இந்திய இலக்கியச் சூழலில் தொன்மங்களைக் கொண்டாடுவதும் அவற்றைப் படைப்புகளுக்கான கருவாகக் கொள்வதும், குறியீடுகளாகவோ உத்திகளாகவோ கையாள்வதும் தொடர்வினையாக நிகழ்ந்து வருகின்றன. வாசக மனங்களுக்குப் பொது நிலையில் இவை கிளர்ச்சியூட்டக் கூடியனவாகவும் சுவைக்கத்தக்கனவாகவும் இருந்து வந்தாலும் இவற்றால் கட்டமைக்கப்படும் அதிகாரங்கள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருந்து வருகிறது.

   இந்திய இலக்கியங்கள் பெரும்பகுதி சைவ, வைணவக் கருத்துக்களையும் புனைவுகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளதால் இச்சார்புடைய தொன்மங்களும் படைப்புகளுக்குள் மிகுந்து காணப்படுகின்றன. புனைகதைகளைக் காட்டிலும் கவிதைகளுக்குள் இந்தப் போக்கு மிகுதியாக நிலவுகிறது. இந்தியத் தெய்வங்களின் வடிவங்கள் அவர்களின் விளையாடல்கள் அவதாரங்கள் போன்றவற்றைக் கொண்டு விளங்கும் தொன்மங்களை நேர்மறையான போக்கில் அணுகி அவற்றை வாழ்வின் செயல்பாடுகளுக்குத் துணையாகக் கொண்டு ஒழுகுகிற மனப்போக்கு மக்களிடம் மட்டுமின்றிப் படைப்பாளர்களிடமும் மிகுந்திருப்பதைக் காணமுடிகிறது.

   குறிப்பாக அர்ததநாரீசுவரத் தொன்மம் குறித்த பதிவுகளை நோக்குவோமானால் இதனை விளங்கிக் கொள்ளமுடியும். அர்த்த நாரீசுவரனைத் தமிழ் இறைநெறிப்புனைவுகள் ‘உமையொரு பாகன்’ என்று விளிக்கின்றன. ஆண் பாதியாகவும் பெண் பாதியாகவும் ஒருங்கமைந்த ஓர் உருவம் தான் அர்த்தநாரீசுவரன். இது குறித்த புனைவுகளும் தத்துவ விளக்கங்களும் இந்திய மண்ணில் எண்ணிலடங்காத வகையில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. பொது நிலையில் ஆணும் பெண்ணும் இணைதல் என்பதுதான் இதன் அடிப்படைத் தத்துவமாக முன்வைக்கப்படுகிறது. இது குறித்த எந்தவிதக் கேள்விகளும் இலலாமல் இந்த மெய்மையிலிருந்து வழுவாமல் இவ்வடிவத்தைப் போற்றுகிற போக்குத்தான் சென்ற நூற்றாண்டின் இறுதி வரையில் சமூகத்திலும் சமய நிலைகளிலும் இருந்து வந்தது. படைப்புகளிலும் இதைத் தொடர்ச்சியாகக் காணமுடிந்தது. இந்த மெய்மையை ஒரு குறியீடாகவும் மூலக்கருவாகவும் கொண்டு, பெயரில் கூட மாற்றமில்லாமல், இந்தியில் வெளிவந்துள்ள விஷ்ணு பிரபாகரின் ‘அர்த்தநாரீசுவரர்’ என்ற புதினத்தை இதற்குச் சான்றாகச் சுட்டலாம்.

   ‘ஆண், பெண் இருவரில் ஒருவர் மற்றொருவரின் ஆதிகக மனப்பான்மையிலிருந்து விடுபடுவதான முக்திதான் ‘அர்த்த நாரிசுவரர்’ என்ற புரிதலோடு இப்புதினம் இந்த வடிவத்தைக் கொண்டாடுவது போன்று பல சான்றுகள் காணக்கிடைக்கின்றன.

   சமயங்கள் ஒவ்வொன்றும் பெண் பற்றிய கருத்துருவாக்கத்தில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒழுக்கவிதிகளை மையப்படுத்தி ஒடுக்குமுறைகளை மேற்கொண்டுள்ளன. சைவம், வைணவம், இசுலாம், கிறித்தவம், சமணம் பௌத்தம் எனச் சமயங்கள் ஒவ்வொன்றும் தத்தம் நெறிகளால் வேறுபட்டிருப்பினும் பெண் குறித்த நிலையில் எல்லாம் ஒன்று போலவே செயல்படுகின்றன. பெண் உடல் மீதான ஒடுக்குமுறைகளை வலியுறுத்துவதில் அல்லது பெண்ணுக்கென தனித்த அடையாளங்களை அழித்தொழிப்பதில் சமயங்களும் சமயஞ்சார் சடங்குகளும் முக்கியப்பங்கு வகிப்பதை இவை சார்ந்த தொன்மங்களைக்கொண்டும் இவற்றைக் கொண்டாடுவதைக் கொண்டும் விளங்கிக் கொள்ளமுடியும்.

