நவீன கிராமப்புற வங்கத்தில் ஊழல், வறுமை, வேலையின்மை, கல்வியின்மை ஆகியவற்றின் அளவும் தாக்கமும் அதிகரிக்கும் வேகம் ஏறுமுகத்தில் இருக்கும் வேளையில் – கோயில்கள், மடாலயங்கள் மற்றும் பக்தி நடவடிக்கைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் பார்ப்பனர்களின் கையில் பெரும் உறுதியோடும் அதிகாரத்தோடும் வளர்ந்திருக்கிறது. மார்க்ஸ், சமூகத்தின் போதைப் பொருளாக மதத்தை குறிப்பிட்ட போதும், மதத்தை ஆதரிப்பதில் மார்க்சியர்கள் பின்தங்கி நிற்கவில்லை. கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள தெரு சந்திகளில் சனிக்கிழமை சனி பகவானை வழிபட விழாக் கோலத்தோடு கூடியிருக்கும் நடுத்தர வர்க்கக் கூட்டத்தை காணலாம். வறுமையால் தாக்குண்ட, கல்வியறிவற்ற வங்காளத்தில் சிறிய அளவில் நடத்தப்படும் சரஸ்வதி, லட்சுமி பூசைகளின் எண்ணிக்கை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் பொது பூசைகளை நடத்த பெரும் பணத்தை செலவிட்ட விவகாரங்கள், தில்லி கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்திலேயே விவாதத்திற்குரிய ஒன்றாக ஆகியிருக்கிறது.

விடுதலைக்குப் பின்னான காலகட்டத்தில், குறிப்பாக 1960–க்கு பிறகு, எந்த பெரிய தொழிற்சாலையும் மேற்கு வங்கத்தில் அமைக்கப்படவில்லை என்பது உறைய வைக்கும் உண்மையாகும். மாநிலத்தின் பொருளாதார நிலை – கடன்கள் நிரம்பியதாகவும், எவ்வித நல்ல எதிர்காலம் இன்றியும் உள்ளது. பல ஆண்டுகளாகத் தொடரும் கம்யூனிச ஆட்சியின் காரணமாக இந்நிலை மேலும் மோசமடைந்தது. மேற்கு வங்கத்தில் இருந்த தொழிற்சாலைகளும், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பெரும்பாலும் இழுத்து மூடப்பட்டு விட்டன. ஹுக்ளி ஆற்றின் கரையிலும், அதனை அடுத்துள்ள பகுதிகளான பாராநகர், பரக்பூர் போன்ற பகுதிகளிலும் இருந்த சாக்கு, அலுமினியம், பருத்தி மற்றும் காகிதத் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை மூடப்பட்டுவிட்டன. இருநூறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் கம்பெனிகளால் நிறுவப் பட்ட ஜோசப், பர்ன்ஸ்டான்டர்டு, பிரெய்த் வெயிட் போன்ற பெரிய தொழிற்சாலைகளும் இக்காலகட்டத்தில் அதன் உயிரோட்டத்தை இழந்துவிட்டன.

கிராமப்புற வங்கத்தின் உழவர்கள், வேறு சில மாநிலங்களில் உள்ள உழவர்களைப் போன்று தற்கொலை செய்து கொள்வதில்லை எனினும், மிகவும் வறுமையான நிலையிலேயே வாழ்கின்றனர். வறுமை அனைத்துத் தரப்பிலும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதன் விளைவாக, அழகான இளம் பெண்கள் மற்றும் 18 வயது நிரம்பாத சிறுமிகள் ஆகியோர் வீட்டு வேலைப் பெண்களாகவோ, நடனமாடும் பெண்களாகவோ அல்லது சட்ட விரோத செயல்களுக்காக விற்கப்படுவதற்கோ – வளமிக்க பிற மாநிலங்களுக்கு பெரும் எண்ணிக்கையில் இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆய்வறிக்கைகளின்படி, மும்பை நடன விடுதிகளில் ஆடும் பெண்களில் பெரும்பாலானோர் வங்கத்திலிருந்து மட்டும் வந்தவர்கள் ஆவர்.

