மாருதி - சுசூகி தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக ஊதியம் வேண்டுமென்ற தங்களுடைய நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி செப்டெம்பர் 26, 2015 அன்று குர்காவூனில் உள்ள மானேசர் ஆலை முன்னர் ஒரு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் காவல் துறையாலும், உள்ளூர் குண்டர்களாலும் தாக்கப்பட்டனர்.

அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே கையெழுத்தான ஊதிய ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போலவே நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வை அவர்கள் கோரி வந்தனர். அதிக ஊதியத்திற்கான கோரிக்கையை ஒட்டி, சனிக்கிழமை காலையில் இரவு நேரத் தொழிலாளர்களும், காலை பணிக்கு வந்த தொழிலாளர்களும் கூடி ஆலையின் இரண்டாம் வாயில் முன்னர் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் மீது காவல் துறையினரும், மாருதி - சுசூகி நிர்வாகத்தின் குண்டர்களும் தடியடி நடத்தினர். அதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமுற்றனர். காவல் துறை 600 தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பல தொழிலாளர்களை சிறையிலடைத்துள்ளனர்.

மாருதி - சுசூகி மானேசர் ஆலைத் தொழிலாளர்களுக்கு ஒரு மகத்தான போராட்ட வரலாறு உண்டு. அவர்கள் அடக்குமுறைக்கு என்றுமே அடி பணிந்தது கிடையாது. தொழிலாளர்கள் மீது தாக்குதல்களை நடத்திய கருப்பு வரலாறு மாருதி - சுசூகி நிர்வாகத்திற்கு இருக்கிறது. அரசு மற்றும் மத்திய அரசாங்கங்களின் உதவியோடு, தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்களை நசுக்குவதற்கு மாருதி - சுசூகி நிர்வாகம் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வந்திருக்கிறது. தங்களுக்கு விருப்பமான தொழிற் சங்கத்தை அமைப்பதற்காக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இதற்கு எல்லா வகையான தடைகளையும் நிர்வாகம் உருவாக்கியிருக்கிறது.

சூலை 2012-இல் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் மேலாளர் ஒருவர் இறந்ததைப் பயன்படுத்தி, ஆலை நிர்வாகத்தோடு கைகோர்த்துக் கொண்ட அரியானா அரசாங்கம், தொழிலாளர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையை ஏவிவிட்டது. எல்லாத் தொழிலாளர்களும் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டனர்.

150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் அவர்களை அடைத்து வைத்துள்ளனர். செய்திகளின்படி, 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்காலிகத் தொழிலாளர்களாக அங்கு தொடர்ந்து இருந்து வருகின்றனர்.

இந்த தற்காலிகத் தொழிலாளர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. அங்கு தொழிலாளர் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. மாருதி - சுசூகி நிர்வாகம், ஒரு குண்டர் படையையே வைத்திருக்கிறது. இந்த குண்டர்கள் மூலமாகவும், அரசு காவல்துறையின் மூலமாகவும் தொழிலாளர்களுடைய உரிமைகளை நிர்வாகம் மறுத்து வருகிறது.

மாருதி - சுசூகி தொழிலாளர்களை அரசு ஒடுக்கி வருவதை தொழிலாளர் ஒற்றுமைக் குரல் வன்மையாகக் கண்டிக்கிறது. தொழிலாளர்களுடைய நியாயமான போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம்.

Pin It