திருக்குறள் ஆரியப் பார்ப்பனிய நான்மறை களுக்கு எதிராக எழுதப்பட்ட நூல் ஆகும். சுயமரியாதை இயக்கமும் ஆரியப் பார்ப்பனப் பண்பாட்டுக்கும் அவர் களின் அரசியல் மேலாதிக்கத்திற்கும் எதிராகத் தோன்றிய இயக்கமாகும். அந்த வகையில் திருக்குறளைச் சுய மரியாதை இயக்கம் தொடக்கக் காலம் முதலே போற்றியே வந்திருக்கிறது.

14.03.1926 “குடிஅரசு” இதழில் திருக்குறள் கருத்துகளை எளிமைப்படுத்தி தூத்துக்குடி ஜெகவீர பாண்டியன் அவர்கள் இயற்றிய “திருக்குறள் குமரேச வெண்பா” என்ற நூலுக்குச் சிறந்த முறையில் மதிப் புரை எழுதப்பட்டுள்ளது.

06.03.1927 “குடிஅரசு” இதழில் திருக்குறள் பரிமேலழகருரை பாக்கெட் அளவு நூலுக்கு மதிப்புரை எழுதப்பட்டுள்ளது. அருணாசலக் கவிராயர் அவர்கள் திருப்பரங்குன்றத்திலிருந்து இந்நூலை பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

17.04.1927 “குடிஅரசு” இதழில் ‘திருவள்ளு வனார் பஞ்சரத்தினம் 500’ என்ற நூலுக்குச் சிறந்த முறையில் மதிப்புரை எழுதப்பட்டுள்ளது. திருவள்ளுவர் திராவிட வேதத்தை அருளியவர் என்றும், சித்த வைத்தியம் தொடர்பாக இந்நூலை திருவள்ளுவரே எழுதியதாக இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சித்தர் நூல் பதிப்புக் கழகம் வண்ணாரப்பேட்டை சென்னையிலிருந்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

02.10.1927 “குடிஅரசு” இதழில் ‘திருக்குறளும் பகவத்கீதையும்’ என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. கட்டுரையாளர் பெயர் வெளியிடப்படவில்லை. பகவத் கீதையின் தத்துவங்களுக்கு நேர் எதிரானது திருக்குறள். திருக்குறள் தமிழர் மறை. கட்டுரை வெளிவருவதற்கு சில நாள்களுக்கு முன்பு தமிழகம் வந்த காந்தியார் திருக் குறளைப் புகழ்ந்து பேசாமல் பகவத் கீதையைப் புகழ்ந்து பேசியதை இக்கட்டுரையாளர் கண்டித்துள்ளார்.

சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கக் காலத்தில் தீவிரமாகப் பணியாற்றிய புலவர் சாமி. சிதம்பரனார் திருவள்ளுவரின் கருத்துகள் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துகளோடு எப்படி ஒத்துப்போகின்றன என்பதை விளக்கி குடிஅரசு ஏட்டில் 20.11.1927 முதல் 07.10.1928 வரை பதினெட்டு தலைப்புகளில் தொடர் கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘திருவள்ளுவரும் தமிழரும்’ என்ற முதல் கட்டுரையிலேயே சுயமரியாதை இயக்கம் திரு வள்ளுவரை எப்படி அணுகுகின்றது என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றார்.

பரிமேலழகர் உரை வடமொழி சார்பானது. திரு வள்ளுவரின் மூலக் கருத்துக்கு எதிரானது என்பதை 1927 இலேயே எழுதி உள்ளதை எண்ணிப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது.

நமது செந்தமிழ்நாட்டுப் பழம் பெரியாராகிய திரு வள்ளுவரின் பெயரைக் கேட்டறியாத கற்றறிந்த தமிழர் கள் இல்லையென்றே கூறலாம். அவர் பெயர் பலருக்குத் தெரிந்திருப்பினும், அவர் கொள்கைகளையும், உப தேசங்களையும் அறிந்திருப்பவர் மிகச் சிலரே. அவர் களிலும் திருவள்ளுவர் கொள்கைகளை உண்மை யாக அறிந்திருப்பவர் மிக மிகச் சிலர். திருவள்ளுவர் வரலாறு இன்னதென்பதை நாம் திட்டமாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவரைப்பற்றி வழங்கும் கதைகள் உண்மையென்று கொள்ளமுடியாத வகையில் அமைந் திருக்கின்றன.

