கடந்த சில வாரங்களாக, மார்ச் 1993-இல் மும்பை குண்டு வெடிப்புக்களில் யாகுப் மெம்மானுக்கு இருந்த பங்கு காரணமாக அவரைத் தூக்கிலிடும் முடிவு, பஞ்சாப் குருதாஸ்பூரில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல், ஜம்மு உதம்பூருக்கு அருகில் எல்லைக் காவல் படையினரின் ஒரு வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதியாகச் சொல்லப்படும் ஒருவரைப் பிடித்திருப்பது போன்ற நிகழ்வுகள் பயங்கரவாதத்தின் மீது கவனத்தை மீண்டும் திருப்பியிருக்கின்றன.

பயங்கரவாதத்தால் நமது மக்கள் மிகவும் கடுமையாக துன்பப்பட்டிருக்கின்றனர். பயங்கரவாத செயல்கள் அசாம், மணிப்பூர், ஜம்மு காசுமீர் ஆகிய இடங்களில் மட்டுமே நடப்பதாக இனியும் நாம் கூறமுடியாது. பஞ்சாப், தில்லி, மும்பை, பூனே, ஐதிராபாத், அகமதாபாத், ஜெய்பூர், மெலகாவுன், அஜ்மீர், கோயம்புத்தூர், பெங்களூர் மற்றும் பல இடங்களைச் சேர்ந்த மக்கள் பயங்கரவாத நடவடிக்கைகளால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் இரயில்கள், பேருந்துகள், கடைப் பகுதிகள், கோயில்கள், மசூதிகள், வழக்கு மன்றங்கள் என எல்லா இடங்களிலும் நடைபெற்றிருக்கின்றன.

முட்டாள்தனமான இந்த வன்முறைக்கு நமது நாட்டு மக்கள் ஒரு முடிவு கட்ட வேண்டுமென விரும்புவது இயற்கையானதாகும். இதைச் செய்வதற்கு, முதலில் நாம், நமது நாட்டில் பயங்கரவாதத்தைத் திட்டமிட்டு நடத்துபவர்களையும், அதனால் பயனடைபவர்களையும் சரியாக அடையாளம் காணவேண்டும்.

முன்னர் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களைப் போல, அரசாங்கமும், முக்கிய தொலைக் காட்சி ஊடகங்களும், முக்கிய எதிர்க் கட்சிகளும் நமது நாட்டில் நடைபெறும் இந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை குற்றஞ்சாட்டி வருகின்றன. மக்களுடைய வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டிய கடமையிலிருந்து அரசாங்கம் தவறி இருப்பதை மக்களுடைய கவனத்திலிருந்து திசை திருப்புவதற்கு இது மிகவும் வசதியாக இருக்கிறது. பயங்கரவாதத்தை அடக்குவது என்ற பெயரில், மக்களுடைய உரிமைகளைத் தாக்குவதற்கு கொடுமையான நடவடிக்கைகளை நியாயப்படுத்த அரசுக்கு இது வழிவகுக்கிறது. ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும், பாசிச சட்டங்களையும் ஆதரிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நமது நாட்டில் நடைபெற்ற பல பெரிய பயங்கரவாதச் செயல்கள் நியாயமின்றி பாகிஸ்தான் மீது பழி போட்டிருப்பது பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிவந்திருக்கிறது. சம்ஜுதா எக்ஸ்பிரஸ், மேலேகாவோன் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் ஷாரிப் ஆகியன இதற்குச் சில எடுத்துக் காட்டுகளாகும். ஏதாவதொரு பயங்கரவாதச் செயலுக்காக, நூற்றுக் கணக்கான அப்பாவி மக்கள் நியாயமின்றி சித்திரவதை செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் குற்றமற்றவர்களென விடுதலை செய்யப்படுகின்றனர்.

