இந்த 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா நாகரிக நெடுஞ்சாலையில் பீடுநடை போட, இந்திய மக்கள் நாம் ஏன் ஒரு புதிய அரசியல் சட்டத்தை வகுப்பதற்காக ஒரு புதிய அரசியல் சட்ட நிர்ணய சபையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது?”

செப்டெம்பர் 15, 2013 அன்று தில்லியில் நடைபெற்ற கெதர் (புரட்சி என்பது பொருள்) கட்சியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் பேசிய பேச்சாளர்கள் பலரும் இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்பினர்.

ghadar_565

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவானது, தில்லியில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கத்தில் நடைபெற்றது. மக்களாட்சி இயக்கத்தின் செயலூக்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை மூன்று டசனுக்கு மேற்பட்ட பல்வேறு அமைப்புக்களும் இணைந்து நடத்தினர். இக் கூட்டத்தைப் பற்றிய இலட்சக்கணக்கான அழகிய வண்ண சுவரொட்டிகளை, இந்தியாவின் தலைநகரிலும், அதன் தொழிற்பேட்டைகளிலும், பல்கலைக்கழகங்களிலும், குடியிறுப்புப் பகுதிகளிலும், வணிக வளாகங்களிலும் இந்த அமைப்புக்கள் ஒட்டியிருந்தனர். நிகழ்ச்சிக்கு சில வாரங்களுக்கு முன்னரே துண்டறிக்கைகளும், அழைப்பிதழ்களும் பரவலாக வினியோகிக்கப்பட்டிருந்தன. 

பள்ளி குழந்தைகளின் ஒரு வண்ணமயமான நிகழ்ச்சியோடு விழா துவங்கியது. சில டசன் பள்ளிச் சிறுவர்கள் இந்துஸ்தானி கெதர் கட்சியின் சிவப்பு, குங்குமப்பூ, பச்சை நிறக் கொடியையும், எண்ணெற்ற சிவப்புக் கொடிகளையும் ஏந்தியவாறு மேடைக்கு அணிவகுத்து வந்தனர். கெதர் கட்சிக்கு செவ்வணக்கம், இன்குலாப் ஜிந்தாபாத் என்ற பாடலின் இசையோடு அவர்கள் கொடிகளை அசைத்தவாறு, அணிவகுத்துச் சென்றனர்!

கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை மக்களாட்சி இயக்கத்தினுடைய தலைவர் எஸ்.இராகவன் வரவேற்றுப் பேசினார். தேசிய, சமூக விடுதலையை அடைய வேண்டுமென்ற பொது நோக்கத்திற்காக ஒரு பரந்துபட்ட அடிப்படையில் நமது நாட்டின் எல்லா மக்களையும் ஒருங்கிணைக்க இந்துஸ்தானி கெதர் கட்சி பணியாற்றியது என்பதைக் குறிப்பிட்டார். இந்திய கெதர் கட்சியின் கண்ணோட்டமும், திட்டமும், எல்லா மக்களுடைய உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஒரு அரசை அமைப்பதாக இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டினார். இதை 1947-இல் நிறைவேற்றிவிட்டதாக நமது நாட்டின் ஆட்சியாளர்கள் அனைவரையும் நம்ப வைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. நம்முடைய தியாகிகளுடைய குறிக்கோள்கள் நிறைவேற்றப்படவில்லை. அனைவருடைய வளமைக்கும், பாதுக்காப்பிற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய மக்களாட்சியை அமைப்பதற்கானப் போராட்டத்தைத் தொடர்வதற்காக, கெதர் போராளிகள் அவர்களுடைய காலத்தில் செய்ததைப் போல, அனைத்து வேறுபாடுகளையும் கடந்த அளவில் எல்லா மக்களையும் ஒன்றுபடுத்த வேண்டுமென காலம் கேட்கிறது என்றார். 

அடுத்த நிகழ்ச்சியானது, இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தோழர் பிரகாஷ் ராவினுடைய சிந்தனையைத் தூண்டும் உரையோடு துவங்கியது. உலகை மறுபங்கீடு செய்வதற்கும், மனித சமுதாய முன்னேற்றத்தைத் தடுப்பதற்கும் ஏகாதிபத்தியர்கள் நியாயமற்றப் போர்களைத் தொடுத்து வருகிறார்கள் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த பயங்கரமான போக்கை எதிர்ப்பவர்கள் அனைவருக்கும் எதிராக இந்திய ஆட்சியாளர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். ஒரு புரட்சியை நடத்துவதற்காகவும், தாங்க முடியாத அடிமை நிலைமைகளுக்கு முடிவு கட்டவும், நூறாண்டுகளுக்கு முன்னர் வெளிநாடுகளிலிருந்த இந்தியர்கள், இந்துஸ்தானி கெதர் கட்சியை உருவாக்கிய போது இருந்த சூழ்நிலையைக் குறிப்பிட்டார். அந்த நேரத்தில் நமது மக்களுக்கு முன்னர் இருவேறு பாதைகள் இருந்தன – ஒன்று அடிமைத்தனம் மற்றும் கொள்ளை அமைப்போடு சமரசம் செய்து கொண்டு போவது, மற்றொன்று எல்லா பக்க முன்னேற்றத்திற்காக கதவைத் திறந்து விடும் புரட்சிகரப் பாதை. காங்கிரசு கட்சி சமரசத்திற்காகவும், கெதர் கட்சி புரட்சிகரத் தீர்வுக்காகவும் நின்றன. இன்றுங் கூட, ஏகாதிபத்தியத்தோடு சமரசமான பாதை அல்லது ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபட்டு ஒரு நவீன நாகரிக இந்தியாவிற்கான புதிய அடித்தளங்களை அமைப்பது என்ற பாதைகளில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தத் துவக்க உரையானது, தொடர்ந்து வந்த மறக்க முடியாத சிறிய உரைகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது. அச் சிற்றுரைகள் மூலம் கெதர் செய்தியானது பங்கேற்றவர்களிடையே எதிரொலித்தது. 

பிற்பகல் 2 மணிக்குத் தொடங்க இருந்த கூட்டத்திற்கு 1 மணியிலிருந்தே அரங்கத்தில் இளைஞர்கள் கூடத் தொடங்கினர். நீண்ட வரிசைகளில் நின்று, பெண்களும் ஆண்களும் தங்களைப் பதிவு செய்து கொள்ளத் துவங்கினர். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும், பல வெளிநாடுகளிலிருந்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் வந்திருந்தனர். பதிவு செய்து கொண்டவர்கள், தாய்நாட்டை காலனிய அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பதற்காக வட அமெரிக்காவில் இந்தியர்கள் பலர் சேர்ந்து உருவாக்கிய இந்துஸ்தானி கெதர் கட்சியின் கதையை எடுத்துரைத்த வண்ண கண்காட்சியைக் கண்டு படித்துக் கொண்டிருந்தனர். கெதர் கட்சியின் உண்மையான வரலாற்றையும், இந்திய சமுதாயத்தின் இன்றைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அதனுடைய பொருத்தத்தையும் அறிந்து கொள்வதில் அவர்கள் காட்டிய ஆர்வம், அவர்களுடைய உயர்தரமான சமூகப் பொறுப்புணர்வையும், அரசியல் விழிப்புணர்வையும் பிரதிபலித்தது.

