தமிழக மின்சார வாரியத்திற்கு ரூ 6,854 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2014-15 நிதியாண்டில் தமிழக மின் கட்டணத்தை மேலும் உயர்த்திடும் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு 6,805 கோடி ரூபாய் அளவிற்கு மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

அது வெளியிட்டுள்ள திட்டத்தின்படி, தாழ்வழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டு பயன்பாட்டாளர்களுக்கு 15% கட்டண உயர்வும், தொழிற்சாலைகளுக்கு 31% உயர்வும் திட்டமிடப்பட்டிருக்கின்றன. உயர் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு 41% கட்டண உயர்வு இருக்கும். இது மட்டுமின்றி, கட்டணத் தொகையோடு வீட்டு பயன்பாட்டளர்களுக்கு ரூ10-உம், உயர் அழுத்த மின் பயனாளிகளுக்கு ரூ 50-உம் வசூலிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதன்படி மக்கள் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மட்டுமின்றி, எல்லா வணிக நிறுவனங்கள், வேளாண்மை, கல்வி நிறுவனங்கள் ஆகியவை பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் கட்டணங்கள் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இக் கட்டண உயர்வு பற்றி மக்களுடைய கருத்துக்களை கேட்பது என்ற பெயரில், தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் மட்டும் கூட்டத்தை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்தியது. சென்னை, திருநெல்வேலி மற்றும் ஈரோட்டில் நடைபெற்ற இந்த கருத்துக் கேட்புக் கூட்டங்களில் நூற்றுக்கணக்கான அமைப்புக்களைச் சேர்ந்த செயல் வீரர்களும், பொது மக்களும், மற்றும் உழவர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று கட்டண உயர்வுத் திட்டத்தை வன்மையாக கண்டித்தனர்.

திருநெல்வேலியில் நடைபெற்ற இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் மாவட்ட செயலாளரும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவருமாகிய தோழர் சரவணமுத்துவேல் பங்கேற்று, முன்வைக்கப்பட்ட கட்டண உயர்வை கடுமையாக எதிர்த்துப் பேசினார். இவ்வாறே சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் அமைப்பின் தலைவர் தோழர் சா.காந்தியும், மற்றும் பல மக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகளும், ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் மன்றத்தின் சார்பாக தோழர் செல்லப்பன், தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் சண்முகம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் தோழர் நல்லசாமி உட்பட பல்வேறு உழவர், மின் நுகர்வோர், வணிகர், தொழில் முனைவோர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்களும் பங்கேற்று மக்கள் சார்பாக கட்டண உயர்வை எதிர்த்து வாதாடினர். அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் பின்வருமாறு -

ஈராண்டுகளுக்கு முன்னர், அஇஅதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்து மக்களுடைய எதிர்ப்புக்கு இடையிலும், வெட்கமின்றி மிகக் கடுமையான மின் கட்டண உயர்வை செயல்படுத்தியது. அந்த அதிர்ச்சியிலிருந்தும், சுமையிலிருந்தும் மீள முடியாமல் மக்கள் இருக்கும்போது மீண்டும் ஒரு கட்டண உயர்வுக்கு ஆட்சியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் மின்சாரம் மக்களுடைய ஒரு அத்தியாவசியத் தேவையாக இருந்து வருகிறது. பொது மக்களும், உழவர்களும், சிறுதொழில் செய்பவர்களும், தொழிற்சாலைகளும், வணிகர்களும் மின்சாரமின்றி தங்களுடைய வேலைகளைச் செய்ய முடியாது. ஒரு பக்கம் கடுமையான மின்தட்டுப்பாட்டில் மக்களுடைய வாழ்வாதாரம் மறுக்கப்படுகிறது. கடுமையான மின் தட்டுப்பாட்டின் காரணமாக எண்ணெற்ற சிறு தொழில்களும் கடைகளும் இயங்க முடியாமல் மூடப்பட்டுவிட்டன. இன்றும் மின் தட்டுப்பாடு தமிழகத்தில் கடுமையாக இருந்து வருகிறது. இன்னொரு பக்கம், அத்தியாவசியத் தேவையான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்கள், கடுமையான கட்டணங்கள் மூலம் பகற் கொள்ளையடிக்கப்படுகிறார்கள்.

