தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் ஆகப் பெரிய தீமையை தந்ததாக, தருவதாக இருப்பது மதுபானக் கடைகளும், மக்களின் மதுப்பழக்கமும் ஆகும். தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட வீட்டிற்கு ஒரு குடிகாரரைத் தமிழக அரசு உருவாக்கி விட்டது. குடிப்பழக்கத்தின் தொடக்க நிலை வயது சராசரி 26 ஆக இருந்து கடந்த 20 ஆண்டுகளில் இது 13 வயதாக மாறியிருக்கிறது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மதுப்பழக்கத்தை ஒழுக்கக்கேடாக கருதிய ஒரு சமூகம் ஏன் இப்படி ஆனது? காலம்தோறும் சான்றோர்கள் தோன்றிய மண்ணில் இக்கீழ்நிலை ஏன்? உண்மையில் மது அருந்துவதால் என்ன இன்பம் கிடைக்கிறது? உடலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது? மனத்தில் என்ன உணர்வு ஏற்படுகிறது? குடிப்பழக்கத்தை தொடர்வதற் கான காரணிகள் என்ன?

போதை எனப்படுவது

மதுப்பழக்கமோ, புகைப்பழக்கமோ அது பிறர் செய்வதை தானும் செய்ய விரும்பும் மனநிலையிலிருந்து வருகிறது. நண்பர்களின் வழியாகத்தான் அறிமுக மாகிறது. தொடர்ந்து மது அருந்தும் மனநிலை உருவாகும் காரணம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. சிலர் கவலைகளை மறப்பதற்காகவும், சிலர் மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொள்ளவும், சிலர் வக்கிர மனநிலையிலும், சிலர் தூங்குவதற்காகவும், சிலர் உடற்சோர்விலிருந்து விடுபடவும், சிலர் தங் களின் கதாநாயக மனநிலைக்காகவும் மதுப் பழக்கத்தை தொடங்குகின்றனர்.

மது அருந்தும் முதல் சில தடவைகள் அதன் நாற்றத் தாலும், கசப்பினாலும் (என்ன விலை மதுவாயினும்) குமட்டல் அல்லது வாந்தி ஏற்படும். (இதனால் தொடக் கத்திலேயே இப்பழக்கத்தை விட்டுவிடுபவர்கள் உண்டு) எனவேதான் அதில் தண்ணீரோ அல்லது மற்ற பானங்களோ கலந்து குடிக்கின்றனர். மது குடித்த வுடன் தொண்டையிலிருந்து வயிற்றுப் பகுதி வரை புரட்டல் ஏற்படும். (இராட்டினம் சுற்றுகையில் ஏற்படு வதுபோல்).

அதனைத் தொடர்ந்து உடலின் தோல் பகுதி மெல்ல மரத்துப் போகும். உடல் மதமதப்பு ஏற்படும், வாய் குழறல் ஏற்படும், கண்கள் கிறங்கும், தலையானது நரம்பின் உணர்வூட்டத்தால் கவிழும். என்ன உணர்விற்காக மது அருந்துகின்ற னரோ அந்த எண்ணம் மேலோங்கும். புறச் சூழல் பற்றிய சிந்தனை குறையும். கால்கள் தள்ளாட்டம் ஏற்படும்.

தன்னுணர்வு மிகும். குடிப்பவர் தன்நிலை உணரமாட்டார். உடனிருக்கும் குடிக்காதவர்களே அவரின் புற மாற்றங் களை அறிவார்கள். மேற்சொன்ன அனைத்தும் அருந்தும் மதுவின் அளவைப் பொறுத்தும், நேரத்தைப் பொறுத்தும் மனிதனின் உடல் ஏற்கும் திறனைப் பொறுத் தும் மாறுபடும். மகிழ்ச்சிக்காக, உற்சாகத் திற்காக என தொடங்கும் மதுப் பழக்கமானது நாளடைவில் மது போதைக்கு அடிமையாக மனிதர் களை மாற்றி விடுகிறது.

மதுப்பழக்கத்தினால் சாலை விபத்துகள், உடல் கோளாறுகள், நோய்கள், சமூக இழிநிலை, மர ணம் ஏற்படுதல் என்பவைப் பற்றிய தெளிவும் புரிதலும் உள்ளவர்கள் கூட இப்பழக்கத்திலிருந்து மீள முடியாதவர்களாக உள்ளனர். மது உள்ளிட்ட போதை பழக்கங்கள் கூட்டு உளவியலால் ஏற்படுகிறது. உதாரணமாக ஒருவர் எந்த போதை பழக்கத்தையும் தானாக அறிய வாய்ப்பில்லை.