இருபதுகளில் உள்ள இளம் பெண்களையும், ஆடவரையும் பெரும்பான்மையாகக் கொண்டதாக அரங்கம் நிரம்பி வழிந்தது. உட்கார இடமின்றி பலரும் நடைபாதைகளில் அமர்ந்திருந்தனர். அதிகமான கூட்டம் இருந்துங்கூட, அவர்கள் கட்டுப்பாடோடு நடந்து கொண்டனர். அது அவர்களுடைய உயர்ந்த ஒழுக்கத்தையும், அமைப்பையும் பிரதிபலித்தது. தேவைப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இளம் தொண்டர்கள் பலர் எல்லா இடங்களிலும் இருந்தனர்.

நிகழ்ச்சி சரியாக 2 மணிக்குத் துவங்கி 6 மணிக்கு முடிவடைந்தது. ஒரு இளம் பெண்ணும், ஒரு இளைஞரும் ஒவ்வொரு பேச்சாளரையும் அறிமுகப்படுத்தி நிகழ்ச்சி முழுவதையும் நடத்தினர். உரைகளுக்கு இடையிடையே, சிந்தனையைத் தூண்டும் கெதர் பாடல்களையும், கவிதைகளையும், நவீன புரட்சிகர பாடல்களிலிருந்து சில பகுதிகளையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

கனடாவின் கெதர் பாரம்பரிய அமைப்பு, கெதர் நூற்றாண்டு விழாக் குழு (கனடா), கெதர் அகிலம் (பிரிட்டன்), நயா தாவுர் கட்சி, சோசலிச யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு), லோக் சத்தா கட்சி, சீக்கிய இளைஞர்கள் அமைப்பு, தேசிய நாட்டுப்பற்றுள்ள மக்கள் முன்னணி, இராஜஸ்தான் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு, தில்லி காரெலு தொழிலாளர் சங்கம், ஆல் இந்தியா தொழிலாளர்கள் கவுன்சில், ஆல் இந்தியா லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேசன், மஸ்தூர் ஏக்தா கமிட்டி, சீக்கியர் அமைப்பு, இராஜஸ்தான் சர்பான்ச் சங்கம், குரலற்றவர்களுடைய குரல், செங்கல் சூளைத் தொழிலாளர்கள் சங்கம், ஆல் இந்தியா பார்வோர்ட் பிளாக், காம்கார் ஏக்தா சள்வள், ஜன் பக்ஷ், முற்போக்கு மாதர் சங்கம், இந்திய கவுன்சில் ஆப் டிரேட் யூனியன்ஸ், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா, சுபாஷ் யுவா மோர்ச்சா, சமாகிரா பாரத் நாட்டிய மன்ச் மற்றும் இந்த் நௌஜவான் ஏக்தா சபா ஆகியவற்றின் பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றியவர்களில் சிலராவர். முற்போக்கு எழுத்தாளர் திரு எஸ்.என்.சர்மாவும், அரியானாவிலிருந்து வந்திருந்த விவசாயிகளுடைய தலைவர் திரு. அன்ஸ்ராஜ் சிவாச் ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றினர். தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் – தமிழ்நாடு, அமைதிக்கும் சனநாயகத்திற்குமான செயற்குழு (மணிப்பூர்) மற்றும் வோல்டாஸ் ஊழியர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

இந்துஸ்தானி கெதர் கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையும் விருப்பத்தையும் இனிதான் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற முடிவுக்குக் கூட்டம் வந்தது. காலனிய பாரம்பரியத்திலிருந்து ஒரு தெள்ளத் தெளிவாக பிரிந்து விடுபட்டு வருவதை செய்து முடிக்க போராட்டத்தைத் தொடர வேண்டும்; சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களையும், ஒன்றியத்தில் உள்ள எல்லா அங்கத்தினர்களையும் மதித்து அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கவும், அனைவருடைய வளமைக்கு உத்திரவாதமளிக்கவும் கூடிய ஒரு நாகரிகமான இந்தியாவிற்கு புதிய அடித்தளங்களை அமைப்பதற்காகவும் தொடர்ந்து போராடுவதென” கூட்டம் தீர்மானித்தது.

சிரியாவில் ஏகாதிபத்திய தலையீட்டையும், சிரியா அரசாங்கம் சர்வதேச நியதிகளை மீறியதாகக் கூறி அதற்காக அதைத் தண்டிப்பது என்ற பெயரில் அமெரிக்கா நடத்த இருக்கும் ஆக்கிரமிப்பையும் வன்மையாகக் கண்டித்து ஒரு தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சிரியாவின் தேசிய இறையாண்மையைப் பாதுகாத்தும், சிரியாவின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் அன்னிய தலையீட்டைக்கு எதிராகவும் இந்திய அரசாங்கம் வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமெனவும் அது கேட்டிருக்கிறது.

மக்களாட்சி இயக்கம் மற்றும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் செயல் வீரரான தோழர் சந்தோஷ் கூட்டத்தின் இறுதி உரையை ஆற்றினார். இந்தியா உருவாக்கியுள்ள அனைத்து அறிவையும் தன்னுடைய நூலகத்திலுள்ள ஒரு சிறிய தட்டிலேயே வைத்துவிட முடியுமென லார்டு மெக்காலேவின் திமிரான கூற்றிற்கு அவர் வன்மையாகக் கண்டனம் தெரிவித்தார். நமது நாட்டிலுள்ள கல்வி அமைப்பானது, ஒரு பிரிவு இந்தியர்களை ஆங்கிலேயர்களைப் போலச் சிந்திக்கவும், மேற்கித்திய அனைத்தையும் வணங்கவும்..பாராட்டவும், நம்முடைய சொந்த வரலாற்றை இழிவாக நோக்கவும் பயிற்றுவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். 1857 வீர மறவர்கள் “நாமே இந்தியா, நாமே அதன் மன்னர்கள்” என்று அறிவித்தனர். தொழிலாளர்களையும், விவசாயிகளையும் இந்தியாவின் மன்னர்களாக ஆக்குவதற்காக கெதர் கட்சியானது உருவாக்கப்பட்டது. இக் குறிக்கோளை அடைவதற்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். தொழிலாளி வர்க்கமும், உழைக்கும் பெரும்பான்மை மக்களாகிய நாம், நம்முடைய உரிமைகளைப் பாதுகாத்து, அனைவருடைய வளமைக்கும், பாதுகாப்பிற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய ஒரு புதிய அரசியல் சட்டத்தை வடிவமைத்து, ஒரு புதிய சக்தியை நாம் கட்ட வேண்டும், என்று கூறி முடித்தார்.

புரட்சிகரப் பாடல்களும், உணர்வூட்டும் பஞ்சாபிய பாங்கரா நடனமும் இந்த மாபெரும் நிகழ்ச்சியை உச்சத்திற்குக் கொண்டு சென்று நிறைவு செய்தது.

இந்த நிகழ்ச்சியானது, கெதர் கட்சியின் வீரப் போராளிகளுக்கு ஒரு பொருத்தமான போற்றுதலாகும். அதே நேரத்தில் இது, கெதர் எழுச்சி உயிரோடு இருக்கிறது, புரட்சி தொடர்கிறது என்பதற்கு ஒரு அத்தாட்சியாகும். மேலும் அது நம்முடைய வீரத் தியாகிகளுடைய அறைகூவலை ஏற்று கிளர்ந்தெழுவதற்காக விழிப்புணர்வு கொண்ட எல்லா இந்தியர்களுக்கும் கொடுக்கப்படும் அழைப்பாகும். இந்தியாவை மறுமலர்ச்சியடையச் செய்வதற்காக ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்கான அழைப்பாகும் – அது இந்த மிகப் பெரிய நாட்டின் படைப்பாற்றல் மிக்க மக்களை இந்த 21-ஆம் நூற்றாண்டில் தங்களுடைய எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க வழிவகை செய்வதாகும். 

