பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஓரு சிறு நூலை படைத்தளித்தார். அந்நூலை சென்னை மாநகராட்சிக்கும் கொசுக்களுக்கும் அர்ப்பணிப்பதாக அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். அப்போது அது நகைச்சுவையாக மட்டுமல்லாமல் மாநகராட்சியின் கையாளாகாதத்தனத்தையும் மாநகராட்சிக்குட்பட்டு வாழும் மக்களின் துன்பத்தையும் கோடிட்டுக் காட்டியது. இன்று சென்னை மாநகரில் வாழும் மக்கள் தனது குடும்ப செலவினங்களை கணக்கிடும்போது கட்டாயமாக கொசுவிரட்டிக்கென்று ஒரு தொகையை அவர்களின் குடும்பச் செலவிலே குறித்து வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெட்டிக்கடை முதல் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் கடை வரை கொசுவிரட்டிகள் பல்வேறு வடிவங்களில் சுருளாக, களிம்பாக, திரவமாக கிடைக்கிறது. இதன் மூலமெல்லாம் கொசு ஒழிக்கப்படுகிறதா என்று கேட்டால் இல்லை என்று சென்னை நகர மக்கள் வயிற்றெறிச்சலோடு புலம்பித் தள்ளுவார்கள்.

மனித வாழ்வின் அடிப்படையில் உறக்கம் என்பது அவன் மறுநாள் புத்தெழுச்சியுடன் எழும்புவதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால் சென்னை மாநகர மக்கள் உறக்கத்தைத் தொலைத்து பல காலங்கள் ஆகிவிட்டன. இரவு ஏன் வருகிறது என்று சென்னை மாநகர மக்கள் புலம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கொசு விரட்டிகளால் கொசுக்கள் விரட்டியடிக்கப்படுகிறதா என்றால் இல்லை. நாங்கள் சிறுபிள்ளைகளாக இருக்கும்போது மின்விசிறியை சுழலவிட்டால் கொசுக்கள் ஓடிவிடும். பிறகு கொசுக்கள் அந்த மின்விசிறியின் காற்றிலே பயிற்சி எடுத்து அதனூடே வந்து கடிக்கப் பழகின. பின்னர் கொசுவிரட்டி என்று சொல்லக்கூடிய ஆமை போட்ட ஒரு பச்சை நிற அட்டைப்பெட்டி வந்தது. பெரும்பாலும் சற்று மேல்தட்டுமக்கள் உபயோகப்படுத்தும் கொசுவிரட்டும் பொருளாக ஆரம்பத்தில் இருந்தது. தற்சமயம் அது பரவி இன்று விதவிதமான கொசுவிரட்டிகள் கடைகள் முழுக்க அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து கொசு விரட்டிகளையும் அதிலிருந்து வரும் வேதியியல் மூலப் பொருட்களையும் கொசுக்கள் மிக சிறப்பாகப் பழகி அதனோடு வாழ்வதை தமது வாழ்வாக எடுத்துக் கொண்டுள்ளன. ஆக, எந்த கொசு விரட்டியைப் போட்டாலும் அதனால் கொசு ஒழியுமா என்றால் ஒழியவில்லை.

இந்த நாடு மக்களாட்சி நாடு. இந்த அரசை மக்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். இந்த மக்களுக்கான சுகாதார அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டிய கட்டாயக் கடமை அரசுக்கு இருக்கிறது. ஆனாலும் அரசு செயல்படுவதாக சொல்கிறதே தவிர, மிக மிக அடிப்படைத் தேவையான இந்த நாட்டு குடிமகனின் உறக்கத்திற்கே உத்திரவாதம் இல்லாத இந்நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. பதிலே இல்லாத கேள்வி என்று உலகில் எதுவும் கிடையாது. தீர்வே இல்லாத பிரச்சனை என்றும் எதுவும் கிடையாது. ஆக, கொசுவை அரசால் ஒழிக்க முடியாதா என்ற கேள்வி சாதாரண குடிமகனுக்கு எழுவது நியாயமானது. இப்போது நமக்குள் இருக்கும் சந்தேகம் எல்லாம் தினந்தோறும் இந்த நாட்டில் விற்பனையாகும் கொசுவிரட்டிகளின் தொகை எத்தனை கோடி என்பது நமக்கு சரியான கணக்கு தெரியவில்லை. ஆனாலும் பல்லாயிரம் கோடி ரூபாய் இந்த கொசுவிரட்டிப் பொருட்களால் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன என்பது மட்டும் புரிகிறது. மாநகராட்சியும் தமிழக அரசும் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கொசுவை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கவில்லையோ என்பது நமக்குள் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியாகும். காரணம் அரிசி, பருப்பு, எண்ணெய், மிளகாய், சர்க்கரை, கோதுமை என்பதோடு கொசுவிரட்டி என்பது நமது குடும்ப செலவில் சேர்வதற்கு இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தான் காரணமாக இருக்கின்றன. கொசு கடிப்பது மட்டுமல்லாமல், அதனால் ஏற்படும் வியாதியும் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை மிகவும் தாழ்நிலைக்கு கொண்டு வருகிறது.