   எனவேதான் இந்நுண்ணரசியலை விளங்கிக்கொண்ட பெண் கவிகள் இவற்றின் மீது தம் எதிர்வினைகளை நிகழ்த்தத் தலைப்பட்டுள்ளனர். இந்தப் போக்கு ஒரு பரவலான படைப்புத் தன்மையைக் கொண்டதாக இல்லாவிடினும் ஒவ்வொரு மொழியிலும் ஒரு குறிப்பிட்ட சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதைத் தென்னிந்தியக் கவிதைகளினூடாக அறிய முடிகிறது. குறிப்பாக, இன்றைய பின் நவீனத்துவ, பெண்ணிய, தலித்திய அரசியல் மேலோங்கியுள்ள சூழலில், இதனை மறுபார்வைக்கு உட்படுத்திய படைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவந்துள்ளன. இதுபற்றிய முன்னெடுப்புகள், தென்னிந்தியக் கவிதை வெளியில் பெண்கவிகளின் குரல்களாக ஒலிப்பது குறிப்பிடத்தக்கது.

   தமிழில் ஆண்டாளும், காரைக்காலம்மையும் கன்னடத்து அக்கமகாதேவியும் ஒரு காலகட்டத்தில் கொண்டாடிய ஆண் இறை உருவங்களை, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிய்த்தெறிந்து தூரத்தில் நிறுத்துகிற போக்கு, மலையாளத்தில் கீதா ஹிரண்யன், சாவித்ரி ராஜீவன் தமிழில் மாலதி மைத்ரி போன்றோரால் மேற்கொள்ளப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அவற்றுள் கீதா ஹிரண்யனின் அர்த்த நாரீசுவரன் என்ற கவிதையும் மாலதி மைத்ரியின் விலக்கப்பட்ட குருதி 1 என்ற கவிதையும் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கனவாகும்.


   அர்த்த நாரீசுவரன்

   சரட்டில் கோர்த்தது அம்மாவின் தாலி

அழுக்கேறிய சரடு

கண்ணீரும் அடுப்படிக்கறையும் சேர்ந்து

பிசுக்கேறியது

அதன் மத்தியில்

கண்மணிப் பிரகாசம்போல

தாலியும் மணிகளும்

வடக்குநாதனின்1 (சிவன்) புகழ்பாடும்போது

அம்மாவின் விரல்கள்

தாலியை நெருடுகின்றன

மாங்கல்ய பாக்கியத்தின் எதிர்பார்ப்புகள்

விசும்பலாகவும் புலம்பலாகவும்

தொண்டைக்குள் இடறுகின்றன.

   வடதிசைத் தேவனோ

இடது தொடையில பகிரங்கமாய் பகவதியையும்

சடையில் ரகசிய உறவுக்காய் கங்கையையும் சுமந்து

ஏகபத்தினி விரதம் தேவலோகத்திலுமில்லை என்று

சாட்சி சொல்கிறான்

முன்னாலிருப்பது

அர்த்த நாரிசுவரனல்ல

ஒன்றரை நாரிசுவரனென்று

எண்ணெய் விளக்குகளின் அறிவிப்பு

   ஆனால் அம்மாவோ

கண்டும் காணாமல்

கேட்டும் கேளாமல்....

   அப்போது அப்பா எங்கே இருந்திருப்பார்?

மணிப்பிரவாளத்திலா...

தாசியாட்டத்திலா...

சதுரங்கப்பலகையிலா...

எங்கே?

   அதுவெல்லாம் பழைமை எனக்கு

எனவே நான் நினைத்தேன்:

வேண்டாம்

எனக்கு இந்த

அழுக்குச் சரட்டின் பந்தம் வேண்டாம்

   அன்று எனக்குத் துணை

கனவுகளின் உலகம்

எனவே ஒரு மின்னல் கண்ணியில்

என் தாலியைக் கோர்த்தேன்

பூமியில் எனக்கு இப்போது

பௌர்ணமி மட்டும்

பூக்காலங்கள் மட்டும்

   கனவுப்பொன் பூசிய நிலாக்கிண்ணத்தில்

காதலின் இனிமை

நம்பிக்கையின் உப்பு.

