பல மாதங்களாக முதலாளியிடம் கோரிக்கை வைத்து, இம்மாதம் நூறு ரூபாய் சம்பளம் உயர்த்திக் கொடுத்திருக்கிறார்கள், மதுரையில் ஒரு பெரிய ஜவுளியகத்தின் "மாதங்கி"யின் உரிமையாளர் மோகன்ராம். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நிரந்தர ஊழியராக இருக்கும் அழகர் அமைதியானவர். இவருக்கு முன் கடையில் சேர்ந்தவர்களும், பின்னால் வந்தவர்களும் சம்பளம் கட்டவில்லை, முதலாளி போக்கு பிடிக்கவில்லை என்று இன்னும் என்னென்னவோ காரணங்கள் சொல்லிப் போய்விட்டார்கள்.

மாதம் ஐநூறு ரூபாய் சம்பளத்திற்கு சேர்ந்து, பதினைந்து வருடங்கள் உண்மை ஊழியனாக இருந்து, மாதம் மூவாயிரத்து ஐநூறு ஊதியம் பெறுமளவிற்கு வந்துவிட்டார். கடையில் கணக்குப்பிள்ளையைத் தவிர - சிப்பந்திகள் யாருக்கும் இந்தச் சம்பளம் இல்லை. வெளியில் வேறு ஜவுளிக் கடைகளுக்குப் போனாலும் இவ்வளவு சம்பளம் தரமாட்டார்கள்.

கடையில் பட்டு, ஆண்களுக்கான பேன்ட் சர்ட் துணி - பெண்களுக்கான சேலை ஜாக்கெட் துணிகள் - எல்லோருக்குமான ரெடிமேட் ஆடைகள் உள்ள பகுதி எல்லாத் தரப்பிலும் நின்று வியாபாரம் பண்ணும் திறமை அழகருக்கு மட்டும்தான் உண்டு. வருபவர்கள் வேண்டுவதை முகம் கோணாமல் எடுத்துக் காண்பித்து, எப்படியும் வியாபாரத்தையும் படிய வைத்துவிடும் நேர்த்தியும் இருந்தது.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் அரசியல்வாதிகள் கண்களுக்குத் தெரிவதுபோல், அழகரைப் போன்ற உண்மையாளன் போய்விட்டால் என்னும் நெருக்கடியில்தான், அவனின் தீனக்குரல் முதலாளியின் செவிக்குள் ஏறியது. எக்காரணத்தைக்கொண்டும் கடையைவிட்டு இவர் போகாமல் பார்த்துக்கொண்டார்.

ஜவுளியகத்தில் முதலாளி மேஜை மீது இருக்கும் தொலைக்காட்சியில் செய்தி சொல்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு ஆறுமாதங்களுக்கு முன் தேதியிட்டு நான்காயிரம் ரூபாய் சம்பளம் உயர்த்தியும் - அகவிலைப்படி 30சதம் கூட்டியும் இம்மாதத்திலிருந்து கொடுக்கிறார்கள்.

செய்தி அறிந்ததும் அரசு ஊழியர் சங்கத் தலைவர்கள், முதல்வருக்கு பட்டுச்சேலை மாதிரி பெரும் பெரும் சால்வைகளைப் போர்த்தி நன்றி தெரிவித்து வணங்குகிறார்கள். மலர்க்கொத்துக்கள் - நினைவுப் பரிசுகள் என என்னென்னவோ உருவில் தங்கள் விசுவாசத்தையும் மகிழ்வையும் தெரிவித்துக்கொள்கிறார்கள்.

காலையில் வீட்டுவாடகை வாங்கவந்த வீட்டுக்காரர், இம்மாதத்திலிருந்து நூறு ரூபாய் வாடகை உயர்த்திக் கேட்டார். முகம் வாடிய அழகர், "ஐம்பது ரூபாய் கூட்டித் தருகிறேன்" எனக் கெஞ்சாத குறையாக வேண்டினார்.

"மற்ற வீடுகளுக்கெல்லாம் இருநூறு ரூபாய்கூட. நீங்க பல வருடங்களாக - பிரச்சனையில்லாமல் இருப்பதால், அடுத்தவர்களுக்குத் தெரியாமல் நூறு ரூபாய் கேட்கிறேன். முடிந்தால் பாருங்கள். இல்லையென்றால் வீட்டைக் காலிசெய்துகொடுங்கள். முன்னூறு அதிகம் தர ஆட்கள் காத்திருக்கிறார்கள்" வார்த்தையில்லாமல் பார்வையில் சொன்னார்.

