ஆண்ட்ரு கெரோல் (Andrew Carroll, born September 27, 1969) ஒரு நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழக வரலாற்று பட்டதாரி. அமெரிக்க எழுத்தாளர், பதிப்பாளர், வரலாற்றாசிரியர், விறுவிறுப்பாகச் செயலாற்றும் செயல்திறன் உள்ளவர். இவர் வரலாற்றுடன் Volunteerism படித்தவர்.

இவர் எழுதிய Letters of a Nation:A collection of Extraordinary American Letters (1999), War Letters:Extraordinary Correspondence from American Wars (2001) என்ற  புத்தகங்கள் மிகப் பிரபலமானவை. 'முதியோர்கள் சேவை செய்ய வாய்ப்புகள்' (Volunteering opportunities for Senior Citizens, 1994) என்ற புத்தகமும் முக்கியமானது.     

இவர் 'ஜோசப் ப்ராட்ஸ்கி' (Joseph Brodsky) யின் இலக்கியப் பேச்சைப் படிக்க நேர்ந்தது. 'ஜோசப் ப்ராட்ஸ்கி' ரஷ்யாவின் Leningrad ல் 24, மே, 1940 ல் பிறந்தவர். யூத இனத்தைச் சேர்ந்த இவர் பின்னாளில் அமெரிக்க பிரஜையானவர். இலக்கியத்திற்கு 1987 ல் நோபல் பரிசு பெற்றவர் 'ஜோசப் ப்ராட்ஸ்கி' அமெரிக்காவின் அரசவைக் கவிஞராக 1991 ல் ஆக்கப்பட்டவர் .

'ஜோசப் ப்ராட்ஸ்கி' யின் பேச்சில் 'இலக்கிய வளம் இல்லாத நாடு மிகப் பெரிய கலாச்சாரப் பின்னடைவை அடையும்' என்று குறிப்பிட்டிருந்த கருத்து ஆண்ட்ரு கெரோலைக் கவர்ந்தது. 'ஜோசப் ப்ராட்ஸ்கி' அமெரிக்க கவிதைகளை பெரும் வணிக வளாகங்கள், எரிபொருள் வழங்கும் இடங்கள், உணவக அறைகளிலும் விநியோகித்தார்.  

'ஜோசப் ப்ராட்ஸ்கி' யின் பேச்சினாலும், அவரது நடவடிக்கையினாலும் கவரப்பட்ட ஆண்ட்ரு கெரோல், அவருக்கு லட்சியம் நிறைவேற தானும் உதவலாமா என்று கடிதம் எழுதினர். இருவரும் இணைந்து 'அமெரிக்க கவிதை மற்றும் கல்வியறிவு திட்டம்' (American Poetry & Literacy Project) என்று ஒரு இயக்கத்தை உருவாக்கினர்.

கெரோல் இத்திட்டத்தின் செயல் இயக்குனராகவும், முழுநேர தொண்டராகவும் சேவை செய்தார். நியூயார்க்கின் தங்கும் விடுதி அறைகளில் வால்ட் விட்மேன், எட்கர் ஆலன் போ, எமிலி டிக்கின்சன் போன்ற பெருங் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய கவிதைப் புத்தகங்களை வைக்கும்படி கேட்டுக் கொண்டார். பல தங்கும் விடுதிகள் கெரோலின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டன. 1993 முதல் 1999 வரை 3 லட்சம் பிரதிகளுக்கு மேல் கவிதைப் புத்தகங்களை விநியோகித்திருக்கிறார்.                     

வால்ட் விட்மேன் ((Walt Whitman, May 31, 1819 – March 26, 1892) ஒரு சிறந்த அமெரிக்கக் கவிஞர். அழகிய சந்தங்கள், உருவகங்கள் நிறைந்த கவிதைகளை (341) இயற்றினார். இவர் ஒரு கவிஞர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், மனித நேயம் மிக்கவர். புதுக் கவிதையின் தந்தை எனப்படுபவர். இவரது கவிதைகளை Philadelphia வின் வால்ட் விட்மேன் பாலத்தைக் கடக்கும் கட்டணம் செலுத்தும் ஓட்டுனர்களிடம் விநியோகிக்க ஏற்பாடு செய்தார்.

மாதிரிக்கு, வால்ட் விட்மேனின் 'கதவுகளைச் சாத்திடாதீர்' (Shut Not Your Doors) என்ற கவிதை:

பெருமை மிகு நூலகங்களே !
என் முன்னே கதவுகளைச் சாத்திடாதீர்,
நூல்கள் நிறைந்த உங்கள்
அடுக்குத்தட்டுகளிலெல்லாம் இல்லாத,
ஆனால் மிகவும் தேவையான ஒன்றினை
நான் கொண்டு வருகிறேன்.                     
உள்நாட்டுப் போரிலிருந்து
வெளியில் வந்திருக்கும் நான்,
நூல் ஒன்றினை இயற்றியிருக்கிறேன்.  
எனது நூலில் வார்த்தைகள் முக்கியமல்ல.
அதன் உட்பொருளே எல்லாம்.
தனித்தன்மை வாய்ந்த நூல் அது,
மற்றவைகளுடனோ, அறிவாற்றலுடனோ
தொடர்புடையதல்ல.
சொல்லப்படாத புதை பொருளே !
ஒவ்வொரு பக்கத்திலும் நீ சிலிர்த்திடுவாய் !