   எனது சூரியன் சொன்னது

காதல் குன்றிமணி போல

கறுப்பு சிவப்பு தீர்க்கம் திடம்

   பூமி வட்டமிட்டுச் சுழன்று சுழன்று

அமாவாசையைக் கொண்டு வந்தது எனக்கு

குன்றி மணிக் கிண்ணத்தில்

இப்போது பாதிப் பங்கு

நெருப்பின் துவர்ப்பு

கண்ணீரின் உப்பு

எங்கே போனது சிநேகத்தின் சிவப்பு?

யாரோ கேலி செய்தார்கள்.

   என்னிடமோ பதிலில்லை

இப்போது

எங்கேயிருக்கும் என் சிநேகத்தின் கதிரவன்

மோக வசீகரிப்பின் இரவுச் சத்திரத்திலா?

காட்சிச் சந்தையின் மேளக் கச்சேரியிலா?

மிருக வேட்டையிலா?

மிருக வேட்கையிலா?

எங்கே அஸ்தமித்திருக்கும்?

தெரியவில்லை.

   எனவே

இன்று வடக்கினியில்3

முப்பத்தியாறு4 கும்பிடும்போது

கேட்டேன் நான்:

பார்வதி தாயே!

கங்கை இப்போதும்

வடக்குநாதனின் உச்சியில்தானா?

-   கீதா ஹிரண்யன், பெண் வழிகள் : 61-63/

   இந்தக் கவிதைக்குள்ளிருந்து வெளிப்படும் பெண்ணின் இருப்பும் எள்ளலும் அர்த்தநாரிசுவரத் தத்துவத்தைப் புரட்டிப்போட்டுக் கேள்விக்குள்ளாக்குவதோடு ஏளனப் பார்வையுடன் அணுகுவதாகவும் உள்ளது. அர்த்தநாரிசுவரன் என்பது ஒரு சரிசமமான வடிவமாக இல்லை அது இரண்டு பெண் ஓர் ஆணின் பகுதி வடிவங்கள் சேர்ந்த ஒன்றரை நாரீச வடிவம் என்று எள்ளி நகையாடி அந்த உருவத்தைக் கட்டுடைத்து மற்றொரு உருவை நிலைகொள்ளச் செய்துள்ளார். தலைமுறை இடைவெளிக் கூறுகளைக் கவனத்தில் கொண்டு இக்கவிதைக்குள் நுழையும்போது இத்தொன்மம் குறித்து நிலவும் கருத்துக்களையும் அது தொடர்பான பெண்ணிலைப்பாடுகளையும் இதனைப் புறந்தள்ள வேண்டிய காரணத்தையும் விளங்கிக்கொள்ளலாம். இதனை மாலதி மைத்ரி வேறு வகையில் அணுகுவதை அவருடைய நீலி என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள விலக்கப்பட்ட குருதி 1 என்னும் கவிதை வழி அறியலாம்.
 

   கருவறை இருளுள்

தனது ஒன்றைக் கால் கடுக்க நிற்கிறாள்

அர்த்த நாரீசுவரி

சித்திரையின் வெம்மை குமையும்

தாழிட்ட கற்சிறைக்குள்.

   வெடித்து வழியும் கருமுட்டைக் கசிவு

யோனியில் பிசுபிசுக்க

கசகசப்பில் நெளியும் சக்தியை

தனது ஒற்றை வலக் கண்ணால்

முறைக்கிறான் சிவன்

குருதி நெடி பரவ

மீதி உடலை நினைவில் சுமந்தபடி

கீழிறங்கும் பாதிப்பாம்பை

பிடித்திழுத்து இரத்தத்தைத்

துடைத் தெறிகிறாள்

   வழக்கம் போல் இல்லாமல்

பெரும்பாடாகச் சாயும் உதிரத்தால்

இன்று மிகுந்த அலுப்பை உணருகிறாள்

தன் உடலைச் சற்று ஆசுவாசப்படுத்த

சிவனை விலகிப் போகச் சொல்கிறாள்

சரிபாதியானவன் நிலைகுலைகிறான்

தனது பாதியுடலுடன்

மூன்று நாட்களுக்கு எப்படி வாழ்வது

ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்கிறான்

   நீயின்றி நானில்லை என்றபடி

வலது கரத்தால் இறுக்க அணைக்கிறான்

என் கால்களை நீட்டி நான் அமரவேண்டும்

உன் உடலுடன் நான் உறங்க வேண்டும்

இடது கரத்தால் சிவனைப் பிய்த்தெறிந்துவிட்டுத்

தனது பழைய பீடத்தின் வெற்றிடத்தில்

வந்தமர்கிறாள்

பிரகாரச் சுற்றுப் பாதை எங்கும்

ஒற்றைக் காலடியின்

இரத்தத் தடங்கள்

            (மா.மை. நீலி : 66-67)