தில்லிக்கு அருகே உள்ள நொய்டாவில் நிதேரி பெண்கள் கொலை வழக்கு அறிவுக்கண்ணை திறப்பதாக உள்ளது. பிருந்தாவன், மதுரா ஆகிய இடங்களில் உள்ள ஆதரவற்ற விதவைகளில் 90 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் ஏன் வங்கத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்ற பழைய கேள்வியையே இந்நிகழ்வும் எழுப்பியது. இந்த விஷயத்தில் வேறு எந்த மாநிலமும் மேற்கு வங்காளத்துடன் போட்டி போட முடியாது. தினக் கூலிகள் அல்லது தொழிலாளர்கள் பணிபுரியும் சந்தைகளெங்கும் வங்கத் தொழிலாளர்களால் நிரம்பி வழிகிறது. வளர்ச்சிக்கான துறைகளில் மேற்கு வங்கத்தின் மோசமான செயல்பாடுகள் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த செயல்திறன் மிகவும் குறைந்தது குறித்த கவலையை மத்திய அரசு ஓர் அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் உள்ள பழங்குடி மக்கள், கீழ் சாதி சூத்திரர்கள் மற்றும் முஸ்லிம்கள் படும் துயரங்களும் தேவதனைகளும் எல்லையற்றவை. 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, திரிபுரா மாநிலம் முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலமாக இருந்தது. 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, பழங்குடியினர் மக்கள் தொகை 31.1 விழுக்காடாகவும், பட்டியல் சாதியினர் 17.4 விழுக்காடாகவும் இருந்தனர். அப்படியிருந்தும், பார்ப்பன சர்வாதிகாரத்தால்தால்தான் இம்மாநிலம் நிர்வகிக்கப்படுகிறது. பழங்குடியினரில் இருந்து எந்த தலைவரும் மேலே வருவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. கம்யூனிஸ்டுகள் அப்படி ஒருவரை வளர்த்தெடுக்கவேயில்லை. ஆனால் அதே வேளையில், இதே அளவிலான பழங்குடியின மக்கள் தொகையும், வெறும் 11.6 விழுக்காடு பட்டியல் சாதியின மக்கள் தொகையும் கொண்ட சட்டிஸ்கர் மாநிலம், பழங்குடியின மக்களில் இருந்து எழுந்த ஒரு தலைவரால் ஆளப்படுகிறது. இங்கு மாநில அரசை சிறப்பாக ஆள்வதற்கு எதுவும் அவர்களுக்கு தடையாக இருக்கவில்லை. கம்யூனிஸ்டு ஆட்சியில், பழங்குடிகள் தங்கள் பிடியை இழந்து இருளில் ஆழ்ந்திருக்கின்றனர்.

ஏறத்தாழ கடந்த முப்பதாண்டுகளாக நடந்த மார்க்சிஸ்டு ஆட்சியில், தலித் மக்களின் பொருளாதார, சமூக, கல்வி மற்றும் அரசியல் நிலைகளானது மிகவும் வருந்தத்தக்க அளவில் உள்ளது. பெரும் அளவிலான பிற்படுத்தப்பட்ட மக்கள், தங்கள் குறைகளை வெளிப்படுத்தவும் தளமற்று உள்ளனர். இதே நிலைதான் கேரளத்திலும் உள்ளது. இந்த மாநிலங்களில் பார்ப்பன மக்களின் (இதில் சிரியன் கிறித்துவர்களும் அடங்குவர்) சர்வாதிகாரம் மிகவும் வலுவாக உள்ளது. இந்த மாநிலங்கள் ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து எழுந்த தலைவர்களான பங்காரப்பா (கர்நாடகா), சந்த் ராம் (அரியானா), கர்பூரி தாகூர், ராம்விலாஸ் பாஸ்வான், பாபு ஜெகஜீவன்ராம் (பீகார்), மாயாவதி (உத்தரப் பிரதேசம்), சர்தார் பூட்டா சிங், கான்ஷிராம் (பஞ்சாப்), டாக்டர் அம்பேத்கர் (மகாராட்டிரம்), ஈ.வெ.ரா. பெரியார், மு. கருணாநிதி (தமிழ்நாடு) போன்ற எந்த தலைவரையும் உருவாக்கவில்லை.

அவர்களுடைய நில உடைமையிலிருந்து அகற்றப்பட்ட பிறகு உழைக்கும் வர்க்கமாகவும், உற்பத்தி வர்க்கமாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிற இந்தியாவின் பூர்வகுடி மக்கள் – இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்களாக இருக்கவில்லை. எனவே, பூர்வகுடி உழைக்கும் வர்க்கத்தினரை விடுதலை செய்வதில் கம்யூனிஸ்டு இயக்கத்தின் தோல்வி வெளிப்படையானது. 1970 களின் இறுதியில் ஒரு நூலில் டாக்டர் அமர்த்தியா சென், வட வங்கத்தைச் சேர்ந்த நக்சல்பாரி மற்றும் கோரிபாரி பகுதிகளில் தோன்றிய நக்சல் பாரி இயக்கம் தனது வெற்றியை அடைய முடியாமல் போனதன் காரணம், அது பார்ப்பனர்களால் வழிநடத்தப்பட்டதே ஆகும் என ஆராய்கிறார்.