எந்தக் கதை எப்படியிருந்தாலும், திருவள்ளுவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் தமிழ்க் குடியிற் பிறந்த ஒரு பெரியாரென்பதையும், அவருக்கு இணையான அறிஞர்கள் இவ்வுலகில் வேறு ஒருவரும் இல்லையென்பதையும், அவருடைய உப தேசங்கள் உலக மக்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத் தகுந்ததாகுமென்பதையும் ஒருவரும் மறுக்க முடியாததாகும். தமிழ்நாட்டிற் பிறந்த ஒரு பெரியாரின் சிறந்த நூலைப் பயில்வதால் தமிழரின் பண்டைக்கால ஒழுக்கத்தையும், நாகரிகத்தையும், கொள்கைகளையும் (மதங்களையும்) அறிந்து கொள்ளலாம்.

திருவள்ளுவர் கூறியிருப்பது முழுவதும் தமிழர்களின் கொள்கைகளே என்று கூறுவாரும் நம்புவாரும் பலருண்டு. ஆனால் பார்ப்பனத் தமிழறிஞர்கள் பலரும் திருவள்ளுவரின் சீரிய நூலைக் கண்டு, வடமொழி யில் அத்தகைய நூல் இல்லாதிருப்பதை எண்ணி, அது வடமொழியிலிருந்து வந்ததாகக் கூறுவர். ஆனால் இக்கூற்று முழுவதும் பொய்க் கூற்றாகும். திருவள்ளுவர் கூறின அனைத்தும் தமிழர் கொள்கையே என்று கூறுவதும் முழுதும் உண்மையன்று.

திருவள்ளுவர் நூலிலும் ஆரியக் கொள்கைகள் கலந்துவிட்டன என் பதைத் தமிழர்கள் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்திலேயே பாழும் பார்ப்பனீயம் சிறிது புகுந்திருக்கின்றது உண்மையென் றால், அதற்கும் பிற்பட்ட திருக்குறளில் பார்ப்பனீயம் சிறிது நுழைந்திருக்கின்றதென்று கூறுவதற்காக யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லையன்றோ?

நமது அருமைத் திருக்குறளிலேயே பார்ப்பனீயம் நுழைந்திருக்குமாயின், பார்ப்பனீயத்திலேயே மூழ்கிக் கிடந்தவர்களாலும், பார்ப்பனீயமே சிறந்ததென்று எண்ணியிருந்தவர்களாலும், எழுதப்பட்ட அதன் உரைகளால் திருவள்ளுவரின் உண்மைக் கொள்கைகள், அதாவது தமிழரின் உண்மைக் கொள்கைகள், மேகத்தால் சூழப் பட்ட சந்திரனைப் போல் மறைபட்டுக் கிடக்கின்றன வென்பது உண்மையன்றோ? இப்பொழுது எல்லோ ராலும் சிறந்ததாகக் கொண்டாடப்படும் பரிமேலழகரின் உரையில் தமிழரின் உண்மைக் கொள்கைகள் எவ்வளவோ மறைபட்டுக் கிடக்கின்றன. பரிமேலழகரின் சிறந்த அறிவையும், பெருமையையும் நாம் குறைகூற வில்லை. உரை செய்யுந் திறமையிலும் பரிமேலழகர் மற்றெவருக்கும் இளைத்ததாகக் காணமுடியாது.