இப்போதுள்ள நெருக்கடியில் வீடு எங்கே கிடைக்கிறது? அப்படியே இருந்தாலும் அட்வான்சும் வாடகையும்... வீடு புறாக்கூடு மாதிரி - எலிப்பொந்தாகத்தான் இருக்கும்.

அழகர் அவர் கேட்ட நூறு ரூபாயை பழைய வாடகை எழுநூறுடன் சேர்த்துக்கொடுத்தார். வீட்டுக்காரர் கிளம்பிப் போய்விட்டார்.

இரவு வாங்கி வந்த சம்பளத்தில் காற்று இறங்கிவிட்டது.

இன்றைய பொழுதுக்கு சமையல் செய்ய பொருள் வாங்க கடைக்குப் போனாள் மகாலெட்சுமி. போய் வந்ததும் வாங்கிவந்த பொருளுக்கான விலைப் பட்டியலைக் கொடுத்தாள். சுமாரான அரிசிகூட கிலோ இருபத்திஐந்து ரூபாய். மற்ற பொருள்களெல்லாம் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் 50 காசு என்று கூடுதலாகி - மொத்தம் பதினைந்து ரூபாய் அதிகமாகியிருக்கிறது.

ஒரு நாளைக்குள்ளே என்ன இப்படி? தினசரி பதினைந்து ரூபாய் அதிகமென்றால், மாதம் நானூற்று ஐம்பது ரூபாய் அதிகப்படியாகிறது. இத்துடன் வீட்டு வாடகையும் கூடிவிட்டது.

மனைவியை விழிர்த்துப் பார்த்தார். புரிந்துகொண்டவள், நான் என்ன செய்வேன்? கடைக்காரன் மெய்யப்பனிடம் "என்ன இப்படி?" என்று ஒரே வார்த்தை கேட்டதற்கு,

"நீயெல்லாம் பையைப் எடுத்துக்கிட்டு கடைக்கு சாமான் வாங்க வந்துட்டே..." பையை பிடுங்கிக்கொண்டு. ரூபாயைத் தூக்கி அலட்சியமாகப் போட்டுட்டான். கூட்டத்தினருக்கு மத்தியில் அவமானமாப் போச்சு."- குரல் கம்ம, கேவலம் முகத்தில் அறைந்த வாட்டத்துடன் சுவரில் சாய்ந்தான். காது மூளியாக இருக்கும் மனைவியை நிமிர்ந்துபார்க்கவில்லை அழகர். திருமணமான புதிதில் அவள் காதோடு சேர்த்த நகையாக இருந்தது. இப்போது இரண்டு கிராம் இருந்த கம்மலை வாங்கி அடமானம் வைத்துத் திருப்ப முடியாமல் முங்கியே போய்விட்டது. கழுத்தில் கிடக்கும் மஞ்சள் கயிற்றில் தாலிதான் எங்கே இருக்கிறது?

அன்றாட துன்பவடுக்கள் ஏராளமாகப் பதிந்து அவர்களின் இயல்பையே மாற்றிவிட்டது. வெண்ணெய் போன்ற இவள் குணமும், ஆழமான அன்பின் வெளிப்பாடான அவர் குணமும் மாறியே போய்விட்டன. சதா சிடுசிடுப்பு.

அழகர் பரிதாபமாகப் பார்த்தார். இட நெருக்கடி பிள்ளைகள் என்று இரவில் தான் இவளைப் பார்க்க முடியவில்லை. பகலில் வெளிச்சத்தில் பார்க்கலாம் என்றால், இத்தகைய பிரச்சனைகள் வந்து அவளை மறைத்துவிடுகிறது.

பாபம், அழகிய பிழை இவள்!

"அப்பா! சோப்பு தீர்ந்து நாலு நாளாச்சு. சம்பளம் வாங்கவும் வாங்கலாம்னு சொன்னீங்க" -ஏழாவது படிக்கும் மூத்தபெண் தனம் வந்துநின்றாள். ஒன்றும் பேசாமல் ரூபாயை எடுத்துக்கொடுத்தார்.

வாங்கி வந்தவள் மீதியை அப்பாவிடம் கொடுத்தாள்.

எண்ணிப்பார்த்தவர், "என்னம்மா?" கேள்வியுடன் நிமிர்ந்து பார்த்தார். சோப்பு விலை இரண்டு ரூபாய் ஏறிப்போச்சு. பல்பொடி தீர்ந்துபோச்சு. டப்பா வாங்கினேன். ஒன்பது ரூபாய் இருந்தது, பத்து ரூபாயாம். ஆக மூன்று ரூபாய் கூடுதலாகி விட்டது.