   இக்கவிதையில் அர்த்த நாரீசுவரன் என்ற வடிவத்தை விட்டொழித்து அர்த்தநாரிசுவரியை முன்னிறுத்துகிறார். பெண் தனக்கான சுதந்தரத்தைத் தானே தேடிக்கொள்வதும் தன்னை ஒடுக்கும் ஆண் உருவத்தைப் பிய்த்தெறிந்து விலக்கி வைப்பதுமான பார்வைகள், பெண்ணுடல் சார்ந்த அரசியலை முன்னெடுத்துச் செல்வதை உணர்த்துகின்றன.

   பெண்ணை ஒடுக்குதலுக்கு எதிராக ஆணை ஒதுக்கி வைத்தல் என்ற பெண்ணிலைச் செயல்பாட்டை மாலதி, சிவபெருமானிலிருந்து தொடங்குகிறார். ஆணும் பெண்ணும் இணைந்த ஒரு கூட்டு தான் வாழ்க்கை என்றாலும் அது ஆணில் ஒடுங்கி விடுவதால் அதை விட்டு விலகி, தன்னை மீட்டெடுத்துக்கொள்ள வேண்டியது பெண்ணின் தேவைப்பாடாகிறது.

   குறிப்பாகச் சிவனின் பெருமை பேசும் அர்ததநாரிசுவரர் என்னும் சொல்லாடலை உடைத்தெறிந்து அதற்குள் இருக்கும் அர்த்தநாரீசுவரியை வெளிக்கொணர்வதன் மூலம் ஆணால் கட்டமைக்கப்பட்ட மொழியையும் புனைவுகளைம் சிதைத்துப் பெண்மொழியையும் பெண்ணின் இருப்பையும் நிலைநிறுத்தும் முயற்சியாக இக்கவிதை அமைகிறது.

   தத்தம் நிலங்களாலும் மொழிகளாலும் விலகி நின்றாலும் கீதா ஹிரண்யனும் மாலதி மைத்ரியும் மேற்குறித்த கவிதைகள் மூலம் மேற்கொண்டுள்ள பணிகள் பெண் மைய வெளியைக் கட்டமைப்பதற்கான பணிகளாகவே அமைகின்றன. இக்கவிகளின் குரல்கள் ஓங்கி ஒலித்து இப்படியான முன்னெடுப்புகளை விரிவடைய செய்ய இயலும் என்றாலும் சூழல் நெருக்கடிகளால் ஆங்காங்கே உள்ளொடுங்கி ஒலிக்கும் ஒற்றைக் குரல்களாகவே ஒலிக்கின்றன.

   மலையாளத்தில் எப்படியே! தமிழில் இப்படியான பார்வைகளும் பதிவுகளும் அதீதச் செயல்பாடுகளாகவும் விரும்பத்தகாத பதிவுகளாகவுமே பார்க்கப்படுகின்றன. சங்க இலக்கிய வெளியில் ஒலிக்கும் பெண் குரலையும் இறை நெறித் தளத்தில் ஒலிக்கும் குரலையும் விழுந்து விழுந்து உள்வாங்கும் பொதுப்புத்திக்கு நவீன படைப்புச் சூழலிலிருந்து வெளிப்படும் இத்தகைய பெண் குரல்கள் அசூயை மனநிலையை ஏற்படுத்துவதும் அதிர்வை ஊட்டுவது போலத் தோன்றுவதும் விட்டொழிக்க முடியாத அதிகாரத் தொடர்ச்சியின் நீட்சிகளாகவே பார்க்கமுடிகிறது.
 

குறிப்புகள்

1.   வடக்குநாதன் - திருச்சூரில் கோயில் கொண்டிருக்கும் சிவன்.

2.   மணிப்பிரவாளம் - சமஸ்கிருதத்துடன் வட்டார மொழி இடைகலந்து ஒலிக்க உருவாகும் மொழி. மணிப்பிரவாளத்தில் சிருங்காரக் கவிதைகளை உருவாக்கி அரங்கேற்றி ரசிப்பது கேரளத்து உயர்வகுப்பாரின் கேளிக்கைகளில் ஒன்று.

3.   வடக்கினி - நம்பூதிரிகளின் இல்லங்களில் வடதிசையில் உள்ள பூசை அறை. வழிபாடுகளும் சடங்குகளும் நடப்பது இந்த அறையில்தான்.

4.   முப்பத்தாறு  - பரதெய்வங்கள் 35, சிவனுடன் சேர்த்து 36.

Pin It