1970களில் வர்க்க எதிரியை அழிக்கப் புறப்பட்ட நக்சலைட்டுகள், தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற கிளம்பும் முன் காளி பூஜை செய்து, நெற்றியில் குங்குமம் இட்டே சென்றதை காண முடிந்தது. இவர்கள் முதன்மைப் பயனாளர்களாக இருக்கக் கூடிய இந்தியப் பாரம்பரியம், சொல்லப் போனால், ஆன்மிக, சமூக, பொருளாதாரக் கட்ட மைப்பான சாதிய அமைப்பிற்கு எதிராக எதையும் பேசவோ செய்யவோ அவர்கள் தயாராக இல்லை. மாறாக, ஜவகர்லால் நேரு தனது "டிஸ்கவரி ஆப் இந்தியா' நூலில் குறிப்பிட்டதை வழியொற்றி, இந்திய மார்க்சியவாதிகளும், சாதிய அமைப்பு என்பது ஒரு மேல் கட்டமைப்பு என்றும், அடிப்படைக் கட்டமைப்பான வர்க்க பாகுபாடுகள் உடை யும்போது சாதிய அமைப்பும் தானாகவே உதிர்ந்து விடும் என்றும் அவர்கள் விவரிக்கிறார்கள்.

ஆனால், கார்ல் மார்க்ஸ் இதற்கு நேர் மாறான கருத்தியலையே அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார் : “பாரம்பரிய பணி பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்துள்ள இந்திய சாதிகளே இந்தியாவின் வளர்ச்சிக்கும் அதிகாரத்திற்கும் தடையாக இருக்கின்றன. சாதி ஒரு மேல் கட்டமைப்பு அல்ல; அதுதான் இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார மற்றும் மத கட்டமைப்பின் அடிப்படை அமைப்பாக இருக்கிறது.''

பார்ப்பனிய மார்க்சியவாதிகள் சமூக மாற்றத்திற்கு முற்றிலும் எதிராகவே இருக்கிறார்கள். அதற்கு மாறாக, பிடிவாதமான பழமைவாத இந்துக்களாக, சிறிய சமூக மாற்றத்திற்கான எந்தவொரு அசைவையும் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந்த சாதிய அமைப்பிற்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்த அவர்கள் தயாராக இல்லை. ஒரு பார்ப்பனரின் உயர் நிலையிலிருந்து இறங்க அவர்கள் தயாராக இல்லை. தோழர் எஸ்.ஏ. டாங்கே, காவன்பூர் போல்ஷ்வெக் சதி வழக்கு 1923 என்ற வழக்கில், 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்படும் வழியில், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பு எழுதி அனுப்புகிறார். அதில், தான் ஒரு பார்ப்பனர் என்றும் அதனால் சிறைக் கொடுமைகளை தன்னால் தாள இயலாது என்றும், ஆகையால் தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் எழுதுகிறார்.

இரண்டாவது முயற்சியில், திரு. டாங்கே, தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டால், பிரிட்டிஷ் அரசுக்கு தான் உளவாளியாகப் பணிபுரியவும் தயார் என்றும் கூறுகிறார். கேரள கம்யூனிஸ்டு தலைவரான நம்பூதிரிபாட் சீனாவுக்கு அரசு விருந்தினராக சென்றிருந்தபோது, இந்தியாவின் மிக சிறுபான்மை வீர மரபினரான சத்ரியர்களை அழித்த இந்து பார்ப்பன அவதாரமான பரசுராமனின் வெங்கலச் சிலையை, சீன குடியரசின் தலைவரான மா சே துங்குக்கு அளித்ததாகக் கூறப்படுகிறது. தாங்கள் பார்ப்பனர்களாக இருப்பதில் அவர்கள் எந்த சூழலிலும், எந்த நிலையிலும் பெருமை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