சோப்பை எடுத்துப் பார்த்தார். முன்பைவிட இளைத்து சிறிதாக இருக்கிறது. பல்பொடி டப்பா குட்டையாகிவிட்டது. விலை அதிகம் - பொருள் குறைவு. இதற்கு மேல் விலை வைப்பதைவிட, இப்படியொரு வியாபார தந்திரம்!

 டீ வாங்க போன பையன் விநாயகம் வந்தான். செம்பை வைத்துவிட்டு நின்றவனை, ஏறிட்டு நோக்கினார்.

"இன்றையிலிருந்து அங்கே டீ குடித்தால் ஐந்து ரூபாயாம். பார்சல் பத்து ரூபாயாம்".

ஆறு ரூபாய் டீ - பத்து ரூபாயா? சீனி, டீ பாக்கெட், பால், காபித்தூள், கியாஸ் விலை கடைவாடகை எல்லாம் இரண்டு மடங்கு கூடிவிட்டது. நான் என்ன செய்வது? என்கிறார் கடைக்காரர். ஒரு டீ வாங்கி ஆளுக்குக் கொஞ்சம் தீர்த்தமாகக் குடிப்போம். இப்போது அதற்கும் கண்டம் வந்துவிட்டது.

"நாளையிலிருந்து டீ வாங்க வேண்டாம்".

சாப்பாட்டையும் நிறுத்திவிட்டால் பிரச்சனை இருக்காது.

நடுத்தரவர்க்கத்திற்கு பேய், பிசாசு, மரணம், இதெல்லாம் பயமில்லை. திடீர் திடீரென்று இப்படியாகும் விலையேற்றம்தான் அவர்களை மிகவும் பயமுறுத்துகிறது.

வெளிச்சத்திற்குப் பயப்படும் பிராணிகள் இவர்கள்.

"வணக்கம் மாப்பிள்ளே!" கும்பவிட்டவாறு உள்ளே வந்தார் தங்கையின் கணவர் சபாபதி. பெண் ஆளாகிவிட்டாளாம். தாய்மாமன் இவர்! முதலில் சொல்வதற்கு வந்திருக்கிறார். வீட்டில் என்ன இருக்கிறது? பழைய சோறு.

பையனைக் கூப்பிட்டு கடையில் இட்லியும் காபியும் வாங்கிவரச் சொன்னார். மலை ஏறிப்போனாலும் மச்சினன் தயவு வேண்டுமே!

இட்லி மூன்று ரூபாய். ஐந்துக்கு பதினைந்து ரூபாய். காபி ஐந்து ரூபாய். ஆக இருபது. என்ன செய்வது?

அவரைக் கவனித்து அனுப்பிவிட்டு, குளித்துச் சாப்பிட்டுவிட்டு வேலைக்குப் போகவேண்டும். நேரமாகிவிட்டது. இடுப்பில் துண்டைக் கட்டியபோது, தெரு மாரியம்மன் கோவில் உற்சவத்திற்கு வசூல் கமிட்டியார் வந்து நின்றார்கள். உள்ளுக்குள் பொசுக்கென்று சுருதி இறங்கிவிட்டது. வருடத்தில் ஒருநாள்... தெருவில் இருந்து கொண்டு - தினசரி பார்ப்பவர்கள் முகத்திற்கு என்ன சொல்வது?

எப்போதும் போல் இருபது ரூபாயை எடுத்து, "என்னாலே முடிந்தது" கெஞ்சலாகக் கொடுத்தபோது, விலையெல்லாம் தீயா இருக்கு. ஐம்பதுக்குக் குறைந்து யாரிடமும் வரி வாங்குவதில்லை".

தெருப் பெரியவர்கள் பத்துபேர் வாசலில் நிற்கிறார்கள். என்ன செய்வது? தலைதொங்கிப் போய் ஐம்பது ரூபாயைக் கொடுத்துவிட்டு, அவதி அவதியாகக் குளித்து, இருந்த பழையதை சாப்பிட்டு கடைக்குப்போனார்.

கடை திறக்கவில்லை. வேலைக்காரர்கள் வாசலில் கூட்டமாக நிற்கிறார்கள். என்ன விஷயம்? பதற்றத்துடன் போனார். இரவு வேலை முடிந்து வீட்டிற்குப்போன கணக்கப்பிள்ளை, லாரியில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனதும் இறந்துபோனார்.

