கண்ணதாசன் எழுதிய 'வனவாசம்' சுயசரிதை நூலிலிருந்து... நூல் முழுக்க கண்ணதாசன் தன்னை “அவன்” என்றே எழுதிச் சென்றுள்ளார்.

அத்தியாயம் 46. மாநகர் மன்றத் தேர்தல்  

இந்த நிலையில் சென்னை மாநகர் மன்றத் தேர்தல் வந்தது.[*1] பொதுத் தேர்தல் முடிந்து திருக்கோஷ்டியூரில் அவன் தோல்வியுற்று, சென்னைக்குத் திரும்பிய உடனேயே சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைக் கண்டான்.  

அப்போதே ‘தென்றலில்’ [*2] ஒரு தலையங்கம் எழுதினான். ‘அடுத்த மாநகர் மன்றத் தேர்தலில் முன்னேற்றக் கழகத்தவரே மேயராக வருவார்’ என்று அதில் அவன் குறிப்பிட்டான். 

அந்த நம்பிக்கையைத் துணைகொண்டு இப்போது தேர்தல் வேலைகளிலே இறங்கினான். அந்தத் தேர்தலில் சென்னையில் தி.மு.க.வுக்காக அதிகம் உழைத்தவர்கள் அவனும் நடிகர் டி.வி. நாராயணசாமியுமேயாவர்.  

உடலுழைப்பு, வாகன உதவி, பொருள் உதவி அனைத்தும் அவர்கள் இருவருமே செய்தார்கள். சிவகெங்கைச் சீமை படம் வெளிவருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் தேர்தல் நடந்ததால் அவன் கையில் அதிகப் பணப்புழக்கம் இருந்தது. பல தொகுதிகளில் இவன் தன் பணத்தைச் செலவழித்தான். காய்கறிகளுக்குப் போடப்பட்டிருந்த வரிகளையே பிரச்சாரத்திற்குப் பொருளாகக் கொண்டான். அவன் எதிர்பார்த்ததுபோல தி.மு.கழகம் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அண்ணாத்துரையே திகைத்தார். ஏனென்றால் அவர் எதிர்பார்க்கவில்லை. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பலர் அவனது கம்பெனிக்கே முதலில் வந்து அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் போனார்கள்.  

47. கணையாழியும் கசப்பும். 

கடற்கரையில் மாபெரும் பாராட்டுக் கூட்டம். வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். நடுவிலே அண்ணாத்துரை. அவர் பக்கத்திலே கருணாநிதி. கவுன்சிலர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். பலர் பாராட்டிப் பேசுகிறார்கள்; தேர்தலில் கடுமையாக உழைத்த அவனும் மற்றவர்களும் அனாதைகள்போல ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார்கள்.  

கருணாநிதி பேசுகிறார். அந்த வெற்றிக்குத் தானே கஷ்டப்பட்டவர்போல் பேசுகிறார். இவ்வளவுபேர் ஜெயிப்பார்கள் என்று ஏற்கனவே தனக்குத் தெரிந்ததாகவே பேசுகிறார்.  

அடுத்தாற்போல அண்ணாத்துரை சென்னை மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். காங்கிரசை வீழ்த்திவிட்ட பெருமையைப் பேசுகிறார். வெற்றிக்காக உழைத்தவர்கள் பட்டியலைச் சொல்கிறார். அதில் தன் பெயரும் வரும் என்று அவன் காத்துக்கொண்டிருக்கிறான். அந்தோ, அப்படி ஒருவன் உலகத்தில் இருப்பதாகவோ, அவன் தேர்தலில் உழைத்ததாகவோ அவர் சிந்திக்கக்கூடவில்லை; அது மட்டுமா அவர் செய்தார்? வருணனைகளோடு ஒரு விஷயத்தை ஆரம்பித்தார்.  

“நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை. எனக்கென்றுகூட நான் நகைக் கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெய்யிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி; அந்தக் கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித்தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்.” கூட்டத்தில் பலத்த கையொலி. ‘கருணாநிதி வாழ்க!’ என்ற முழக்கம். அவன் கூனிக் குறுகினான். பயன் கருதாத உழைப்பு, அரசியலில் எப்படி அலட்சியமாக ஒதுக்கப்படும் என்பதை அப்போதுதான் அவன் கண்டான்.  

பெரிய ஜாதிக்காரனையும் சிறிய ஜாதிக்காரனையும் ஒரே மாதிரியாக எப்படி ஜாதிவெறி ஆட்டி வைக்கிறது என்பதை அன்று அவன் நேருக்கு நேர் பார்த்தான்.  

அண்ணாத்துரை அவன் இதயத்திலிருந்து சரியத் தொடங்கினார். அவரை வரம்புமீறிப் புகழ்ந்துகொண்டிருந்த அவன் உள்ளத்தில் அன்றுதான் அவரைப் பற்றிய கசப்பான எண்ணம் உதயமாயிற்று. ஒரு களங்கமற்ற பக்தனை அன்று அவர் இழக்கத் தொடங்கினார். அவன் இதயம் நெருப்பாகவே எரிந்தது. கூட்டம் முடிந்து அவர் கடற்கரை மரக்கலத்தின் மீது போய் அமர்ந்தார்.  

அவன் நேரே அவரிடம் போனான். “என்ன அண்ணா! இப்படிச் சதி செய்துவிட்டீர்கள்?” என்று நேருக்கு நேரே கேட்டான்.  

”அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு. அடுத்த கூட்டத்தில் போட்டுவிடுகிறேன்” என்றார்.  

“அப்படித்தான் கருணாநிதியும் வாங்கிக் கொடுத்தாரா?” என்று அவன் கேட்டான்.  

“அட சும்மா இரு. அடுத்த தேர்தல் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.  

அவன் அவரிடம் சொல்லிக்கொள்ளாமலே நடக்கலானான்.  

அவன் கண்களில் நீர் மல்கிற்று. பயன் கருதி அவன் உழைக்கவில்லை என்றாலும் உழைத்தவனுக்கு ஒரு நன்றி கூட இல்லையே என்று கலங்கினான்.  

கட்சியிலும் அண்ணாத்துரை மீதும் அவன் வைத்திருந்த பிடிப்பு நெல்லின் உமி சிறிது நீங்குவதுபோல நீங்கத் தொடங்கிற்று! 

--------------------------  

குறிப்புகள்:  

*1. 1956 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கண்ணதாசன் தோல்வியுற்ற பிறகு எழுதுவது.  

*2. டால்மியாபுரம் பெயரை கல்லக்குடி என்பதாக மாற்றும் போராட்டத்தில் பங்கு பெற்று, சிறை சென்று (பாம்பும் தேளும் ஊறும் கொட்டடியில் தவித்தேன் என்று கருணாநிதி தன் சுய புகழை உச்சியில் ஏற்றிக் கொண்ட ரயில் மறிப்புப் போராட்டம் இதுதான். நூலில் இச்சம்பவங்களின் விவரிப்பு மிக முக்கியமான ஒரு பகுதி) சிறையில் இருந்து வெளிவரவோ, வழக்கை நடத்தவோ, கட்சியினரின் சரியான உதவி கிடைக்கப் பெறாமல் 5 மாதங்கள் சிறைவாசத்தை அனுபவித்து வெளியேறிய பின், கட்சியில் உள்ள சிலருக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற வேகத்தில் கண்ணதாசன் தொடங்கிய இதழ். இந்த இதழில் கண்ணதாசனின் எழுதியிருக்கும் “தமிழர் திருமணத்தில் தாலி?” என்ற கட்டுரை சங்க இலக்கியங்களின் பால் அவருக்கிருந்த ஆழ்ந்த வாசிப்பையும், அவருடைய தீர்க்கமான தர்க்க வாதத் திறமையையும் காட்டும் சான்றுகளாகத் தெரிகின்றன. 

நன்றி: வளர்மதி (http://vinaiyaanathogai.wordpress.com/)

Pin It