தமிழக அரசு மற்றும் மின்சார வாரியத்தின் நிர்வாக சீர்கேடுகளும், ஊழல்களுமே, மின்வாரியம் இழப்பில் இயங்குவதற்குக் காரணமாகும் என்பதை கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சுட்டிக்காட்டினர். மேலும் தனியார் மின் உற்பத்தி ஆலைகளிலிருந்து மின்சாரம் மிக அதிக விலைக்கு தமிழக அரசால் வாங்கப்படுகிறது. இதனால், இந்த தனியார் நிறுவனங்கள் கொள்ளை இலாபமடித்து வருகின்றனர். முதலாளிகளுடைய இலாபத்திற்காக, தமிழக அரசு, பொது மக்களைக் கொள்ளையடிக்கிறது. உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு போதிய அளவிலும், முழு நேரமும் தேவையான மின்சாரம் கொடுக்கப்படுவதில்லை. மேலும், புதிய இணைப்பு கேட்பவர்கள் 10 – 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட நடைமுறைகள் மூலமும், அறிவிக்கப்படாத மின்வெட்டினாலும், தாங்க முடியாக கட்டணங்கள் மூலமாகவும் ஒரு அடிப்படைத் தேவையான மின்சாரம் மக்களுக்கு மறுக்கப்படுகிறது.

மின் வாரியம் 2011-இலே மின்சார உற்பத்தி துவங்குமென்று கூறிப்பட்ட மின் உற்பத்தி ஆலைகள் இதுவரை உற்பத்தியைத் துவக்க வில்லை. தனிப்பட்ட மின் உற்பத்தி ஆலைகளை வைத்துள்ள முதலாளிகளுக்கு கொள்ளை இலாபத்தைக் கொடுப்பதற்காக, அரசும், ஆளும் கட்சித் தலைவர்களும், அதிகாரிகளும் மின்வாரியத் திட்டங்களை முடக்கி வைத்துள்ளனர். மேலும் மின்சாரத் தேவையின் உயர்வுக்கு ஏற்ப, மின் உற்பத்தி ஆலைகளை அரசு துவக்காமல், மக்களுடைய வரிப்பணத்தை கொள்ளையடித்தும், வீணடித்தும் வருகின்றனர்.

அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி ஆலைகளில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆகும் செலவைக் காட்டிலும் பலமடங்கு அதிக விலை கொடுத்து தனியார் உற்பத்தி ஆலைகளிலிருந்து அரசு மின்வாரியம் மின்சாரத்தை வாங்குகிறது. முதலாளிகளுடைய பணப்பெட்டிகளை நிரப்புவதற்காக, பொது மக்களுடைய வரிப்பணம் வாரி வழங்கப்படுகிறது. அதன் மூலம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தங்களுடைய பைகளையும் நிரப்பிக் கொள்கிறார்கள்.

மின்வழித்தட, பகிர்மான இழப்பு தமிழக மின்வாரியத்தில் 20% என்று கூறப்படுகிறது. இந்த இழப்பினைக் குறைக்க நிர்வாகம் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலே, இழப்பை முழுக்க ஈடுகட்ட முடியும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இயங்கும் ஏகபோக நிறுவனங்களுக்கு இலவசமாகவும், தடையில்லாமலும் மின்சாரம் வழங்கப்படுவதற்கு முடிவு கட்ட வேண்டும். பெரும் நிறுவனங்கள் மின் வாரியத்திற்குக் கட்ட வேண்டிய பலகோடி மின்கட்ட பாக்கியை உடனடியாக வசூலிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

மின்சாரத்தை முதலாளிகளிடமிருந்து அதிக விலைக்கு வாங்குவது மட்டுமின்றி, மின்சார வாரியத்தின் பெரும்பாலான சேவைகளையும் தனிப்பட்ட முதலாளிகளுக்கு அரசு வழங்கி, நுகர்வோருக்கான சேவைகளை மோசமடையவும், செலவினங்கள் அதிகரிக்கவும், முதலாளிகள் கொள்ளையடிக்கவும் வழிவகை செய்து வருகிறது. மின்வாரியத்தில் நடந்து வரும் ஊழல், லஞ்சம், முறைகேடுகள், மின்திருட்டு உள்ளிட்டவைகளை சரிசெய்தாலே இழப்பீட்டை சமாளிக்க முடியும்.

