தமிழக அரசு நவம்பர் 1 முதல் ஆவின் பால் விலையை கடுமையாக உயர்த்தியிருக்கிறது. அரசின் இந்த விலை உயர்வின் காரணமாக, சமன்படுத்தப்பட்ட 1 லிட்டர் பாலின் விலை ரூ 24-இலிருந்து ரூ 34 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஆவினின் இந்த விலை உயர்வைத் தொடர்ந்து தனியார் பால் விற்பனையாளர்களும் தங்களுடைய விலைகளை உயர்த்தியிருக்கிறார்கள். பாலின் விலை உயர்வு காரணமாக மக்கள் பயன்படுத்தும் தேனீர், காபி, மற்றும் பால் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வருகின்றன. அனைத்துத் தரப்பு மக்களும் அரசாங்கத்தின் இந்த பால் விலை உயர்வைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஆனால், தேர்தல் உடனடியாக இல்லாத சூழ்நிலையில், மக்களுடைய கோபத்தைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் பால் விலையை உயர்த்தியுள்ளதற்காக, முதலாளிகளும், முதலாளித்துவ ஊடகங்களும், அதிமுக அரசாங்கத்தைப் பாராட்டி வருகின்றனர்.

மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்கப் போவதாகவும், விலைவாசியைக் குறைக்கப் போவதாகவும், ஊழலுக்கு முடிவு கட்டப் போவதாகவும் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த செயலலிதா, ஆட்சிக்கு வந்தவுடனேயே பால், மின்சாரம், போக்குவரத்துக் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தி மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மிகவும் கொடூரமாகத் தாக்கினார். தற்போது மீண்டும் பால் விலையை 42% உயர்த்தி, அதிமுக அரசாங்கம் மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேலும் கொடுமையாகத் தாக்கியுள்ளது. செயலலிதா ஆட்சியின் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பால் விலையானது மொத்தமாக 92%, ஏறத்தாழ இருமடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது பால் உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்கப்படும் கொள்முதல் விலையை உயர்த்தியதன் காரணமாக ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறினாலும், உண்மை நிலைமை வேறாக இருக்கிறது. ஆவின் பாலில் கலப்படம் செய்து, கோடிக்கணக்கான ரூபாய்களை ஆளும் கட்சியினரும் அதிகாரிகளும் கொள்ளையடித்திருக்கிறார்கள். மேலும் ஆவின் நிர்வாகத்தின் சீர்கேடுகள் காரணமாக, கோடிக்கணக்கான ரூபாய் பொருமானமுள்ள பல்வேறு இழப்புக்களை நிறுவனம் சந்தித்து வந்திருக்கிறது. இவையெல்லாவற்றையும் ஈடுகட்டவே, மக்கள் தலையில் மேலும் விலை உயர்வு சுமத்தப்பட்டிருக்கிறது.

பால் உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் கொள்முதல் விலையை உயர்த்தியதன் காரணமாகவே நுகர்வோருக்கான பால் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. தீவனங்கள், மருந்து, கால்நடை பராமரிப்பு போன்ற இடுபொருட்களின் கடுமையான விலை உயர்வுக்கு யார் பொறுப்பு? பெரு முதலாளிகளுடைய இலாபத்தைக் உயர்த்துவதற்காக, தீவனங்கள், டீசல் விலை ஆகியவற்றை மத்திய அரசும், தமிழக அரசும் உயர்த்தியிருக்கின்றனர். இது மட்டுமின்றி, பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் வழங்கி வந்த மாட்டுத் தீவனத்தையும் தமிழக அரசு நிறுத்தி விட்டது. தற்போது அரசாங்கம் கொடுக்கும் பசும் பால் லிட்டருக்கு ரூ 28-உம், எருமைப் பால் ரூ 35-உம், உற்பத்தியாளர்களுக்குக் கட்டுபடியாகக் கூடிய விலை அல்ல. தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களின் இடுபொருட்களின் விலைகளைக் குறைக்கவும், அவர்களுடைய ஆதாயத்தை அதிகரிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தினம் கொள்முதல் செய்யப்பட்டு வந்த பாலின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் 26 லட்சம் லிட்டரிலிருந்து தற்போது 20 லட்சம் லிட்டருக்கும் கீழே குறைந்திருக்கிறது. ஆனால் இதே காலத்தில் கர்நாடகத்தில் தினம் 15 லட்சம் லிட்டரிலிருந்து 45 லட்சம் லிட்டராகவும், ஆந்திராவில் 10 லட்சம் லிட்டரிலிருந்து 30 லட்சம் லிட்டராகவும், குஜராத்தில் 65 லட்சம் லிட்டருக்கும் மேலும் கூட்டுறவு சங்கங்களின் பால் கொள்முதல் கூடியுள்ளது. இது எந்த அளவிற்கு தமிழக பால் உற்பத்தியாளர்களுடைய வாழ்வாதாரத்தைத் தமிழக அரசு சீரழித்துள்ளது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

