thirumavelan book on periyarப. திருமாவேலனின், “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” நூலின் இரண்டாம் தொகுதி மொழி, மொழி வழி மாகாணப் பிரிவினையின் வரலாறுகளை விளக்குகிறது. ம.பொ.சி. முன்மொழிந்தது - இந்துத்துவத் தமிழ்த் தேசியம், குணா முன் மொழிந்தது - இறையியல் தமிழ்த் தேசியம், பெ. மணியரசன் முன் மொழிந்தது - நிலப்பிரபுத்துவ தமிழ்த் தேசியம் என்று சான்று களுடன் நிறுவுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் திருவிதாங்கூர், கொச்சி என்ற இரண்டு பகுதிகளும் மன்னர்கள் ஆட்சியின் கீழ் சமஸ்தானங்களாக இருந்தன. மொழி வழி மாகாணப் பிரிவினையின் போது, திருவிதாங்கூர் இணைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக பெரியார் எழுதிய ஏராளமான அறிக்கைகளை தேதி வாரியாகப் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

மொழிவழி மாநிலப் பிரிவினைகளைப் பெரியார் ‘எல்லைகள் மீட்பு’ என்ற ஒற்றைக் கண்ணோட்டத்துடன் அணுகிடவில்லை. இந்தியாவிலிருந்து தனித் தமிழ்நாடு பிரிய வேண்டும் என்ற இலட்சி யத்தோடும் பெரியார் இணைத்துப் பார்த்தார். ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் அனைவரையும் உள்ளடக்கி இன வழிச் சுரண்டலுக்கு வலிமை சேர்ப்பதாக போராட்டத்தின் இலக்கு இருந்துவிடக் கூடாது என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார்.

எல்லை மீட்புப் போராட்டங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பங்களிப்பை பெரியார் வழங்கவில்லை என்று தோழர் மணியரசன் போன் றோர் பரப்பி வரும் கருத்துகளுக்கு அழுத்தமான மறுப்புகள் முன் வைக்கப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் போராட்டத்துக்குத் தலைமையேற்று வழி நடத்திய மார்ஷல் நேசமணி, பெரியாரிடம் மிகுந்த பற்றுக் கொண்டிருந்ததையும் அவரது கரங்களினால் மாலை அணிவிக்கப்பட்ட ஒரே தலைவர் பெரியார் தான் என்றும் நேசமணி வரலாற்று நூலிலிருந்து (நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்) நூலாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

தனித் தமிழ்நாடு இலட்சியத்தோடு மக்கள் பகுத்தறிவுப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்ற கருத்தை பெரியார் தொடர்ந்து வலியுறுத்தியே வந்திருக்கிறார். அதேபோன்று தேவி குளம், பீர்மேடு எல்லை மீட்புப் போராட்டத்தில் பெரியார் குறித்து தவறாகப் பரப்பப்படும் பரப்புரைக்கு பெரியார் எழுத்து பேச்சுகளிலிருந்தே ஏராளமான ஆதாரங்களைப் பட்டியலிட்டுள்ளார் நூலாசிரியர். எல்லை மீட்புப் போராட்டக் காலங்களில் நடந்த விவாதங்கள், சட்டமன்ற நடவடிக்கை கள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவிகுளம், பீர்மேடு எல்லை மீட்புக்கு ம.பொ.சி. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க பெரியார், தனித் தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கையும் இணைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். உண்மையான தமிழ்த் தேசிய விடுதலையைப் பேசுகிறவர்கள் பெரியாரின் இந்த நிலையை ஆதரிக்க வேண்டும். மாறாக, பெரியாருக்கு எதிராக அவதூறுப் பரப்புவதற்கே பயன்படுத்துகிறார்கள்.

