன்கள், மகள்கள், பேரன்கள், சினிமா, டி.வி, பத்திரிகை என அனைத்திலும் ஏகபோக ஆதிக்கம் செலுத்தினர். அவர்களின் அனுமதியின்றி திரைப்படத்தைத் திரையிட முடியாது என்ற நிலை ஏற்பட்டது. சினிமா உலகமே பயத்தில் உறைந்து கிடந்தது.

பேராசை கொண்ட அமைச்சர்கள் பலர் கருணாநிதியைப் போல தங்களது வாரிசுகளுக்கும் சீட்டுகளை வாங்கி நிற்க வைத்து அடியோடு தோற்றனர். திமுக தன்னை நம்பாமல் நடிகர்கள் வடிவேலு, குஷ்புவை நம்பிக் களமிறங்கியது. தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் இருந்ததால் திமுக வழக்கமான ரௌடித்தனம், அராஜகத்தில் இறங்க முடியவில்லை. இதனால் மக்கள் பயமின்றி வாக்களித்தனர். ஆட்டமாய் ஆடிய அழகிரியும், தாதாக்களும் போன இடம் தெரியவில்லை.

தமிழ் தேசிய இயக்கமான சீமான் போன்றவர்கள் செய்த பிரச்சாரம் திமுக-காங்கிரசுக்கு எதிராக இருந்தது.

மதிமுகவின் நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் திமுக ஆதரவுப் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்கள் ஆசை நாசமானது.

அதிமுக 146, தேமுதிக 29, சிபிஎம் 10, சிபிஐ 9 மற்றும் கூட்டணிக் கட்சிகள் 9 ஆக மொத்தம் 203 இடங்களைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட திமுகவிக்குக் கிடைக்கவில்லை.

இந்த வெற்றி எதிர்க்கட்சிகளின் வெற்றியல்ல. திமுக-காங் அணிக்கு எதிரான மக்களின் கோபாவேசமே வெற்றிக்குக் காரணமாகும். புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய வியம் இது. ஆட்சி மாறிவிட்டது. வாக்களித்த மக்களின் வாழ்விலும் மாற்றம் வரவேண்டும்.

முதலமைச்சர் அறிவிப்புகள்

முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றதும் இலவசத் திட்டங்களை அமல்படுத்தும் உத்தரவுகளில் கையொப்பமிட்டுள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி, ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு ரூ.25,000 பணத்துடன் 4 கிராம் தங்கம், முதியோர், ஆதரவற்றோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை, மீனவர் உதவி நிதி ரூ.2000 ஆக உயர்வு போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதே தமது அரசின் முதல் பெரும் பணி என்று அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

திமுக ஆட்சிக் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தொழிலாளர் உரிமைகள், விவசாயிகளின் நிலங்கள் மீட்கப்பட வேண்டும். முன்னாள் முதல்வரின் குடும்பம் மற்றும் அமைச்சர்கள் கொள்ளையடித்து உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் சேர்த்துள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். இலவசங்களைப் பெறுவதற்குக்கூட ஏழைகள் லஞ்சம் தரவேண்டிய நிலைமை போக்கப்பட வேண்டும். வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற புதிய அரசு முயற்சிக்க வேண்டும். சகல துறைகளையும் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும். திமுகவினரால் பறிக்கப்பட்ட ஏழைகளின் நிலங்கள், சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும்.

பின்லேடனுக்குப்பிறகு

பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில் ஒளிந்திருந்த உலக பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டான். ஆப்கானிஸ்தானில் இருந்த நஜிபுல்லா தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்துவதற்கு அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவன் தான் இநத் பின்லேடன். தாலிபானிசத்தின் தந்தையும் அவனே. வளர்த்த கிடாய் மார்பிலே பாயும் என்பதைப்போல பின்லேடன் அமெரிக்க எதிரியானான். ஆப்கனில் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்திய பின் அமெரிக்காவுக்கு அவன் தேவைப்படவில்லை. அல்கொய்தா இயக்கம் அமெரிக்க இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்துப் பிரபலமானது.