நண்பர்கள் அல்லது உறவினர்கள் கூட்டமாக சேர்கையில் உருவாகின்ற கூட்டு உளவியலால் இவற்றை நுகர தொடங் குகின்றனர். மதுப்பழக்கத் திற்கான காரணங்கள் பற்றிய ஆய்வு முடிவுகள், நண்பர்களின் வற் புறுத்தல் 47%, பொழுதுபோக்கு 42.7%, வேலைப்பளு 5.6%, குடும்ப கவலை 4.7% என்கிறது. ஆகவே தான் இளைய வயதினர் அதிகமாக குடிப்பழக்கம் உடையவர்களாக உள்ளனர்.

குடிப்பழக்கத்தின் விளைவுகள்

தமிழ்நாட்டில் 2013-14இல் நடந்த சாலை விபத்துகளில் 15563 பேர் மரணம் அடைந்தனர். இவர் களில் 70% பேர் மதுவினால் விபத் திற்கு உள்ளானவர்கள். பிறந்தநாள் கொண்டாட்டம் முதல் இழவுக் கான துக்கம் வரை மது அருந்துதல் தமிழ்நாட்டில் முக்கிய நிகழ்வாக மாறிப்போய்விட்டது. "குடி உயர கோன் உயரும்’’ என்பதை தமிழக அரசு தவறாகவோ, சரியாகவோ புரிந்துதான் டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

டாஸ்மாக் 1983இல் உருவாக்கப் பட்டாலும் 29/11/2003இல் அன்றைய அ.தி.மு.க. அரசு மதுக் கடைகளை அரசே ஏற்று நடத்து வதாக அறிவித்தது. 2002--2003இல் ரூ 2,828 கோடியாக இருந்த மது வருமானம் 2012- 13 இல் ரூ 21,680 கோடியாக அதிகரித்தது. இது வெறும் விலையேற்றத்தினால் மட்டும் நிகழ்ந்தது அல்ல. மாறாக குடிகாரர்களின் எண்ணிக்கை உயர்வினாலும் ஏற்பட்டது என்பது தான் கசப்பான உண்மை.

தமிழ்நாட்டில் உள்ள சில்லரை மது விற்பனை கடைகளின் எண்ணிக்கை 6,823. ஏறக்குறைய 8 ஆலைகளில் தயாரிக்கப்படும் மதுக் குடுவைகளை இருப்பு வைப்பதற்கு மட்டும் 41 கிடங்குகள் உள்ளன. அடித்தட்டு மக்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில்தான் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள் அதிகமாக உள்ளன. உதாரணத் திற்கு திருச்சிராப்பள்ளி -உறையூர் பகுதியில் 100 மீட்டர் தூரத்திற் குள்ளாக 8 கடைகள் உள்ளன.

ஆனால் உயர் நடுத்தர வர்க்கத் தினர் வாழும் பகுதியான கே.கே. நகரில் 3 கி. மீ தூரத்திற்கு 1 கடை தான் உள்ளது. இதன்மூலம் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் எளிய மக்களே உயிர் சுரண்ட லுக்கும் ஆளாவதை அறியலாம். மதுப்பழக்கத்திலிருந்து மீள மனோ திடம் தேவை. ஆனால் இப்படி தொடர்ச்சியாக மது விற்பனைக் கடைகள் இருந்தால் இயல்பான மனிதர்கள் திருந்த வாய்ப்பே இல்லை. 2 கடைகளைத் தவிர்த்து விட்டு குடும்பத்திற்கு அன்றைய கூலியை முழுதாக சேர்க்க நினைக் கும் ஒருவரால் அடுத்தடுத்து உள்ள 8 கடைகளையும் புறந்தள்ள முடி யாது. இக்காரணத்தினாலேயே தமிழகத்தில் அடித்தட்டு வாழ்வின ரில் குடிகாரர்களின் எண்ணிக்கை குறையாமல் அதிகரிக்கிறது .