அரசியல் பிரச்சனைகளை, சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாற்றுதல்

எண்பதுகளிலும், தொண்ணூறுகளின் முதலிலும் தனிப்பட்ட பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் அரசு பயங்கரவாதமானது ஆட்சி நடத்துவதற்கான மிகவும் பிடித்தமான முறையாக நமது நாட்டில் இருந்து வந்தது. இதைத் தான் குருதாஸ்பூர் பயங்கரவாத கொலைகளை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. உளவு நிறுவனங்கள், ஊடகங்கள் மூலம் இது "பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெறும் காசுமீர் - கலிஸ்தான் (கே-2) பயங்கரவாதத்தின்" புதிய கட்டமாக இருக்கலாமென அவர்கள் கவலைப்படுவதாக ஒரு கதையைப் பரப்பி வருகின்றனர். இது, மாநிலத்தில் தீவிரவாதத்தை மீண்டும் துவக்குங்களென "உறங்கிக் கொண்டிருக்கும் கலிஸ்தானி குழுக்களுக்கு பாகிஸ்தான் சமிக்ஞை அனுப்புவதாக" அவர்கள் ஊகிக்கிறார்கள். பஞ்சாப் கிராமங்களில் உள்ள "சந்தேகத்திற்குரியவர்களுடைய" அசைவுகளை காவல்துறை பின்பற்றி வருகிறார்கள். இது, எண்பதுகளிலும், தொண்ணூறுகளின் முதலிலும் இளைஞர்களை தினமும் பிடித்து பயங்கரவாதிகளென குற்றஞ்சாட்டி, பின்னர் சித்திரவதை செய்து, கொலை செய்யப்பட்ட கொடூரமான நிலைமைகளை நினைவுக்குக் கொண்டுவருகிறது.

சூன் 1984 இல் பொற் கோயில் மீது இராணுவத் தாக்குதல் நடைபெற்றது. அதில் ஆயிரக் கணக்கான அப்பாவி ஆடவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து பஞ்சாபிலுள்ள எண்ணெற்ற பிற குருத்வாராக்கள் (சீக்கியர்களுடைய வழிபாட்டுத் தளங்கள்) மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவையனைத்தும் தங்குதடையற்ற அரசு பயங்கரவாதமாகும். ஒரு போர் தொடுப்பதன் மூலம் பஞ்சாபிலுள்ள எல்லா இந்துக்களையும் கொல்வதற்கு சீக்கியர்கள் திட்டமிட்டு வருகிறார்கள் என்ற அடிப்படையில் இது நியாயப்படுத்தப்பட்டது. இது ஒரு மிகப் பெரிய பொய்யென பின்னர் நிரூபிக்கப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் தில்லியின் வீதிகளிலும் பிற நகரங்களிலும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் பட்டப்பகலில் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டனர்.

அந்த நாட்களில், பஞ்சாபிலுள்ள பயங்கரவாத குழுக்கள், இந்துக்களை பேருந்துகளிலிருந்து வெளியே இழுத்துப் போட்டு சுட்டுக் கொன்றனர். தில்லியிலும், மற்ற இடங்களிலும் இருசக்கர வாகனங்களில் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்தனர். அதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பஞ்சாபிலும், தில்லியிலும் மற்ற பிற இடங்களிலும் குழப்பமான பயங்கரமான சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

எண்ணெற்ற இடங்களில் சாதாரண உடையணிந்த பஞ்சாப் காவல்துறையினரே, இந்து பயணிகளை பேருந்துகளிலிருந்து வெளியே இழுத்து போட்டு அவர்களைப் படுகொலை செய்தனர் என்பது பஞ்சாப் காவல் துறைக்கு பொறுப்பு வகித்த உயர் காவல்துறை அதிகாரிகளும், பிற ஆய்வுகளும் வெட்ட வெளிச்சமாக்கின. ஆயிரக்கணக்கான இளைஞர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து பிடித்துச் சென்று, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு அவர்களுடைய உடல்கள் வாய்க்கால்களில் வீசப்பட்டன என்பதும் வெட்ட வெளிச்சமாகியது.

அந்த நேரத்தில் பஞ்சாபும், இந்தியாவும் ஒரு நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்தன. அந்த நெருக்கடியானது, முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கும், இந்திய ஒன்றிய அரசும் உருவாக்கியதாகும். பெரு முதலாளி வர்க்கத்தின் முதலாளித்துவ யுக்தியில் பஞ்சாபிற்கு கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட பங்கானது, நாட்டிற்குத் தேவையான கோதுமையையும், அரிசியையும் உற்பத்தி செய்வதாகும். இது பஞ்சாபை பெரிய அளவிலான தொழில் துறைகள் இல்லாத, மிகவும் முன்னேறிய வேளாண்மைப் பொருளாதாரமாக மாற்றியது. இதன் காரணமாக, இலட்சக் கணக்கான கடினமாக உழைக்கும் பஞ்சாபி மக்கள் பல்வேறு வெளி நாடுகளுக்கு குடி பெயர்ந்தனர். மத்திய அரசு தங்களை பாரபட்சமாக நடத்துவதாக பஞ்சாபிய மக்கள் உணர்ந்தனர்.