பெற்ற பிள்ளையே சில வேளைகளில் சத்ருவாகிப் போவதில்லையா? அப்படித்தான் அறிவாளி மனித மூளைக்குப் பிறந்த யந்திரங்கள் வாகனங்கள் அவனுக்கே எமனாக முடிந்துவிடுகிறது.

இப்போது பொது மருத்துவமனைக்குப்போய் உடலை வாங்கி அடக்கம்பண்ண ஏற்பாடு செய்ய வேண்டும். அவரும் அன்றாடம்தான். உடன்வேலை பார்ப்பவர்கள் ஆளுக்கு நூறு ரூபாய் போட்டு ஈமக்காரியத்தை முடிக்க வேண்டும்.

இதயம் நின்றுபோனது. கணக்கப்பிள்ளைக்கா - அழகருக்கா?

ஆண்களுக்கு கருப்பை இல்லை. தினம் இத்தகைய சஞ்சலங்களை சேர்த்து வைக்கிறானே இதற்குப் பெயர் என்ன?

அந்தக் கருப்பை பத்து மாதத்தில் திறந்துவிடும். இது?

எல்லாம் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. தீர்வு?

மறுநாள் காலை ரேஷன் கடைக்குப் போய்வந்த மகாலெட்சுமி சொன்னாள் - "வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு அரசு மலிவு விலையில் எல்லாச் சாமான்களும் தருகிறார்கள். இன்றைக்குப் போனால் வாங்கலாம்".

நேற்று இரவு வாங்கிய சம்பளத்தில், காலைக்குள் முக்கால்வாசி போய்விட்டது. இப்போது இருக்கும் பணம் குடும்ப அட்டைக்கான பொருள் வாங்கப்போதுமா?

இதன் பின் மாதம் முழுவதற்கும் என்ன செய்வது?

இந்நேரம் ஒளவையார் மாதிரி, இரவில் ஒவ்வொரு வீட்டு வாசற்படியிலும் உட்கார்ந்து தூங்கியே இரவைக் கழிக்கும் யாருமற்ற அந்தக் கிழவி வந்து நின்றாள். என்ன பட்டினியாயிருந்தாலும் சாப்பிடவைத்தால் சாப்பிடமாட்டாள். அவ்வளவு மானி.

கேள்விக்குறியுடன் அவளைப் பார்த்தாள். ஒரு காலத்தில் இவள் வாழ்ந்த வாழ்க்கை... கருணை மிகுந்த அக்காலம் போய், இப்போதைய கொடூரமான தருணம்.....

மாசப்பணம் (முதியோர் உதவித்தொகை) வர இன்னும் ரெண்டுநாளு ஆகும்னு தபால்காரர் சொன்னார். அம்பது ரூபா கொடுத்தீங்கன்னா, பணம் வந்ததும் தந்துடுறேன். "பிள்ளைகள் பெற்று மடிந்துபோகாத வயிறு, பசியில் சுருண்டு கிடக்கிறது.

பரிதாபத்தில் கலந்துபோய் நிற்கிறான்.

காய்க்கிற மரத்தில் தானே கல்லடிபடும். அழகர் மௌனமாக பணத்தைக் கொடுத்தார்.

"நீங்களே கஷ்டப்படுகிறவர்" சொல்லிக்கொண்டே பணத்தை வாங்கிப்போனாள்.

இப்பொழுது கனிவாக "ரொம்ப நன்றி". பெருமூச்சுடன் அழகர் நிமிர்ந்தார்.

வாங்கிப்போன ஐம்பது ரூபாயைக் கொடுத்தாள் அந்த அம்மா. பழையவர்கள் சத்தியகீர்த்திகள். சொன்ன சொல் தவறமாட்டார்கள்.

"உங்களுக்குக் கடனாகக் கொடுக்கலியே!"

"நீங்க நல்லவர். இப்படித்தான் இருப்பீங்க" பணத்தை அவர் அருகில்வைத்துவிட்டு, தட்டுத்தடுமாறி போய்க்கொண்டிருக்கிறாள்.

எல்லாக் காலத்திலும் உண்மையானவர்கள் இருக்கிறார்கள்!

ஆழமான அவர் மனித உணர்ச்சிகளைச் சோதிப்பது போல் தினசரி நிகழ்வுகள்.... இதில் இவர் தேறிக்கொண்டுதான் வருகிறார்.

இன்று?

Pin It