திராவிட இயக்க ஆட்சிகள் இரண்டு வரலாற்றுக் கட்டங்களில் சென்னை மாகாணத்தையும், தமிழகத்தையும் ஆட்சி செய்தன.

17.12.1920 முதல் 1937 சூலை வரையில் ஆண்டது, நீதிக்கட்சி. அந்த ஆட்சி மக்கள் நலன் நாடுவதாக இருந்தது. இது முதலாவது கட்டம்.

6.3.1967 முதல் 31.1.2018 முடிய ஆண்டதும் ஆளுவதும் தி.மு.க. - அ.தி.மு.க. என்கிற திராவிடக் கட்சிகள். இது இரண்டாவது கட்டம்.

ஒடுக்கப்பட்ட வகுப்புகளுக்குக் கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு தரும் கொள்கையில் மட்டும், இவ்விரண்டு கட்சிகளும் நேர்மையாக நடந்துகொண்டன.

மற்றுமுள்ள அரசுத்துறைகளான - பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை நிருவாகம், நீர்நிலைகளைப் பாழாக்குவது, ஆற்றுமணலைக் கொள்ளை அடிப்பது, சாராய ஆலைகளை அமைப்பது, மக்களைக் குடிகாரர்களாக ஆக்கு வது இவற்றில் இரண்டு கட்சிகளும் கள்ளக் கூட்டாளிகளாகவும், மக்களை வறுமையில் வாடவிடுகிறவர்களாகவும், வேளாண்மையைப் புறக்கணிப்பவர் களாகவும், தொழில் வளத்தைப் பெருக்காதவர்களாகவும் கூட்டுறவு நிறுவனங் களைக் கொள்ளையடிப்பவர்களாகவும் உள்ளாட்சி நிறவனங்களை உளுத்துப் போகச் செய்பவர்களாகவும் விளங்கினர்.

அண்மையில் 2009க்குப் பிறகு, இந்த எட்டு ஆண்டுகளில் தமிழக மீனவர் களுக்கு ஏற்பட்ட கேடுகளைக் களையப் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை; மய்ய அரசுக்கு நெருக்குதல் தந்து சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள மீனவர்களுக்கு நேர்ந்த கேடுகளைக் களையத் துணிச்சலான நடவடிக் கைகளை எடுக்கவில்லை.

2004இல் ஏற்பட்ட சுனாமி புயலையும், 2016இல் ஏற்பட்ட வெள்ளப் பாழை யும், 2017 நவம்பர் 29, 30இல் ஏற்பட்ட ‘ஓகி’ப் புயலால் குமரி மாவட்ட மீனவர் களுக்கு ஏற்பட்ட இடர்களைக் களையவும் உரிய நேரத்தில் எந்த ஏற்பாட்டையும் தமிழக அரசு செய்யவில்லை; இந்திய அரசும் செய்யவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தூத்தூர் பகுதியில் 2017 நவம்பர் 30 அன்று காலை ஏற்பட்ட ‘ஓகி’ப் புயலால், கடலில் மீன்பிடிக்கப்போன 104 பேர் மாண்டனர்; 376 பேர், கரைக்குத் திரும்பவில்லை; இவர்களுள் 47 பேர் மட்டும் 2017 திசம்பர் 21 அன்று கரைக்குத் திரும்பினர். திசம்பர் 25இல் கிறிஸ்துமஸ் கொண்டாட வந்துவிடும் மீனவர்கள், பெரிதும் உயிரோடு திரும்பவில்லை.

குமரி மாவட்டத்தில் கடற்கரை ஓரமாக 48 மீனவர் ஊர்கள் இருக்கின்றன; அங்கு 80,000 பேர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களுள் ‘ஓகி’ப் புயல் தாக்கிய  போது மீன்பிடித்துக் கொண்டிருந்த மீன்வர்களில் 400 பேர் காணாமற் போய்விட்டனர்; 700 பேர் கரை திரும்பவில்லை. ஏன்? “புயல் அடிக்கப் போகிறது” என்கிற வானிலை எச்சரிக்கை 30.11.2017 மாலையில்தான் மக் களுக்குப் போய்ச் சேர்ந்தது.

இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் அவர்கள் பார்வையாளராக மட்டும் வந்தார்; அவரும் ஏதும் செய்யவில்லை.

2006 சூலைக்கும் 2009 மே 18-க்கும் இடையில் ஈழவிடுதலைப் போராளிகளை அழிக்கும் போரிலும், முல்லைத்தீவிலும் புதுக்குடியிருப்பிலும் வன்னியிலும் 1.40 இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த அந்தக் காலத்தில்-இலங்கை அரசுக்கு இந்திய காங்கிரசு மன்மோகன் அரசு வெளிப்படையாகத் துணை போயிற்று.

“தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்து மீன் பிடித்தார்கள்” என்று குற்றஞ்சாட்டி, அப்போது 700 மீனவர்கள் கொல்லப்பட்டனர்; அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழக மீனவர்கள் படும் அல்ல லுக்கு, எப்போது இந்திய அரசு பாதுகாப்பு அளித்தது?

இதுபற்றித் தமிழகம் புதுச்சேரி சார்பில் இந்திய நாடாளுமன்ற இரு அவைகளிலும் உள்ள உறுப் பினர்கள் 59 பேர் - எப்போதாவது ஒன்றுபட்டு, மன்மோகன் சிங் அரசைத் தட்டிக் கேட்டார்களா? பாரதிய சனதா நரேந்திர மோடி அரசை 2014 க்குப் பிறகு தட்டிக்கேட்டார்களா? இல்லையே!

இனி, தமிழின மக்கள் ஒன்றுதிரண்டு, கட்சி வேறு பாடு கருதாமல், இந்திய அரசையும், தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசையும் எதிர்த்துப் போராட வேண்டும்.

அடுத்து, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நாட்டுடைமை யாக்கப்பட்ட பேருந்துப் போக்குவரத்துத் துறைப் பேருந்து களும், தனியார் பேருந்துகளும் தமிழ்நாட்டில்தான் 1980களில் சிறப்பாக இயங்கின. நான் பஞ்சாப், அரியானா, உ.பி., பீகார், கர்நாடகா மாநிலங்களில் பேருந்திலும், தொடர் வண்டியிலும், மகிழுந்திலும் பல தடவைகள் போயிருக்கிறேன். அங்கெல்லாம், பேருந்தின் மேல் தட்டிலும், தொடர் வண்டிப் பெட்டியின் கூரையிலும் பலர் பயணம் போவர்.

தமிழ்நாட்டில் அப்படி எப்போதும் இல்லை. நிற்க.

ஆனால், இன்று தமிழ்நாட்டு அரசு நடத்துகிற பொதுப் பேருந்துகள் 27,318 ஆகும். இவற்றுள் 70 விழுக்காடு பேருந்துகள் ஓட்டையும், உடைசல்களும், குப்பையும், அழுக்கும் நிறைந்தவை. ஏன்?

எந்திரம் (Engine) வாங்குவது, கூடு கட்டுவது ((Body Building), உதிரி உறுப்புகள் கொள்முதல் செய்வது, அவற்றைப் பூட்ட ஊதியம் தருவது என்கிற எல்லா வற்றிலும்-அமைச்சர் முதல் பேருந்துத் துறை அலுவலக எழுத்தர் வரை பொதுப் போக்கு வரத்துத் துறைக்காக ஒதுக்கப்பட்ட பணம் இவர்களால் தொடர்ந்து கொள்ளை அடிக்கப்பட்டது.

ஆனால், அரசுப் போக்குவரத்துத் துறை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 1,43,000 பேர். 45 தொழிற்சங்கங் களின் சார்பில் ஊதிய உயர்வு கோரி 23 தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

தரப்படுத்தும் ஊதியத் தொகையை 1700லிருந்து 2400ஆக உயர்த்தக் கோரினார்கள். 4.1.2018 அன்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

எனவே மொத்தப் போக்குவரத்துத் தொழிலாளர் களும், 4.1.2018 முதல் 11.1.2018 முடிய 8 நாள்கள், பல வடிவங்களில், தமிழ்நாடு முழுவதிலும் போராடி னார்கள்; வேலைக்கு வரவில்லை.

அவர்கள் கோரியது 2.57 மடங்கு உயர்வு; அரசு ஒத்துக் கொண்டது 2.44 மடங்கு உயர்வு; எஞ்சிய 0.13 மடங்கு என்பது ரூ.1,800க்குச் சமம்.

இதை 2.57 மடங்காகவே தர அரசு ஒப்புக் கொள்வதே நீதியாகும்.

வேலை நிறுத்தம் செய்யப்பட்ட ஒவ்வொரு நாளைக்கும் ஏற்பட்ட இழப்பு ரூ.9 கோடியே 42 இலட்சம் ஆகும்.

பொதுப் போக்குவரத்துத் துறைப் பேருந்துகள் 27,318 போதாது; இது 1,00,000 (ஒரு இலட்சம்) பேருந்துகள் ஆக்கப்பட வேண்டும்; இவை பேட்டரி மூலம் இயக்கப் பட வேண்டும்; எண்ணெய்ச் செலவு அதிகம் ஆகாமல் இருக்க வழிகாண வேண்டும்.