தனியார் பால் நிறுவனங்கள், பால் உற்பத்தியாளர்களிடம் ஆவினைக் காட்டிலும் அதிக விலை கொடுத்து பாலைக் கொள்முதல் செய்து, பால் விற்பனையாளர்களுக்கு ஆவினைக் காட்டிலும் அதிக கமிஷன் தந்துங்கூட ஏறத்தாழ ஆவினுடைய அதே விலைக்கு பாலை நுகர்வோருக்கு விற்கின்றன. இப்படிப்பட்ட தனியார் நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டி பொது மக்களைக் கொள்ளையடித்து வருகையில், ஆவின் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறுவது, எந்த அளவிற்கு ஆவின் நிறுவனத்தை வைத்து முதலாளிகளும், அரசியல்வாதிகளும் கொள்ளையடித்து வருகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

மக்களுடைய நலனுக்காக நடவடிக்கைகள் எடுத்து வருவது போல விளம்பரம் செய்து வரும் தமிழக அரசு, குறிப்பாக குழந்தைகளும் பெண்களும் கட்டாயமாக தினமும் உட்கொள்ள வேண்டிய பாலை, லிட்டர் 28 ரூபாய்க்கு பாலை வாங்கி, அதை 34 ரூபாய்க்கு விற்பது, அரசாங்கத்தின் உண்மையான சொருபத்தைக் காட்டுகிறது. இதன் மூலம் ஆவின் அடிக்கும் கொள்ளை இலாபமானது, முதலாளிகளாலும், அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் திருடப்பட்டு வருகிறது. முதலாளித்துவ சுரண்டல் காரணமாக மக்களுடைய வாழ்வாதாரங்கள் சீரழிந்து வருகின்ற சூழ்நிலையில், ஆவினுடைய இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆவின் பால் விற்பனை 30 சதவிகிதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

எதிர்கால சமுதாயத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியை, மக்களைச் சுரண்டியும், கொள்ளையடித்தும் வருகின்ற தமிழக அரசு சீரழித்து வருவதை நாம் காணலாம். குழந்தைகள், பெண்கள் மற்றும் மக்களுடைய வயிற்றிலடிக்கும் ஒரு அரசாங்கம், பொது மக்களுடைய அத்தியாவசியத் தேவைகளைக் கூட கட்டுப்படியாகக் கூடிய விலையில் வழங்க முடியாத அரசாங்கம் இருப்பதற்கே இலாயக்கற்றதாகும். அப்படிப்பட்ட மக்கள் விரோத அரசாங்கத்தை மக்கள் உடனடியாக ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்.

தொழிலாளர்கள், உழவர்களுடைய கைகளில் ஆட்சியதிகாரம் இருக்குமானால், இத்தகைய மக்களுடைய அத்தியாவசிய தேவைகளை மலிவாகவும், அனைவருக்கும் கட்டுப்படியாகக் கூடிய விலையிலும், தரமானதாகவும் மக்களுக்கு வழங்க முடியும். ஊரைக் கொள்ளையடித்து தங்கள் உலையில் போடும் முதலாளிகளையும், அரசியல்வாதிகளையும் தூக்கியெறிந்துவிட்டு, தொழிலாளர்களும், உழவர்களும் தாங்களே நேரடியாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டிய தேவையை இந்த கொடூரமான தாக்குதலும் உறுதிப்படுத்துகிறது. 

பால்விலை உயர்வைக் கண்டித்து துண்டறிக்கை

பால்விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி ஒரு துண்டறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை, பால் விலை உயர்வு நியாயமற்றது என்பதையும், முதலாளிகளுடைய இலாபத்தைப் பெருக்கவதற்காகவே கொண்டு வரப்பட்டது என்பதையும் தெளிவாக விளக்கியது. விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், முழு சமூக உற்பத்தியும், வினியோகமும் தொழிலாளி வர்க்கத்தின் கைகளில் வர வேண்டும் என்பதை அது வலியுறுத்தியது. இந்தத் துண்டறிக்கை, சென்னை, மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவில்பட்டி, ஈரோடு மற்றும் பல இடங்களில் மக்களிடையில் வினியோகிக்கப்பட்டது.

ஈரோட்டில் மக்கள் மன்றத்தின் சார்பில் தோழர் செல்லப்பன் தலைமையில் பால்விலை உயர்வை எதிர்த்து மாவட்ட ஆட்சியருடைய அலுவலகம் முன்னர் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள், பால்விலை உயர்வையும், அரசின் மக்கள் விரோதப் போக்கினையும் வன்மையாகக் கண்டித்தனர். 

Pin It