ஆந்திர மாநிலம், மொழி வழியாக முதலில் பிரிந்த பிறகு கேரளம் மற்றும் கருநாடகத்தின் சில பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைத்து, தட்சிணப் பிரதேசம் என்ற அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் நடந்தபோது, பெரியார் அதைக் கடுமையாக எதிர்த்தார். பெரியார் பேசிய ‘திராவிடம்’ என்பது மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களுக்கு ஆதரவானது; பெரியார் பிறப்பால் ஒரு கன்னடர்; எனவே தமிழர்களுக்கு துரோகம் செய்தார் என்ற நேர்மையற்ற ஆதாரங்கள் இல்லாத மொக்கை வாதங்களுக்கு விரியான பதிலடியைத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.

‘மூவரைப் புரிதல்’ என்ற அத்தியாயம் ம.பொ.சி. ‘தமிழ்த் தேசியத்தை’ தோலுரிக்கிறது. காங்கிரசில் இருந்து கொண்டே ‘தமிழரசுக் கழகம்’ தொடங்கினார் (1946 நவம்பர் 21). பிரிவினைக் கூடாது; இந்தியாவுக்குள் இருந்து கொண்டே ‘சுயநிர்ணய உரிமை’ பெற வேண்டும் என்பதே அவரது குறிக்கோள். ஆனால் ம.பொ.சி. சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் முன்மொழிந்த ‘தமிழ்த் தேசியம்’, ‘இந்து’ தேசியமாகவே இருந்தது. பெரியார்-ம.பொ.சி. முதல் சந்திப்பு சென்னையிலிருந்து விருதுநகர் செல்லும் விரைவு வண்டியில் நிகழ்ந்தது (1947 ஜன. 26). ம.பொ.சி., தன்னுடன் பயணிக்கிறார் என்பதை அறிந்த பெரியார், அவர் இருக்கைக்கு தேடிச் சென்று பார்த்து காங்கிரசில் இருந்து கொண்டே சுயநிர்ணய உரிமை பேசுவதற்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரசும் பார்ப்பனர்களும் தங்களுக்கு தொல்லை தருவார்கள்; எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும் என்று நட்புக்கரம் நீட்டுகிறார்; ம.பொ.சி. அதை ஏற்கவில்லை. ‘ஆரியர், திராவிடர்’ பார்வையை ஏற்க முடியாது. மொழி வழிப் பார்வையே எனது குறிக்கோள் என்று ம.பொ.சி கூறியபோது, “நமக்குள் வேறுபாடு இல்லை அய்யா; அப்படியே இருந்தாலும் காலப்போக்கில் சரியாய் விடும்; நாம் ஒன்று சேரத்தான் போகிறோம்” என்று பெரியார் கூறினார். “என்னை விட வயதில் பெரியவரான அவர் தாமாகவே வலிய வந்தது என்னை உபசரித்தது வியப்பைத் தந்தது” என்று எழுதியுள்ளார் ம.பொ.சி. மேற்குறிப்பிட்ட அனைத்தும் ம.பொ.சி. யின் பதிவுகள் (‘எனது போராட்டம்’ நூல்).

இந்திய தேசிய எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்புக்கான ஒரு குரல் எந்தத் தலைவரிடமிருந்து ஒரு சிறு அளவு வெளிப்பட்டாலும் அவர்களோடு பல்வேறு கருத்து முரண்பாடுகள் தனக்கு இருந்தாலும் அவற்றை ஒதுக்கிவிட்டு வலியச் சென்று அவர்களை அரவணைக்கும் மிக உயர்ந்த மாண்பாளராக பெரியார் இருந்தார். சமூக இயங்கியல் பார்வையில் கூற வேண்டுமானால் எதிரிகளைத் தனிப்படுத்தி இலட்சியத்தின் முதன்மையான இலக்கை முன் னெடுத்துப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்து வதற்கான அணுகுமுறை அவரிடமிருந்ததை உணர முடியும்.