 

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி

இந்தியர்களுடைய இதயமானது, இந்திய மூளையாலும்,, இந்திய விடுதலை கருத்தியலாலும் வழி நடத்தப்பட வேண்டும். நம்முடைய மூதாதயருடைய அறிவு வளத்தைப் பயன்படுத்தி, எல்லா மக்களுக்கும் வளமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய கடமையை அரசு நிறைவேற்ற வேண்டுமென இந்துஸ்தானி கெதர் கட்சி கோரியது. இந்தியாவைக் கொள்ளையடிப்பதைத் திட்டமிட்டு நடத்தும் ஒரு அரசின் அதர்மத்திற்கு எதிராக கிளர்ந்தெழுவதும், அதைத் தூக்கியெறிவதும் இந்திய மக்களுடைய உரிமையென அவர்கள் அறுதியிட்டுக் கூறினர். அடிப்படையில் இதே தத்துவமும் கருத்தியலும்தான் 1857 புரட்சியாளர்களையும் வழிநடத்தியது. இதை கெதர் கட்சி உயர்த்திப் பிடித்து, 20-ஆம் நூற்றாண்டில் அதை மேலும் வளர்த்திருக்கிறது.

நக்சல்பாரி எழுச்சியையும், அதனுடைய ஒரு சமூக புரட்சிக்கான அறைகூவலையும் தொடர்ந்து, அதர்மத்தை தூக்கியெறிய வேண்டிய ஒரு தேவை, நமது மக்களுடைய புரட்சிகர சக்தியை மீண்டும் வெளிக்கொண்டு வந்தது. இது, வெளிநாடுகளிலிருந்த இந்திய கம்யூனிஸ்டுகளை 1968-இல் இந்துஸ்தானி கெதர் கட்சி (அயல்நாட்டிலுள்ள இந்திய மார்க்சிஸ்டு-லெனினிஸ்டுகளுடைய அமைப்பு)-ஐ உருவாக்குவதற்காக ஒரு தற்காலிக குழுவை உருவாக்க ஊக்கமளித்தது. சிபிஐ(எம்எல்) பல்வேறு குழுக்களாக சிதறுண்டபோது, மீண்டும் உருவாக்கப்பட்ட கெதர் கட்சி, இந்திய மண்ணில் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிக் கட்சியை மீண்டும் கட்டியமைப்பதற்கான செயலூக்கத்தை மேற்கொண்டது. இப்படித்தான் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி 1980 டிசம்பரில் பிறந்தது.

இந்தியாவைக் கொள்ளையடிப்பதற்காக ஆட்சி நடத்தும் அதர்மத்தை 1950 அரசியல் சட்டமானது அங்கீகரிக்கிறது. அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், மேற்கித்திய நாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் நம்முடைய கடந்த காலத்திலிருந்து படித்துக் கொள்ள எதுவும் இல்லையென எண்ணியவர்கள். நம்மை எப்போதுமே அடிமைகளாக வைத்திருப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அரசியல் சட்டத்தை ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளாக இருப்பவர்கள் வணங்குகிறார்கள். உழைக்கும் பெரும்பான்மை மக்கள் – தொழிலாளர்கள் விவசாயிகளாகிய நாம், இந்திய சிந்தனை மற்றும் கெதர் பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்களான நாம், நம்மை இந்தியாவின் மன்னர்களாக ஆக்கக் கூடிய ஒரு புதிய அரசியல் சட்டத்தை நிறுவ வேண்டியது அவசியமாகும்.

கெதர் பாரம்பரிய அமைப்பு, கனடா

கெதர் புரட்சியாளர்கள் போராடிய நோக்கங்களை உயர்த்திப் பிடிப்பதற்காக, இத்தனை இயக்கங்கள் கைகோர்த்து முன்வந்திருப்பதை நாம் பார்க்கும்போது, ஒரு புதிய இந்தியாவிற்கு வழி வகுப்பதில் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோமென எனக்கு நம்பிக்கை பிறக்கிறது. அனைவருடைய உரிமைகளை மதிப்பதாகவும், எல்லோருடைய வளமைக்கும், பாதுகாப்பிற்கும் உத்திரவாதமளிக்கவும் இருக்கக் கூடிய ஒரு இந்தியாவை கெதர் புரட்சியாளர்கள், குறிக்கோளாகக்  கொண்டிருந்தனர். இன்று பெரும்பான்மையான நமது மக்கள் துயரத்தில் இருக்க ஒரு மிகச் சிறுபான்மையினர் மிகவும் பணக்காரர்களாக ஆகி வருகின்றனர். இதை நாம் மாற்றியாக வேண்டும். இதற்கு, தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒன்றுபடுவதும், இன்றுள்ள அமைப்பைத் தூக்கியெறிவதும், அதனுடைய இடத்தில் ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதும் அவசியமானதாகும். அனைவருடைய பொருளாதாரத் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய ஒரு அமைப்பை நாம் கட்ட வேண்டும். இளைஞர்கள் பிழைப்பைத் தேடி, வெளிநாடுகளுக்கு ஓடுவதற்கான வழிகளைத் தேட வேண்டிய அவசியமில்லை. நாம் ஒரு புதிய சோசலிச இந்தியாவைக் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை!

 

கெதர் நூற்றாண்டுவிழாக் குழு, கனடா

கெதர் போராளிகளில் ஒருவரான சோகன் சிங் பாக்னா, ஆங்கிலேயர்களுடைய காலனிய ஆட்சியின் கீழ் இருந்ததைக் காட்டிலும் இந்த சுதந்திர இந்தியாவில் தான் மேலும் 15 ஆண்டுகள் சிறையில் இருந்து கொடுமைகளை அனுபவித்ததாக அவர் நேருவிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. 1857 மங்கல் பாண்டே-விலிருந்து 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கெதர் புரட்சியாளர்களிலும், இன்று இந்த அரங்கத்தில் நாம் காணும் இளைஞர்கள் வரை ஒரு புரட்சிகர உறுதியும் தீரமும் கொண்ட ஒரு சிவப்பு இழை நமது வரலாற்றில் ஓடுகிறது. கெதர் புரட்சியாளர்களுடைய கொள்ளுப் பேரக் குழந்தைகள், இந்த ஆண்டு கனடா - டொரான்டோவின் வீதிகளில் அணிவகுத்துச் சென்றனர். கெதர் போராளிகள், இந்தியப் புரட்சியாளர்களாகவும் சர்வதேசவாசிகளாகவும் இருந்தனர். ஜாலியன்வாலா பாக்கில் படுகொலைகளை முன்னின்று நடத்தியதற்காக ஜென்ரல் டயரை கொன்ற தியாகி உத்தம் சிங், தன்னுடைய பெயரை ராம் ரகிம் சிங் என்று அறிவித்தார். கனடாவில் வசிக்கும் நாங்கள், அண்மையில் வர இருக்கும் காமகாட்டா மாறு மற்றும் தியாகி மேவா சிங்கின் வீர மரணமடைந்தது உட்பட நூற்றாண்டு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறோம்.

