நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் திருமணம், பிறந்த நாள், புதுமனை புகுவிழா என எத்தனையோ நல்ல நிகழ்வுகளில் பரிசுப்பொருட்களை நாம் கொடுத்து வருகிறோம்.  சில நண்பர்கள் பரிசுப்பொருட்களுக்கு மாற்றாக விழாக்கள் நடத்துவோருக்கு உடனடியாகப் பயன்படுமே என்று பணமாகவும் கொடுக்கிறார்கள்.  வேறு சிலர் நீண்ட கால நோக்கில் பயன்பட வேண்டும் என்பதற்காகப் புத்தகங்களைப் பரிசளிக்கிறார்கள்.

நம்மில் பலர் கீற்று இணையத்தளம் மூலமாகத் தரமான பல சிற்றிதழ்களை இலவசமாகப் படித்து வருகிறோம்.  இச்சிற்றிதழ்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு இயக்கங்களைச் சார்ந்தவையாக இருந்தாலும் சமூக நலன் என்னும் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டவை என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் கருத்தாகும்.  இச்சிற்றிதழ்கள் அனைத்தும் ‘வணிக நலன்’ என்னும் பெயரில் ஊரைக் கெடுத்து உலையில் போட வேண்டும் என்னும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லாதவை.

தமிழகத்திலும் இந்தியாவிலும் இருக்கின்ற நம்முடைய நண்பர்கள் வீட்டிலோ உறவினர்கள் வீட்டிலோ ஏதேனும் ஒரு நல்ல நிகழ்ச்சி நடக்கும்பொழுது பலரும் இப்போது குறைந்தது நூறு உரூபாவோ அதன் மதிப்பில் பரிசோ கொடுக்கிறார்கள்.  கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் பல சிற்றிதழ்களின் ஆண்டுக்கட்டணமும் நூறு அல்லது நூற்றிருபது உரூபா தான் வருகிறது.  சில சிற்றிதழ்கள் மட்டுமே இருநூற்றைத் தொடுகின்றன.

நம்முடைய சிந்தனைத் தெளிவுக்கு அடிப்படையாக அமைகின்ற இச்சிற்றிதழ்களின் ஆண்டுக்கட்டணத்தை நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பரிசாகச் செலுத்துவது அவர்களுடைய சமூகச் சிந்தனையையும் தூண்டச் செய்யும் அல்லவா?

நன்மைகள்:

1) நம்முடைய பரிசுத்தொகையில் எவ்வித மாற்றமும் இல்லை.  ஆனால் ஒவ்வொரு முறை சிற்றிதழ் வீட்டிற்குச் செல்லும் போதும் நண்பர் நம்மை நினைத்துக் கொள்ள வாய்ப்புண்டு.

2) நம்முடைய நண்பரோ உறவினரோ எக்கருத்தில் ஆர்வமாக இருக்கிறாரோ அக்கருத்துத் தொடர்புடைய சிற்றிதழ்களைப் பரிசாகக் கொடுப்பது அவருடைய மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.  எ.கா. ஒருவர் சுற்றுச்சூழலில் ஆர்வமுடையவர் என்றால் ‘பூவுலகு’ இதழுக்குக் கட்டணம் செலுத்தலாம்.  இன்னொருவர் தாழ்த்தப்பட்டோர் விடுதலையில் ஆர்வமுடையவர் என்றால் ‘தலித் முரசு’க்குக் கட்டணம் செலுத்தலாம். நீங்கள் பரிசாகக் கொடுக்கும் சிற்றிதழ், நண்பருக்கு விருப்பமானது தானா என்பதை ஒருமுறைக்கு இருமுறை நன்கு சிந்தித்துக்கொள்ளுங்கள்.

3) ஒரு சிற்றிதழை நண்பருக்கு அறிமுகப்படுத்தி விட்டால் நண்பர் சிற்றிதழையும் மறக்க மாட்டார்; அதை அறிமுகப்படுத்திய நம்மையும் மறக்க மாட்டார்.

4) பரிசுப்பொருட்கள் வரவேற்பறைகளில் அலங்காரப் பொருட்களாகப் பயன்படுமே தவிர வேறு பெரிய பயன் ஏதுமில்லை.  சிற்றிதழ்களோ அன்றைய சூடான செய்திகளை நேர்மையான கோணத்தில் அலசுபவை.  எனவே சிந்தனைத் தெளிவுக்கு உதவுபவை.

5) ஒவ்வொரு மாதமும் சிற்றிதழ்கள் வீட்டிற்குப் போகும் போதும் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ‘புதிதாக இருக்கிறதே’ என்னும் காரணத்தினால் கட்டாயம் ஒருமுறையாவது புரட்டிப்பார்ப்பார்கள்.

6) நெருங்கிய நண்பர்களுக்கு அதிகத் தொகையில் பரிசு கொடுக்க வேண்டும் என்றாலும் சிற்றிதழ்களுக்கு மூன்றாண்டுக் கட்டணம், ஐந்தாண்டுக் கட்டணம், பத்தாண்டுக் கட்டணம் என நம்முடைய நிலைக்குத் தக்கவாறு கட்டலாம்.

7) சிற்றிதழ்களை ஆதரிப்பதன் மூலம் நம்மை அறியாமல் சமூக மறுமலர்ச்சிக்கு உதவலாம்.

சிற்றிதழ்களின் முகவரிகளை எங்கே தேடுவது?

கீற்று தளத்திலேயே பல சிற்றிதழ்களின் முகவரிகளை எடுத்துவிடலாம்.  அப்படிக் கீற்றில் முகவரி இல்லை எனில் இணையத்தில் தேடுவதன் மூலமோ ஏதேனும் ஒரு தமிழ் இணையக் குழுமத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமோ எளிதாகக் கிடைத்து விடும்.

Pin It