“...எட்டரை மணிக்கு பில்கேட்சும் அவரது மனைவியும் வந்தார்கள்... உலகத்தின் பணக்காரத் தம்பதி என நம்பவே முடியாது. அத்தனை எளிமையான உடை... அத்தனை கனிவான பேச்சு!

ஆனந்த விகடனில் வியந்து போகிறார் ஜெயா ஸ்ரீதர். பில்கேட்ஸ் பற்றிய நினைவுகளில் இலயித்துப் போகும் அவர் எழுதும் கடைசி வரிகள்: “இந்தியாவில் ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவனம் (பில் கேட்ஸ்தான் அதன் முதலாளி) மிகப் பெரிய அளவில் முதலீடு செய்யும் முயற்சிகள் ஒரு பக்கம் இருக்க, ‘தனிப்பட்ட’ முறையில் என்னைக் கவர்ந்தது அவர்களின் எளிமைதான். பணம் வரும்போதும் புகழ் வரும்போதும் மனிதர்கள் எப்படிப் பணிவாக இருக்க வேண்டும் என்று காட்டும் விதமாகவே அவர்கள் வந்து போனதாக உணர்கிறேன் நான்!’’

ஜெயாவைப்போல் இந்தியாவில் பலரும் இப்படித்தான் ‘எளிமை’ என்பதையே இப்போதுதான் பில்கேட்ஸ் போன்ற கோடீஸ்வரர்கள் வரும்போது தான் பார்க்கிறார்கள். ‘எளிய’ வாழ்க்கை என்பதே அதிகபட்சக் கனவாக, அழுத்திக் கொல்லும் வாழ்க்கையைச் சுமந்து தீர்க்கும் கோடிக்கணக்கான இந்தியர்களைப் பார்க்க அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை; நினைப்பும் வருவதில்லை.

உண்மையில், பில்கேட்சின் எளிமைக்காகவும் கனிவான பேச்சுக்காகவும்தான் பல மணி நேரம் காத்திருந்து தரிசித்து, மூன்று நாட்கள் அவருடன் திரிந்ததைப் பாக்கியமாகக் கருதுகிறாரா ஜெயா? இல்லை. பில்கேட்ஸ் உலகப் பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் என்கிற ‘கவர்ச்சி’யால் வந்ததல்லவா இந்தக் கிளர்ச்சி! “அவருடைய (பில்கேட்சின்) ஒருவினாடி வருமானம் 300 டாலர்கள். தரையில் 1000 டாலர்கள் கிடந்தால் அதைக் குனிந்து எடுக்கச் செலவழிக்கிற நேரத்தில் அதைவிடப் பல மடங்கு அவர் சம்பாதித்து விடலாம்’’ என்று அவருடைய நேரம், உயரம், தூக்கம், குளியல் எல்லாவற்றையுமே டாலரில் அளக்கும் ஜெயா ஸ்ரீதர்கள் அவர் நடந்து செல்லும் பாதை எல்லாம் குனிந்தே நடப்பார்கள் என்பதை நாம் அறிவோம்.

பில்கேட்சுக்கு இரண்டு முகங்கள் உண்டாம். ஒன்று மைக்ரோசாஃப்ட்டின் உரிமையாளர். இன்னொன்று கேட்ஸ் பவுண்டேஷனின் உரிமையாளர். கேட்ஸ் பவுண்டேஷன் என்பது அவரது மனிதாபிமான முகம் என்கிறார் அம்மணி. இந்த முகம் “மனிதாபிமான முகம்’’ என்றால் அந்த முகம்? பெரும்பாலும் ‘மனிதாபிமான முகம்’ என்று காட்டப்படும் பவுண்டேஷன் - அறக்கட்டளை - என்பனவெல்லாம் ‘மூலதனத்தின்’ விகாரத்தை மறைக்கும் ஒப்பனைச் சரக்குகளே! பணமும் புகழும் வாய்க்கப் பெற்றவர்கள் எளிமையாய்க் காட்சியளிப்பது என்பது அப்படியொன்றும் எளிதானதல்ல. அது ஓர் ஆடம்பரமான ஒப்பனை!

காந்தியடிகளும் ‘எளிமை’ யாகத்தான் இருந்தார். அவருடைய எளிமை குறித்துக் கவிக்குயில் சரோஜினி நாயுடு எழுதிய வரிகள் எளிமையின் மறுபக்கத்தைத் தெளிவாகக் காட்டியது. “என் இனிய சுண்டெலி, நீ ஏன் எங்களைப் போல் இயல்பாக இருக்கக் கூடாது? நீ எளிமையாக இருப்பதற்காகத் தேசம் மிக அதிகமாகச் செலவிட வேண்டியதிருக்கிறது!’’ என்று காந்தியடிகளுக்குக் கடிதம் எழுதினார் கவிக்குயில்.