ஆயினும், அவர் திருக்குறளில் உள்ள பொருள்கள் வடமொழியிலிருந்து வந்தனவென்ற கொள்கையைப் பலவிடங்களில் நிலைநாட்ட முயலுகின்றார். வருணாச் சிரம தருமத்தின் தோற்றமே திருக்குறளில் காணப்படா திருக்க, அதனைத் திருவள்ளுவரும் ஒப்புக் கொண்டார் என்று தமிழர் நினைக்கும்படி செய்வதற்குப் பெரிதும் முயல்கின்றார். தமிழர்கள் கொடுத்திருந்த பெண்களுரிமையை அழிப்பதற்கும் முயலுகின்றார். சமஸ்கிருத நூல்களுக்கும், பார்ப்பனக் கொள்கை களுக்கும், உயர்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத் துடனே திருக்குறளுக்கு உரையெழுதிச் செல்லுகின்றனர்.

பரிமேலழகர் உரை திருக்குறளுக்குச் சிறந்ததாயிருப்பினும், தமிழர் கொள்கைகளை மறைப்பதன் மூல மாகப் பெருந்தீங்கு விளைத்திருக்கின்றதைத் தமிழரின் உண்மை நாகரிகத்தை அறிந்தவர்கள் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். ஆகவே திருக்குற ளைப் பயிலுகின்றவர்கள் அதற்கு இப்பொழுதுள்ள பார்ப்பனீய உரைகளைத் துணையாக வைத்துக் கொண்டு, தங்கள் சொந்த அறிவினாலேயே பொரு ளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பழந் தமிழ் நூல்களின் பயிற்சியும், பழந்தமிழரின் கொள் கைகளும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று சுயமரியாதை இயக்கம் திருக்குறளை எப்படி அனுகிறது என்பதைப் தெளிவுப்படுத்தி உள்ளார்.

12.11.1927-இல் கூடிய அம்பாசமுத்திரம் பார்ப் பனரல்லாத வாலிபர் கழகக் கூட்டத்தில் திருவள்ளுவர் வாழ்த்துப் படிக்கப்பட்டது.

திருவள்ளுவர் வாழ்த்து

எழுசீரடி யாசிரிய விருத்தம்

ஆரி யந்தனின் மிக்க மேன்மை யழியு

மென்னவஃ தேங்கவே

சீரி யல்‘தமிழ்’த் தேமொ ழிக்கொரு

தெய்வமா‘மறை’ யீந்தனன்

பேரி சைக் குறு மாமு னிக்குல வழியின்

‘வள்ளுவன்’ பெருமையை

ஒரி னாடகத் தியாரு முன்னினர் வண்மை யோனென வாழ்த்துமால்.      ( 1 )

எம்ம தத்தின ராயி னுந்மக் கற்ற முற்றதொர் பொருளெனச்

சம்ம தத்தினி தேத்தி வாழ்ந்திடத் தக்க

விப்‘பொது மறை’யினால்

கொம்மை முத்தமிழ்க் கொற்ற நாட்டினர்

மயிலை யூரினிற் குவலயம்

மம்மர் நீத்துணர் வாற்ற வந்தருள்

‘நாயனா’ரென வாழ்த்துமால்.  ( 2 )

இயையு நாற்பொரு ளினித ளிக்குமொர்

நூலதேயரு நூலென

உயரு நான்கொழித் தொன்றி ரண்டையு முற்ற

ளிக்கு ‘முப்பா’லினை

முயல யாவரு முத்தி யெய்துதல் முன்னி

ஈந்தருள் முனைவனை

இயலின் மிக்கதொர் ‘தேவ தேவ’னென் றென்று மேத்தினர் வாழ்த்துமால்.     ( 3 )

நைந்த ழிந்திடு முயரி னுக்கரு நன்ம

ருந்தெனும் வாய்மையால்

உழ்ய்து யர்ந்திட உலகம் வாழ்ந்திடற் குற்ற ‘வாயுறை வாழ்த்தினை’

ஐந்தி லக்கணத் துற்ற யற்கொரு முதலெ

னப்படு பாவினால்

மைந்து றழ்ப்புது நூல ருள் ‘முதற் பாவ லன்!’

