நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழியைப் பலரும் கூறுகின்றனர். பொது மக்களுக்கு நோயில்லாத தூய்மையான வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. நோயற்ற வாழ்க்கையைப் பெற்று அனுபவிப்பது பொதுமக்களின் உரிமை. இலாப வெறிபிடித்த நடப்பிலுள்ள ஆட்சிமுறையில் பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவது பற்றி நமது அரசாங்கம் உண்மையிலேயே பொதுநலக் கண்ணோட்டத்துடன் சிந்தித்து மருத்துவ துறையைச் செயல்படுத்துகிறதா என்ற கேள்வியை உழைக்கும் மக்கள் எழுப்புகின்றனர்.

மருத்துவத்திற்குத் தேவையான பரிசோதனைக் கருவிகள், பரிசோதனைக் கூடங்கள் உட்பட பல்வேறு நோய்களைத் தடுக்கின்ற ஊசி, மருந்து, மாத்திரைகள், ஊட்டச் சத்துக்கள், சலவைக்கூடம், சமயலறை, நோயாளிகள் தங்குமிடம், கழிப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்றவை உட்பட நோயாளிகளுக்கு தேவைப்படும் மற்றும் பல தேவைகளையும் இலவசமாக வழங்க வேண்டும். மேலும் மருத்துவ சேவைகளை அளிக்கும் மருத்துவர்கள், செவலியர்கள், மருந்தாளுனர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், தொழில் வல்லுனர்களுடைய தேவைகளை நிறைவு செய்து, அவர்கள் பணி செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் கடமையாகும். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நோய்களைக் குணப்படுத்தி பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

ஆனால், இன்றைய நிலமைகளில் அரசின் மருத்துவ சேவை படிப்படியாக குறைக்கப்பட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு வழிவகை செய்யப்படுகிறது.

தனியார் மருத்துவ சேவை என்பது, நிதி வசதியின் அடிப்படையில் தான் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுடைய பணத்தைப் பிடுங்குவதற்காக, அவசியமற்ற பல்வேறு பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்றும், தேவையற்ற அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ள வேண்டும் என்றும், விலை உயர்ந்த மருந்து வகைகளை உட்கொள்ள வேண்டும் என்றும் நிர்ப்பந்தம் செய்வது அதிகரித்து வருகிறது.

தனியார் மருத்துவமனை உட்பட, அரசுப் பொது மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளுடைய விலைகளும் சேவைக் கட்டணங்களும் மிகவும் அதிகமாக இருப்பதால் உழைக்கும் வர்க்த்தினரான ஏழை எளிய பொதுமக்களால் வாங்க இயலாத நிலமைகள் ஏற்பட்டுள்ளது.

நமது நாட்டின் செல்வங்கள் அனைத்தும் உழைப்பாளர்களின் உழைப்பின் வருமானமேயாகும். உழைக்கும் மக்கள் செலுத்துகின்ற வரிப்பணத்தில்தான் அரசு இயந்திரங்கள் வேலை செய்கின்றன. ஆனால் கோடிக்கணக்கான ரூபாய்களை வரியாகச் செலுத்துகின்ற விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மருத்துவ வசதி வழங்கும் பொறுப்பை அரசு படிப்படியாக மறுத்தும் குறைத்தும் வருகிறது. ஒரு தொழிலாளிக்கோ, விவசாயிக்கோ, மருந்து, மாத்திரை வாங்குவதற்கு பணமில்லாமல், சிகிச்சை பெற முடியாமல் உயிர்இழப்பு ஏற்படுகிறது என்றால் வாழும் உரிமையை அரசு பறித்துக் கொண்டதாகவே பொருள். இப்படி மனித உரிமைகளை அரசே கொடூரமாக மீறிவருகிறது. பொது மக்களுக்கு தேவையான மருத்துவ சேவையை இலவசமாகவும், தரமானதாகவும், போதுமான அளவிலும், செய்ய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வழி வகை செய்ய வேண்டும்.