எளிமையாகக் காட்சியளிப்பது சிலருக்கு ஓர் உல்லாச அனுபவம்தான். கோடீஸ்வரன் குறவன் - குறத்தியாக, பிச்சைக்காரனாக வேடமிட்டால் அதுவும் செய்திதான்; அதுவும் பரபரப்பான விளம்பரம் தான். அவர்கள் பின்னால் பல ஜெயா ஸ்ரீதர்கள் அலைந்து தீர்ந்து தங்கள் அனுபவங்களைப் பல பத்திரிகைகளில் பகிர்ந்து கொள்ளவும் செய்வார்கள்.

அண்ணா சொன்னது போல், ஏழைகளின் தோழனாகக் கண்டு அருவெறுப்படையும் இவர்கள் பணக்காரனின் தொழுநோயைத் தேமல் என்றும் அழகின் முத்திரை என்றும் வர்ணிப்பார்கள். உள்ளூர்ப் பணக்காரனுக்கே இந்த மரியாதை என்றால் உலகப் பணக்காரனை விட்டுவிடுவார்களா? உண்மையிலேயே குறவனாய், பிச்சைக்காரனாய், நாடோடியாய் இருப்பவன் ‘எளிய’ வேடம் போடுவது எப்படி? அதனால்தான், பிச்சை எடுப்பவர்கள் அனுமனாய், சக்ரவர்த்தித் திருமகன் இராமனாய், சீதையாய், பரமேஸ்வரியாய் வேடமிடுகிறார்கள். கோடீஸ்வரனின் எளிமையைக் கொண்டாடுகிறவர்கள், இந்த எளியமக்கள் கடவுள் வேடத்தில் வந்தாலும் இரங்க மறுக்கிறார்கள். ‘தொல்லை’ தாங்க முடியாதவர்களாய்ப் புழுங்கிப் போகிறார்கள்.

கேட்டால், பிச்சைக்காரனும் பிட்கேட்சும் ஒன்றாக முடியுமா? பில்கேட்ஸ் ஒரு சாதனையாளர். அவரால் தொழில் வளர்ச்சி ஏற்படுகிறது. பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது. இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியுறும்... என்று பாராட்டுவதற்கான காரணங்களை அடுக்குவார்கள். பில்கேட்ஸ் ஒரு கோடீஸ்வரர்தான். ஆனால் கோடீஸ்வரர் என்பதற்காக ஒருவரைக் கும்பிட்டுக் கொண்டாடுகிறவர்களின் நாணயத்தைச் சிந்திக்கிற மக்கள் சந்தேகித்தே தீருவார்கள்.

அமெரிக்கக் கோடீஸ்வரர்களின் வரலாறு முழுவதும் இரத்தக் கறைபடிந்தது. கோடிக்கணக்கான சுதேசிகளின் - சிவப்பிந்தியர்களின் படுகொலைதான் இன்றைய அமெரிக்கக் கோடீஸ்வரர்களை உருவாக்கியிருக்கிறது. பணம் அவர்களுடைய இரத்தக் கறைகளை மறைத்து விடுகிறது. சிவப்பிந்தியர்களின் மண்ணில் கறுப்பின மக்களின் கடின உழைப்பில் வளமான வாழ்க்கையை வசப்படுத்திக் கொண்ட கூட்டத்தைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரர் இந்தியாவை வாழ வைப்பார் என்று இங்குள்ள ‘அறிவு ஜீவிகள்’ நம்புவதும் பேசுவதும் விசித்திரமானது தான். அறம் சார்ந்த வர்த்தகம் அர்த்தமற்றதாகிவிட்ட சூழலில் அன்னிய முதலீட்டால் சொந்த நாட்டைச் சொர்க்க புரியாக்குவோம் என்கிறவர்கள் சுதந்திரத்தை விற்றுச் சோறுதின்ன விரும்பும் கேவலமானவர்களே!

புதிய பொருளாதார, உலகமயமாக்கல் என்கிற உச்சாடனங்களுக்குப் பின்னே இரக்கமற்ற கொள்ளைக் கூட்டத்தின் பேராசை ஒளிந்திருப்பதைப் புரிந்து கொண்டு, சுதந்திரத்தை நேசிக்கும் சுயமரியாதையுள்ள மக்கள், ஏகாதிபத்தியச் சூறையிலிருந்து தாய்நாட்டைக் காக்கவிரும்பும் தேசபக்தர்கள், உலகம் முழுவதும்- ஒவ்வொரு நாட்டிலும்- போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக வர்த்தக அமைப்பின் பெயரால் ஹாங்காங்கில் நடந்த மாநாட்டுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து, ஹாங்காங்கில் மாத்திரமல்ல ஒவ்வொரு நாட்டின் பெருநகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்களே, அவர்கள் விசாலப் பார்வையற்றவர்களோ, சின்னஞ்சிறு கூட்டைவிட்டு வெளியேற முடியாத நத்தைகளோ அல்ல. உண்மையில் உலக வர்த்தக அமைப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் இந்த மக்களே ஓருலகச் சிந்தனையாளர்கள்.