 

கெதர் அகிலம் (பிரிட்டன்)

கெதர் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக இத்தனை இளைஞர்கள் ஒன்று சேர்ந்திருப்பது எனக்குப் பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதே உற்சாகமானது, இப்படிப்பட்ட விழாக்களை பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் நடத்த எங்களுக்கு ஆர்வமூட்டியது. நூறாண்டுகளுக்கு முன்னர் நம்முடைய தாய்நாட்டை விடுதலை செய்வதற்காக எல்லாவற்றையும் அர்ப்பணித்தவர்களால் நாம் உணர்வூட்டப்படுகிறோம். இதில் துயரமான செய்தி, இன்றும் கூட சுரண்டலும், ஒடுக்குமுறையும் முற்றுப்பெறவில்லை என்பதாகும். கெதர் பாரம்பரியத்தைத் தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்கு இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியும், மக்களாட்சி இயக்கமும் இன்னும் பல்வேறு முற்போக்கு அமைப்புக்களும் ஒன்றிணைந்திருப்பதைக் காண நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குறிக்கோளானது, சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் மானத்தோடு வாழ்வதற்கு அடிப்படையாக மக்களுக்கு அதிகாரமளிப்பதாகும். ஆட்சியாளர்கள் நம்மை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் கெதர் போராளிகள் அவர்களுடைய காலத்தில் செய்ததைப் போலவே, நாம் இந்த வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபட்டு எழவேண்டும்.

 

 

நயா தாவுர் கட்சி

நமக்கு முன்னே ஒரே ஒரு பாதை தான் இருக்கிறது. அது கெதர் பாதையாகும். கெதர் பாரம்பரியத்தால் உணர்வூட்டப்பட்டு நாங்கள் நயா தாவுர் கட்சியை 2008-இல் உருவாக்கினோம். இன்றைய காலகட்டமானது, தொழிலாளி வர்க்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவான ஒரு புதிய அரசியல் சட்டம் வேண்டுமெனக் கேட்கிறது. மக்களாட்சி இயக்கத்தோடும், கம்யூனிஸ்டு கெதர் கட்சியோடும், கெதர் பாதையில் அணிவகுத்துச் செல்ல உறுதி கொண்டுள்ள மற்ற எல்லோருடனும் கை கோர்த்துச் செல்ல நயா தாவுர் கட்சி தயாராக இருக்கிறது. தில்லி தேர்தல்களில் நாம் ஒரு கூட்டு முயற்சியை மேற்கொள்ளுவோம். சூழ்நிலைமையானது எல்லா புரட்சியாளர்களுடைய ஐக்கியத்தைக் கோருகிறது. 1917-இல் இரசியாவில் நடைபெற்றது போலவும், சீனாவில் 1949-இல் நடைபெற்றது போலவும், இந்தியாவில் புரட்சி வெற்றிபெற 2013-இல் நாம் ஒரு திட்டவட்டமான நடவடிக்கையை மேற் கொள்வோம்.

 

சோசலிச யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு)

கெதர் இயக்கமானது வெற்றியை அடையவில்லை. ஆனால் அதனுடைய தோல்வியில் அது எப்போதுமே தோற்கடிக்க முடியாத, மிகவும் விலை உயர்ந்த ஒன்றை விட்டுச் சென்றிருக்கிறது. அது, சமூக புரட்சிக்கான அறைகூவலும், ஐக்கிய குடியரசுகளின் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் அரசியல் நோக்கமும் ஆகும். அப்படிப்பட்டதொரு முழக்கம் அப்போதுதான் முதன்முறையாக முன் வைக்கப்பட்டது. அது காங்கிரசு கட்சித் தலைவர்களை பீதியடையச் செய்தது. இந்திய கெதர் கட்சியானது அதனுடைய காலத்தைக் காட்டிலும் மிகவும் முன்னேறியதாக இருந்தது. அவர்கள் மதத்தைப் பற்றி கூறியதைப் போல வேறு யாரும் அவ்வளவு தெளிவாகப் பேசவில்லை. கெதர் அலையின் உச்சகட்டமானது, பாய் சன்டோக் சிங் சோசலிச புரட்சி பற்றிப் பேசியதாகும். இதையே பகத் சிங் பின்னர் வலியுறுத்தினார். அதனுடைய சாராம்சம் தான் புரட்சி தொடர்கிறது என்ற இன்றைய முழக்கமாகும்.

 

லோக் சத்தா கட்சி

அரசியல் சுதந்திரம் 1947-இல் பெறப்பட்டது. ஆயினும் பொருளாதாரப் பாதுகாப்பிற்காகவும், பிற அடிப்படை உரிமைகளுக்காகவும் போராட்டம் தொடர்கிறது. குற்றங்களும், ஊழலும் குறிப்பாக 2008-க்குப் பிறகு வேகமாக அதிகரித்து வருகிறது. சமூக மாற்றத்திற்காகப் போராட நாம் உறுதியேற்க வேண்டும். நாம் காங்கிரசையோ, பாஜக-வையோ சார்ந்து இருக்க முடியாது. ஒரு புதிய இந்தியாவிற்காக நாம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். எங்களுடைய வேண்டுகோள், நீங்கள் அனைவரும் கட்சி அடிப்படையில் வாக்களிக்காமல், வேட்பாளர்களுடைய தகுதியின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்பதாகும்.

  

தேசிய நாட்டுப்பற்றுள்ள மக்கள் முன்னணி 

மதத்தை தனிப்பட்டவருடைய பிரச்சனை என்று சிந்தனையோடு கூறிய கெதர் போராளிகளைப் போற்றுவோம். உண்மையில் எந்த மதமும் பிறரை துன்புறுத்த வேண்டுமென்று கூறுவதில்லை. 1857 எழுச்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராகும். இன்றுள்ள உண்மை நிலை என்னவென்றால், பெரு முதலாளிகளுடைய பிற செயலாளர்களோடு வேலை செய்யும் ஒரு தலைமைச் செயலாளர் தான் நமது பிரதமர் ஆவார். கெதர் கட்சியினுடைய சிந்தனையையும், கருத்தியலையும், திட்டத்தையும் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இதே சிந்தனைகள்தான் இந்த நிகழ்ச்சியை கூடி ஏற்பாடு செய்ய முன்வந்துள்ள இந்தியாவின் இன்றைய புரட்சியாளர்களை ஆர்வமூட்டி செயல்பட வைத்து வருகிறது. புரட்சியாளர்கள் உழைக்கும் மக்களிடையே பிறந்து வருவார்கள். அரசியல் அதிகாரம் துப்பாக்கியின் குழலில் இருந்து வருகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் துப்பாக்கிகள் மக்களுடைய தோள்களில் இருக்க வேண்டும்.