அதிகமாக கொசு இருக்கும் இடம் எது என்றால் நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் வாழும் பகுதிகள் தான். இங்கு வாழும் மக்கள்தான் பெரும்பாலும் இக்கொசுக்கடி நோய்களால் பாதிப்படைகிறார்கள். இந்த கொசுக்களின் கடியால் நாம் துயருற்று இரவையே வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ஆனால் கொசுக்கடியோடு காலையில் எழுந்து செய்தித்தாள்களைப் படித்தால் வேறு பல கொசுக்கள் கடி கடி என்று கடிக்கின்றன. அது நம்மை எல்லாம் இரவு உறக்கத்தை இழந்த சலிப்பில் வெறுப்பூட்டச் செய்கின்றன.

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சங்கத்தமிழ் பேரவை என்ற ஒரு அமைப்பு பாராட்டுவிழா நடத்தியிருக்கிறது. மாதத்திற்கு சில நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களெல்லாம் அவருக்கு பாராட்டு விழாதான். பாராட்ட வரும் முகங்களெல்லாம் தொடர்ந்து அதே மேடையில் இருக்கும் முகங்கள்தான். இந்த விழாவிலே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பேசும்போது, ‘கடந்த வாரம் திரையுலகம் சார்பாக முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவின்போது அமைச்சர்கள் ஜெகத்ரட்சகனும், துரைமுருகனும் எதைப்பற்றியோ அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது' என்று தெரிவித்திருக்கிறார். ஒருவேளை அன்று நடைபெற்ற விழாவில் வேறு ஏதாவது இரண்டு அமைச்சர்கள் எதைப்பற்றியாவது அடிக்கடி பேசி அடுத்தவாரம் முதல்வருக்கு வேறொரு விழா நடத்துவார்களா என்பது புரியவில்லை.

நமக்கு ஒன்றுமட்டும் தான் நமக்கு வியப்பாக இருக்கிறது. ஒரு மனிதனை அமர வைத்து அவரைப் பற்றி தொடர்ந்து புகழ்ச்சி உரையாக சொல்லிக் கொண்டிருக்கும்போது, எப்படி அவரால் கேட்டுக் கொண்டிருக்க முடிகிறது என்பதுதான். ஆனால் அவர் மாதத்திற்கு 10 நாட்களாவது பாராட்டு மழையில் நனைகிறார். பாராட்டும் எல்லோரும் என்னவெல்லாம் சொல்லவேண்டுமோ, எங்கிருந்தெல்லாம் வார்த்தைகளை எடுக்க வேண்டுமோ அங்கெல்லாம் தோண்டி எடுத்து அவரை வாழ்த்துகிறார்கள். அவரும் அமைதியாக அவர்கள் வாழ்த்துதலையும், பாராட்டுதலையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்போது கொசுக்கடிக்கே வருவோம். நம்மால் இரவில் கடிக்கும் சில கொசுக்களையே தாங்க முடியாமல் உறக்கம் கலைந்து எரிச்சலோடு இருக்கிறோம். தமிழக முதல்வரைச் சுற்றி இப்படி மாதந்தோறும் கடிக்கும் கொசுக்களை அவர் புறந்தள்ளாமல் இருக்கிறாரே! அதை நினைக்கும்போது உண்மையிலேயே சென்னை மாநகர மக்களை விட, தமிழக முதல்வர் மிக மிகப் பொறுமை உடையவர், ஏற்றுக் கொள்ளும் மனம் படைத்தவர் என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும். சின்ன வித்தியாசம், நம்மை கொசு கடிக்கும்போது வலிக்கும். ஆனால் தமிழக முதல்வரை சுற்றி இருக்கும் கொசுக்கள் அவரைக் கடிக்கும்போது அவருக்கு இனிக்கும். ஆனால் இரண்டு கொசுக்களாலும் வியாதி என்னவோ நிச்சயம் தான். காரணம் இந்த மேடையில் இருக்கும் கொசுக்கள் நாளை ஆட்சி மாற்றத்தின்போது அந்த மேடைக்கு பறந்து சென்று அங்கேயும் கடிக்கத் தொடங்கும். நாம் இப்போது இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டிய கொசுக்களுக்கும், மாநகராட்சிக்கும் பெரியார்தாசன் பாணியிலேயே நன்றி சொல்கிறோம்.

- கண்மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It