இவர்களின் ‘ஓருலகம்’ கணியன் பூங்குன்றனாரும் கார்ல் மார்க்சும் கனவு கண்ட உலகம். மனித உணர்வுகளும் மனித உரிமைகளும் மலர்ந்து செழிக்கும் உலகம். வறுமையும் போர்களும் இல்லாத இனிய உலகம். வர்க்கப் பகைமையும் சுரண்டலும் இல்லாத சோஷலிச உலகம். உலக மக்கள் அனைவரும் அன்பினால் பிணைக்கப்படும் புதியதோர் உலகம்.

பில்கேட்சும் அவருடைய ‘ஆதர்ஷ மனிதர்’ என்று ஜெயா ஸ்ரீதர் குறிப்பிடும் ஜிம்மி கார்ட்டரும் விரும்பும் ‘உலக மயமாக்கல்’ என்பது, தனிமனிதப் பேராசைகளால் வேட்டையாடப்படும் உலகம். நீதான் நீ மட்டும்தான் உலகம். உன்னைத்தவிர வேறு யாருக்கும் அங்கே இடமில்லை. கொள்ளையடி; கொலைசெய். உலகத்தை உன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள். அந்த உரிமை உனக்கு இறைவனால் வழங்கப்பட்டிருக்கிறது. தெய்வீக உரிமைகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் நீயே உலகை ஆளப் பிறந்தவன் என்று தனிமனித அகங்காரங்களால் தினவெடுத்த சுயநல வெறியரின் உலகம்.

அங்கே ‘ஆதர்ஷ மனிதர்’ என்று யாரும் கிடையாது. பணம் திரட்டும் வெறியில் ஒவ்வொரு முதலாளியும் இன்னொரு முதலாளியைத் தின்று தீர்க்கத் திட்டமிடுகிறான்: அந்த ‘ஷைலக்’குகளின் சாம்ராஜ்யத்தில் கோடீஸ்வரர்களே நிம்மதியற்றுப் போகிறார்கள். பேராசைப் போட்டியில், எஞ்சி நிற்கும் சில செல்வந்தர்கள். அவர்களின் பணிவிடைக் காக எந்திரமயமாக்கப்பட்ட சில அடிமைகள். போதும் இந்த ஜனத் தொகை.

‘தேவையற்ற மனிதர்களின் பசிகொண்ட பார்வையாலும் தீனக் குரல்களாலும் பூமாதேவி வெகுகாலம் வேதனையடைந்து விட்டாள். அவள் அமைதியுற வேண்டாமா? வறுமைப்பட்டவர்களின் ‘நகைப்புக்குரிய இலட்சிய முழக்கங்கள் இல்லாத, மேதின அணிவகுப்புகள் இல்லாத ‘சுதந்திர மனிதர்களின்’ சொர்க்க பூமியை வர்த்தக சுதந்திரம், புதிய பொருளாதாரம், எனும் இந்தப் புதிய போர்முறைகளே நிச்சயிக்கும் என்று பேசுகிற பொம்மைத்தலைவர்கள் ‘மிடாஸ்’ஸின் கதையை மறந்து விடுகிறார்கள்.

முதலாளித்துவம் தனக்குத்தானே சவக்குழி தோண்டிக் கொள்கிறது என்பது பொறாமை கொண்டவர்களின் பொருளற்ற வெற்றுரைகள் அல்ல. தாராளமயமாக்கப்பட்ட அன்னிய முதலீடுகளால் தொழில்வளம் பெருகும்; வேலை வாய்ப்புகள் மிகும் என்று மாயவலை விரிப்போரும் அதனுள் மயங்கி விழுவோரும் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். ஒரு நாட்டுக்குள் புத்தகங்களைக் கொண்டு வரலாம்; புரட்சியைக் கொண்டு வர முடியாது. வாளைக் கொண்டுவரலாம்; வீரத்தைக் கொண்டு வரமுடியாது. முழக்கங்களைக் கொண்டு வரலாம்; முடிவுகளைக் கொண்டுவர முடியாது. முதலாளிகளைக் கொண்டு வரலாம்; முன்னேற்றத்தைக் கொண்டு வரமுடியாது. 

(தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஜனவரி 2006ல் வெளியான கட்டுரை)

Pin It