 

ராஜஸ்தான் அரசு ஊழியர்களுடைய கூட்டமைப்பு

கெதர் உயிரோட்டத்தோடு இருக்கிறது. மனிதனை மனிதன் சுரண்டுவது தொடரும் வரை கெதர் நீடிக்கும். கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் முதல் வியாபார தளத்தை அமைத்துக் கொள்ள ஜகாங்கீர் அனுமதித்த காலத்திலிருந்து அடிமையாக இருக்க மறுத்த பல புரட்சிகர நாட்டுப் பற்றாளர்களை நாம் கண்டிருக்கிறோம். ஐதர் அலியும், திப்பு சுல்தானும், 1857 இல் ஜான்சியின் ராணி, டான்டியா தோப் மற்றும் பிறர் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். பின்னர் 1913-இல் கெதர் கட்சி பிறந்தது. இன்று கருப்பு ஆங்கிலேயர்கள் நமது மக்களைப் பிளவுபடுத்தி வருகின்றனர். நமது ஆயுதப்படைகள் தொடர்ந்து வகுப்புவாத அடிப்படையில் அணி திரட்டப்பட்டிருக்கிறார்கள். பிரித்து ஆளுவது என்பது, சனநாயகத்தின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டியவர்களுடைய வழிகாட்டியாக தொடர்ந்து இருந்து வருகிறது. பிரச்சனையானது ஒடுக்குமுறையை எதிர்ப்பதாகும். 1857-இல் பகதூர் ஷா ஜாபர் பறைசாற்றியது போல நம்முடைய பொதுவான ஒடுக்குமுறையாளர்களை எதிர்த்து எல்லா மதத்தைச் சேர்ந்த மக்களும் ஒன்றுபட வேண்டும். நம் மீது செயற்கையாக திணிக்கப்படும் காங்கிரசு – பாஜக, ஏஐடியுசி – சிஐடியு போன்ற எல்லா வகையான பிளவுகளையும் மீறி நாம் ஒன்றுபட வேண்டும்.

 

தில்லி கரேலு காம்கார் சங்கம்

நீதிக்காகவும், ஒரு புதிய சமூக அமைப்பிற்காகவும் ஆன போராட்டத்தில் பெண்களுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. உழைக்கின்ற பெண்களுக்கு இன்று எவ்வித பாதுகாப்பும் இல்லை. உரிமைகளுக்காகவும், உழைக்கின்ற பெண்களுடைய மதிப்பிற்காகவும், மரியாதைக்காவும் போராட நாம் ஐக்கியப்பட வேண்டும். அமைப்பு சாராததென்று அழைக்கப்படும் துறையில் எங்களுடைய அமைப்பு இக் குறிக்கோளை நோக்கி வேலை செய்கிறது. சமுதாயம் நம்முடைய உழைப்பில் நடக்கிறது. ஆனால் நமக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. இந்தியாவின் முன்னேற்றமானது நமக்கு பயன்பட வேண்டுமென பெண்கள் நாங்கள் கோருகின்றோம். இதை நம்முடைய உரிமை என்ற அடிப்படையில் நாங்கள் கோருகின்றோம். உரிமைகள் கொடுக்கப்படுவதில்லை. அவற்றை நாம் கைப்பற்ற வேண்டும். வீதிகளில் இறங்கிப் போராடாமல் நாம் விரும்புவதை நம்மால் பெற முடியாது. சமுதாயத்தை மாற்றக்கூடிய வலிமை இளைஞர்களிடம் இருக்கிறது. நம்முடைய உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மட்டுமே தலைவர்களாக இருக்க வேண்டும். நாம் ஒன்றுபட்டு ஓரணியில் திரள வேண்டும். சமுதாயத்தின் போக்கை நாம் மாற்ற வேண்டும். நாம் வெறும் வாக்கு வங்கிகளா? இல்லை, நாம் இந்நாட்டின் குடிமக்கள். நமக்கு உரிமைகள் இருக்கின்றன. நம்முடைய உரிமைகள் கிடைக்கும் வரை போராட்டத்தை நாம் தொடரவேண்டும்.

 

ஆல் இந்தியா ஒர்கர்ஸ் கவுன்சில்

கெதர் நூற்றாண்டு விழா நடைபெறும் இந்த நேரத்தில் எங்களுடைய வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். முக்கியமாக, இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சிக்கு எங்களுடைய சிறப்பான நன்றியை உரித்தாக்குகிறோம். கெதர் போராளிகளிடமிருந்து கற்றுக் கொள்ளுகின்ற அதே நேரத்தில் நம்மை எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும். தேசிய மற்றும் சர்வதேசிய நிலைமை முழுவதும் நிலையற்றதாக இருக்கிறது. கருத்தியல்களுக்கும், மதிப்பீடுகளுக்கும் இடையில் ஒரு கடுமையான மோதல் இருந்து வருகிறது. கெதர் கட்சியினுடைய மைய்யக் கருத்தை நமது நாட்டினுடைய எல்லா மூலைகளுக்கும் கொண்டு சென்று பரப்ப முடியுமானால் அது நம்முடைய இயக்கத்திற்கு நிச்சயமான ஒரு முன்னேற்றமாக இருக்கும். இந்தக் கூட்டத்தினுடைய கருத்தை நாம் வேலை செய்யும் ஒவ்வொரு இடத்திற்கும் கொண்டு செல்வோம்! இந்தக் கொள்கையை பரப்பி, புரட்சிகர மாற்றத்திற்கான நிலைமைகளை உருவாக்குவோம்!

 

ஆல் இந்தியா லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசன்

உண்மையான சுதந்திரத்தை நாம் பெறவில்லை என்பது உண்மை. எடுத்துக் காட்டாக, பல மாதங்களாக நெற்றி வியற்வை நிலத்தில் சிந்தி, தங்களுடைய பயிர்களை வளர்த்து அறுவடை செய்கின்ற விவசாயிகளுக்கு அதனுடைய விலையைத் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே ஒரு பொருளைக் கையிருப்பில் வைத்திருக்கும் முதலாளிகளுக்கு அதனுடைய விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு இருக்கிறது. இன்றைய அமைப்பும், அரசும் முதலாளிகளுக்கு சேவை புரிகின்றன என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. நாம் கெதரை எழுச்சியோடு வைத்திருக்க வேண்டும். புரட்சியைத் தொடர வேண்டும்.

 

மஸ்தூர் ஏக்தா கமிட்டி (தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்)

1950 அரசியல் சட்டம், தொழிலாளிகளாக, பெண்களாக அல்லது மனிதர்களாக நம்முடைய உரிமைகளுக்கு உத்திரவாதமளிக்கவில்லை. உடலளவில் இந்தியராக இருந்தாலும் சிந்தனையானது ஐரோப்பியராக இருந்த ஒரு சிறுபான்மையானவர்களால் இந்த அரசியல் சட்டம் எழுதப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலைத் தொழிலாளர்கள் நடத்தப்படும் முறையானது, சுதந்திர இந்தியாவிலும், “வெள்ளைக்காரனுடைய” ஆட்சிமுறை நீடிப்பதைக் காட்டுகிறது. இந்தியாவைக் கொள்ளையடிக்க, அதிக அளவில் அன்னிய முதலாளித்துவ முதலீட்டாளர்களைக் கவருவதற்காக தொழிலாளர்களுடைய உரிமைகளுக்காகப் போராடும் சங்கங்கள் நசுக்கப்படுகின்றன. இதைச் சுதந்திரமென்று நம்மால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இது அடிமைத் தனத்தின் தொடர்ச்சியாகும். இதற்கு ஒரேயடியாக முடிவு கட்ட உழைக்கும் மக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

சீக்கிய மன்றம்

நமக்கு மத நம்பிக்கைகளும், கோட்பாடுகளும் இருக்கின்றன. ஆனால் நம்முடைய எல்லா மக்களையும் எழுச்சியூட்டிய கெதர் கட்சியின் எண்ணங்கள் மீது இன்று நாம் நம்முடைய கவனத்தைச் செலுத்த வேண்டும். இன்றுள்ள மேலாதிக்கமான எண்ணங்களுக்கு நேரெதிகாக அவர்களுடைய ஒளிமிகுந்த சிந்தனைகள் இருந்திருக்கின்றன. அகிம்சையைப் போதிப்பவர்கள், கெதர் இயக்கத்தை மறைப்பதன் மூலமும், அது பற்றிய உண்மைகளை சிதைப்பதன் மூலமும் குற்றத்தை நிகழ்த்தியிருக்கின்றனர். இது இந்த கெதர் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்படும் புதிய புத்தகங்களால் இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் வரலாற்றுப் புத்தகங்கள், இந்தியாவின் விடுதலைக்காக விட்டுக் கொடுக்காமல் போராடியவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை. கெதர் கட்சியின் விரிவான வரலாற்றை எல்லாப் பள்ளிகளிலும் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

