யார் இந்த மணியம்மையார்? என்ற கேள்வியில் தொக்கி நிற்கிறது அவரின் பெருமை. தந்தை பெரியாரின் மனைவி என்ற ஒற்றைச் சொல்லா? இல்லை 95 ஆண்டுகள் வரை தந்தை பெரியாரை பேணிக்காத்த பெருந்தகையா? தள்ளாடும் கிழவனென்று அறிந்தும் தாங்கிப் பிடித்திட்ட தாய்மையோ? திராவிட இயக்கத்தை கட்டிக்காத்த வீரமங்கையோ? எத்தனை விதமாக சிந்தித்தாலும் ஒரு மாபெரும் புரட்சியாளராக நம் கண் முன் நிற்கும் ‘அம்மா’ அன்னை மணியம்மையார்.

நான்காம் பாரம் படிக்கும் பொழுது எந்த பெரியாரை சந்தித்தார் என்பதற்காக பள்ளி நிர்வாகத்தால் பள்ளியை விட்டு அனுப்பப்பட்டாரோ அதே பெரியாரோடு அவரின் வாழ்நாள் முழுதும் பயணம் செய்தவர் அன்னை மணியம்மையார். எத்தனையோ பேர் தந்தை பெரியாேராடு பயணம் செய்தாலும் சுயநலமற்ற ஒற்றை ஜீவனாய் அய்யாவின் அருகிலே எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்திட்ட பெருந்தகை அன்னை மணியம்மையார்.

periyar and maniamma 653தந்தை பெரியாரைப் போல பெண் இனத்திற்கு போராடியவர் யாருமில்லை. பெண் கல்விக்காகவும் பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்து போராடியவர். அப்படிப்பட்ட பெரியார் மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டதும் ஏகப்பட்ட எதிர்ப்பலைகள். ஏளனப் பேச்சுகள். பெண்களுக்காகப் போராடிய பெரியார் ஒரு சிறு வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டாரே. இவ்வளவு தானா அவரின் பெண்ணியம். கேள்விக்கணைகளும் விமர்சனங்களும் பறந்தன.

மணியம்மையாரின் காதில் விழும்படியே சொல்லொண்ணா சொற்கள் இன்றளவும் சில கோமாளிகள் அன்னையைப் பற்றி மிகக் கேவலமாகப் பதிவிடுகிறார்கள் எனில் அன்றைய சூழ்நிலையில் எப்படி இருந்திருக்கும். திராவிடர் கழகம் இரண்டுபட்டது. ஆம். அண்ணா தலைமையில் ஏற்கனவே பதவி ஆசை கொண்டு இருந்தவர்கள் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் திருமணம் காரணம் காட்டி கழகத்தை விட்டுப் பிரிந்தனர்.

தன்னை மிகச் சிறந்த பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டவர்களும் நடுநிலைமை சுயமரியாதைக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களும், சீர்திருத்தவாதிகள் என்று தன்னைச் சொல்லிக் கொண்டவர்களுமே தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் திருமண ஏற்பாட்டை ஏற்கவில்லை எனும் போது சாமானிய மக்களின் எண்ணம் எப்படி இருக்கும். எந்த அளவு வசைபாடி இருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இத்தனை இழிசொல்லையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து அய்யாவுடன் அவர் பயணித்தார்.

என்பது அய்யாவின் சொத்து சுகத்திற்காக அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

‘காற்றிறங்கி பொதிமாடு போல் பெருத்து தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றி பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக் காத்து ஒரு அருந்தொண்டு புரிந்த அன்னை மணியம்மையார் மீது சொல் வீச்சுகள்.

பெரியார் பல ஆண்டுகள் நலமுடன் வாழ்வேண்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியாருக்கு ஒப்படைத்த அந்த சிறு பெண்ணின் மீது கற்களை விட மோசமான சொல் அம்புகள் அத்தனை வசவுகளையும் புன்னகையோடு ஏற்று தந்தை பெரியாருக்குப் பணி செய்வதே தன் கடமை என்று அய்யாவின் இறுதிக் காலம் வரை ஓயாமல் உழைத்த தியாக உருவம்தான் அன்னை மணியம்மையார்.