பஞ்சாப் மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வேண்டுமென கோரி அகாலி கட்சி அவர்களுடைய அனந்தபூர் சாகிப் தீர்மானத்தில் முன்வைத்தனர். பஞ்சாபினுடைய பொருளாதார, அரசியல் பிரச்சனைகளைத் தீர்வு காண மத்திய அரசு மறுத்தது. மாறாக அகாலி கட்சியினுடைய கோரிக்கைகளுக்கு ஒரு வகுப்புவாத சாயம் பூசுவதன் மூலம் வேண்டுமென்றே அது வகுப்புவாத வெறியைப் பரப்பி, இந்துக்களையும், சீக்கியர்களையும் ஒருவருக்கெதிராக ஒருவரைத் தூண்டிவிட்டது. சுயஆட்சிக்கான கோரிக்கையை அது திரித்து பிரிவினைக்கான ஒரு கோரிக்கையாக அதைக் காண்பித்தது. இந்திய அரசின் இந்த பதில், அதனுடைய முழுக்கவும் காலனிய ஏகாதிபத்திய குணத்தை வெட்ட வெளிச்சமாக்கியது.

பயங்கரவாதம், அரசு பயங்கரவாதம் என்ற கிடிக்கியில் சிக்கிக் கொண்ட பஞ்சாபிய மக்களுடைய போராட்டம் கொடூரமாக உடைக்கப்பட்டு நசுக்கப்பட்டது. எண்பதுகள் வரையிலும், பஞ்சாப், தில்லி மற்றும் பிற இடங்களில் நடத்தப்பட்ட ஒவ்வொரு பயங்கரவாதச் செயலும், சீக்கியர்களுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் வெறியைத் தூண்டிவிடப் பயன்படுத்தப்பட்டது. இதைக் கொண்டு அப்பாவி சீக்கிய மக்களை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதையும், கொலை செய்யவதையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. இந்த பயங்கரவாதச் செயல்கள், மக்களுடைய கோபத்தை தில்லி, பஞ்சாப் மற்றும் பிற இடங்களில் மக்களைப் படுகொலை செய்தவர்களிலிருந்து, பாகிஸ்தான் ஆதரவு பெற்றிருப்பதாகக் கூறப்பட்ட "சீக்கிய பயங்கரவாதிகள்" மீது திசை திருப்பப் பயன்பட்டது.

பஞ்சாப், தில்லி மற்றும் பிற இடங்களில் நடைபெற்ற படுகொலைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெட்ட வெளிச்சமாக்கவும், இந்தப் படுகொலைகளுக்குக் காரணமான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமெனவும் பஞ்சாப் மற்றும் தில்லியைச் சேர்ந்த முற்போக்கு சக்திகளுடைய போராட்டம் 31 ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஆளும் வர்க்கங்கள் வேண்டுமென்றே அரசியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதைத் தவிர்த்து அவற்றை சட்ட ஒழுங்குப் பிரச்சனையாக மாற்றி வருகிறார்களென்ற முடிவுக்கு நாம் வர முடியும். இயக்கத்தின் மீது பயங்கரவாதத்தை திணித்து, அதன் மூலம் அளவு வரையற்ற அரசு பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முயன்றிருக்கின்றனர்.