 

ghadar_564

ராஜஸ்தான் சர்பான்ச் யூனியன்

1947-இல் ஏற்பட்ட அதிகார மாற்றத்தின் விளைவுகள் இன்று நம்முன்னே இருக்கின்றன. சுதந்திரம் கிடைத்துவிட்டதாக பலரும் எண்ணினர். ஆனால் அது உண்மையல்ல என்பது இன்று தெளிவாகத் தெரிகிறது. இந்தியக் குடியரசானது, சொற்களில் மதச் சார்பற்றதாகவும், சனநாயகமாகவும் இருக்கிறது. ஆனால் உண்மையில் அது பெரும் ஏகபோகங்களின் கூட்டாட்சியாகவும், விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடைய ஆட்சியாகவும் இருக்கிறது. மதச் சார்பற்ற அரசாக கூறப்படும் இது, அதிகாரத்தில் இருப்பவர்கள் வகுப்புவாத வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை அனுமதிக்கிறது. காங்கிரசு கட்சியின் தலைமையில் இருந்த மத்திய அரசு மறைமுகமாக பஞ்சாபில் பயங்கரவாதத்தை ஊக்குவித்தது. அதே நேரத்தில் பாஜக, இந்து உணர்வைக் கையாள்வதன் மூலம் அதிகாரத்திற்கு வர திட்டமிட்டது. உண்மையில் இன்றிருக்கும் அரசும், அமைப்பும் சனநாயகமோ, மதச் சார்பற்றதோ, எள்ளளவும் சோசலிசமோ அல்ல!

 

குரலற்றோர்களுடைய குரல்

கெதர் கட்சியில் பல சீக்கியர்கள் இருந்தனர் என்பது உண்மை. ஆனால் கட்சி, மத நம்பிக்கைகளுக்கு அப்பால் எழுந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள் என்பதும் ஒரு உண்மையாகும். விடுதலை அடைந்து விட்டதாகச் சொல்லப்படுகின்ற இன்றைய இந்தியாவில் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன. ஒடுக்குமுறை நீடிக்கின்றது. பெரும் எண்ணிக்கையிலான நமது மக்கள் மோசமான வறுமையில் வாடி வருகின்றனர். மக்கள் வகுப்புவாத வன்முறைக்கும், வாக்கு வங்கி அரசியலுக்கும் பலியாகி வருகின்றனர். கெதர் போராளிகள் கூறியதைப் போல, ஒரு மிகச் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரைச் சுரண்டுவது தொடரும் வரை, இந்தியாவின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

 

காம்கார் ஏக்தா சள்வள்

இந்தியாவை இன்று ஆளுகின்ற வர்க்கம், ஆங்கிலேயர்களுடைய அரவணைப்பில் பிறந்து வளர்ந்தவர்கள் ஆவர். ஆங்கிலேயர்கள் பெரிய நிலபிரபுக்களையும், பின்னர் பெரு முதலாளிகளையும் பாதுகாத்து வளர்த்தனர். நமது நாட்டைக் கொள்ளையடிப்பதையும் சூறையாடுவதையும் கட்டிக்காக்கவும், தொடரவும் பாடுபட்ட இந்த துரோகத்தனமான வர்க்கத்தின் விருப்பங்களை, காங்கிரசு கட்சியின் நிலைப்பாடு எப்போதுமே பிரதிபலித்தது. இதன் விளைவுகளை நாம் எல்லோருமே நன்றாகப் பார்க்க முடிகிறது. எப்படிப்பட்ட புதிய அமைப்பு நமக்குத் தேவை? மிகுந்த தொலைநோக்கோடும், வீரத்தோடும் முன்வந்துப் போராடிய கெதர் போராளிகள் கோரிய அடிப்படை மாற்றங்கள் நமக்குத் தேவை. இன்று நாம் அதே தொலைநோக்கோடும், வீரத்தோடும் செயல்பட வேண்டும்.

 

ஜன் பக்ஷ்

இந்துஸ்தானி கெதர் கட்சி உருவாக்கம், நமது நாட்டை விடுதலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட புரட்சியின் துவக்கத்தைக் குறிக்கிறது. ஒரு சீர்திருத்தப் பாதையைப் பின்பற்றி, அரசில் சுதந்திரத்தைப் பெறுவதற்காக காங்கிரசு கட்சி 1885-இல் உருவாக்கப்பட்டது. காலனிய எதிர்ப்பு இயக்கத்தில் இரண்டு போக்குகள் இருந்தன – ஒன்று முதலாளி வர்க்கத்தினுடைய பாதை. இதை காங்கிரசு கட்சி பிரதிநிதித்துவப் படுத்தியது. இன்னொன்று கெதர் கட்சி பிரதிநிதித்துவப் படுத்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடைய பாதையாகும். கெதர் போக்கிலிருந்து தோன்றியவர்களில் பகத் சிங்-கும் ஒருவராவார். கீர்த்தி கிசான் கட்சி பின்னர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணையும் வரை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவை தனித்தனியாக செயல்பட்டு வந்தன. சுரண்டலதிபர்கள் நாட்டை ஆள்வது தொடரும்வரை இந்தியாவின் போராட்டம் தொடருமென பகத் சிங் கூறினார். ஆங்கிலேய மூலதனம் இன்றுங்கூட இங்கு இருக்கிறது. எப்படிப்பட்ட சுதந்திரம் இது? இன்குலாப் ஜிந்தாபாத் என்பது நம்முடைய முழக்கமாக தொடர்ந்து இருக்க வேண்டும்.

 

முற்போக்கு எழுத்தாளர் – எஸ்.என்.சர்மா

சோகன் சிங் பாக்னா ஒரு மர ஆலைத் தொழிலாளி. அவர் வேலை தேடிக்கொண்டிருந்த போது, ஒரு மர மில் முதலாளி அவரிடம், “நீ ஒரு சுதந்திர நாட்டுக் குடிமகனாக ஆகும்போது, உனக்கு நான் வேலை தருகிறேன்” என்று கூறினார். இந்தியாவை விடுதலை செய்யாமல், தாங்கள் மரியாதையோடு வாழ முடியாதென்பதை அவரும் அவரைப் போன்றவர்களும் புரிந்து கொண்டனர். கெதர் என்ற வார இதழானது நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டு வெளிநாடுகளில் வாழும் எல்லா இந்தியர்களிடையிலும் இலவசமாக வினியோகிக்கப்பட்டது. தன்னுடைய வீரத் தியாகிகளை மறந்துவிடும் நாடு முன்னேற முடியாது. நம்முடைய நம்பிக்கைகள் இளைஞர் மீது உள்ளது. கெதர் எழுச்சியை மேற் கொண்டு எடுத்துச் செல்லுவோம்!