ம.பொ.சி., ஆங்கில எதிர்ப்பு என்ற பெயரில் இந்தியை ஆதரித்தார். பெரியார், இரயில் நிலையங் களில் இந்தி அழிப்புப் போராட்டம் நடத்தியபோது பூசப்பட்ட கருப்பு மை மீது மண்ணெண்ணெய்ப் பூசி, இந்தி ஆதரவுப் போராட்டம் நடத்தினார். பண்பாட்டு மொழி சமஸ்கிருதம் என்றார். தமிழர் மதம் இந்து என்றார். திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை 1951 மார்ச் 24,25 தேதிகளில் சென்னை யில் தொடங்கி, 9 மாதம் பல இடங்களில் நடத்தி, ஈரோட்டில் (18.11.1951) நிறைவு செய்தார். இதுவே இறுதி மாநாடு என்றார். அதிலும் அவரிடம் நேர்மையில்லை. “நான் இந்த எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியது தரும சங்கடமான நிலையில் தான். மனதார விரும்பி அதை நான் நடத்தவில்லை; அதற்காக வருந்தவும் இல்லை” என்று பிற்காலத்தில் (1974) எழுதினார். ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை ஆதரித்தார். ராஜாஜி தனக்கான ‘அபிமன்யூ’வாக ம.பொ.சி. செயல்படுகிறார். தனக்காக வியூகம் வைத்து தான் தடைகளைத் தகர்த்து உள்ளே நுழைய வழி வகுத்துத் தருகிறார் என்று வெளிப் படையாகவே எழுதினார்.

திராவிட இயக்கத்தை எதிர்த்த ம.பொ.சி., அதே திராவிட இயக்க ஆதரவோடு சட்டமன்ற உறுப்பின ரானார். மேலவை உறுப்பினரானார். தி.மு.க.விட மிருந்து இப்பதவிகளைப் பெற்றவர். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மேலவைத் தலைவர் பதவியைப் பெற்றார். பல்கலைக் கழகங்களில் பதவிகளைப் பெற்றார். இப்படி பதவிச் சுகங்களைப் பெற்று அனுபவித்தவர். 1989இல் மீண்டும் காங்கிரசில் அய்க்கியமானார். ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவிக்க ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இந்திய இராணுவத்தை அனுப்பியபோது அதை ஆதரித்து ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தார். அவர் சுயநிர்ணய உரிமை பேசியது உதட்டளவில் தான். அவரது உள்ளத்தில் பதிந்து நின்றது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் தான்.

“பாரதம் (இந்தியா அல்ல - கவனிக்க) ஒரு நூற்றாண்டு காலம் போராடியது என்றால் அதற்கு முக்கிய காரணம் பாரத மன்னர்களின் அரசியல் உணாச்சியைவிட மக்களின் மத உணர்ச்சியேயாகும். அன்னிய நாட்டினருக்கு அடிமைப்படுகிறோம் என்பதிலிருந்த வெட்கத்தைவிட, அன்னிய மதத் தினருக்கு அடிமைப்படுகிறோம் என்ற வேதனையே ஒரு நூற்றாண்டுக்காலம் போராடுவதற்கான ஆற்றலை பாரத மக்களுக்கு தந்தது... இஸ்லாமிய கிறிஸ்தவ சமுதாயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இராணுவ ரீதியில் பாரத கலாச்சாரத்தின் மீது படை எடுத்துப் போரிட்டனர் என்று பச்சையாக ஆர்.எஸ்.எஸ். குரலையே ஒலித்தவர்தான் ம.பொ.சி. இது குறித்த ஏராளமான ஆதாரங்கள் வரலாற்றுத் தகவல்களைப் பதிவு செய்கிறது இந்த அத்தியாயம். (ம.பொ.சி. எழுதிய “வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” நூல் - 1962இல் எழுதியது)

