ஊழலை ஒழிக்க, முதலாளித்துவத்திற்கு நாம் முடிவு கட்ட வேண்டும்!

ஊழல் என்ற நோய்க்கு முடிவு கட்ட, முதலாளித்துவ அமைப்பைப் பிடுங்கி எறிய வேண்டும், தொழிலாளர் - உழவர் ஆட்சியை நிறுவ வேண்டுமென்ற முழக்கங்கள் கொண்ட செவ்வண்ணத் தட்டிகள் எங்கும் நிறைந்திருந்தன. இந்த முழக்கங்களை உறுதியோடு எழுப்பிய வண்ணம், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் செயல் வீரர்கள் சூலை 20, 2015 இல் தில்லியில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராக பேரணியில் போர்க் குணத்தோடு பங்கேற்றனர். மண்டி அவுசிலிருந்து பாராளுமன்றம் நோக்கி நடைபெற்ற இந்தப் பேரணி அங்கு ஒரு பொதுக் கூட்டமாக மாறியது.

இப் பேரணிக்கு, சிபிஐ, சிபிஎம், பார்வேர்ட் பிளாக், ஆர்எஸ்பி, சுசி (கம்யூனிஸ்டு) மற்றும் சிபிஐஎம்எல் (விடுதலை) ஆகிய கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இன்றைய தேசகூ அரசாங்கத்தின் ஊழலை வெட்ட வெளிச்சமாக்கவும், பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டிருந்ததற்காக வெளியுறவு அமைச்சர் மற்றும் மத்தியப் பிரதேசம், இராஜஸ்தானுடைய முதலமைச்சர்களின் வேலை நீக்கத்தைக் கோரவும் இந்தப் பேரணிக்கு அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் ஒரு குழுவினர் போர்க் குணத்தோடு இப் பேரணியில் பங்கேற்றனர். கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்களில் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் பேச்சாளராகிய தோழர் பிரகாஷ் ராவும் ஒருவராவார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற எல்லாக் கட்சி செயல் வீரர்களையும், மக்கள் திரளையும் வாழ்த்திய தோழர் பிரகாஷ் ராவ், தொழிலாளர்கள், உழவர்கள் மற்றும் நடுத்தட்டு மக்கள் ஊழலுக்கு முடிவு கட்ட வேண்டுமென தீவிரமான ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டினார். நமது சமுதாயத்தில் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் பெரும் அளவிலான ஊழலால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இவர்கள் தாம். ஒரு ஒப்பந்த ஆசிரியராக ஒரு அரசுப் பள்ளியில் வேலை கிடைக்க வேண்டுமானாலும், அல்லது காவல் துறை, இராணுவம் அல்லது பிற அரசாங்க சேவைகளில் வேலைக்குச் சேர வேண்டுமென்றாலும் அதிகாரிகளுக்கு மக்கள் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தங்களுடைய அதிகாரத்தை தம்முடைய சொந்த இலாபத்திற்காகப் பயன்படுத்துவது வெறும் சில அமைச்சர்கள் மட்டுமோ அதிகாரிகள் மட்டுமோ இல்லை என்பதை நாம் அறிவோம். இந்த முழு அமைப்புமே ஊழலில் ஊறியிருக்கிறது. ஏகபோக முதலாளித்துவ கட்டத்தை வெகு காலத்திற்கு முன்னரே அடைந்துவிட்ட முதலாளித்துவ அமைப்பு ஊழல் நிறைந்ததாகவும், நேர்மையற்ற அமைப்பாகவும் இருக்கிறது. இது உழைப்பைத் தீவிரமாகச் சுரண்டுவதன் மூலமாகவும், ஊழல் மூலமாகவும் நம்முடைய மக்களுடைய இரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்து வருகிறது.

நாம் வரலாற்றுப் படிப்பினைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக் காட்டினார். நம்முடைய வாழ்நாளிலேயே, 1974-75 இல் இந்திரா காந்தியின் ஆட்சிக்கு எதிராகவும், போபர்சு ஊழலை ஒட்டி இராஜீவ் காந்தியின் அரசாங்கத்திற்கு எதிராகவும், மன்மோகன் சிங்னுடைய ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்களுக்கு எதிராகவும் பெரிய இயக்கங்கள் ஊழலுக்கு எதிராக நடந்திருக்கின்றன. இவற்றின் காரணமாக, அதிகாரத்திலிருந்த சில கட்சிகளை மாற்றி வேறு கட்சிகளும் ஆட்சிக்கு வந்திருக்கின்றன.

ஆனால் ஊழலைக் குறைப்பதற்கும் அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பதிலாக, ஊழலின் அளவு மேலும் அதிகரிக்க மட்டுமே செய்திருக்கிறது. பெரும் ஏகபோகங்கள் ஆதிக்கம் செலுத்தும் முதலாளி வர்க்கம் தான் ஊழலுடைய ஆணிவேராக இருக்கிறது என்பதுதான் உண்மையாகும். அரசைக் கட்டுப்படுத்துவதும் இந்த வர்க்கம் தான். இதே வர்க்கம் தான், ஒவ்வொரு தேர்தலின் போதும் அதன் சார்பாக அடுத்த சில ஆண்டுகளுக்கு எந்தக் கட்சிக்கு அரசாங்கத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பைக் கொடுப்பது என்பதைத் தீர்மானிக்கிறது. எனவே, ஒரு முதலாளித்துவ கட்சியை மாற்றி வேறு ஒரு கட்சியைக் கொண்டு வருவதைத் தங்களுடைய போராட்டத்தின் நோக்கமாக தொழிலாளி வர்க்கமும், உழைக்கும் மக்களும் வைத்திருக்க முடியாது. மேலும் ஒரு சாரர் ஊழல் அமைச்சர்களை மாற்றி வேறு ஒருவரைக் கொண்டுவருவதையும் நம்முடைய நோக்கமாக நாம் வைத்துக் கொள்ள முடியாது.

இந்த ஒடுக்குமுறையான, சுரண்டலான மூலதனத்தின் ஆட்சிக்கு நிரந்தரமான முடிவு கட்ட வேண்டுமென நாம் அனைவரும் நம்முடைய இதயத்தில் ஆழமாக விரும்புகிறோம். நாம் அனைவருமே, தொழிலாளர்கள் - உழவர்களுடைய ஆட்சியதிகாரத்திற்காகப் போராடுவதில் உறுதியாக நிற்கிறோம். நம்முடைய போராட்டமானது, எல்லா வகையான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்டுவதாகும். ஊழலுக்கு எதிரான போராட்டமானது, இந்தப் போராட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை, இந்த சுரண்டலான இரத்தம் உறிஞ்சும் முதலாளித்துவ அமைப்புக்கு முடிவு கட்டுவதற்கான போராட்டத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக வைத்துப் போராடுவோம்.

Pin It