(தமிழாக்கம் - பேராசிரியர். இர.கணபதி)

ஆப்பிரிக்க - அமெரிக்க கவிதைகளை Louisiana வின் சிறைச்சாலைக் கைதிகளுக்கும், எட்கர் ஆலன் போ (Edgar Allan Poe) வின் கவிதைகளை வாகனப் பரிசோதனை நிலையங்களுக்கு வருவோரிடமும் விநியோகித்தார்.                                                                       

எட்கர் ஆலன் போ ((Edgar Allan Poe, January 19, 1809 – October 7, 1849) ஒரு கவிஞர், அமெரிக்க சிறுகதை எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர். காதல் கதைகள், நகைச்சுவைக் கதைகள், கற்பனைக் கதைகள், துப்பறியும் கதைகள் பல எழுதியுள்ளார். ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள், மற்ற கற்பனை துப்பறிவாளர்கள் கதைகளுக்கு இவரது பாணியே முன்னோடி.

மாதிரிக்கு, எட்கர் ஆலன் போ வின் 'ஹெலன்' (To Helen) என்ற கவிதை:

ஹெலன் ! உனதழகு எனக்கு,
மணம் கமழ் கடலினைக் கடந்து,
வழிப்பயணத்தில் சோர்வுற்று வாடித் திரிந்தவனை,
தன் சொந்த மண்ணிற்கு மென்மையாய்த் தாங்கிவந்த,
நைஸீய நகரத்தின் பழமைமிகு
படகுகளைப் போன்றிருக்கிறது !

சீ்ற்றமிகு கடல்கள் மீது வெகு நேரம் அலைந்திடும்
பழக்கமுடையவளே !  உனது கருநீலக் கூந்தலும்,
ஈடிலா அழகு முகமும், உனது இனிய இசையும்
என்னைக் கிரேக்க நாட்டின் பழம் பெரும் புகழிற்கும்,
ரோம் நகரத்தின் பண்டைய பெருமைக்கும்,
அழைத்து வந்திருக்கின்றன !

இரத்தினக்கல் விளக்கினைக் கையில் ஏந்தி,
ஆங்கே, பளிச்சிடும் பலகணி-மாடத்திலே,
நீ அழகிய சிலையாய் நிற்பதை,
நான் பார்க்கிறேன்.
ஆகா ! புனித நாட்டினில் தோன்றிய
ஆன்ம நாயகியே !       

(தமிழாக்கம் - பேராசிரியர். இர.கணபதி)

டெலிபோன் நம்பர்கள் விபரப் புத்தக (Telephone Directory) வெளியீட்டாளர்களிடம் அப்புத்தகங்களில் கவிதைகளை சேர்க்க வலியுறுத்தினார். டெலிபோன் நம்பர்கள் விபரப் புத்தகத்தில் வெளியான எமிலி டிக்கின்சனின் 'Hope' என்ற கவிதையைப் படித்த ஒரு பெண்மணி கெரோலுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

இக்கடிதத்தில் அவர், 'தன் கணவர் ஆறு மாதங்கள் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டதால் துன்பத்தை தாங்கிக் கொள்ள, பண்ணையையும், குடும்பத் தொழிலையும் கவனிக்க 'Hope' கவிதையைப் படித்தவுடன் நம்பிக்கை ஏற்பட்டது என்கிறார். இக்கடிதத்தை கெரோல் பொக்கிஷமாக வைத்திருக்கிறார்.      

அமெரிக்க இலக்கிய வரலாற்றில் எமிலி டிக்கின்சன் (Emily Dickinson, (December 10, 1830 – May 15, 1886)) என்ற பெண் கவிஞர் பிரபல கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் வாழ்நாளில் சுமார்     3000 கவிதைகளை எழுதியிருந்தாலும், 'Safe in their Alabaster Chambers' உட்பட 7 கவிதைகளை மட்டுமே 'Springfield Daily Republican' என்ற பத்திரிக்கையில் 1862 ல் வெளியிட்டுள்ளார்.

மாதிரிக்கு, எமிலி டிக்கின்சனின் 'நம்பிக்கை' (Hope) என்ற கவிதை:

நம்பிக்கை என்ற சிறகுகள் உடைய ஒன்று- -
ஆன்மாவில் அமர்ந்து கொள்கிறது- -
வார்த்தைகளின்றி பண் இசைக்கிறது- -
ஒரு பொழுதும் நிறுத்துவதில்லை.

அது இனிமையாக- -ஊளையிடும் காற்றினிலும்- -கேட்கிறது- -
அதனால் புயலும் புண்பட்டிருக்கும்- -
பலரையும் இதமாக வைத்திருந்த
பாடும் சிறு பறவையையும் நாணச் செய்யும்- -

நான் அதை மிகக்குளிர் நிலத்திலும் - -           
கொந்தளிக்கும் கடலிலும் கேட்டிருக்கிறேன்- -
இருப்பினும், ஒருபோதும் கேட்டதில்லை, அண்டவெளிகளில்,                                                                            அது எனது மென்மையான நெஞ்சத்தைக் கேட்டது.

(தமிழாக்கம் - பேராசிரியர்.டாக்டர்.வ.க.கன்னியப்பன்)                              

மக்களுக்கு முதன் முதலில் நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்த ஒரு தூண்டுகோல் வேண்டும். அது அமைந்துவிட்டால், 'கவிதைகள் வாசிப்பு ஒவ்வொருவரையும் பரபரப்பான அன்றாட வாழ்க்கையில் நிதானத்தையும், நாம் செய்யும் காரியங்களில் முக்கியத்தையும் ஒருமைப்படுத்தும் என்று கெரோல் கூறுகிறார்.

(நவம்பர், 1999, Readers Digest, 'Heroes For Today' என்ற கட்டுரையின் 'The Poetry Roadshow' என்ற பத்தியை ஆதாரமாகக் கொண்டது)

வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It