பின்லேடன் சாவுடன் அவனது பயங்கரவாத இயக்கம் முடிவடைய வில்லை. அல்கொய்தா இயக்கத்தில் முப்பதாயிரம் பேர் நேரடி உறுப்பினர்களாக உள்ளனர். அதன் நட்பு அமைப்புகளில் இருபத்தையாயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். அரசு நாடுகளிலும், ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் அல்கொய்தா கால் பரப்பியுள்ளது. இதற்கு நிதி வசூல் செய்வது பெரும்பாலும் ஐரோப்பியப் பிரிவாகும்.

இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் லஷ்கர்ஏ தொய்பாவுக்கு அல்கொய்தாவுடன் உறவு உண்டு. ஒசாமாவுக்குப் பிறகு யார் தலைவர் என்பதும், பயங்கரவாதப் பயணம் எப்படியிருக்கும் என்பதும் இப்போது தெரியவில்லை. இதில் பெரிதும் ஆதாயமடைந்தது அமெரிக்க அதிபர் ஒபாமா தான். அடுத்த தேர்தலில் எளிதாக வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானின் இறையாண்மையை மீறி அமெரிக்கா கொலை செய்திருப்பதை ஒபாமா நியாயப்படுத்தியுள்ளார். இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதக் குழுக்கள் பாகிஸ்தானில் தான் ஊட்டி வளர்க்கப்படுகின்றன. இது பற்றி அமெரிக்கா மௌனம் சாதிக்கிறது.

அறியாச் சனங்களா?

புலவர்களுக்கு எப்போதும் அரசனின் தயவுவேண்டும் என்பது தமிழின் தொன்மையாகும். கருணாநிதிக்கென்று ஒரு கவிஞர் கூட்டம் ஜால்ரா அடித்து வாழும். மலை போன்ற செல்வக் குவியலின் மீது அமர்ந்திருப்பதால் கருணாநிதி தேர்தல் தோல்வியால் பாதிக்கப்படவில்லை. ஓய்வளித்ததாய்க் கூறி ஒழிந்தார் மாட்டே.

ஆனால் கவிஞர்களால் தாங்க முடியாது. அதிலும் கவிக்கோ அப்துல் ரகுமானால் தேர்தலில் திமுக தோல்வியைச் சகிக்க முடியவில்லை. இனியாருக்கு ஜால்ரா போடுவது, கவிதைபாடுவது என்பது அவர் கவலை. ஆனால தோற்கடித்த மக்களை அறிவிலிகள் என்றழைக்க அப்துல் ரகுமானுக்கு எத்தனை ஆணவம்?

"தமிழ்நாட்டு அரியாசனம்

அயோத்தி அரியாசனம் போலவே

ஆகிவிட்டது.

அறியாச் சனங்களால் வந்த

விபத்து.

வரத்தான் போகிறது

லங்கா தகனம்"

என்று 'கோ' கவிதை எழுதியிருக்கிறார். கலைஞரும் அவர் குடும்பமும் அடித்த பல லட்சம் கோடி கொள்ளை பற்றி அறியாதவரா இந்த அப்துல் ரகுமான். தமிழுக்கும் கவிதைக்கும் கேடானவர்கள். மக்களைக் கேவலமாய் பேசும் கவிஞர்களும் கேவலமானவர்களே!

மேற்குவங்க தேர்தல்

34 ஆண்டுகளாய் நீண்டகாலம் ஆட்சி செய்த இடது முன்னணி இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளது. இதுபற்றி ஜூன் 10ம் நாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு ஆய்வு செய்யவுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் மார்க்சிஸ்ட் தலைவர்களைக் கொலை செய்வதிலும், கடைகள் வீடுகளை அடித்து நொறுக்குவதிலும், தீ வைப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர். மம்தாவின் அமைதி காக்கும் வாக்குறுதியை மீறி இந்த வன்முறைகள் தொடர்கின்றன. இதற்கெதிராக மக்களைத் திரட்டிப் போராட மார்க்சிஸ்ட் கட்சி களமிறங்கியுள்ளது.

கேரள தேர்தல்

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணியை விட 4 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கூடுதலாகப் பெற்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஆட்சியை இழந்துள்ளார். ஐந்தாண்டுகளுக்கொரு முறை ஆட்சியை மாற்றும் வழக்கமுள்ள கேரள மக்கள் இம்முறை இடது முன்னணிக்கு 68 இடங்கள் கிடைக்கச் செய்து மரியாதை செலுத்தியிருக்கிறார்கள்.

Pin It