இதன் வழியாக-நாம் கணந்தோறும் இழுத்துவிடும் காற்றுத் தூய்மை ஆகும்; மக்களும் மகிழுந்து வாங் காமல், பேருந்திலேயே - பொது மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள், தொழி லாளர்கள், பணக்காரர்கள், ஏழைகள் எல்லோரும் குறைந்த கட்டணத்தில் தங்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட மக்களுக்கு நலன் தரும் திட்டங்களை நிறைவேற்ற முனையாமல், சட்டமன்ற உறுப்பினரின் மாத ஊதியத்தை ரூ.55,000 என்பதிலிருந்து ரூ.1,05,000 ஆக உயர்த்துவதற்குச் சட்ட முன்வரைவு ஒன்றை - ஆளுநரின் தொடக்க உரையில் சொல்லாத ஒன்றைச் சட்டமாக நிறைவேற்ற இன்றைய அ.தி.மு.க. அரசு முயற்சிப்பதை எல்லா மக்களும், எல்லாக் கட்சிகளும் எதிர்த்துப் போராட வேண்டும் என அன்புடன் வேண்டு கிறோம். நிற்க.

அண்மையில் தமிழக ஆளுநராக அமர்த்தப்பட்ட பன்வாரிலால் புரோகித் - எந்த ஓர் ஆளுநரும் 1947 முதல் 2017 வரை வந்தவர்கள் செய்யாத - தரங்கெட்ட பணிகளைச் செய்வதைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய அரசமைப்புச் சட்டப்படி, ஒரு மாநில ஆளுநர் என்பவர் ஆளுநர் மாளிகைச் செயலக அதி காரிகள் மூலம், மாநில அரசின் நிர்வாகமும் - சட்டமும், ஒழுங்கும் சரிவர இயங்குகின்றனவா என்று அறிந்து, அதை இந்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மாநிலச் சட்டமன்றத்தின், ஆண்டு முதலாவது சட்ட மன்றக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து, மாநில அரசு அச்சிட்டுத் தரும் அறிக்கையைப் படிக்க வேண்டும். சட்டமன்ற வளாகத்தில் ஆளுநருக்கு என உள்ள அறையில் தங்க வேண்டும்.

மாநில அரசு, புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றி னால், அது மக்கள் நலனுக்குப் பொருத்தமில்லாதது என்று ஆளுநர் கருதினால் - அதைத் தக்க குறிப்புகளுடன், மாநில அரசுக்குத் திருப்பி அனுப்பலாம். அதுபற்றி முதலமைச்சரிடமோ, குறிப்பிட்ட துறை அமைச்சரிடமோ நேரில் வரச் சொல்லிப் பேசலாம். அவ்வளவே!

இதையெல்லாம் விட்டுவிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை, போதிய பெரும்பான்மையைப் பெற்றி ருக்கிறதா என்பதை, சென்ற வாரம் நடந்த சட்டசபைக் கூட்டத்தில் நிரூபிக்க வேண்டும் என்று கூறத் துணிச்சல் இல்லாமல் - 235-க்கு 111 பேர் மட்டுமே கொண்ட அ.தி.மு.க. அரசு எழுதிக் கொடுத்த ஆங்கில அறிக்கை யைப் படிப்பதற்குத்தான் ஆளுநரா?

மூன்று மாவட்டங்களில் மட்டுமே-அமைச்சரவைக்குத் தெரியாமல், உளவறியும் காவல் துறைப் பணியாளர் போல் நேரில் சென்று, அந்தந்த மாவட்ட ஆட்சியரையும் மாவட்ட மற்ற துறைகளின் மாவட்ட அதிகாரிகளையும் அழைத்துக் கூட்டம் போட்டு ஆய்வு செய்வது - ஆளுநரின் மரியாதையின் சிறப்பு ((Protocal)க்கு எதிரானது அல்லவா?

8.1.2018 அன்று தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தை நடத்திவிட்டு, 9.1.2018 அன்றே புதுதில்லிக்குப் போய் - பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் பார்த்து - ஒட்டுமொத்தத் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றிய தமது அறிக்கையையும், தமிழக அமைச்சர்களில் 21 பேர் செய்த ஊழல் பற்றிய பட்டியலையும் தந்தது, இவருடைய இப்போதைய அவசரப் பணியா?

5.50 கோடி வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபையும், ஆளுங்கட்சியினரின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரும் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை, தமிழக ஆளுநர் தீர்மானிக்காதது ஏன்? பிரதமர்மோடி சொன்னால்தான், அதை பன்வாரிலால் புரோகித் செய்வாரா? வெட்கம்! வெட்கம்!

மக்கள் நாயகத்தின் மதிப்புப் பற்றிக் கவலைப் படாத தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசையும், மரியாதையின் சிறப்புப் பற்றித் தெரிந்து கொள்ளாத தமிழக ஆளுநரையும் எதிர்த்துப் போராடுவோம், வாருங்கள்!

Pin It