பஞ்சாபில் ஒரு அரசியல் பிரச்சனை இருக்கிறது என்பதை ஆளும் வர்க்கமும், அதனுடைய அரசும் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். ஒரு முறை மத அடிப்படையிலும், இரண்டாவது முறை மொழி அடிப்படையிலும் இரண்டு முறை பிளவு படுத்தப்பட்ட பஞ்சாப் என்று அழைக்கப்படும் ஒரு தேசம் இருக்கிறது என்பதையும், பஞ்சாபிய மக்களுக்கு மறுக்க முடியாத நியாயமான தேசிய விருப்பங்கள் இருக்கின்றன என்பதையும் அவர்கள் மறுத்து வருகிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நியாயம் கேட்டுப் போராடி வருபவர்களை, தீவிரவாதத்தை மீண்டும் தூண்டிவிட முயற்சிப்பவர்களாக பொய்யாக குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். இந்த மாற்றங்கள், தங்களுடைய நிலைமைகள் மீது மக்களுடைய வெறுப்பு வளர்ந்து வருகின்ற சூழ்நிலையில், பயங்கரவாதச் செயல்களை ஒரு நியாயமாகப் பயன்படுத்தி கடுமையான அரசு பயங்கரத்தை நியாயப்படுத்தவதற்கு ஆளும் வர்க்கம் நிலைமைகளைத் தயாரித்து வரக் கூடிய வாய்ப்பைச் சுட்டிக் காட்டுகின்றன.

பயங்கரவாதத்தாலும், அரசு பயங்கரவாதத்தாலும், குறுங்குழுக் கொலைகளாலும் பல்லாண்டுகளாக அசாம், மணிப்பூர் மற்றும் பிற வட கிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். மணிப்பூரி, நாகா, அசாமிய மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த பிற மக்கள் மத்திய அரசின் காலனிய, ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகவும், தங்களுடைய அரசியல் உரிமைகளைக் கோரியும் வருகின்றனர். தேவை என்னவென்றால், இந்திய ஒன்றியத்தை ஒரு தன்னார்வ அடிப்படையில், ஒப்புக்கொள்ளும் தேசங்கள் மற்றும் மக்களைக் கொண்ட ஒன்றியமாக திருத்தியமைப்பது அவசியமாகும். ஆனால் இந்திய அரசை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள இந்திய பெரு முதலாளி வர்க்கம், இதைச் செய்வதற்கு விடாப்பிடியாக மறுத்து வருகிறது. மாறாக அது, பல்லாண்டுகளாக முடிவின்றி இராணுவ ஆட்சியை இந்த மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் தொடர்ந்து கற்பழிப்புக்களையும், கொலைகளையும் நடத்திவரும் இந்திய இராணுவம், ஆயுதப்படைகள் தனி அதிகாரச் சட்டத்தால் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றனர்.

எண்ணெற்ற நிழல் இராணுவ குழுக்கள், வடகிழக்கில் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் குழப்பத்தையும், வன்முறையையும் மேலும் தீவிரப்படுத்தி வருகின்றனர். வடகிழக்கில் உள்ள பல ஆயுதந் தாங்கிய குழுக்களுக்கு இந்திய உளவுத் துறை மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பும் ஆதரவும் இருக்கிறது என்பதையும், மக்களைப் பிளவு படுத்துவதிலும், அவர்களுடையப் போராட்டங்களை திசை திருப்புவதிலும் இத்தகைய குழுக்கள் பயன்படுகின்றன என்பதையும் உயர்மட்ட ஒய்வு பெற்ற உளவுத் துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இராணுவ அடக்கு முறையின் கீழ், காசுமீர பள்ளத்தாக்கிலுள்ள மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில், பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். காசுமீர மக்களுடைய தேசிய உரிமைகளுக்கான போராட்டமானது, தேச விரோதமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று, அவர்களுடைய உடல்களை முகவரியற்ற சவக்குழிகளில் தூக்கியெறிந்து வரும், ஐக்வான் போன்ற பல்வேறு பயங்கரவாதக் குழுக்களுக்கு, அரசின் உளவு நிறுவனங்கள் அணிதிரட்டி, பயற்சியளித்து ஆயுதம் வழங்கியிருக்கிறார்கள் என்பது ஆவணங்களில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத வன்முறைக்கு பலியாகி காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, அந்த மாநிலத்தில் காணாமல் போனவர்களுடைய பெற்றோர்களுடைய அமைப்பு (APDP) உருவாகியிருக்கிறது என்பதிலிருந்தே காசுமீர மக்களுடைய மோசமான நிலைமையை நாம் புரிந்து கொள்ளலாம். காசுமீரத்தில் தீர்க்கப்பட வேண்டிய அரசியல் பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை இந்திய அரசு விடாப்பிடியாக தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறது. மாறாக, "எல்லை தாண்டி வரும் பயங்கரவாதத்தை" எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் அது, இந்த மாநிலத்தை ஒரு இராணுவ முகாமாக மாற்றியிருக்கிறது.

