செப் 2 அனைத்திந்தியப் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்!

தொழிலாளர் தோழர்களே,

நம்முடைய வாழ்வுரிமையும், வாழ்வாதாரமும் மேலும் மேலும் தாக்கப்பட்டு வருகிறது. முதலாளிகளுடைய இலாப வெறியை நிறைவு செய்வதற்காக சுரண்டல் தீவிரப்படுத்தப் பட்டும், அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டும் வருகிறது. நம்முடைய உழைப்பை உறிஞ்சி, இந்திய முதலாளிகள் உலக அளவில் மிகப் பெரிய பணக்காரர்களாகவும், ஏகாதிபத்திய - ஏகபோக முதலாளிகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வேலை நிரந்தரம் என்பது மறுக்கப்பட்டு, தாற்காலிகத் தொழிலாளர்களாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் வைத்திருப்பதன் மூலம் ஊதியம் வெட்டிக் குறைக்கப்பட்டு, ஓவர்டயம், மருத்துவம், விடுப்பு, காப்பீடு, ஓய்வூதியம் ஆகிய எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டு கொத்தடிமைகளாக ஆக்கப்படுகிறார்கள். விமான ஓட்டிகள், தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள், மருத்துவர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களிலிருந்து எல்லா தரப்புத் தொழிலாளர்களும் உரிமைகளற்ற தினக்கூலிகளாக மாற்றப்பட்டு, 12-14 மணி நேரம் வேலை பளு சுமத்தப்பட்டு வருகிறோம்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகள் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காதது மட்டுமின்றி, முதலாளிகள் நம்மைக் கடுமையாகச் சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். மோடி அரசாங்கம் முதலாளிகளுடைய விருப்பத்திற்கு ஏற்ப, பெயரளவில் இருக்கும் தொழிற் சட்டங்களையும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. நாம் ஒன்று கூடி தொழிற் சங்கம் அமைக்கும் உரிமையும், கூட்டாக கோரிக்கைகளை எழுப்புகின்ற உரிமையும், வேலை நிறுத்த உரிமையும் கூட நசுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியத் தொழிலாளர்களைக் கடுமையாகச் சுரண்டிக் கொழுப்பதற்கு "இந்தியாவில் உற்பத்தி செய்ய வாரீர்" என ஏகபோக முதலாளிகளுக்கு இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதோடு தமிழக அரசு, தொழிலாளர் களுடைய போராட்டங்களைத் தாக்கியும், தொழிலாளர் நல வாரியங்களைச் செயல்படாமல் முடக்கியும் வைத்து தொழிலாளர்களுடைய வாழ்வுரிமைகளைக் கடுமையாகத் தாக்கி வருகிறது.

விலைவாசியைக் குறைத்தல், எல்லாத் தொழிலாளர்களுக்கும் காப்பீடு, மருத்துவம், ஓய்வூதியம் என சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியமாக ரூ 15,000, தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 3000, ஒப்பந்த, தாற்காலிக தொழில் முறைக்கு முடிவு கட்டி எல்லாத் தொழிலாளர்களுக்கும் வேலை நிரந்தரம், போனசு, வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை ஆகியவற்றிற்கு உள்ள உச்ச வரம்பை நீக்கி அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், தொழிற் சங்கப் பதிவுக்கும், செயல்பாட்டிற்கும் உள்ள தடைகளை உடனடியாக ஒழித்தல், தொழிலாளர்களுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் சட்டத் திருத்தங்களை ஒழிப்பது மட்டுமின்றி, பொது மக்களுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களை முதலாளிகளுக்கு வாரி வழங்கி தனியார் மயப்படுத்தும் திட்டங்களுக்கு முடிவு கட்டுதல் ஆகியன செப் 2, பொது வேலை நிறுத்தப் போராட்டத்தின் முக்கியமான கோரிக்கைகளாகும்.

தொழிலாளர் தோழர்களே, அனைத்துச் செல்வங்களையும் உற்பத்தி செய்து, சேவைகளை வழங்கி, நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் நம்மை முதலாளிகள் ஒட்டச் சுரண்டுகையில் அரசாங்கம் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கி, முதலாளிகளுடைய இலாபப் பேராசைகளை நிறைவேற்றும் நிறுவனங்களாகவும், பெரு முதலாளிகளுடைய கைப்பாவையாகவும் செயல்பட்டு வருகின்றனர். முதலாளி வர்க்கத்தின் கைகளில் ஆட்சி அதிகாரம் இருக்கும் வரை, சுரண்டல் நீடிக்கும் வரை, தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வழியில்லை. இந்த நிலைக்கு முடிவு கட்ட கட்சி, சங்க வேறுபாடுகளைக் கடந்த அளவில் நாம் ஒன்றுபட்டு நம்முடைய கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுவதோடு, தொழிலாளர் நாமே உழவர்களோடு கூட்டாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றவும் திட்டமிட வேண்டும்.

வருகின்ற செப் 2, பொது வேலை நிறுத்தத்தின் மூலம் முதலாளி வர்க்கத்திற்கும், அவர்களுக்காகச் செயல்படும் இந்திய அரசுக்கும், அவர்களுக்கு விசுவாசமான மேலாளர்களாகச் செயல்படும் முதலாளி வர்க்க கட்சிகளுக்கும் சுரண்டலையும், உரிமைகள் மறுக்கப்படுவதையும் நாம் பொறுத்துக் கொள்ள மாட்டோமென்ற திட்டவட்டமான செய்தியை நாம் கொடுக்க வேண்டும். வாரீர், வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் நம்முடைய போராட்ட ஒற்றுமையைக் கட்டுவதற்கும், சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவரும் நமது நோக்கத்தை நோக்கி ஒரு படி முன்னேறுவதற்கும் வழி வகுப்போம்.