 

ஆல் இந்தியா பார்வேர்ட் பிளாக்

ஆங்கில ஏகாதிபத்தியர்கள் நமது நாட்டில் காலடி எடுத்துவைத்த நாள் முதலாக, ஏதாவதொரு இடத்தில் எதிர்க் கிளர்ச்சி வெடித்துக் கொண்டே இருந்தது. காலனிய ஆட்சியை நமது மக்கள் எப்போதுமே ஏற்றுக் கொள்ளவில்லை. 1857 கிளர்ச்சியானது தோல்வியுற்றதற்குக் காரணம், அதனுடைய தலைமையானது அரசர்கள், ராணிகள், இளவரசர்களுடைய கைகளில் இருந்ததாகும். கெதர் கட்சியினுடைய வீரமான முயற்சிகள், காலனிய ஆட்சியைத் தூக்கி எறிவதில் வெற்றி பெறவில்லை. எனினும் முக்கிய படிப்பினைகளை நாம் பெற்றிருக்கிறோம். தொழிலாளர்கள், விவசாயிகளை நாம் அணிதிரட்டாமல் நாம் வெற்றிபெற முடியாதென்பது தெளிவாகியது. பாக்னா, ஜோஷ், பில்கா, மற்றும் எஞ்சிநின்ற பிற கெதர் போராளிகள் அனைத்திந்திய விவசாயிகளுடைய அமைப்பில் பங்கேற்றனர். சுபாஷ் சந்திர போசின் நிலைப்பாட்டைப் பின்பற்றியிருந்தால், நாற்பதுகளில், இரண்டாவது உலகப் போரின் போது, இந்தியா விடுதலையைப் பெற்றிருக்க முடியும். 1947-இல் கிடைத்த சுதந்திரமானது, அன்னிய மூலதனத்தின் மேலாதிக்கம் தொடர்கின்ற வகைப்பட்டதாக இருந்தது. 1950-அரசியல் சட்டமானது மக்களால் உருவாக்கப்பட வில்லை, குறிப்பிட்ட ஒரு சிலரால் உருவாக்கப்பட்டதாகும்.

 

முற்போக்கு பெண்கள் சங்கம்

விடுதலைக்கான போராட்டத்தில் பெண்களுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. 1947-இல் அரசியல் சுதந்திரம் பெறப்பட்டது. ஆனால் சமுக அமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லை. கெதர் புரட்சியாளர்களின் நோக்கம் நிறைவேறவில்லை. அரசியல் அதிகாரம் மக்கள் கைகளில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடைவதற்கான போராட்டத்தை புரட்சிகர பெண்கள் தொடர்ந்தனர். ஒரு குறிக்கோளின் பின்னால் அனைவரும் ஒருங்கிணைந்து, நாம் ஆங்கிலேய ஆட்சியாளர்களை விரட்டியடித்தோம். இன்று கருப்பு ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டு வருகிறார்கள். நம்முடைய அடிப்படைச் சட்டங்களும், அரசியல் சட்டமும் முழுமையாக மாற்றப்பட வேண்டும். சமுதாயத்திற்கான பாதையை தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் தீர்மானிக்கும் வகையில், இறையாண்மை மக்களுடைய கைகளில் இருப்பதை அங்கீகரிக்கும ஒரு புதிய அரசியல் சட்டம் நமக்குத் தேவைப்படுகிறது.

 

இந்தியன் கவுன்சில் ஆப் டிரேட் யூனியன்ஸ்

கெதர் எண்ணங்களையும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பின்னர் எழுந்த போராட்டங்களையும் நாம் வணங்குகிறோம். கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கவில்லை. ஏகாதிபத்தியத்திற்கும், இந்தியாவிலுள்ள அதனுடைய இளம் கூட்டாளிக்கும் எதிராக எல்லா எதிர்ப்பு சக்திகளும் ஒன்றுபட வேண்டும். ஒரு புதிய உலகைப் படைப்பதற்கு, நாம் ஒன்றுபட்டு, கெதர் பாதையில் முன்னேற வேண்டும்.

 

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா

நம்முடைய முன்னோர்கள் தங்களுடைய இன்னுயிர்களைத் தியாகம் செய்தது, இப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்குவதற்காக அல்ல. குற்றவாளிகள் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இது சனநாயகமென்று அழைக்கப்படுகிறது, ஆனால் நாம் சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை. ஆங்கில அகராதியானது, சனநாயகமென்றால், அது மக்களுக்காக, மக்களால், மக்களுடையதாக நடத்தப்படும் ஆட்சியென்று கூறுகிறது. ஆனால் இன்றிருப்பது, மக்களுக்காக இல்லை, அது ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், வகுப்புவாதம் மற்றும் சாதியம் உட்பட நமது மக்களுடைய நான்கு முக்கிய எதிரிகளுக்காக அது இருக்கிறது. அது மக்களால் நடத்தப்படுவதாக இல்லை, மாறாக அது, ஆட்சியாளர்களால், மக்களை விலைக்கு வாங்கி நடத்தப்படுகிறது. மக்களுடையதாக இருப்பதற்கு பதிலாக அது மக்களைவிட்டு விலகி, எதிர்ப்புக் குரல்களை நசுக்குவதாக இருக்கிறது. ஒரு நாள் கெதர் வெற்றி பெறும், அப்போது நம் அனைவருக்கும் ஞாயிறு எழும்.

 

சுபாஷ் யுவா மோர்ச்சா

நம்முடைய நம்பிக்கையும், நம்முடைய பெயரும், நம்முடைய வேலையும் புரட்சியென கெதர் போராளிகள் கூறினர். அவர்கள் ஆங்கிலேய காலனிய ஆட்சியை எதிர்த்துப் போராடினர். இன்று நாம், ஆங்கிலேய ஏகாதிபத்திய கருத்துக்களையும், நிறுவனங்களையும் எதிர்த்துப் போராடி வருகிறோம். கெதர் புரட்சியை எப்படிக் கொண்டு செல்வது என்பது பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். 1947-இல் ஒரு வகையான சனநாயகம் நிறுவப்பட்டது. அது ஒரு சிறிய முன்னேற்றம். அதிகாரத்தை மக்களுடைய கைகளில் எப்படிக் கொண்டு வருவது என்பதும், நாம் விரும்பும் இலக்கை நோக்கி சமுதாயத்தைக் கொண்டு செல்ல அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதும் முக்கிய பிரச்சனையாகும். இதை நாம் தீர்மானித்த பின்னர், அதைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் அதில் நாம் உறுதியாக நிற்க வேண்டும். அதன்மூலம் தான் நாம் கெதர் பாரம்பரியத்தை முன்னே கொண்டுசெல்ல முடியும்.

 

செங்கல் சூளைத் தொழிலாளர்கள் சங்கம்

நான் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சிக்கு வணக்கம் செலுத்துகிறேன். இன்றுங்கூட நமது மக்கள் மிகவும் மனிதாபிமானமற்ற நிலைமைகளில் வேலை செய்ய வேண்டியுள்ளது, அவர்கள் கடுமையாக சுரண்டப்படுகிறார்கள், மிகவும் மோசமான வறுமையில் வாழ வேண்டியுள்ளது. கெதர் இயக்கத்தின் கனவுகள் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. எங்களுடைய பகுதியில் நாங்கள் செங்கல் சூளைத் தொழிலாளர்களுடைய உரிமைகளுக்காகப் போராடவும், நல்ல வேலை நிலைமைகளுக்காகவும், நல்ல ஊதியத்திற்காகவும் அவர்களை அணிதிரட்டி வருகிறோம். இந்தச் சுரண்டலதிபர்களை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்துவிட்டு, தொழிலாளர்கள் – விவசாயிகளுடைய ஆட்சி வரும்போது தான், நமது மக்களுடைய நிலைமைகளில் முன்னேற்றம் வரும்.