2007இன் முற்பகுதியில், மேற்கு வங்க இடதுசாரி அரசின் மூத்த அமைச்சரும், இந்திய மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியின் பழம்பெரும் தலைவரும், முன்னாள் முதல்வர் ஜோதி பாசுவின் விருப்பத்திற்குரியவராகக் கருதப்படுபவருமான சுபாஷ் சக்ரபொர்த்தி – பங்குரா மாவட்டம், தாராபித்தில் உள்ள காளி கோயிலில், சிலைக்கு மாலையிட்டு வணங்கி கொண்டிருக்கும்போது இது போன்ற செய்திகளுக்காக பறந்து திரியும் பத்திரிகையாளர்களிடம் பிடிபட்டார். நெடுங்காலமாக புகழ் பெற்ற கம்யூனிஸ்டாக இருந்தபோதும் எவ்வாறு காளி அம்மன் பொம்மை முன் அவர் தொழ முடியும் எனக் கேட்ட போது, முதலில் தான் ஒரு பார்ப்பனர் என்பதே அவரது தெளிவான பெருமிதம் பொங்கிய விடையாக இருந்தது. இந்திய கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரையில், முதலில் பார்ப்பனர்கள், பின்பு இந்துக்கள் அதன் பின்பே அவர்கள் தங்களை கம்யூனிஸ்டுகளாகக் கருதுகின்றனர். இவற்றிற்கு வேறு மறை பொருளும் உண்டு. ஆனால், மார்க்சோ, சாதிகள் ஒழிவதை குறித்து கனவு கண்டார். சமூக மாற்றம், சொல்லப் போனால் தலைகீழ் மாற்றம் இல்லாமல் எதையும் சாதிக்க இயலாது என்று உறுதிபடக் கூறினார். இந்திய சமூகக் கட்டமைப்பில் புரட்சி ஏற்படுவதே வர்க்கப் போராட்டத்திற்கான முன் நிபந்தனையாகும்.

இந்துஸ்தானில் சமூகப் புரட்சியை ஏற்படுத்துவதில் இங்கிலாந்துக்கு மோசமான நோக்கம் இருந்ததும், அதன் காரணமாகவே அது செயல்பட்டது என்பதும், அதை செயல்படுத்துவதில் அது முட்டாள்தனமாக இருந்தது என்பதும் உண்மையே. ஆனால், அது அல்ல கேள்வி. கேள்வி என்னவெனில், ஆசியாவின் சமூக நிலையில் ஓர் அடிப்படைப் புரட்சி இல்லாமல் மனித இனம் தனது இறுதி இலக்கை அடைய முடியுமா? இல்லையெனில், இங்கிலாந்து எத்தகைய குற்றங்களை செய்திருந்த போதிலும், அப்படியான ஒரு புரட்சியை கொண்டு வருவதற்கு அதுதான் வரலாற்றின் கருவியாக இருந்திருக்கிறது.

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிற அரசியல் குழுக்களைப் போலவே, மார்க்சியவாதிகளும் சமூக மாற்றம் அல்லது குறைந்தது சமூக சீர்திருத்தத்தை கட்டாயமாக்கிய மார்க்சின் கருத்தியலை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மதத்தின் பங்கு பற்றிய கருத்தில்கூட அவர்கள் அவரை வழியொற்றவில்லை. மநுவாதி கம்யூனிஸ்டுகள், தங்களின் நம்பிக்கையான இந்து மதத்திற்கு ஆழமான பாதுகாவலர்களாக இருக்கின்றனர். இந்து மதமே அவர்களின் பண்பாடு. அதனால் தற்காலிக மற்றும் மேலுலக வாழ்வு ஆகிய இரண்டிலும், தங்களின் மத நம்பிக்கைகள் அல்லது சடங்குகளிலிருந்து இம்மி அளவும் மாற அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் இறந்து போனவர்களால் ஆளப்படுவதையே விரும்பினார்கள். ஆனால் மார்க்சோ, தனது அறிவார்ந்த கோபத்துடன் இந்து மதத்தை கண்டித்துள்ளார்.

சமூக நோக்கில், இந்துஸ்தான் அதன் மதத்தின் பழமையான மரபுகளில் கூறப்பட்டுள்ளபடி ஆடம்பரங்களின் உலகமாகவும், அதீத வேதனை மற்றும் வலியின் உலகமாகவும் இருக்கிறது. அந்த மதமானது ஒரு காலத்தில், உணர்வு மயப்பட்ட மிகைகளின் மதமாக, தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும் தவங்களின் மதமாக, லிங்கத்தின் மதமாக, கொடூரமான பலிகளை தரும் மதமாக, சாமியார்களின் மதமாக, தேவதாசியின் மதமாக... இன்னும் சிறிது பின்னோக்கிப் போனால், பார்ப்பனர்களின் மாய காலவரிசையை எடுத்துக் கொண்டாலே, இந்திய துயரத்தின் தொடக்கம், உலகம் உருவானதாக கிறித்துவர்கள் கூறும் காலத்திற்கும் முற்பட்டதாக இருக்கிறது.