புகழ் வாழ்த்துமால்.     ( 4 )

நிறையி ரண்டடி கொண்டு மூன்றுல கன்ற

ளந்திடு நெடியனை

குறையி னின்றிடு மடியி னால்வெலுங்

“குற”ளெ னும்உல வாக்கிழி

பிறைது தற்றிரு மானெ னுங்கலை மடந்தை வாழருட் பீடமாம்

கறைப டுஞ்“செந் நாமலர்”ப்பெருந் தகையின் தாளிணை வாழ்த்துமால்.     ( 5 )

உண்மை யன்பறி வான வோரிறை வாய்ம லர்ந்திருக் கிளவியின்

பின்வி ளங்குயர் வேத மாகையின் பேர்கொள் “உத்தர வேத”மென்

றின்ப மார்தரு கணையை வீறுகொண் டெழுந்த மிழ்க்கடை மாணவை

துன்ப மாழ்ந்தொடுத்திடத்தி டும்“பெரு

நாவலன்” பெயர் வாழ்த்துமால்.      ( 6 )

அருத்து மாந்தர்தங் கருத்தெ னும்பல பார்ப்பி னுக்கமு துட்டியே

திருந்து புள்ளெனக் கருத்தன் பேர்கொளுஞ்

செய்ய வான் “திரு வள்ளுவர்”

அருந்த நூலினை யருளப் பார்மிசை அலரி ருக்கையு மன்புள

முருத்து வாணகை நீத்து முன்வரு “நான்மு

கன்” அருள் வாழ்த்துமால்.     ( 7 )

பொய்ம்மை நீங்கிய பொருள னைத்தையும் பொருளெ னத்திரட் டிப்பெரும்

மெய்ம்மை யோருரு வாகச் செய்தருள்

மேன்மை மிக்க ‘பொய் யாமொழி’

செம்மை யாருயிர்க் கன்னை சீலமும்

செருக்கெ னுந்திமி ரந்தனை

மும்மை யோட்டு மா தாது  பங்கி’யென

முதுமை யோனியல் வாழ்த்துமால்.  ( 8 )

பூவெனத் தகும் பொங்கு தாமரை யென்று

சான்றவர் புகறல்போற்

பாவெ னத்தகும் குரனெ னுந்திருப் பாவி

னாவியல் ‘தெய்வநூல்’

தேவ ரியாவரும் செயலி ழந்துசென் றெய்த்து நிற்பவத் தேவர்தாம்

ஆவல் கொள்விடை யருளுந் ‘தெய்வதப் புலவன்’ வாக்கினை வாழ்த்துமால்.     ( 9 )

வேட்ட வேட்டவர் வேண வாகுடித் தென்று

மன்றென விளங்கலால்

மேட்டி மிக்கஐந் தருவெ னுந்‘திரு

வள்ளுவப்பயன்’ விண்டவன்

வாட்ட டங்கண் மனைவி யாலுல கத்தினுக்

குயர் கற்பினைக்

காட்டு ‘மந்தணன்’ கடிம லர்ப்பதம் கடமை யே

யென வாழ்த்துமால்.    ( 10 )

பள்ளஞ் சூழ்திருப் பூவை மாநகர் ‘இராஜ

கோட்டியப் பன்’ திரு

‘வள்ளுவர்’ புகழ்அ றிந்து வாழ்த்துமிவ் ‘வான்பொருள்’ பதிகந்தனை

உள்ளி வாழ்த்தியர் சுற்ற மோடவற் புவனி போற்றுமந் நானெலாந்

தள்ள ருந்தமி ழன்பு தாங்கினர் வாழி! வாழியர்!! வாழியே!!!   ( 11 )

குடி அரசு( 20-11-1927)

‘கற்பு’ என்ற தலைப்பில் 08.01.1928 குடிஅரசு இதழில் ‘சித்திர புத்திரன்’ எழுதுவது என்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருவள்ளுவரின் இரண்டு அதிகாரங்கள் வாழ்க்கைத் துணை நலம் (16), பெண்வழிச் சேரல் (91) ஆகிய இரண்டும் பெண்களை இழிவு செய்வதாகக் கண்டிக்கப்படுகிறது.

22.1.1928 குடிஅரசு இதழில் ‘கற்பும் சித்திர புத்திரனும்’ ஒர்மறுப்பு கோவிற்பட்டி ஸ்ரீமான் டி.ஆர். பரமசிவ முதலியார் என்பவர் எழுதியுள்ளார். அவ்வை யார் சொல்லி இருக்கிறார். பெண்கள் தாங்களாகவே ஏற்றுக் கொண்டது. திருவள்ளுவர் மீது குறை சொல் லக்கூடாது என்று எழுதியுள்ளார்.