உலகில் எத்தனையோ பேர் புரட்சியாளர்கள். அவர்களை விடப் பல்வேறு தளங்களில் தனித்து நின்ற தந்தை பெரியாரின் வாழ்நாள் முழுவதும் அவரோடு இணைந்து போராடிய திராவிட வீராங்கனை. தந்தை பெரியாரிடம் இருந்து அவர் கற்றது தலைமைப் பண்பை. அதனால் தான் பெரியார் மறைந்த பிறகு அன்னையால் திராவிடர் கழகத்தை வழிநடத்த முடிந்தது.

தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் தறிகெட்டு போய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று பகல் கனவு கண்டுகொண்டு இருந்தவர்களின் நினைப்பை எல்லாம் பொய்யாக்கி இந்த திராவிடர் இயக்கத்தைத் தாங்கி பிடித்தவர் என்றால் அது மிகையல்ல.

ஒரு சராசரி பெண்ணுக்குரிய எந்த ஆசாபாசங்களும் இல்லாமல் எந்த அணிகலன்களும் இல்லாமல் ஆடம்பரமான ஆடைகள் அணியாமல் கறுப்பு சேலையும் வெள்ளை ரவிக்கையுமாக இறுதிவரை வாழ்ந்தவர்.

எழுத்து திறமையும் அன்னைக்கு சிறப்பாக இருந்தது. ‘கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே” அம்மாவின் முதல் படைப்பு எனினும் ‘சீதையை பற்றி ஒரு நடுநிலைமை ஆராய்ச்சி” எவ்வளவு தெளிவான சிந்தனையோடு அவரின் எழுத்து.

அன்னை மணியம்மையார் பற்றிய செய்திகளை படிக்கும் போது 1948-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானார் என்ற செய்தி அறிவோம். அதே சமயம் அப்பொழுது வழக்கு மன்றத்தில் நீதிபதி விடுத்த வினாக்களுக்கு அம்மா அளித்த பதில் வரலாற்று புகழ் என்பதை விட பெண் இனத்திற்கு பெருமை சேர்த்தது எனலாம்.

கேள்வி : உங்கள் மதம் எது?

அன்னை பதில் : எனக்கு எந்த மதமும் கிடையாது.

கேள்வி : உங்கள் ஜாதி?

பதில் : திராவிட ஜாதி

நீதிபதி : தங்களுக்கு இரண்டு காவல் தண்டனை அளிக்கிறேன்.

எவ்வளவு சிறப்பான பதில்கள், இதுகூட பரவாயில்லை, இதற்கு அன்னையின் பதில்

பதில் : மிக்க மகிழ்ச்சி. வணக்கம்.

இந்த பதிலைக் கேட்டு நீதிபதியே வியந்துபோனாராம். என்ன ஒரு நெஞ்சுரம்.

கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி. ஒரு பெரிய இயக்கத்தின் தலைவரின் இணையர். ஆனால் எந்த ஒரு கூட்டத்திலும் தன்னை தனித்து காட்டிக் கொள்ளாமல் மேடையில் அமராமல், மற்றவர்களின் புகழுரைகளுக்கு காத்து நிற்காமல் கூட்டத்தின் ஒரு மூலையில் புத்தகம் விற்றுக் கொண்டிருந்த மணியம்மையார் தான் பின்னாளில் திராவிடர் இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியவர்.

விளம்பரம் விரும்பாத உன்னத தாய். ஆனால் போராட்டம் என்றால் முன்னுக்கு நிற்பவர்.

எத்தனையோ போராட்டங்கள் அன்னையார் கலந்து கொண்டு இருந்தாலும் வடக்கே நடந்த இராம லீலாவிற்கு எதிராக இங்கே இராவண லீலா நடத்திக் காட்டியது தான் சிறப்பானது.

இராவணன் போலவும் கும்பகர்கணன், மேகநாதன் போன்ற தோழர்கள் வேடம் தரித்து வர அவர்கள் நடுவே மிகக் கம்பீரமான நடையோடு வந்த அன்னையார் இராமன், சீதை, லட்சுமணன் ஆகிய உருவங்களுக்குத் தீ மூட்டினார். தந்தை பெரியார் வாழ்க என்ற முழக்கம் விண்ணைப் பிளக்க இராவண லீலா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கைது செய்ய வந்த காவல் அதிகாரிகளோடு மகிழ்ச்சியோடு அன்னையார் சென்ற காட்சியை மனக்கண் முன் நிறுத்திப் பார்க்கத் தோன்றுகிறது.