பெரியாருக்கு எதிராக தொடைத் தட்டிக் கிளம்பிய பெங்களூரைச் சார்ந்த குணாவின் வாதங்கள் அவர் எழுத்துக்களைக் கொண்டே மறுக்கப்பட்டிருக்கின்றன. ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்ற அவரது நூலுக்கான மறுப்பை அவரே எழுதிய ‘இந்திய தேசியமும் திராவிட தேசியமும்’ என்ற நூலில் எழுதியிருப்பதை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவரது ‘தமிழரின் தொன்மை’ என்ற நூல், இறந்து போன காஞ்சி சீனியர் சங்கராச்சாரிக்கு ஆதரவாகவும் பாவாணரை மறுத்தும் எழுதப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். நீதிக் கட்சித் தலைவரான சர். பிட்டி தியாகராயர் மீது குணா பரப்பும் அவதூறு; ‘சூத்திரர்’ என்பது தேவ தாசிகளுக்கு மட்டுமே உரியது. எல்லோருக்குமானது அல்ல” என்ற திரிபு, எல்லோரையும் சூத்திரராக்கியது பெரியார் தான் என்ற உளறல். அத்தனைக்கும் வரலாற்றாசிரியர்களின் கருத்துகளைக் காட்டி மறுக்கப்பட்டுள்ளது.

தோழர் மணியரசனின் அரசியல் வரலாற்றையும் விவரித்துள்ளது. அவர் பெரியார் மீது வைத்து வரும் விமர்சனங்களுக்கு வலிமையான மறுப்புகள் முன் வைக்கப்பட்டுள்ளன. தோழர் மணியரசனின் முரண்பாடுகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. மறுப்புரை வழியாக பெரியார் குறித்து இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான வரலாற்றுத் தகவல்களும் பெண்ணுரிமை குறித்து அவரது பார்வையும் விரிவாக அலசப்பட்டுள்ளது. பெரியாரின் பெண்ணியக் கருத்துகளை ‘உதிரிவாதம்’, ‘நுகர்வு வாதம்’ என்கிறார் பெ. மணியரசன். பெரியார் பேசிய பெண்ணுரிமை பெண் விடுதலை; பெண்களை ஆணின் இடத்தில் வைக்கவில்லை; ஆண்களுக்கும் மேலான இடத்தில் வைத்தார் என்ற சரியான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் பிள்ளைகளே வேண்டாம் என்பதல்ல அவரது கொள்கை; அதிகம் வேண்டாம் என்றார் என்று நூலாசிரியர் கூறுவதில் நமக்கு கருத்து மாறுபாடு உண்டு. ‘அதிகம் பெற்றுக் கொள்ள வேண்டாம்’ என்று பெரியார் பேசி வந்தாலும் பிள்ளைகள் பெறுவதையே நிறுத்தினால்தான் பெண் விடுதலை முழுமையடையும் என்பதே அவரது கொள்கை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். “பெண் ஏன் அடிமையானாள்?” நூலில் இதைத் தெளிவாகவே பெரியார் விளக்கியிருக்கிறார்.

பெரியாரின் ‘திராவிடம்’ என்ற அத்தியாயம் தமிழறிஞர்கள் மேற்கோள்களோடு பவுத்த சமணச் சான்றுகளோடு “தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் தமிழ்நாட்டையும் குறிக்கும் சொல்லாகவே பலராலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டது” என்று நிறுவிக் காட்டி யிருக்கிறது. “பெரியார் தமிழுக்கே எதிரி” என்று சில தமிழ்த் தேசிய குழுக்களும் பா.ஜ.க. சங்கிகளும் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்து தமிழ் மொழி வளர்ச்சிக்காக அதன் மீது சுமத்தப்பட்ட இழிவை எதிர்த்து பெரியார் எழுத்துகளை எடுத்துக் காட்டி மறுத்துள்ளார் நூலாசிரியர்.