மும்பையில் 1993 இல் நடைபெற்ற பயங்கரவாதக் கொலைகள்

மார்ச் 1993 இல் மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்களில் 256-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பல வாரங்களுக்கு முன்னர், அந்த நகரில் நடைபெற்ற பெரும் அளவிலான வகுப்புவாத வன்முறையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இறந்தனர். அதற்குப் பின்னர் இந்த குண்டு வெடிப்புக்கள் அங்கு நடைபெற்றிருக்கின்றன. முன்னதாக 1992 டிசம்பரில் பாபரி மசூதி இடித்து நொறுக்கப்பட்டது. நாடெங்கிலும் சூழ்நிலையானது வகுப்புவாத அடிப்படையில் முழுவதுமாக மாற்றப்பட்டது. பல்வேறு நகரங்களில் பெரும் அளவிலான வகுப்புவாதப் படுகொலைகள் நடைபெற்றன.

அந்த நேரத்தில் இந்திய முதலாளி வர்க்கம் மிகவும் மோசமான ஒரு நெருக்கடியில் சிக்கியிருந்தனர். அது மக்களை விலையாகக் கொடுத்து அந்த நெருக்கடியிலிருந்து வெளிவர முயற்சி செய்து கொண்டிருந்தது. நேருவின் சோசலிச மாதிரி என்ற பழைய பாதை மேற்கொண்டு எடுத்துச்செல்ல முடியாத முடிவுக்கு வந்துவிட்டது. சோவியத் யூனியன் உடைந்து நொறுங்கியதும், இரு துருவமாக பிளவு பட்டிருந்த உலகம் முடிவுக்கு வந்ததும், புதிய சவால்களை எழுப்பியது. இந்திய முதலாளி வர்க்கம், தன்னுடைய ஏகாதிபத்திய நோக்கங்களை முன்னேற்றுவதற்கு தன்னுடைய பொருளாதாரக் கொள்கைகளையும், உலக உக்தியையும் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

அது தொழிலாளர்கள், உழவர்களிடையிலிருந்து கடுமையான எதிர்ப்பையும், அதனுடைய அணிகளிலிருந்தே சில பிரிவுகளிலிருந்து எதிர்ப்பையும் சந்தித்தது. வகுப்புவாதப் படுகொலைகளும், குழப்பமான வன்முறையான சூழ்நிலையும், தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களுடைய எதிர்ப்பு திசை திருப்பப்பட்டு, திசைவழியின்றி இருப்பதையும், அது நசுக்கப்படுவதையும் உறுதி செய்தது. மேலும் அது, முதலாளி வர்க்கத்தினுள்ளேயே எழுந்த எதிர்ப்புகளுக்கு முடிவு கட்டவும், ஏகபோகங்களுடைய மேலாதிக்க நிலையை உறுதிப்படுத்தவும் பயன்பட்டது.

பாபரி மசூதி இடித்துத் தள்ளப்பட்டதையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற வகுப்புவாதப் படுகொலைகளையும் எப்படி மத்திய அரசாங்கமும், பல்வேறு மாநில அரசாங்கங்களும் மேற்பார்வையிட்டன என்பதை பல்வேறு மக்கள் விசாரணைக் குழுக்கள் வெளிக் கொண்டு வந்திருக்கின்றன. பஞ்சாப் மற்றும் 1984 சீக்கிய மக்கள் படுகொலைகளைப் போலவே, இந்த வகுப்புவாத படுகொலைகளுக்காகவும் யாரும் தண்டிக்கப்படவில்லை. மும்பையில் வகுப்புவாதப் படுகொலைகளை நடத்தியவர்கள் மீது மக்களுக்கு இருந்த கோபத்தை, "பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள்" மீது திசை திருப்பும் தேவையை இந்த குண்டு வெடிப்புக்கள் நிறைவேற்றின. இந்த குண்டு வெடிப்புக்கள் இந்திய அரசின் உளவு நிறுவனங்களால், இரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும் நாம் ஒதுக்கிவிட முடியாது.