⦁ தொழிற் சங்க உரிமைகள், ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம், ஓய்வூதியம், போனசு, காப்பீடு ஆகியவற்றிற்காக ஒன்றுபட்டுப் போராடுவோம்!

⦁ நாட்டைக் கொள்ளையடிக்கும் தனியார்மய, தாராளமயத் திட்டத்தை முறியடிப்போம்!

⦁ செப் 2, பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!

⦁ தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!

செப் 2, அனைத்திந்திய பொது வேலை நிறுத்தம்

செப்டம்பர் 2, 2015 அன்று அனைத்திந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதற்காக முன்னேற்பாடுகள் நாடெங்கிலும் நடைபெற்று வருகிறது. இதற்கான தயாரிப்புக் கூட்டங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், நகரங்களிலும், தொழிற் பேட்டைகளிலும், தொழிற்சாலை வாயில்களிலும் நடைபெற்றன. இப்படிப்பட்ட பல கூட்டங்களில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் பங்கேற்று வேலை செய்தது. தமிழ் நாட்டில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை பல்வேறு நகரங்களில் உள்ள தொழிற் பேட்டைகளிலும், தொழிற்சாலை வாயில்களிலும் தொழிலாளர்களிடையிலும், பொது மக்களிடையிலும் ஆயிரக் கணக்கில் வினியோகிக்கப்பட்டன. வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக, தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் பிற இயக்கங்களோடு இணைந்து முழு மூச்சோடு வேலை செய்கிறது.

என்எல்சி தொழிலாளர்களுடைய வேலை நிறுத்தப் போராட்டம்

புதிய ஊதிய ஒப்பந்தம் கோரி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தைச் சேர்ந்த 12,000 க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் சூலை 20 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 2011 இல் காலாவதியான பழைய ஊதிய ஒப்பந்தத்திற்கு மாற்றாக புதிய ஒப்பந்தத்தை நிர்வாகம் இதை வரை பேசித் தீர்க்கவில்லை. பல கட்டமாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டியதாகி விட்டது. நிர்வாகம் கொள்ளை இலாபம் ஈட்டி வந்தாலும், தொழிலாளர்கள் கோரும் 24 சதவிகித ஊதிய உயர்வை நிர்வாகம் கொடுக்க மறுத்து வெறும் 10 சதவிகிதம் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசியிலும், பண வீக்கத்திலும் 10 சதவிகித உயர்வு என்பது தொழிலாளிக்கு உண்மையில் ஊதிய வெட்டு என்று பொருளாகும். இதை ஏற்றுக் கொள்ள மறுத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நியாயமான வேலை நிறுத்தப் போராட்டத்தை சென்னை உயர் நீதி மன்றம் சட்டத்திற்கு புறம்பானதாக அறிவித்து, தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியிருக்கிறது! மேலும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுடைய ஊதியத்திலிருந்து ஒவ்வொரு நாள் வேலை நிறுத்தத்திற்கும் தண்டனையாக எட்டு நாள் ஊதியத்தைப் பிடிக்குமாறு காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பை கொடுத்திருக்கிறது!

2012-இல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டிய புதிய ஒப்பந்தத்தைக் கொண்டுவர நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாததற்காகவும், கடுமையாக உயர்ந்து வருகின்ற விலைவாசியில் எப்படி 10 சதவிகித உயர்வு தொழிலாளர்களுக்கு போதுமானதாக இருக்க முடியுமெனவும் கேட்டு, நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, நீதி மன்றம் வாழ்வுரிமைக்காக நியாயமாகப் போராடும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருக்கிறது. இது, இந்த அமைப்பில் சட்டமன்றங்களும், நீதித்துறையும், அரசியல் அமைப்பும் முதலாளி வர்க்கத்திற்கு மட்டுமே சேவை புரிகின்றன என்பதை ஆணித்தரமாக உறுதிப்படுத்துகின்றன.

நீதி மன்றத்தின் இந்த அநீதியான தீர்ப்பைத் தொழிலாளர்கள் முழுவதுமாகப் புறக்கணித்து, தங்களுடைய வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். அவர்கள் பல்வேறு உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். தமிழகத்திலுள்ள அனைத்துத் தொழில் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் என்எல்சி தொழிலாளர்களுடைய வேலை நிறுத்தத்திற்கு முழு ஆதரவளித்து, அவர்களுடைய போராட்டம் வெற்றி பெற வேண்டுமென விரும்புகின்றனர்.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக அரசாங்கம் ஆயிரக் கணக்கான காவல் துறையினரை அங்கு குவித்து தொழிலாளர்களுடைய போராட்ட உரிமையையும், கூடிப் பேசும் உரிமையையும், கூட்டங்கள் நடத்தும் உரிமையையும், தொழிற் சங்க உரிமைகளையும் நசுக்கி வருகிறது. பெரு முதலாளிகளுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் மோடியும் செயலலிதாவும், ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடி வரும் 12,000 தொழிலாளர்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்கவில்லை, அவர்களுடைய வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும் முன்வரவில்லை. என்எல்சி தொழிலாளர்கள் தங்களுடைய போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதன் மூலமும், மற்ற தொழிலாளர்களுடைய ஆதரவின் மூலமும், தங்களுடைய கோரிக்கைகளை வெல்ல முடியும்.

 

Pin It