மின்கட்டணங்கள் உயர்ந்தால், அனைத்துப் பொருட்களுடைய விலைகளும், சேவைகளின் விலைகளும் உயரும். தொழிலாளர்களையும், உழவர்களையும், ஏழை மக்களையும் இந்த விலை உயர்வு கடுமையாக பாதிக்கும்.

எந்த வகையில் பார்த்தாலும், இந்த கட்டண உயர்வு ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

மின்சாரம் ஒரு பொதுத் தேவை மட்டுமின்றி, அடிப்படைத் தேவை என்பதால், அரசு மின்சாரத்தைத் தங்கு தடையின்றி மக்களுக்குக் கிடைக்கச் செய்யவும், அதை மக்களுக்குக் கட்டுபடியாகக் கூடிய விலையில் வழங்குவதற்கும் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். இது ஒரு அத்தியாவசிய சேவை என்பதால், அரசு உடனடியாக எல்லா தனியார் மின் உற்பத்தி நிலையங்களையும் அரசுடமையாக்கி தன் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால், மின் தட்டுப்பாட்டிற்கு முடிவு கட்டுவதோடு, மின்சாரக் கட்டணங்களை ஏற்ற வேண்டிய தேவையின்றி அதைக் குறைக்க முடியும். தமிழக அரசு, மக்களுடைய அரசு என நாடகமாடி வருவதற்கு முடிவு கட்டிவிட்டு இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் கருத்துக் கேட்பு கூட்டங்களில் பங்கேற்றவர்கள், இக் கூட்டங்கள் எல்லா மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும் நடத்தாததைச் சுட்டி, இது வெறும் கண்துடைப்பு நாடகமாக நடத்தப்படுகிறது என்றனர். கூட்டம் பற்றி பொது மக்களுக்கு முன்கூட்டியே நன்கு அறிவித்து, எல்லா மாவட்டங்களிலும் உள்ள எல்லா மக்களுடைய கருத்துகளையும் கேட்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். மேலும், 2012-இல் மின் கட்டண உயர்வுக்கு முன்னரும், இதே போன்ற கருத்துக் கேட்பு நாடகம் நடத்தப்பட்டதை பலரும் சுட்டிக்காட்டினர். அப்போது அந்தக் கூட்டங்களுக்கு வந்திருந்த எல்லா மக்களும், கட்டண உயர்வை புறக்கணித்து கருத்து தெரிவித்துங் கூட தமிழக அரசு, கட்டண உயர்வைக் கொண்டு வந்தது. எனவே, கருத்துக் கேட்பு என்பதற்கு என்ன பொருள் எனவும், பெரும்பான்மையான மக்களுடைய கருத்தை மீறி செயல்படும் இந்த அரசு எப்படி ஒரு மக்களாட்சியாக இருக்க முடியுமென்ற கேள்வியையும் பலரும் எழுப்பினர். இம்முறை, மக்களுடைய எதிர்ப்பையும் மீறி அரசும், மின்வாரியமும் கட்டணங்களை உயர்த்துமானால், அதை எதிர்த்துக் கடுமையாகப் போராடித் தோற்கடிப்போமென பல்வேறு மக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உறுதிபடக் கூறினர்.

மின்சார வாரியத்திலிருந்து பொது மக்களுடைய சொத்துக்களையும், வரிப்பணத்தையும் கொள்ளையடித்துவரும் தனியார் முதலாளிகளுடைய ஆதிக்கத்தை முழுமையாக அகற்ற வேண்டும். மின்சார வாரியத்தையும், ஆணையத்தையும் மக்களுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். அதன் மூலம் மின் வாரியத்தின் செயல்பாடுகளை மக்கள் தீர்மானித்து வழி நடத்த இயலும். இது மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமைய முடியுமென கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் வலியுறுத்தியது. 

Pin It