உழவர்களுக்கு வினியோகம் செய்வதற்கான விதைகளை உற்பத்தி செய்வதற்காக, குறிப்பிட்ட உழவர்களுக்கு விதைகளை வழங்கி, பயிரிடச் செய்து, அதைக் கொள்முதல் செய்து அரசு மற்ற உழவர்களுக்கு வினியோகித்து வருகிறது. இந்த அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் வட்டம், ஒட்டநத்தம் கிராம உழவர்கள், உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்ட உளுந்து, பாசி பயிறு விதைகளை அதிகாரிகள் விரும்பியவாறு, தங்களுடைய புன்செய் நிலத்தில் விதைத்து, குவிண்டால் கணக்கில் அறுவடை செய்துள்ளனர்.

அறுவடை செய்யப்பட்ட உளுந்து, பாசி பயறு போன்றவற்றை ஒட்டப்பிடார உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். இதனால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அறுவடை செய்துள்ள பயிறு வகைகளை சாக்கு மூடைகளில் கட்டி வைத்திருப்பதால் அவை கெட்டுவிடக் கூடுமென உழவர்கள் கவலைப்படுகின்றனர்.

ஒட்டப்பிடார உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தின் உழவர் விரோத நடவடிக்கைகளையும், அரசின் விதை வினியோகத்திற்காக உற்பத்தி செய்யப்பட்ட உளுந்து, பாசிப் பயிறு ஆகியவற்றைக் கொள்முதல் செய்யாமல் உழவர்களை அலட்சியப்படுத்தி வருவதையும் சுட்டிக் காட்டி கடந்த 16-4-2015 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உழவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ம.ரவிக்குமார் இ.ஆ.ப. அவர்களிடம் பாதிக்கப்பட்ட உழவர்கள், மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.

அரசுக்கு விதைகளை உற்பத்தி செய்யுமாறு, உழவர்களைப் பயிரிட வைத்துவிட்டு, அறுவடை செய்து வைத்துள்ள பயறுகளை உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்து உரிய விலை கொடுக்க மறுக்கின்ற ஒட்டப்பிடாரம் துணை வேளாண்மை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் மீது அரசு, சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுத்து, பாதிக்கப்பட்ட உழவர்களிடமிருந்து உற்பத்தி செய்யப்பட்ட உளுந்து, பாசிப் பயிறுகளை கட்டுப்படியான விலையில் கொள்முதல் செய்யவும், தாமதமில்லாமல் உழவர்களுக்கு உரிய பணத்தை வழங்கவும் வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திரு இ.சரவணமுத்துவேல் அவர்கள் தில்லி சென்று கோரிக்கை மனுவை மத்திய வேளாண்மைத் துறை அமைச்சரிடம் நேரில் அளித்து உடனடி நடவடிக்கையைக் கோரியிருக்கிறார். இந்த மனுவின் நகல், தமிழக அரசின் வேளாண்மைத் துறை அமைச்சருக்கும், தமிழக தலைமைச் செயலாளருக்கும், வேளாண்மைத் துறை செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

உழவர்களுக்கு எதிரான அரசின் போக்கைக் கண்டித்து ஒன்றுபட்டுப் போராட எல்லா உழவர்களும் முன்வர வேண்டும். அரசு அதிகாரிகளின் நேர்மையற்ற போக்கையும், உழவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் அலட்சியப் போக்கையும் தொழிலாளர் ஒற்றுமைக் குரல் வன்மையாகக் கண்டிக்கிறது.

Pin It