2002-இல் நடைபெற்ற குஜராத் மக்கள் படுகொலை, பயங்கரவாதத்திலும், அரசு பயங்கரவாதத்திலும் ஒரு புதிய கட்டத்தின் துவக்கத்தை குறிப்பிடுகிறது. டிசம்பர் 2002-இல் பாராளுமன்றம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட பாசிச போடா (POTA) சட்டமானது, 2005-இல் யுஏபிஏ (UAPA) வைக் கொண்டு மாற்றப்பட்டது. அகமதாபாதில் நடைபெற்ற இஸ்ராத் ஜெகன் எதிர்மோதல், தில்லி பாட்லா அவுஸ் எதிர்மோதல் போன்ற போலி எதிர்மோதல்களில் நூற்றுக் கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்த பாசிச சட்டங்களின் கீழ் நாடெங்கிலும் இளைஞர்கள் பொய்யாக சிக்க வைத்து, கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய முஜேதீன் போன்ற நிழல் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு, பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு அவர்களே காரணமென கூறப்படுகிறது. அரசு பயங்கரவாதத்தைக் கேள்வி கேட்டாலும் அல்லது அரசு திட்டமிட்டு நடத்திய வகுப்புவாதப் படுகொலைகளில் அரசின் பங்கை வெட்ட வெளிச்சமாக்கினாலும், அவர்கள் மீது பாதுகாப்புப் படைகளும், உளவு நிறுவனங்களும் திடீர் சோதனைகள் நடத்தி, அவர்களைக் கைது செய்கின்றன. யுஏபிஏ-வின் கீழ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7000 பேரில் 80% முஸ்லீம் நம்பிக்கை கொண்டவர்களும், மீதி பேர் சீக்கிய நம்பிக்கை கொண்ட மக்களும், மாவோயிச ஆதரவாளர்களென பெயரிடப்பட்டவர்களும் ஆவர்.

தொழிலாளி வர்க்கம் மற்றும் உழவர்களுடைய பரந்துபட்ட எதிர்ப்பைச் சந்தித்த தாராளமயம், தனியார்மயம் மூலம் உலகமயமாக்கும் சமூக விரோத, தேச விரோத போக்கானது, அரசியலை வகுப்புவாதமாக்குவதன் முலமாகவும், எண்ணெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலமாகவும், முழு சமூக வாழ்க்கையையும் பாசிசமாக்குவதன் மூலமாகவும் நடத்தப்பட்டது. திரும்பிப் பார்கையில், கட்டுப்பாடற்ற அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடவும், முதலாளி வர்க்கத்தின் சுரண்டலான ஒடுக்குமுறையான ஆட்சிக்கு எதிராக எழும் எதிர்ப்பைத் தடை செய்யவும், திசை திருப்பவும் பயங்கரவாதம் ஒரு வசதியான நியாயப்படுத்துவதாக இருக்கிறது.

அமெரிக்காவும், பயங்கரவாதமும்

தற்போது ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பற்றி மிகுதியான பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. உலகத்தின் மீது அது தன் மேலாதிக்கத்தை நிறுவ முயன்று வருவதாகவும், மிகவும் ஆபத்தான அமைப்பாகவும், அமெரிக்கா அதற்கு முத்திரை குத்தி வைத்திருக்கிறது.

முழு உலகத்தையும் தன்னுடைய மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவர அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. இதைச் செய்வதற்கான தனது திட்டத்தை இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் அது வெளியிட்டது. தன்னுடைய சொந்த நோக்கங்களை மறைப்பதற்காக, உலகின் மீது ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கம் செலுத்த விரும்புவதாக அது பேசி வருகிறது. தன்னுடைய நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, ஐஎஸ்ஐஎஸ் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புக்களை அமெரிக்காவே உருவாக்கியிருக்கிறது என்பதைக் காட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.