12.2.1928 குடிஅரசு இதழில் ‘கற்பு’ சித்திர புத்திரன் எழுதுவது என்றத் தலைப்பில் ஸ்ரீமான் டி.ஆர். பரமசிவ முதலியாருக்கு பதில் எழுதப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள பெண்ணடிமைக் கருத்துகளை ஏற்க முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூறியதுடன், குறள் விஷ யத்திலும் குறளாசிரியர் விஷயத்திலும் நாம் கொண் டுள்ள பக்தி ஸ்ரீ முதலியார் கொண்டுள்ள பக்திக்கு மீறியதல்லவானாலும் குறைந்ததல்ல என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று முடித்துள்ளார். பெரியார் தான் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

25.3.1928 குடிஅரசு ஏட்டில் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் வெளியிட்ட திருக்குறள் நூலுக்கு விளம்பரம் செய்துள்ளனர். 200 பக்கங்கள் 2 அணா விலை. 6, பவழக்காரத் தெரு, சென்னை.

30.9.1928 குடிஅரசு ஏட்டில் ‘திருக்குறளும் புராணக் கதைகளும்’ என்ற தலைப்பில் முத்தறி என்பவர் எழுதியுள்ளார். அறிவுக்குப் புறம்பான பொய்க்கதை களை நாம் தள்ளிவிட வேண்டும் என்கிறார்.

9.12.1928 குடி அரசு இதழில் சுயமரியாதை இயக் கத்தைச் சார்ந்தவரும் தமிழ் நூற் பதிப்புக் கழக உரிமை யாளருமான காஞ்சிபுரம் க.குப்புசாமி அவர்கள் வாலாஜா பாத் இந்துமத பாடசாலை தலைமை ஆசிரியரும், சிறந்த சுயமரியாதை கொள்கை உடையவருமான மாசிலாமணி அவர்களின் திருக்குறள் உரையை (பரிமேலழகருக்கு மாற்றான உரையை) 4 அணா மலிவுப் பதிப்பில் முன்பதிவு செய்திருந்தார்.

நான்காயிரம் படிகளுக்குமேல் முன்பதிவுத் தொகை கிடைத்துவிட்டதை மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். சிலர் 100, 200 படிகளுக்குப் பணம் அனுப்பி ஏழை மாணவர்களுக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ள தையும் குறித்துள்ளார். இனிமேல் பணம் அனுப்புப வர்கள் ரப்பர் கட்டடம் 8 அணா வீதமும், காலிக்கோ கட்டடம் 12 அணா வீதமும் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பொங்கல் புது நாள் அன்று பணம் அனுப்பிய எல்லோருக்கும் திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

24.3.1929 குடிஅரசு இதழில் திருக்குறள் மறுபதிப்பு 5,000 படிகள் அச்சிட்டுள்ளதாகவும், ‘ஞானசூரியன்’ நூல் பதிப்பு செய்துள்ளதாகவும் இரண்டிற்கும் சேர்த்து 2 ரூபாய் 8 அணா அனுப்ப வேண்டும் என்றும் காஞ்சி புரம் தமிழ் நூற்பதிப்புக் கழகத்தார் அறிவித்துள்ளார்.

29.9.1929 குடிஅரசு இதழில் காஞ்சிபுரம் தமிழ் நூல் நிலையத்தார் வெளியிட்டுள்ள திருக்குறள் உரை நூலுக்குச் சிறந்த மதிப்புரை எழுதப்பட்டுள்ளது. திரு வள்ளுவரின் உண்மைக் கருத்து இந்த உரையில் மிளிர்கிறது. சுயமரியாதை இயக்கத்திற்கு ஏற்ற உரை. இந்த நூலைத் தமிழன்பர்கள் வாங்கிப் பயன் அடைய வேண்டும் என்று எழுதியுள்ளனர்.

(தொடரும்)

Pin It