 

அரியானா விவசாயிகளுடைய தலைவர் – அன்ஸ்ராஜ் சிவாச்

நம்முடைய வீரத் தியாகிகளுடைய சொற்களையும், செயல்களையும் இன்றைய ஆட்சியாளர்கள் மறந்துவிட்டனர். இதை நான் எவ்வித அச்சமுமின்றி வெளிப்படையாகவே சொல்கிறேன். கொள்ளைக்காரர்கள் நமது நாட்டை ஆண்டு வருகின்றனர். தொழிலாளர்களும் விவசாயிகளும் சக்கையாகப் பிழியப்படுகிறார்கள். நாம் உருவாக்கும் செல்வங்களை மத்திய அரசாங்கம் இத்தாலிக்கு அனுப்பி வருகிறது. துரோகிகளால் நடத்தப்படும் இந்த அமைப்பில் நாம் சிக்கியிருக்கிறோம். அரசியல் தலைவர்கள் வெறும் வியாபாரிகள். நமது பிரதமர், அமெரிக்காவின் ரிமோட் கன்ட்ரோலால் செயல்படுத்தப்படுகிறார். அன்னிய நாட்டு சுயநலன்களுக்கு நாம் இன்னமும் அடிமைப்பட்டிருக்கிறோம். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிராக பீரங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. நாம் கம்யூனிஸ்டு கெதர் கட்சியோடு ஒன்றிணைய வேண்டும்.

 

சமாகிரா பாரத் நாட்டிய மன்ச்

நம்முடைய போராட்டத்தின் மூலம் நம்முடைய ஆட்சியாளர்கள் என்றுமே மறக்க முடியாத ஒரு புதிய வரலாற்றை நாம் உருவாக்குவோம். புரட்சி ஒரு நாள் நிச்சயமாக வெற்றியடையும். கடந்த 66 ஆண்டுகளில் இந்திய ரூபாயின் மாற்று மதிப்பானது 66 மடங்கு கீழே விழுந்திருக்கிறது. அரசாங்கத்தின் கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதால், சுதந்திரமானது, நம்முடைய முதுகில் மிகப் பெரிய சுமையாக ஆகியிருக்கிறது. பாராளுமன்றம் ஒரு மீன் சந்தை போல இருக்கிறது.

 

இந்த் நௌஜவான் ஏக்தா சபா (இந்திய இளைஞர் ஒற்றுமைக் கழகம்)

கெதருடைய நோக்கமானது, ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு மக்களாட்சியை நிறுவுவதாகும். தீர்மானிக்கின்ற அதிகாரமானது, மக்களுடைய கைகளில் இருக்க வேண்டும். 1947-இல் ஒரு சிறுபான்மையினர் அதிகாரத்தைக் கைப்பற்றினர். உற்பத்திக் கருவிகள் எந்த வர்க்கத்தின் கைகளில் இருக்கிறதோ, அந்த வர்க்கத்தின் கைகளில் தான் அரசியல் அதிகாரம் இருக்குமென மார்க்ஸ் தெளிவுபடுத்தியிருக்கிறார். மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக இளைஞர்கள் அணிதிரட்டத் துவங்கினால் அது இன்றைய ஆட்சியாளர்களுக்கு அபாயம் என்பதால், தொழிலாளி வர்க்க இளைஞர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாதென கூறி வருகிறார்கள். 1957- வீரத் தியாகிகள், “நாமே இந்நாட்டினுடைய மன்னர்கள்” என்றனர். ஆம், நமது சமுதாயத்தினுடைய பாதையைத் தீர்மானிப்பதற்காக நாம் போராடி வருகிறோம். தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் நாம், எப்படிப்பட்ட இந்தியா நமக்குத் தேவையென்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.

 

தீர்மானங்கள்

1. புரட்சி தொடர்கிறது... 

கெதர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக தில்லியில் செப்டெம்பர் 15, 2013 இல் கூடியுள்ள மக்கள் நாங்கள்,

நமது மக்களுடைய உழைப்பும், செல்வங்களும், இன்னமும் இந்திய மற்றும் அயல்நாட்டு முதலாளிகளால் சுரண்டப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் வருகிறது என்பதையும்,

ஏகாதிபத்தியக் கொள்ளையிலிருந்தும், தேசிய ஒடுக்குமுறையிலிருந்தும், முதலாளித்துவச் சுரண்டலிலிருந்தும், நிலவுடைமை அடிமைத் தளையிலிருந்தும், சாதி, பால் அடிப்படையில் மக்கள் சீரழிக்கபடுவதிலிருந்தும் நமது சமுதாயம் இன்னமும் விடுதலை செய்யப்பட வேண்டியுள்ளது என்பதையும்,

நாடு கொள்ளையடிக்கப்படுவதையும், சூறையாடப்படுவதையும், நமது நாட்டின் ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருவதோடு, இந்த அநீதியை எதிர்ப்பவர்களை மௌனமாக்குவதற்காக காட்டுமிராண்டித்தனமான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர் என்பதையும்,

மிகுந்த கவலையோடு பார்க்கிறோம்.

இந்துஸ்தானி கெதர் கட்சி உருவாக்கப்பட்ட நோக்கமும் விருப்பமுமான, எல்லா வகையான அடிமைத் தளையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும், ஒடுக்குமுறையிலிருந்தும் இந்திய சமுதாயத்தை விடுவிப்பது என்பவை இன்னமும் நிறைவேற்றப்பட உள்ளன

என்ற முடிவுக்கு நாம் வந்திருக்கிறோம்.

காலனிய பாரம்பரியத்திலிருந்து தெளிவாக உடைத்துக் கொண்டு வெளி வருவதற்கும், சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களையும், ஒன்றியத்தின் எல்லா அங்கத்தினர்களையும் மதித்து அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கவும், அனைவருடைய வளமைக்கும், பாதுகாப்பிற்கும் உத்திரவாதமளிக்கவும் கூடிய ஒரு நாகரிகமான இந்தியாவிற்கான புதிய அடித்தளங்களை அமைப்பதற்கான போராட்டத்தை நாம் தொடர்வோமென

உறுதி ஏற்கிறோம்.

2. சிரியாவுக்கு எதிரான ஏகாதிபத்தியப் போரை எதிர்ப்போம் 

கெதர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக தில்லியில் செப்டெம்பர் 15, 2013 இல் கூடியுள்ள மக்கள் நாங்கள்,

சிரியாவுக்கும் அதனுடைய மக்களுக்கும் எதிராக ஒரு ஆக்கிரமிப்புப் போரை நடத்தப் போவதாக அமெரிக்க ஏகாதிபத்தியம் அச்சுறுத்திவருவதற்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிரியாவுக்கு எதிரான இந்த ஏகாதிபத்தியப் போரை நமது நாட்டு மக்களும், எல்லா அரசியல் சக்திகளும் ஒன்றுபட்டு எதிர்க்குமாறு அழைப்பு விடுக்கிறோம். எல்லா சர்வதேச மன்றங்களிலும் சிரியாவுக்கு எதிரான அமெரிக்காவின் போரை உறுதியாக எதிர்த்து நிற்க வேண்டுமென இந்திய அரசாங்கத்தை நாம் கோருகிறோம். சிரியாவுக்கு எதிரான இந்த ஏகாதிபத்திய போரைத் தடுத்து நிறுத்துவதற்காக எல்லா உலக மக்களோடும் நாம் ஒன்றிணைவோம்.

 

Pin It