80-களில், ஆப்கான் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தின் போது, சோவியத் சமூக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகவும், இந்தப் பகுதியில் மேலாதிக்கம் செலுத்தும் தன்னுடைய சொந்த நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவும், அமெரிக்கா தலையிட்டது. தன்னுடைய வேலையைச் செய்வதற்காக அது, பல்வேறு பயங்கரவாத குழுக்களை அணிதிரட்டி, பயிற்சியளித்து ஆயதங்களை வழங்கியது. உலகின் பல்வேறு நாடுகளில் குழப்பத்தைப் பரப்புவதற்கு இந்தக் குழுக்கள் காரணமாகும். ஆனால் அவர்களை இயக்குபவர்களுடைய கைகள் மறைந்திருக்கின்றன. பல்வேறு நாடுகளைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழே கொண்டு வருவதற்கு, அந்த நாடுகளை நிலைகுலையச் செய்வதில் அமெரிக்கா திறமைசாலி என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

9/11 தாக்குதல்களுக்கு அல் கொய்தா என்றழைக்கப்படும் ஒரு பயங்கரவாத அமைப்பின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் குற்றஞ்சாட்டினர். 21-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கான திட்டங்களை அமெரிக்க அரசு 2001 இன் துவக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அதில் மேற்கு ஆசியா, ஈரோசியாவின் வரைபடங்களை திருத்தி வரைவதும் அடங்கும். இந்த ஏகாதிபத்திய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, ஆப்கானிஸ்தான், இராக், லிபியா ஆகியவற்றைக் கைப்பற்றியது, சிரியாவில் ஆட்சியை மாற்றும் நோக்கத்தோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியோடு நடத்தப்பட்ட உள்நாட்டுப் போர், ஆசியா, ஆப்ரிகா மற்றும் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட எண்ணெற்ற தலையீடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன.

அதனுடைய உளவு நிறுவனங்கள் உருவாக்கிய பயங்கரவாத அமைப்புக்கள் பரப்பிவரும் குழப்பத்தையும், வன்முறையையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் போர் தொடுத்திருக்கிறது. இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்டவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதும், பல்வேறு நாடுகளில் ஆட்சியாளர்களை மாற்றுவதும் நியாயப்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, பிரித்தன் மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகளில் பொதுவாக தொழிலாளி வர்க்கத்தையும் உழைக்கும் மக்களையும், குறிப்பாக இஸ்லாமிய மத நம்பிக்கைக் கொண்ட மக்களையும் குறிவைத்து பயங்கரவாதத்தை எதிர்ப்பது என்ற பெயரில் கொடூரமான பாசிச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், அதனுடைய ஆக்கிரமிப்புப் போர்களுக்கு எதிராகவும், தேசிய இறையாண்மையைப் பாதுகாத்தும், தங்களுடைய உரிமைகளைக் காத்தும் இஸ்லாமிய மக்கள் மேற்கொண்டுவரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம், இழிவு செய்யப்பட்டு, அவர்கள் "பயங்கரவாதிகள்" என்றும், "அடிப்படைவாதிகள்" என்றும் பழித்துக் கூறப்படுகிறது.

21-ஆம் நூற்றாண்டில், உலகை மேலாதிக்கம் செய்வதற்கான அமெரிக்காவின் யுக்தியின் மையமாக ஆசியாவைக் கைப்பற்றுவது இருக்கிறது. இந்தியாவையும் பாகிஸ்தானையும் எப்போதும் எதிரெதிராக நிறுத்தி வைத்து, ஒருவருக்கு எதிராக ஒருவர் போர் தொடுக்கக் கூடிய தயார் நிலையில் வைத்திருப்பது இந்த யுக்தியில் முக்கிய அங்கமாகும். இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரெதிராக இருக்கும்வரை, அமெரிக்கா, "அமைதியை உருவாக்குபவர்" போல நடித்துக் கொண்டு, இருவருக்கும் ஆயுதங்களைக் கொடுத்து, ஒருவருக்கு எதிராக ஒருவரைத் தூண்டிவிட்டுக் கொண்டு, அதே நேரத்தில் "அமைதியை"ப் பற்றி போதித்துக் கொண்டிருக்க முடியும். இது இந்திய, பாகிஸ்தானிய மக்களுடைய நலனுக்கு உகந்ததல்ல.