ஒருமுறை ஆளுநர் மோகன்லால் சுகாதியா அன்னையாரிடம் “நீங்கள் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையை விட்டு விட்டேன் என்று அறிக்கை விடுங்கள் என்னால் ஆனதை செய்கிறேன்” என்றதும் “அது எங்கள் லட்சியம் அதை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது” என்று அசத்தலாக பதில் சொல்லிய வீராங்கனை தான் அன்னையார்.

‘இயக்கம் எப்படி இருந்தாலும் இயக்கத்திற்கு யார் தலைவராக இருந்தாலும், என்னுடைய கொள்கைகளும் கொள்கைக்கு ஏற்ற பிரச்சாரமும் எனக்கு பின்னும் நடந்தேற வேண்டும் என்கிற பேராசை எனக்கு உண்டு.

- குடிஅரசு - 16.07.1949

1949-இல் அய்யா குடிஅரசில் எழுதிய தன் விருப்பத்தை பேராசையை 1973-இல் இருந்து 1978 வரை மிகச் சிறப்பாக செயல்படுத்திக் காட்டியவர் அன்னையார் அவர்கள். இதை அவரின் தொண்டறம் என்று சொல்வதை விட போர்குணம் என்றே சொல்லலாம்.

தனது திருமண ஏற்பாட்டின் போது தந்தை பெரியார் ஒருஅறிக்கை வெளியிடுகின்றார். அதில் எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படியான ஒரு வாரிசை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்” ‘வாரிசு” என்று நான் குறித்தது எனது உள்பட பொருளுக்கு தான்.

மணியம்மை வாரிசு என்பது டிரஸ்டு சம்மந்த உரிமை மட்டுமே. மணியம்மைக்கு சுதந்திர பாத்தியமுடையதல்ல. பரம்பரை பாத்தியமுடையதல்ல” என்ற தெளிவான அறிக்கைக்கு ஏற்ப பின்னாளில் அந்த டிரஸ்டை நன்கு வளரச் செய்த பெருமை அன்னையாரைச் சாரும்.

தந்தை பெரியாரின் போராட்டம் என்பது சமூக அநீதிகளுக்கு எதிரானது. நாற்பது ஆண்டுகள் அவரை கண்ணும் கருத்துமாய் கவனித்து போர்க் களத்தில் நடமாடச் செய்த பெருமைக்குச் சொந்தக்காரர் மணியம்மையார் அவர்களே.

அய்யாவின் மறைவிற்குப் பின்னும் ஜாதி சாக்கடைகள் மலிந்த இந்த நாட்டிலே பெண்கள் தலைமை ஏற்பதை விரும்பாத நாட்டிலே ஒரு இயக்கத்தையே வழிநடத்தி சென்ற அன்னையாரின் தீரத்தை என்னவென்று சொல்வது.

கிழவன் சிறுமியை திருமணம் செய்துகொண்டார் என்று தலையங்கம் எழுதியவர்களும், பெண்ணின் தலைமையின் கீழ் இயக்கமா என்று இழிசொல்பேசி வசைபாடியவர்கள் எல்லாம் வியந்து மனதார வருந்தி அவர்களே வியந்து பாராட்டும் அளவு தந்தை பெரியாருக்குப் பின் இயக்கத்தை வழிநடத்தி சென்ற அன்னை மணியம்மையாரை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. தொண்டுள்ளமே நீ வாழ்க.

‘அன்பாய் வந்தாய்

அன்னையாய் மாறினாய்

பழிசொல் பல

பரவியே வந்திடுனும்

இன்முகம் காட்டியே

ஈகையில் உயிர்ந்தாய்

பசித்திடும் குழந்தைகள்

பசியது போக்கினாய்

தள்ளாடும் கிழவனின்

தடியாய் நீ பலநேரம்

சூத்திரப்பட்டம் ஒழிய

மூத்திர சட்டியுடன்

முகம் சுளிக்காமல் நீயும்

சூறாவளியாய் களத்தில்

வாழ்ந்திட்டார் தந்தை

95 ஆண்டு வரை

உம்மால்தான் அன்னையே

உம்மால் மட்டுமே.

இன்றைய பெண்கள் அன்னை மணியம்மையாரைப் படிக்க வேண்டும். அன்னையாரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம்.

இந்த ஆண்டு அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு. அவரின் தொண்டறத்தை மக்கள் அறிய பட்டிதொட்டி எங்கும் அவர் புகழ் பரப்ப வேண்டும். இதுவே அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.

வாழ்க தந்தை பெரியார்

வாழ்க அன்னை மணியம்மையார்.

Pin It