தமிழ்நாட்டில் அன்றாடம் ஏதோ ஒரு பகுதியில் அரசியல், குடிமையியல் உரிமைகளுக்கானப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றாலும் அவை பரந்து பட்ட அறிமுகம் பெறாத சின்ன சின்ன இயக்கங்கள் முன்னெடுப்பில் நிகழ்த்தப்படுகின்றனவே ஒழிய அவற்றில் பெருந்திரள் மக்கள் பங்கெடுப்பதில்லை. இந்நிலைக்கு தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்ட மதுப்பழக்கம் முதன்மைக் காரணம் ஆகும்.

குடிமக்கள் என்ற நிலையிலி ருந்து தமிழர்களை வெறும் நுகர் வோராக, சமூக அக்கறையற்ற உதிரிகளாக மாற்றியதில் மதுக் கடைகளுக்கு பெரும்பங்கு உண்டு. 2000க்குப் பிறகு வந்த தமிழ்த் திரைப்படங்கள் குடிப்பழக்கத்தை குற்றமற்றதாக, இளமையின் ஒரு கூறாக மாற்றிவிட்டன.

சட்ட நெருக்கடியால் "மதுப்பழக்கம் உயிர்க்குக் கேடு" என்று ஒரு ஓரத்தில் திரைப்படங்களில் போட்டாலும் கூட அக்காட்சிகள் இல்லாமல் படம் எடுக்க மனம் இல்லை. இதனால் தமிழ் சினிமா வில் கதாநாயகத்தன்மையின் தகுதி யாக மதுவும், புகையும் காட்சிப் படுகின்றன. இதன் நீட்சி சமூகத்தில் எதிரொலிக்கிறது. இன்றைய வளர் தலைமுறையினர் குடிப்பழக்கத்தை தங்களின் உரிமையாக, இளமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக நம்பு கின்றனர். இது மாற்றப்பட வேண்டும்.

மது வருவாய்

தமிழக அரசு வருவாய்க்கா கத்தான் டாஸ்மாக் கடைகளை நடத்துகிறது என்பதை ஏற்க இயலாது. ஏனென்றால் தமிழகத் தில் இருந்து ஆண்டுதோறும் இந்திய அரசு சேவை வரி, நிறுவன வரி, உற்பத்தி வரி, சுங்க வரி, தனிநபர் வருமான வரி, செல்வ வரி என அள்ளிச் செல்கிறது. கடந்த 2014 - 15இல் மட்டும் ரூபாய் 80,000 கோடிக்குமேல் நடுவண் அரசு வசூல் செய்துள்ளது. ஆனால் தமிழகத்திற்கு ஒதுக்கியதோ வெறும் 37,526 கோடி ரூபாய் மட்டுமே.

எனவே, டாஸ்மாக் கடைகளை மூடுவதன்மூலம் ஏற்படும் இழப்பினை ஈடு செய்ய இந்திய அரசிடம் கூடுதல் நிதியினைப் பெற வேண் டும். அதுமட்டுமின்றி குடிப்பழக்கத் தினால் ஏற்படும் மரணம், விபத்து, கொலை, சமூகக் குற்றங்கள் போன் றவை ஒழிந்து தமிழகத்திற்கு வளம் சேரும். அடுத்தட்டு மக்களை பிச்சைக்காரர்களாக்கிய லாட் டரியை ஒழித்த அரசிற்கு மது ஒழிப் பும் இயலக் கூடியதே. அரசிற்கும் அழியாப் புகழ் சேரும். இதற்கு தேவை மக்களின்பால் அக்கறையுள்ள மனமே ஒழிய வேறில்லை.

தீர்வு

முறையான வழிக்காட்டுதல் களும், பயிற்சிகளும், மன உறுதியும் இருந்தால் போதைப் பழக்கத்தி லிருந்து மீளலாம். எல்லாவற்றிற் கும் மேலாக போதை எனும் நோய்க்குக் காரணமான மதுக்கடை களை மூடாமல் தள்ளாடாத தமிழ்நாட்டை உருவாக்க இயலாது. சொந்த வாழ்க்கைப் பற்றியே அக் கறையில்லாமல் குடி போதைக்கு ஆட்பட்டுப்போன இளைய சமூகத்திலிருந்து பொது சிக்கல் களுக்குப் போராட நபர்களை எதிர்பார்ப்பது நியாயமில்லை.

மதுவற்றத் தமிழகமே மான முள்ள தமிழகமாக வளரும். மான முள்ள தமிழகத்திற்கு மதுபானக் கடைகளை இழுத்துப் பூட்டுவதே நிரந்தரத் தீர்வு.

Pin It