தெற்காசியாவில் ஏகாதிபத்திய மேலாதிக்கம் தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்யவும், தேசிய மற்றும் சமூக விடுதலைக்கான நமது மக்களுடைய போராட்டத்தைத் திசை திருப்பி நசுக்குவதற்காகவும், ஆகஸ்டு 1947-இல் நமது நாட்டைப் பிரிட்டிஷ் காலனியவாதிகள் பிளவுபடுத்தினர் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது. அப்போதிலிருந்தே, தெற்காசியாவில் தங்களுடைய நிலைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒருவருக்கு எதிராக ஒருவரைப் பயன்படுத்தியும், ஒரு நேரத்தில் ஒருவருக்கு ஆதரவாக இருப்பது போலவும், பின்னர் மற்றவருக்கு ஆதரவளிப்பது போலவும் ஆட்டம் போட்டு வருகின்றனர். ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியர்களுடைய இந்த வலையில் இந்திய, பாகிஸ்தானிய ஆளும் முதலாளி வர்க்கம் மீண்டும் மீண்டும் சிக்கி வருகிறது.

அமெரிக்காவுடன் முக்கிய உறவை வளர்த்து வருவது பற்றி இந்திய முதலாளி வர்க்கம் மிகவும் குதூகலித்து வருகிறது. பாகிஸ்தான் கூட அமெரிக்காவுடன் ஒரு முக்கிய உறவைக் கொண்டிருந்தது என்பதையும், இன்றும் கூட தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறது என்ற வரலாற்று படிப்பினையை அது மறந்துவிடுகிறது. இரான் மீதுள்ள தடைகள் நீக்கப்பட்டு, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றும் திட்டங்கள் உள்ள இந்த நேரத்தில், பாகிஸ்தானுடைய உதவியோடு ஆப்கானிஸ்தான் மீது தன்னுடைய மேலாதிக்கத்தை நீடிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் விரும்புகிறது. இது இந்தியாவிற்கு பிடிக்கவில்லை.

உலகை ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்ற அதனுடைய திட்டங்களின் ஒரு அங்கமாக, உலகெங்கிலும் பயங்கவாதத்தின் முக்கியமான ஆதரவாளராக அமெரிக்கா இருந்து வருகிறது என்பதை அதனுடைய கடந்த காலப் போக்கு காட்டுகிறது.

முடிவுரை

நமது நாட்டில் பயங்கவாதத்தின் முக்கிய ஆதரவாளர் இந்திய அரசன்றி வேறு யாருமில்லை. இந்தியாவில் நடைபெறும் எல்லா பயங்கரவாதச் செயல்களிலும் இந்திய அரசினுடைய பங்கைப் பற்றிய கவனத்தைத் திசை திருப்புவதற்காக பாகிஸ்தான் மீது இந்திய அரசு குற்றஞ் சாட்டுகிறது.

தன்னுடைய ஏகாதிபத்தியப் பேராசைகளை அடையக் கூடிய வாய்ப்பு பற்றி மிகவும் ஆர்வத்தோடு இருக்கும் இந்திய முதலாளி வர்க்கம், மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக வெறியைத் தூண்டி விடுவது, தொழிலாளி வர்க்கம், உழைக்கும் மக்களுடைய போராட்டங்களைத் திசை திருப்ப அதற்கு உதவுகிறது. பயங்கரவாதச் செயல்கள், அரசு பயங்கரவாதத்தைத் தீவிரப்படுத்த அதற்கு நியாயம் அளிக்கிறது.

தன்னுடைய சொந்த மக்களையே படுகொலை செய்வதற்கு தன்னுடைய இராணுத்தை அனுப்பியது இந்திய அரசு என்பதையும், மீண்டும் மீண்டும் வகுப்புவாதப் படுகொலைகளை திட்டமிட்டு நடத்திய ஒரு அரசு என்பதையும் மக்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அரசு, பெரு முதலாளி வர்க்கத்தின் ஏகாதிபத்திய நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, தன்னுடைய சொந்த மக்களையே பயங்கரவாத முறையில் கொலை செய்ய ஏற்பாடு செய்யக் கூடியதாகும். அனைவருடைய பாதுகாப்பிற்கும், வளமைக்கும் உத்திரவாதமளிக்கும் ஒரு புதிய அரசிற்காகவும், தெற்காசியாவில் அமைதியின் விளக்கமாக இருக்கும் ஒரு அரசையும், உலகிலுள்ள எல்லா மக்களுடைய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு நிபந்தனையற்ற முழு ஆதரவையும் அளிக்கக் கூடிய ஒரு அரசையும் நிறுவுவதற்காக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

Pin It