குறிப்பாக, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நிதி வசதி படைத்தவர்களுக்கு உயர்தர மருத்துவ சேவை, ஏழைகளுக்கு படுமோசமான சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும், அரசின் மருத்துவ சேவை என்பது, தனியாரைப் போலவே வியாபார மயமாகிவிட்டதாக நோயாளிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கட்டணம் செலுத்தும் வார்டுகள் என்று தனியாக இருக்கின்றன. இக்கட்டண வார்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையை மேலும் உயர்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மரபணுக்களைக் கொண்டு ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுக்களின் மூலம் உறுப்புகளை உற்பத்தி செய்வதிலும், நவீன மருத்துவ சேவைகளை அளிப்பதிலும் ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இப்படி, அரசு பொதுமருத்துவமனைகளில் சிறப்பு பயிற்சியும் திறமையும் வாய்ந்த மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் உள்ள இக்கால கட்டத்தில் தமிழக அரசு எதற்காக காப்பீடு நிறுவனங்களின் மூலம் தனியார் மருத்துவ மனைகளுடன் ஒப்பந்தம் செய்து நோயாளிகளைத் தனியார் மருத்துவ மனைகளுக்கு ஏன் அனுப்பி சிகிச்சை வழங்க வேண்டும்? இது காப்பீட்டு நிறுவனங்களைக் கொழுக்க வைப்பதற்கும், தனியார் மருத்துவமனைகள் கொள்ளை இலாபமடிக்கவும், மக்களுடைய வரிப்பணத்தைப் பயன்படுத்தும் திட்டமேயாகும். அரசின் இந்த மக்களுக்கு விரோதமான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு பதிலாக, அந்த திட்டப் பணத்தை அரசு மருத்துவமனைகளை விரிவு படுத்தவும், புதிய மருத்துவமனைகளைக் கட்டுவதற்கும், அங்கு பணிபுரிபவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்த வேண்டும்.   

பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகளை அரசு வழங்காமல் தவிர்ப்பதும், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் மக்களைக் கொள்ளையடிக்க அரசு அனுமதித்திருப்பதும், முதலாளிவர்க்கத்தின் சுரண்டலை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகும்.

எனவே, மக்களின் வரிப்பணத்தை மக்கள் நலன்களுக்காக செலவு செய்வதற்காக மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும். மேலும் மற்ற உரிமைகளைப் போல இந்த உரிமையையும் பெற ஒரே வழி தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் ஆட்சியதிகாரத்தை நிறுவுவதாகும். முதலாளி வர்க்க அரசாங்கம் நம்முடைய இந்த அடிப்படை உரிமைகளைத் தரும் என்று நம்பி இருக்காமல், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் ஆட்சியதிகாரம் அமைக்கப்பட்டால்தான், குறைவில்லாத மருத்துவம் மக்களுக்கு கிடைக்கும்.

தேர்தல் நெருங்கி வருகின்ற இக்கால கட்டத்தில், அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படுகின்ற அணிகளை நம்பிவிடாமல், தொழிலாளர்கள், விவசாயிகளுடைய ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொறுப்புக்களை உள்ளடக்கிய ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போராட வேண்டும். உழைக்கும் மக்களாகிய நாம் ஒன்றுபட்டு உருவாக்குகின்ற புதியதொரு அரசியலமைப்பு மூலமாகத்தான் நமது வாழ்வுரிமைகளை உறுதிப்படுத்த முடியும்.

-  எஸ். மணிதாசன், பொதுச் செயலாளர், வி.எச்.எஸ் மருத்துவமனை தொழிலாளர்கள் சங்கம், சென்னை

அனைவருக்கும் சுகாதாரம் என்ற தலைப்பில், மருத்துவர்கள் அமைப்பு (Doctors Forum) மக்கள் நலம் குறித்த ஒரு கருத்தரங்கை செப்டெம்பர் மாத இறுதியில் சென்னையில் ஏற்பாடு செய்து நடத்தினர். சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட இக் கருத்தரங்கில் பலரும் பங்கேற்றனர். மருத்துவம் என்பது நமது மக்களின் ஒரு அடிப்படை உரிமையாகும். ஒருவருடைய சமூக, பொருளாதார நிலைக்கு அப்பாற்பட்டதாக, எல்லா மக்களுக்கும் இலவச மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். மருத்துவ வசதிகள் வியாபாரமாக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அது பலருக்கும் கிடைக்காததாகி விட்டது. மத்திய மாநில அரசாங்கங்கள் சமூகப் பொறுப்பேற்று, மருத்துத் துறையிலும், கல்வித்துறையிலும் அதிக முதலீடு செய்ய முன்வர வேண்டும் எனவும், இது மக்களுக்கான முதலீடாக இருக்குமெனவும் கருத்தரங்கில் அனைவராலும் வலியுறுத்தப்பட்டது.

டாக்டர் ரெக்ஸ் சர்குணம், டாக்டர் டி.காமராஜ், டாக்டர் எஸ்.காசி மற்றும் பலர் மேற்கொண்டு இந்த உயரிய முயற்சியை தொழிலாளர் ஒற்றுமை குரல் வரவேற்கிறது.

Pin It