‘தமிழ் ஈழமும் தந்தை பெரியாரும்’ என்ற அத்தியாயம் இதுவரை வெளிச்சத்துக்கு வராத பல தகவல்களைப் பதிவு செய்துள்ளது. 1950களிலிருந்து ஈழத் தமிழர்களுக்காக பெரியார் ‘விடுதலை’ ஏட்டின் வழியாகக் குரல் கொடுத்து வந்துள்ளார். 1928 முதல் 1944 வரை நீதிக்கட்சிக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இருந்த தொடர்பு, 1931இல் இலங்கையில் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட வரலாறு. 1956 முதல் தி.மு.க., ஈழத் தமிழர்கள் விடுதலைக்கு ஆதரவு தந்தது; யாழ்ப்பாணத்தில் 1969இல் நடந்த தி.மு.க.வின் நான்காவது மாநாடு ஈழத் தமிழர்கள் உரிமைக்காக அண்ணா எழுதிய கட்டுரைகள் என்ற ஏராளமான வரலாற்றுச் செய்திகள் நூலில் இடம் பெற்றுள்ளன.

1944இல் திராவிடர் கழகம் தமிழகத்தில் தொடங்கப்பட்டபோது இலங்கையிலும் ‘திராவிடர் கழகம்’ தொடங்கப்பட்டது. இளஞ்செழியன் தலைவரானார். தி.மு.க. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டபோது, இலங்கையில் தி.மு.க. தொடங்கப்பட்டது. 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க நான்கு தமிழர்கள் தமிழ்நாடு வந்து, போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்று விடுதலையான பிறகு இலங்கைக்கு திரும்பியிருக்கிறார்கள். 1939 முதல் பெரியார் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். தேதி வாரியாக பெரியார் வெளியிட்ட அறிக்கைகள் நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. 1956லேயே தமிழர்கள் சிறு ஆயுதக் குழுவை உருவாக்கி சிங்களர்களுக்கு எதிராகப் போராடியுள்ளனர். 1970இல் ‘தமிழ் மாணவர் பேரவை’யை இளைஞர்கள் தொடங்கினார்கள். பிரபாகரனும் அதில் ஒருவர். தமிழ் ஈழ ஆயுதப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளிகளில் ஒருவரான சத்தியசீலன், கடல் வழியாக தமிழ்நாடு வந்து, 1971இல் தமிழ்நாட்டில் பெரியாரை சந்தித்துள்ளார். தமிழர் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார் பெரியார். அதேபோல் கோவையில் தொழிலதிபர் விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவையும் சந்தித்தார். அவரும் ஆதரவு தெரிவித்தார். திராவிட இயக்கத்துக்கும் தமிழ் ஈழ விடுதலைக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகளை விரிவாக விளக்குகிறது இந்த அத்தியாயம். இது வரை வெளியே தெரியாத ஏராளமான செய்திகள் இடம் பெற்றுள்ளன.

நூலின் சுருக்கமாக சில செய்திகளை மட்டுமே இத்தொடரில் சுட்டிக் காட்டியுள்ளோம். தமிழ் - தமிழர் குறித்த பெரியாரின் கருத்துகள்; தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழர் உரிமைகளுக்கும் தமிழ் மொழிக்கும் நடந்த போராட்டங்கள், தமிழறிஞர்களிடம் பெரியாருக்கு இருந்த தொடர்புகள் குறித்து எந்தத் தரவு தேவைப்பட்டாலும் ஒரு கணினியின் பயன்பாட்டுக்கு நிகராக அத்தனை தகவல்களையும் உள்ளடக்கியிருக்கிறது, இந்தத் தொகுப்பு.

பெரியார் களஞ்சியத்தை (Periyar Encylopedia) கடும் உழைப்பால் உருவாக்கி தமிழினத்துக்கு ‘கொடை’யாக வழங்கியுள்ளார், ப. திருமாவேலன். இதுபோன்ற இளைஞர்கள் இருக்கும் வரை பெரியாரியலை திசை திருப்பி விட முடியாது என்ற அழுத்தமான நம்பிக்கை நமக்கு உருவாகிறது.

‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்’ நூலைப் படித்து முடிக்கும்போது, ‘இவர்தமிழர் இல்லை என்றால் எவன்டா தமிழன்?’    என்று உச்சரிக்க வைத்து விடுகிறது இந்தத் தொகுப்பு.   (நிறைவு)

- விடுதலை இராசேந்திரன்

Pin It