இந்த சிறிய சமூகக் குழுக்கள், சாதிய பாகுபாடுகள் மற்றும் அடிமை முறைகளால் மாசுபடுத்தப்பட்டு, மனிதனை சூழல்களை கட்டுப்படுத்தும் நிலைக்கு உயர்த்துவதற்கு மாறாக, மனிதனை புறச் சூழல்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். தானாக முன்னேறக் கூடிய ஒரு சமூக நிலையை, என்றும் மாறாத இயற்கை விதி நிலைக்கு மாற்றியுள்ளனர். இதன் மூலம், கொடூரமான வழிபாட்டு முறைகளால் இயற்கையை வணங்கும் முறையை கொண்டு வந்து, இயற்கையை ஆளக் கூடிய மனிதன் தரமிறக்கப்பட்டு, அனுமான் எனப்படும் குரங்கின் முன்னும் "சபலா' எனப்படும் பசுவின் முன்னும் மண்டியிட வைக்கப்பட்டுள்ளான்.

டாக்டர் அம்பேத்கர், தனது சாதிய நிலையை பவுத்தத்திற்கு மாறுவதன் மூலம் ஒழித்தார். சாதி அழிப்பு என்பது இந்து மத அழிப்பிற்கானதே. எனவே, வேறு மதத்திற்கு மாறுவதே சாதியை அழிப்பதற்கான ஒரே நிச்சயமான வழியாகும். அதனால்தான் மகாத்மா கூறினார் : “சாதிகளை ஒழிக்க எனக்கு எந்த காரணமும் தெரியவில்லை. சாதியை தகர்ப்பது என்பது இந்து மதத்தைத் தகர்ப்பது.'' மகாத்மா இந்து மதத்தை காக்க விரும்பினார். அதனால் அவர் சாதியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இந்தியாவின் மார்க்சிய தலைவர்கள், நக்சலைட்டுகள் உட்பட, சாதியை காக்கவே போராடுகின்றனர். அனைவரும் மிகவும் சிரமப்பட்டு இந்து மத சடங்குகளை தொடர்கின்றனர். கொல்கொத்தாவின் நக்சலைட் தலைவர்கள்கூட, எழுபதுகளில், தாக்குதல்களுக்கு வரும்போது காளி தேவிக்கு பூஜை செய்த பின் அழுத்தமான சிவப்பு குங்குமத்தை தங்கள் நெற்றியில் அணிந்து வந்ததாகத் தெரிகிறது.

ஜமீன்தார்கள் எவ்வாறு ஜமீன்தாரி அமைப்பின் நிரந்தர குடியேற்றத்தை ஒழிக்கும் முயற்சியை விரும்பவில்லையோ அவ்வாறே பார்ப்பனர்களும் சாதியை அழிப்பதைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியாது. எனவே, அது "சுவாமி' விவே கானந்தராக இருந்தாலும், "மகாத்மா' காந்தியாக இருந்தாலும், கானா ஸ்யாம்தாஸ் பிர்லா அல்லது புத்ததேவ் பட்டாச்சார்யாவாக இருந்தாலும், ஆளும் வர்க்கத்தின் உறுப்பினர்கள், சாதிய பொருளாதாரக் கட்டமைப்பை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

மார்க்சும் மதம் மாறிய கிறித்துவரே. அவர் தனது மூதாதையர்களின் பழமையான மதமான ஜுடாயிசம், சமூக மாற்றத்திற்கு எதிரானதாக இருந்ததால் அதைத் துறந்தார். மார்க்சிய வரிகளுடன் இயைந்து நெருங்கி நிற்கவோ, இந்திய சமூகத்தை மார்க்சியத்தை நடைமுறைப்படுத்தும் அளவிற்கு பக்குவப்படுத்தவோ, ஒருவர் டாக்டர் அம்பேத்கரின் வழியோடு நெருங்கி நிற்கவோ – அம்பேத்கரியலை ஏற்றுக் கொள்ளவேண்டும். வர்க்கப் போராட்டம் அல்லது வர்க்கப் போரை தூண்டிவிட சாதிய சமூகமானது நிச்சயமாக ஒழிக்கப்பட்டு, வர்க்க சமூகமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். வர்க்கப் போரின் வெற்றியானது, வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்கும். இந்த போராட்டங்கள் சம காலத்தில் நடக்க வேண்டும்.

எஸ்.கே.பிஸ்வாஸ்

தமிழில் : பூங்குழலி

Pin It