ஏர் இந்தியா புதிதாக வேலைக்கு எடுத்த 38 விமான ஓட்டிகளில் குறைந்தபட்சம் 10 பேராவது வேலை விட்டு வெளியேறினர். இவர்களுடைய வேலை முறையை நிரந்தரமான நிலையிலிருந்து ஒப்பந்த முறையாக ஏர் இந்தியா நிர்வாகம் மாற்றியதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேறியுள்ளதாகத் தெரிகிறது. இது மட்டுமின்றி இதே காரணங்களுக்காக மேலும் பல விமான ஓட்டிகளும் வேலையிலிருந்து வெளியேற இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த விமான ஓட்டிகள் 2011-இல் இந்திரா காந்தி ராஷ்டிரிய உரான் அகாடமியிலிருந்து வேலைக்கு எடுக்கப்பட்டதாக செய்தியிதழ்கள் கூறுகின்றன. அவர்களுடைய பயிற்சி 2014-இல் முடிவடையும் போது, அவர்கள் முதன்மை அதிகாரிகளாக நிரந்தரப்படுத்தப்படுவார்களென அப்போது, வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், வேலையில் சேர்ந்த பின்னர், அவர்களுடைய வேலைகள் ஒப்பந்த அடிப்படையில் இருக்குமெனவும், அவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டுமெனவும் ஏர் இந்தியா நிர்வாகத்தால் நவம்பர் 2014 இல் அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் எல்லா வேலைகளும் இனி ஒப்பந்த அடிப்படையில் இருக்குமென ஏர் இந்தியாவின் அதிகாரிகள் கூறியுள்ளனர். பயிற்சி பெற்ற விமான ஓட்டிகள் அரசாங்கத்திடமும், ஏர் இந்தியா அதிகாரிகளிடமும் இந்தப் பிரச்சனையை பலமுறை முறையிட்டிருக்கின்றனர். இந்த "நம்பிக்கைத் துரோகம்" குறித்து அவர்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர்.

தென்னிந்தியாவில் வேலையில் அமர்த்தப்பட்டுள்ள பெரும்பாலான இந்த விமான ஓட்டிகள், வேலையை விட்டுவிட்டதால், விமான நிறுவனத்தின் சேவைகள் இங்கு பல இடங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏர் இந்தியாவில் ஒப்பந்த முறையில் வேலைக்கு வைக்கப்பட்டுள்ள விமான ஓட்டிகள் நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையான அதே சம்பளமும், பிற படிகளும் பெறுகிறார்கள். ஆனால் நிரந்தரப் பணியாளர்களுக்குக் கிடைக்கும் ஓய்வு பெற்ற பின்னர் மருத்துவ வசதிகளோ, போக்குவரத்து வசதிகளே ஒப்பந்தப் பணியாளர்களுக்குக் கிடையாது.

நாம் ஏற்கெனவே கூறி வந்ததைப் போல, ஏர் இந்தியாவைத் தனியார்மயப்படுத்துவதற்கு தயாரிப்பதற்காக ஏர் இந்தியாவை நெருக்கடியில் ஆழ்த்த வேண்டுமென்பது ஆளும் வகுப்பினரின் திட்டமிட்டக் கொள்கையாகும். நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கையாக ஏர் இந்தியா நிர்வாகம், பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர் உள்ள செலவினங்களை வெட்டிக் குறைக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதைத்தான் மேற் கண்ட பிரச்சனையிலும் நாம் காண்கிறோம்.

ஒப்பந்தத் தொழில் முறையை ஒழிக்க வேண்டுமென்பதும், வேலை நிரந்தரம் வேண்டுமென்பதும் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு முக்கியமான கோரிக்கையாகும். இதற்காக, அது பல்லாண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறது. முதலாளிகள் எல்லா வழிகளிலும் தங்களுடைய இலாபத்தை அதிகபட்சமாக உயர்த்தி, தொழிலாளர்களுடைய சுரண்டலைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பொதுத் துறையிலும், தனியார் துறையிலும் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வைத்திருப்பதன் மூலம், விருப்பம் போல அவர்களை வேலைக்கு எடுக்கவும், வேலையிலிருந்து தூக்கியெறியவும் முதலாளிகளால் முடியும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இப்போதுள்ள சட்டங்களின்படி உரிய பயன்களையும், பாதுகாப்பையும் இவர்களுக்கு மறுக்க அவர்களால் முடியும்.

புதிதாக வேலைக்கு வைக்கப்படுள்ள இந்த ஏர் இந்திய விமானிகளுடைய இந்த நியாயமான போராட்டத்தைத் தொழிலாளர் ஒற்றுமைக் குரல் ஆதரிக்கிறது. 

Pin It